சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அந்தக் காணொளியை அனுப்பி வைத்திருந்தார். மட்டமான தரத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியின் பின்னணியில் ”ஆசைய காத்துல தூது விட்டு” என்கிற ஜானி திரைப்படத்தின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடுத்தர வயதுப் பெண் ஒருவர், 38 வயது இருக்கலாம், 14 அல்லது 15 வயதுச் சிறுவன் ஒருவனை ஆபாசமாக கட்டிப்பிடித்து அந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார். 15 வினாடிகள் ஓடியது அந்தக் காணொளி.

நண்பனை உடனே அழைத்து இது என்னடா கண்றாவி எனக் கேட்டேன். “இது தான் ஜி இப்போ ட்ரெண்டு” எனச் சிரித்தவர், மேற்படியான விசயங்கள்  ம்யூசிக்கலி என்கிற செல்போன் செயலியில் அதிகம் கிடைப்பதாகவும், பலர் இவ்வாறான டப்ஸ்மாஷ்களைச் செய்து பதிவேற்றிய இன்னபிற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமான ‘கசமுசா’ சமாச்சாரங்கள் எனக் கருதி அப்போதைக்கு மறந்து விட்டேன். பின்னர் குன்றத்தூர் அபிராமி தலைப்புச் செய்திகளுக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் வழக்கமான காலை நேர தேனீர்கடை உரையாடலின் போது “அந்த பொண்ணு பிரியாணிக்காரன் கூட சேர்ந்து டப்ஸ்மாஷ்லாம் பண்ணிருக்குங்க…” என்றார் நடைப்பயிற்சி நண்பர்.  அன்றே செல்போனில் மேற்படி செயலியை நிறுவி என்னதான் இருக்கிறதெனப் பார்க்கத் துவங்கினேன்.

♦♦♦

மியூசிக்கலி செயலியை இப்போது சீனாவைச் சேர்ந்த (அதே போன்ற செயலியைக் கொண்ட) நிறுவனம் ஒன்று கையகப்படுத்தி இணைத்து அதன் பெயரை டிக்டோக் (Tik Tok) என மாற்றியுள்ளனர். எனவே மேற்கொண்டு புதிய பெயரிலேயே குறிப்பிடுவோம்.

செயலியின் வடிவமும் பாவிக்கும் முறையும் மிக எளிமையானது. கணக்கு துவங்க தொலைபேசி எண் மட்டுமே கூட போதுமானது. 13 வயதுக்கு மேலிருப்பவர்கள் கணக்குத் துவங்கலாம், ஆனால் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அதன் விதிமுறைகள். ஆனால், விதிமுறையை யாரும் வாசிப்பதில்லை என்பதோடு 18 வயதுக்கு கீழான பயனரின் அருகே யார் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணிக்கும் வசதியும் டிக்டோக்கிடம் இல்லை. எனவே விதிமுறை / கட்டுப்பாடுகள் எல்லாம் ’உலூலுவாய்க்கி’ என்று வைத்துக் கொள்வோம்.

கணக்கைத் துவங்கியதும் ”உங்களுக்காக” (for u) எனும் பகுதியின் கீழ் உங்களுக்கே உங்களுக்கென்று அந்த செயலி தெரிவு செய்யும் காணொளிகள் ஓடத் துவங்கும். நீங்களே யாரையாவது பின் தொடர்கிறீர்கள் என்றால், அவர்களது காணொளிகள் பின்தொடர்வோர் ”Following” எனும் தலைப்பின் கீழ் வரும். ஒவ்வொரு காணொளியும் முடிந்தவுடன் திரையை மேலே இழுத்தால் அடுத்தது வரும்; பக்கவாட்டில் இழுத்தால் அதே பயனரின் மற்ற காணொளிகளைப் பார்க்கலாம்.

செயலியின் உள்ளேயே பதிவாக்கப்படும் காணொளிகள் ஒவ்வொன்றும் 15 நொடிகள் தான். ஏற்கனவே பதிவாக்கப்பட்ட சற்றே நீண்ட காணொளிகளையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பின்னணியில் பாடல், திரைப்பட வசனம், சொந்த வசனம், நகைச்சுவை வசனம் போன்றவை ஒலிக்க திரையில் அதற்கு வாயசைக்கலாம், நடன அசைவுகளையும் காட்டலாம். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்றுக்கு (ஒரிஜினல் வசனத்திற்கு) நடித்துக் காட்டலாம்.

நீங்கள் பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.  வெறுமனே செயலியை நிறுவி இருந்தாலே கூட உங்களுக்குப் ”பொருத்தமான” காணொளிகள் வந்து கொண்டிருக்கும். அநேகமாக இந்த செயலி உங்கள் புவி இலக்கை (Geo Location) அறிந்து கொள்ளும். நீங்கள் ஒரிசாவுக்கும், மும்பைக்கும் பயணம் சென்றால் அந்த மொழி காணொளிகளும் இடையிடையே வரும். மற்றபடி நீங்கள் எந்த மாதிரியான காணொலிகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறீர்களோ (ஹார்டின்) அதே விதமான காணொளிகள் தொடர்ந்து வரும். இவை வழக்கமாக சமூக வலைத்தளங்கள்  செயற்கை நுண்ணறித் திறன் கொண்டு செய்யும் மலிவான வித்தைகள் தாம்.

♦♦♦

முதல் விசயம் : இந்த செயலி மற்ற சமூக வலைத்தள செயலிகளைப் போல் நேரத்தைக் கொல்கிறது; அதோடு கைப்பேசியின் மின்கலத்தையும் (Battery) அநாயசியமாக தின்று தீர்க்கிறது. இதில் இரண்டாவது விசயம் குறித்து யாராது துறைசார் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். யுடியூப் போன்ற காணொளி செயலிகளைக் காட்டிலும் அதிகளவு மின்கல ஆற்றலை இச்செயலி கோருகின்றது. வெறுமனே காணொளிகளை மட்டும் காட்டுகின்றதா அல்லது பின்னணியில் வேறு வேலைகளையும் செய்கின்றதா எனத் தெரியவில்லை.

அடுத்து, பயனர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப பல்வேறு வகையான காணொளிகளை பதிவேற்றுகின்றனர். ஆனால், அந்த ”ரசனை” தான் கவனத்திற்குரியதாக இருக்கிறது. சிலர் மென் சோக இளையராஜா பாடல்களுக்கு குளோசப்பில் வாய், கண் முதலிய முகத்தின் பல்வேறு உறுப்புகளை சுழித்துக் கொணஷ்டை செய்கிறார்கள். சிலர் வடிவேலுவின் நையாண்டி வசனங்களுக்கு தங்களால் முடிந்த கொணஷ்டைகளையும் செய்கின்றனர் – இவையெல்லாம் பிரச்சினையில்லை. ஆதித்யா சானலில் இவை அதிகம் வரும். மியூசிக்கல் செயலியின் வெற்றியும் ஆதித்யா சானலோடு கூட பயணப்பட்டிருக்கும்.

ஆனால், மிகப் பலர் குத்துப்பாட்டுகளுக்கு அறைகுறை ஆடைகளோடு ஆபாச உடலசைவைக் காட்டுகின்றனர். ஹரஹரமகாதேவகியின் அருவெறுப்பான பாலியல் காமெடிகளுக்கு வாயசைப்பது, சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களை (இணையுடனோ, இணை இல்லாமலோ) நடித்துக் காட்டுவது, ஆபாச பாடல் / வசனங்களுக்கு ஏற்ப ஏழெட்டு அடுக்கில் மேக்கப்புடன்  வருவது, பாலியல் தொழிலாளிகளைப் போல் கண் ஜாடை காட்டுவது… இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

அடுத்து, ரசிக மகாஜனங்களின் வழக்கமான அக்கப்போர். விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு பைக்குகளில் சாகசம் செய்து எதிரணி ரசிகர்களுக்கு சவால் விடுவது. சில காணொளிகளில் வெட்டுவேன் குத்துவேன் ரக சவடால்களும் காணக்கிடைத்தது. ஒரு காணொளியில் பத்துப் பதினோரு வயது மதிக்கத்தக்க எலும்பும் தோலுமாய் மெலிந்திருந்த அஜித் ரசிகன் ஒருவன் கையில் நீண்ட அரிவாளை தூக்க முடியாமல் தூக்கிக் காட்டி.. “டேய் தல ஃபேன்டா.. அறுத்துப் போட்னு போய்னே இருப்பேண்டா” என இல்லாத மீசையைத் தடவியதை அவனது பெற்றோர் பார்த்திருக்க வேண்டும்; ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பர்.

ரசிகர்களைக் கூட வயதுக்கு வராத சிறுவர்களின் ஆர்வக் கோளாறுகள் என கடந்து போய் விடலாம்.. சாதி வெறியர்கள் தனி ரகம். “டேய் ____ நாயே சத்திரிய வன்னியன்டா.. எங்கள்ட்ட வாங்கித் தின்ன நாய்களா.. எங்களுக்கே மீசைய முறுக்கிக் காட்றீங்களாடா” என்கிறார் தீச்சட்டியில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ’ஷத்திரியர்’(!?) ஒருவர். “எலேய் _____ பசங்களா ஆண்ட வமுசம்டா… அரிவாளத் தொட்டா ரத்தம் காணாம விட மாட்டோம்டா” என்கிறார் தெற்கத்திய ஆண்ட வம்சத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு ‘ஷத்திரியர்’(!?). இதற்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கிறார்கள் – அதே சாக்கடைத் தரத்தில்.

இத்தனை ரணகளத்திற்கும் இடையில் திராவிட நிறம் கொண்ட பெண்களின் சுயகழிவிறக்க காணொலிகள்.. “அண்ணே.. நாங்கெல்லாம் தமிழ் பொண்ணுங்க. எங்க கலரே இது தாம்ணே. முழுசாப் பார்த்து லைக் போடுங்கண்ணே.. வீடியோவ தூக்கி விட்றாதீய”. குத்துப்பாட்டுக்களுக்கு திருநங்கைகள் சிலருடைய நடன முயற்சிகளும் இடையிடையே தலை காட்டுகின்றன. சில விடலைப் பையன்கள், பெண் பயனர்களின் காணொலியை ஒரு ஓரத்தில் ஓட விட்டு பதிலுக்கு சில அசைவுகளைச் செய்து காட்டுகின்றனர்; பொருந்தாக் காதலுக்கான அவர்களது இம்முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியடைந்தன என்பது பற்றி நமக்கு தெரியாது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த செயலி பெரும் குப்பைக் கிடங்கு.

♦♦♦

குப்பையை ஏன் கிளறியாக வேண்டியிருக்கிறது? 2018-ன் முதல் காலாண்டில் முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற எல்லா சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் மிக அதிகமாக (45 மில்லியன்) தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது டௌயின் (Douyin). இந்த டௌயின் செயலி தான் பின்னர் ம்யூசிக்கலியை தன்னோடு இணைத்துக் கொண்டது. கடந்த 2017 நவம்பர் மாதம் 1 பில்லியன் டாலர் கொடுத்து ம்யூசிக்கலியை கையகப்படுத்திய டௌயின், சென்ற மாதம் இணைப்பு வேலையை முடித்து “டிக் டோக்” எனும் பெயரில் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத துவக்கத்தில் டௌயின் செயலிக்கு 500 மில்லியன் பயனர்களும், ம்யூசிக்கலிக்கு 100 மில்லியன் பயனர்களும் இருந்தனர். தற்போது சுமார் 65 கோடி பயனர்கள் இருப்பதாகவும், டிக்டோக் பிற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை விஞ்சி சென்று கொண்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ம்யூசிக்கலியில் வரும் தமிழ்க் காணொளிகளின் முறைமையை (Pattern) அவதானித்துப் பார்த்ததில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் கணிசமாகவும் அதில் பெரும்பாலும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தச் செயலியின் வடிவமைப்பே ஒரு குறிப்பிட்ட பயனர் எந்தவிதமான காணொளியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. உதாரணமாக ஒரு சீசனில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா” எனும் பாடல் பிரபலம் ஆனால், பலரும் அந்தப் பாடலுக்கு நடன அசைவுகள் (இடுப்பசைவு) செய்து பதிவேற்றுகிறார்கள். இதில் யார் அதிகம் லைக் பெறுவது என்கிற போட்டியே யார் குறைந்த உடையுடனும் அதிக ஆபாசத்தோடும் காட்சியளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. இது சினிமா குத்துப் பாடல்களுக்கிடையே உள்ள போட்டி போன்றது.

முகநூல் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களைப் போலவே டிக்டோக்கும் பயனர்கள் தம்மையே ஒருபண்டமாக கருதத் தூண்டுகின்றது (commodification of Self). ஆனால், மற்றவற்றில் முகம் காட்டும் அல்லது காட்சிப்படுத்தும் கட்டாயமில்லை. மேலும், முகநூல் ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் அரைகுறையாகவாவது ”விவாதம்” என்கிற ஒன்று நடக்கிறது. அதற்கு கருத்து என்கிற ஒன்றைச் சொல்லியாக வேண்டும் – அது எத்தனை மொக்கையானதாக இருந்தாலும்.

டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை; இங்கே காட்சியே பிரதானம். அதிலும் சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை என்பதால் அபாயத்தில் அளவு அதிகரிக்கிறது. காட்சியின் மூலம் பின் தொடர்வோர் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? விஞ்ஞான, அரசியல், ஆன்மீக விளக்கங்கள் அளிக்கலாம் தான் – ஆனால், பதினைந்து நொடியில் அது சாத்தியம் இல்லை. எனவே ஆபாசப் பாடல்களும், வசனங்களுமே அதிகபட்ச சாத்தியம். அதிலும், பாடலின் வரிகள் எந்தளவுக்கு பாலியல் தன்மை கொண்டிருக்கிறதோ அது தோற்றத்திலும் எதிரொலித்தாக வேண்டும்.

ஒன்றை ஒன்றை வளர்த்துக் கொள்ளும் இந்த அம்சங்கள் எங்கே இட்டுச் செல்கின்றன? ஆண்களுடைய விருப்பத்தின் அளவு எந்தளவுக்கு மேலே செல்கிறதோ அந்தளவுக்கு மேலாடையின் அளவை கீழே இறக்குகிறது. தோலின் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை ஆடைக் குறைப்பின் மூலமும், ஆபாச அசைவுகளின் மூலமும் கிடைக்கும் பிரபலத்தின் மூலமும் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமும் சமன்செய்து விடுகிறது. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம். ஆண்களைப் பொருத்தவரை சாதிவெறி, ரசிக கும்பலின் சல்லித்தனங்கள். உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

மேலை நாடுகளிலும் இதே பிரச்சினைகளுடன் தற்கொலையைத் தூண்டும் பதிவுகள் உள்ளிட்ட வேறு சிலவும் உள்ளன. அவையெல்லாம் விரைவில் ’தமிழ்ச் சூழலுக்கும்’ இறக்குமதியாகிவிடும் என எதிர்பார்க்கலாம். இவையனைத்தையும் விட முக்கியமானது – இதில் செலவழிக்கப்படும் நேரமும், இந்தச் செயலியால் வடிவமைக்கப்படும் சிந்தனைப்போக்கும்தான். நடுத்தர வயதை எட்டிய ஒரு பெண் “பட்டுக்கோட்டையிலே ங்கோத்தா பருப்பு விக்கையிலே” என்கிற பாட்டுக்கு ’நடனமாடுகிறார்’; பின்னூட்டத்தில் ஒரு விடலைப் பையன் “ஆண்டி அப்படியே உங்க பேக்கையும் ஆட்டிக் காட்டுங்க” என்கிறான். அதற்கு பதிலாக அந்தப் பெண்மணி ஸ்மைலி போடுகிறார்.

பொது வெளியில் ஒரு பெண்ணிடம் பேசக் கூசும் வார்த்தைகள் அநாயசியமாக புழங்குவது ஒருபக்கம் என்றால், அவ்வாறான வார்த்தைகளைப் பொது இடத்தில் கேட்டால் காட்டும் எதிர்வினைகளுக்கு நேர்மாறாகவே இங்கே எதிர்வினை காட்டுப்படுகிறது. (பெரும்பாலும்) தன்னுடைய பண்டம் விற்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் என்னதான் தரக்குறைவான வார்த்தைகள் சொன்னாலும் சகித்துக்கொண்டு சிரிக்கும் சிறுவணிகர்களைப்போல உருமாறி நிற்கிறார்கள். ஆண் ரசிகர்களைக் கவர பெண் பயனர்கள் கீழிறங்கிப்போவது அருவெறுப்பு என்றால் பெண்களை (ஆண்டிகளை) கவர ஆண் பயனர்கள் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு பக்கம் பெண்களை சந்தைப் பொருட்களாக உணரச் செய்வதோடு இன்னொரு பக்கம் ஆண்களை பெண்களை அடையத்துடிக்கும் வேட்டை நாய்களாக உணரச்செய்கிறது டிக்டோக். இறுதியில் ஃபோர்னோ எனப்படும் ஆபாச காணொளிகள் இங்கே ஜனரஞ்சகமாக ரசிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பாலியல் உறவு காரணமாக குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகள் – கொலைகள் பெருகி வரும் காலத்தில் மியூசிக்கல் செயலியின் பெரு வெற்றி எதைக் காட்டுகிறது?

♦♦♦

தென்னிந்தியாவில் – குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தில் – பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை வடஇந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் குறைவு என்பதை பல்வேறு சந்தர்பங்களில் செய்திகளில் படித்திருப்போம். இது இம்மாநிலங்களில் கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்காகவும், சமநீதிக்காகவும் நடந்த அரசியல் போராட்டங்கள் கலாச்சார விழுமியங்களின் மீது செலுத்திய தாக்கம். கேரளாவில் பொதுவுடைமை இயக்கமும் தமிழகத்தில் பெரியாரின் செயல்பாடுகளும் பெண்களை ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும் என்கிற உணர்வை ஓரளவுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தது. எனினும், அடிப்படையில் பழைய நிலபிரபுத்துவ பிற்போக்கு கண்ணோட்டமே செல்வாக்கு செலுத்திவரும் ஒரு சமூகத்தில் கருத்தளவிலான பிரச்சாரங்களின் வலிமை என்னவென்பதை இந்த நவீன தொழில் நுட்பங்களின் பரவல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பெண்களை வெறும் உடைமைகளாக பார்க்க பழக்கப்படுத்தியிருக்கும் பார்ப்பனியத்தின் புண்ணிய பூமியில் டிக்டோக் போன்ற சமூகவலைத்தள செயலிகள் சமூகத்தின் மீண்டும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கின்றன.

– சாக்கியன்

மேலும் வாசிக்க :