பாலுகலி அகதிகள் முகாமின் குறுக்கே செல்லும் செங்கற்களால் கட்டப்பட்ட நடைபாதை. உணவு பகிர்மான மற்றும் சேமிப்புக்கிடங்குகளை நன்கு இணைப்பதற்காக முகாம்களில் உள்ள சாலைகளை மேம்படுத்தவும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அவசர கால சேவைகளுக்காகவும் ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank) 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்கதேச அரசுக்கு உதவியாக 700 கோடி ரூபாய் கொடுத்தது.

மியான்மர் இராணுவத்தின் கொடுமையான அடக்குமுறைகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக மியான்மரின் ரக்ஹினே மாநிலத்தை சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம் மக்களின் 90 விழுக்காட்டினர் வங்கதேசம் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் இராணுவத்தின் இச்செயலை “இன அழிப்புக்குப் பொருத்தமான உதாரணம்” என்று ஐக்கிய நாடுகள் அவை விவரிக்கிறது.

கொடூரமான வன்முறைகள், எரிக்கப்பட்ட கிராமங்கள், படுகொலைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் என ஏராளமான நினைவுகளுடன் சுமார் ஏழு இலட்சம் ரோஹிங்கிய அகதிகள் கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்திலிருந்து வங்கதேச எல்லையை கடந்துள்ளனர் .

ஒராண்டிற்கு முன்னதாக வங்கதேசம் வந்தவர்களையும் சேர்த்தால் மொத்தமாக வங்கதேசம் தஞ்சமளித்துள்ள ரோஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 9,60,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிவரம். ஆனால் எண்ணிக்கை 10 இலட்சத்தையும் தாண்டும் என்கிறார்கள் வங்கதேச அதிகாரிகள்.

சமீபத்தில் வந்து சேர்ந்த அகதிகள் குதுப்பாலாங்-பாலுகலி (Kutupalong-Balukhali) வளாகத்தில் உள்ள மெகா முகாம்(Mega Camp) என்றழைக்கப்படும் இடத்தில் மிக நெருக்கமாக தங்கியுள்ளனர். 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அம்முகாம் புகலிடம் அளித்துள்ளது.

வங்கதேச எல்லைப்புற முகாம்களில் தங்கியிருக்கும் ஒரு இலட்சம் ரோஹிங்கிய அகதிகளை பாசன் சார்(Bhasan Char) என்ற நதித்தீவில் தங்க வைக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. வங்காள விரிகுடாவிற்கு அருகில், 20 ஆண்டுகளுக்கு முன்னதாக வண்டல் மண்ணில் தோன்றிய ஒரு தீவுதான் பாசன் சார். ஆனால் மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற ஆளரவமற்ற தீவு அது.

குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 2,000 கோடி ரூபாய் அங்கு செலவு செய்ய இருப்பதாக வங்கதேச அரசு கூறியிருக்கிறது. ரோஹிங்கிய அகதிகள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு அத்தீவினை வங்கதேச மக்கள் பயன்படுத்தலாம் என்று மேலும் கூறியிருக்கிறது.

அனால் வங்கதேச அரசின் இந்த அறிவிப்பு மனித உரிமை அமைப்புகளிடம் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. கடுமையான அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக எந்த ஒரு உட்கட்டமைப்பு வசதி செய்வதற்கும் அத்தீவு தகுதியற்று இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human Rights Watch) கூறுகிறது.

இது ஒருபுறமிருக்க ரோஹிங்கிய அகதிகள் மீதான மனிதத்தன்மையற்ற கொடுமைகள் நிகழ்ந்து ஓராண்டிற்கு பிறகும் தன்னுடைய அரசின் நடவடிக்கைகளை ஆங் சன் சூ கீ (Aung San Suu Kyi) ஆதரித்தே வருகிறார். மேலும் மியான்மர் இராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார்.

******

விறகு சுமந்து வரும் ரோஹிங்கிய அகதி. உணவு சமைப்பதற்கு விறகைதான் ரோஹிங்கிய அகதிகள் நம்பி உள்ளனர். இது வங்கதேச எல்லை மாவட்டமான காக்ஸ் பஜாரில் (Cox’s Bazar) சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முகாம்களை சுற்றியுள்ள காடுகளில் விறகுகளை சேகரிக்க துணிந்து செல்லும் ஒவ்வொரு முறையும் சுமார் 8 கிலோமீட்டர் தூரம்வரை நடக்கின்றனர் ரோஹிங்கிய அகதிகள்.

சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வங்கதேச அதிகாரிகளுடன் சேர்ந்து முகாமில் உள்ள அகதிகளுக்கு சமையல் எரிவாயு உருளைகளை வழங்க தொடங்கியிருக்கிறார்கள்.

பாலூகலி முகாமின் உள்ளே தங்களுடைய தங்குமிடத்திற்கு வெளியே தன்னுடைய இளைய மகனுக்கு முடியை வெட்டி விடுகிறார் ரோஹிங்கிய அகதி ஒருவர். அங்கு வசிக்கும் ஒட்டுமொத்த மக்களில் 55 விழுக்காட்டினர் சிறுவர்கள் என்று ஐநா அகதிகள் முகமை கணக்கிட்டுள்ளது

5 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கிய அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று  ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடையத் தொடங்கி ஓராண்டு முடிவுற்றதைக் குறிக்கும் தமது ஆண்டறிக்கையில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்(UNICEF) தெரிவித்துள்ளது.

5,500-க்கும் மேலான குடும்பங்கள், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களால் நடத்தப்படுகின்றன என்பதை ஐ.நாவின் அகதிகள் முகமை (UNHCR) 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்திய குடும்பக் கணக்கெடுப்பில் கண்டறிந்தது.

பாதிக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய அகதிகள், வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மழைக்காலத்தை ஒட்டி வரும் நோய்களை எதிர்கொள்ள கிஞ்சித்தும் தயாராக இல்லை என்பது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஆக்ஸ்பாம்(Oxfam) தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

9 இலட்சம் அகதிகளில் 2 இலட்சம் அகதிகள் வெள்ள மற்றும் நிலச்சரிவு அபாயங்களில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 24,000 அகதிகள் பேராபத்தில் இருப்பதாகவும் கருதப்படுகிறார்கள்.

தங்களது வாழ்வாதாரத்திற்காக முகாம்களில் கடைகளை திறந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகள்.

குதுப்பாலாங் முகாமில் உள்ள ஒரு சந்தையில் மீன் விற்கும் ரோஹிங்கிய அகதி.

தெற்கு காக்ஸ் பசார், டெக்னாப்பில்(Teknaf) உள்ள நயாபாரா முகாமிற்கு வெளியே உள்ள உள்ளூர் சந்தை இது. அங்கு ரோஹிங்கிய அகதிகளே பெரும்பான்மையான கடைக்காரர்களாக உள்ளனர்.

அகதிகள் முகாம்களை சுற்றியிருக்கும் சிறிய ஓடைகளில் பிடிக்கப்பட்ட நன்னீர் இறால்களை விற்கும் ரோஹிங்கிய அகதி.

குதுப்பாலாங் முகாமில் உள்ள ரிக்‌ஷா ஓட்டும் ரோஹிங்கிய அகதி இவர். பெரும்பான்மையான ரிக்‌ஷா ஓட்டிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களை வெளியே அழைத்து செல்வதற்கு முறையான அனுமதி கிடையாது. ஆனால் வெளியிலிருந்து “மெகா முகாமிற்கு” அழைத்து வருவதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு.

ஐக்கிய நாடுகள் அவையைப் பொறுத்தவரை குதுப்பாலாங்-பாலுகலி அகதிகள் குடியேற்றம் என்பது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மட்டுமல்ல உலகிலேயே மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் அகதிகள் முகாமாகும்.

  • நன்றி : அல்ஜசீரா 
  • படங்கள் : சோரின் ஃபர்கொய் / அல்ஜசீரா
  • தமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க