வேலூர்: பெரியார் பிறந்தநாளைக் கொண்டாட போலீசு கெடுபிடி

காவல்துறை அனுமதி மறுப்புக் கடிதம்

ந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மூலம் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பேரணி நடத்தப்படும் நேரம் போக்குவரத்து அதிகம் உள்ள நேரம் என்பதாலும், பாதுகாப்பு தரவேண்டிய காவலர்கள் வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது என கடைசி நேரத்தில பேரணிக்கான அனுமதியை மறுத்துள்ளார் வேலூர் வடக்கு போலீசு நிலைய ஆய்வாளர். மோடியின் இரண்டு செருப்புகள் தமிழகத்தை ஆளும் போது, பெரியார் பிறந்த மண்ணில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட இத்தனை கெடுபிடிகள் நடப்பது இயல்புதானே!

வேலூர் – மகஇக பேரணி

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் ஒலிபெருக்கி இல்லாமல் வேலூர் மீன் மார்க்கெட்டிலிருந்து தலைமை அஞ்சலகம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலை வரை 17.09.2018 காலை 11.00 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. பெரியார் சிலை அருகே ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ம.க.இ.க தோழர் வாணி மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் தி.க.சின்னதுரை ஆகியோர் பெரியார் குறித்து கருத்துரை வழங்கினர். இறுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட பெண்கள் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

ம.க.இ.க ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இடையிடையே தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிய-பெரியாரிய பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சேண்பாக்கம் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செலுத்தப்பட்டது.

இவை தவிர பல்வேறு கட்சிகள் சார்பில் வேலூர் நகரெங்கும் பெரியார் பிறந்த நாள் விழா சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பார்ப்பனியத்தின் கொடுக்குகள் எஞ்சியிருக்கும் வரை தந்தை பெரியாரின் தடி சுழன்று கொண்டேதான் இருக்கும். வாழ்க பெரியார்!

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

திருச்சி: பெரியார் சிலைக்கு மாலை, முழக்கங்களுடன் பெரியார் பிறந்தநாள் விழா

ந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திருச்சியில் 17.09.2018 அன்று மாலை 5 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினை ம.க.இ.க-வின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கி நடத்தினார்.

தோழர்கள் பெரியாரை வாழ்த்தியும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராகவும் முழக்கங்களிட்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ”மக்களின் உரிமையை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் தந்தை பெரியாரின் தேவை முன்பைக் காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது.

திருச்சி: பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிடும் ம.க.இ.க. தோழர்கள்

H.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய போது தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் இணையத்தில் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். எனவே இவர்களது நடவடிக்கைகள் அவர்களுக்கே எதிர்மறையாகப் போகுமே ஒழிய தமிழகத்தில் அவர்களால் காலூன்றவே முடியாது. தந்தை பெரியாரின் தொண்டு, புகழ் ஒருபோதும் அழியாது. இவர்களது நடவடிக்கைகள் மக்களிடம் பெரியாரின் மதிப்பை மேலும் மேலும்  உயர்த்துமே ஒழிய ஒருபோதும் தாழ்த்தாது. அவருடைய பிறந்தநாளில் அவரது சமூகத்தொண்டை, பார்பனிய எதிர்ப்பை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்வோம்” என்றார்.

இந்நிகழ்வினை மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் நின்று ஆர்வத்துடன் கவனித்து சென்றனர். ஒரு வெளியூர் பயணி அனைத்து தோழர்களுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து தமது ஆதரவை தெரிவித்துச் சென்றார்.

தகவல்: ம.க.இ.க., திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க