வினவு புகைப்படச் செய்தியாளர்

சென்னை மாதவரம் – எர்ணாவூர் நெடுஞ்சாலையில் கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் சிறு கடைகளை போட்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் தொழிலாளிகளை பார்க்கும்போதே நிச்சயம் பல கேள்விகள் எழும்.  ஒரு கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் வானுயர வணிக மால்களைக் கட்டி மக்களை சுண்டி இழுக்கும் கார்ப்பரேட் பாணியிலான நிறுவனங்களுக்கு மத்தியில், இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? யார் இவர்களிடம் வாங்குவார்கள்.? அப்படியே வாங்கினாலும் இதில் வரும் வருமானத்தைக் கொண்டு எவ்வாறு வாழ்க்கையை நடத்துவார்கள்?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் நுகர்வு கலாச்சாரத்தை விடுத்து மிகச்சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கே குறைந்தபட்ச நிதி ஆதாரம் தேவை. அதை இவர்கள் எவ்வாறு ஈடுகட்டுகிறார்கள்? அந்த சிறு கடை மக்களிடமே கேட்டுப் பார்ப்போம்.

திருநாவுக்கரசு, துண்டு, கைக்குட்டை வியாபாரம்.

சொந்த ஊர் செஞ்சிக்கோட்டை. அங்க இருந்து இங்க வந்து முப்பது வருஷம் ஆகுது. ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. அதுல ஒன்னும் லாபம் இல்ல. அங்க இருந்தா பொழக்க முடியாதுன்னு இங்க வந்தேன். இப்ப வரைக்கும் ஊருக்கு போறதில்ல. நான் இந்த தொழிலை ஒரு ஆறு மாசமா பண்ணிட்டு வரேன். இதுக்கு முன்னாடி மணலி மார்கெட்டுல சொந்தமா டி.டி.பி. சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வச்சிருந்தேன். ஜெயலலிதா பீரியடுல அடிக்கடி ஏற்ப்ட்ட மின் தடையால தொழில் நிறைய பாதிக்கப்பட்டுடுச்சி.அந்த தொழிலை மூடிட்டு துணிக்கடை ஒன்னு வச்சேன். அதுவும் பெருத்த நஷ்டத்துல போயிடுச்சி. எந்த வேலையும் செய்யாம இருக்க முடியாது. மூனும் பொண்ணுங்க. கரை சேர்க்கணுமே.. இப்பதான் பெரிய பொண்ணுக்கு அஞ்சி லட்ச ரூபா கடன் வாங்கி கல்யாணத்த பண்ணேன். சும்மா இருக்க முடியுமா? வேற வழியில்லாம ஒரு ஏழாயிரபா முதலீடு போட்டு இந்த கடைய நடத்திட்டு வரேன்.

இந்த சரக்கு எல்லாம் வாரத்துக்கு இரண்டு முறை பாரீஸ் போயிட்டு வாங்கிட்டு வருவேன். இதுல ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா வருமானம் கிடைச்சிடும். ஒரு நாளைக்கு கிடக்காம கூட போயிடும். பெரும்பாலும் என்கிட்ட வாங்குறவங்க எல்லோரும் பாவப்பட்டு வாங்குவாங்க. நம்மள மாதிரி ஆளுங்க குறைவா இருக்கேன்னு வாங்குவாங்க. வர வருமானத்துல என்னோட எல்லாத் தேவையையும் குறைச்சிகிறேன். பொண்டாட்டி புள்ளைங்கள கூட வெளில எங்கயும் கூட்டிட்டு போறது கிடையாது. அப்படிதான் வாழ்க்கை போயிட்டு இருக்கு.

அப்துல் கபீர், டி-சர்ட் – பனியன் வியாபாரம்.

ங்க அப்பாவும் இந்த மாதிரி வியாபாரம் தான் பண்ணிட்டு இருந்தாரு. பிளாஸ்டிக் பொருள் விப்பாரு. நான் அஞ்சாவது படிக்கும்போது இறந்துட்டாரு. அதோட படிப்பை நிறுத்திட்டு சிம்னி விளக்கு தயாரிக்கிற கடையில வேலை செஞ்சிட்டு இருந்தேன்… எட்டு வருஷத்துக்கும் மேல அந்த வேலை பார்த்தேன். அங்கேயே இருந்தா முன்னேற முடியாதுன்னு எங்க மாமா கூட்டிட்டு வந்து அவரோட துணி கடையில வேலை செய்ய சொன்னாரு. சென்ட்ரல்’ல தான் வித்திட்டு இருந்தேன்.

அப்புறம் ஆடவர் துணி விற்பனை மையத்துல கொஞ்ச நாள் சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன். அங்கேயும் சம்பளம் பத்தல.. அப்புறம்தான் இந்த கடையை வச்சி ஓட்டிக்கிட்டு இருக்கேன். இதுவும் என்னோடது இல்ல.. எங்க மாமா மொத்தமா வாங்கிட்டு வந்து விக்க சொல்லி கொடுத்திருக்காரு. எவ்ளோ விக்குதோ அதுக்கான கணக்கை கொடுத்திட்டு ஒரு நாளைக்கு ஐநூரு ரூபா எடுத்துப்பேன்.. இந்த துணியெல்லாம் திருப்பூர்ல இருந்து வாங்கிட்டு வருவாரு.. நானே சொந்தமா வாங்கிட்டு வந்து விக்கலாம்னா கையில காசு இல்ல.. பசங்க தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.. அவங்களுக்கு பீஸ் கட்டத்தான் சரியா இருக்கும்.பிள்ளைங்களோட வாழ்க்கை தானே முக்கியம்.

இந்த இடத்துலயே மூணு வருஷமா கடை போட்டிருக்கேன். முன்ன எல்லாம் போலீசு தொல்லை அதிகமா இருக்கும். பிளாட்பார்ம் கடைன்னு கேசு போட்டு பைன் போடுவாங்க. அப்புறம் மாநகராட்சிக்கு மாமூல் கட்டணும்.. இப்ப மாநகராட்சி கடை போடுறதுக்கு ஒரு கார்டு கொடுத்திருக்கான்.  அதனால் அந்த பிரச்சனை இல்ல. இந்த வியாபாரத்துல யாரும் நிக்கிறது கிடையாது. கொஞ்ச நாள்ல போயிடுவாங்க… எனக்கும் இந்த வேலை செய்யிரதுல விருப்பம் இருக்கோ, இல்லையோ வேற வழி இல்ல. இளைஞர்கள் வாங்குறாங்க. அவர்களால வாழ்க்கை ஓடுது!

சரவணன், குளிரூட்டும் கண்ணாடி விற்பவர்.

நான் இருபத்தி அஞ்சி வருஷமா இந்த மாதிரி தெருவுல தான் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி பாரிஸ்ல கடை போட்டிருந்தேன்… அங்க இருந்து எங்கள காலி பண்ணிட்டாங்க…  இங்க வந்து பத்து வருஷம் ஆவுது… பெரம்பூர்ல வீடு வாடகை எடுத்து தங்கி இருக்கேன். மாசம் நாலாயிரத்து ஐநூறு ரூபா வாடக… பசங்க இப்ப தான்  7, 10 வது படிக்குதுங்க… இந்த வேலையே செஞ்சி எனக்கு பழகிடுச்சி…இதத் தவிர வேற வேலையும் தெரியாது. இப்ப இங்க இருந்தும் காலி பண்ண சொல்லுறாங்க.. மெட்ரோ ரயில் வருதாம்..

நாகு, சன்னல் கூடை விற்பவர்.

நாலு வருஷமா தான் இந்த வேலையை செய்யுறேன். இந்த பை வித்தாலும் விக்கலனாலும் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா ஓனரு குடுத்துடுவாரு. இதுக்கு முன்னாடி நான் பேக் தயாரிக்கிற கடையில ஸ்டிச்சிங் வேலை பண்ணிட்டு இருந்தேன். பதினைந்து வருஷம்அந்த வேலை பார்த்தேன். எல்.கே.ஜி பேக்குக்கு 4 ரூபாவும், காலேஜி பேக்குக்கு 12 ரூபாவும் தருவாங்க… இப்ப அங்க வேலை இல்ல.. ஆர்டர் எதுவும் ஓனர் எடுக்கிறது இல்ல. அதான் இந்த வேலை. சொந்தமா நானே செய்யலாம்னா காசு இல்ல…. பத்தாயிரபா தேவைப்படும்.. அதுக்கு நான் எங்க போறது?

மனீஷ்: நெகிழி கூடை, நாற்காலி விற்பனையாளர்.

ன்னோட ஊர் மத்தியபிரதேசம். நாங்க முப்பது பேர் சேர்ந்து ஒரு ரூம்ல தங்கியிருக்கோம்.. நாக்பூர்.. ராஜஸ்தான்னு எல்லா ஊர்ல இருந்தும் வந்திருக்கோம். எல்லோருக்கும் இந்த வேலை தான்… காலையில பத்து மணிக்கு வந்திடுவோம். சாயந்திரம் 5 மணிக்கு போயிடுவோம். காலை, மதியம் சாப்பாடு கிடையாது. டீ, தண்ணி மட்டும்தான்.  நைட் மட்டும் சப்பாத்தி செஞ்சி சாப்பிட்டுக்குவோம். சம்பளம் எதுவும் கிடையாது. நாலு மாசத்துக்கு ஒரு முறை ஓனர் பத்தாயிரம் தருவார்.. அதைத்தான் வீட்டுக்கு அனுப்பிடுவோம்.

ராகேஷ், நெகிழி கூடை, நாற்காலி விற்பனையாளர்.

சொந்த ஊர் ராஜஸ்தான்….  ஒரு பொருளும் விக்கல…..

காலையிலிருந்து காத்துக்கிடந்த களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் ராகேஷ்

பாண்டியன், மழை நீர் புகா மேற்சட்டை வியாபாரம்.

ருபத்தி அஞ்சி வருசமா இந்த வேலைதான் செய்யுறேன்…. இதுக்கு முன்னாடி புரசைவாக்கத்துல கடை போட்டிருந்தேன்… சிங்கார சென்னையா மாத்தப் போறேன்னு எங்ளை எல்லாம் மொத்தமா காலி பண்ணி அனுப்பினாங்க… மொத்தம் ஆயிரம் பேர் இருக்கும்.. அதுல இருந்து இதை தெருத்தெருவா தூக்கிட்டு அலையுறேன்.. நிரந்தரமா இந்த இடம்தான்னு இல்ல… எங்க இடம் கிடைக்குதோ அங்க போட்டுடுவேன்… ஒரே இடத்துல போட்டாலும் வியாபாரம் நடக்காது அதனால எடத்த மாத்திகிட்டே இருப்பேன்.. இதை ஒவ்வொரு முறையும் ஆட்டோவுல வச்சி எடுத்துட்டு வரக்கூலி 100 ரூபா போயிடும். மிச்சம் இருக்கிறத வச்சி தான் குடும்பத்த நடத்தனும்…!

– வினவு களச் செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க