சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அந்தக் காணொளியை அனுப்பி வைத்திருந்தார். மட்டமான தரத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியின் பின்னணியில் ”ஆசைய காத்துல தூது விட்டு” என்கிற ஜானி திரைப்படத்தின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடுத்தர வயதுப் பெண் ஒருவர், 38 வயது இருக்கலாம், 14 அல்லது 15 வயதுச் சிறுவன் ஒருவனை ஆபாசமாக கட்டிப்பிடித்து அந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார். 15 வினாடிகள் ஓடியது அந்தக் காணொளி.

நண்பனை உடனே அழைத்து இது என்னடா கண்றாவி எனக் கேட்டேன். “இது தான் ஜி இப்போ ட்ரெண்டு” எனச் சிரித்தவர், மேற்படியான விசயங்கள்  ம்யூசிக்கலி என்கிற செல்போன் செயலியில் அதிகம் கிடைப்பதாகவும், பலர் இவ்வாறான டப்ஸ்மாஷ்களைச் செய்து பதிவேற்றிய இன்னபிற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமான ‘கசமுசா’ சமாச்சாரங்கள் எனக் கருதி அப்போதைக்கு மறந்து விட்டேன். பின்னர் குன்றத்தூர் அபிராமி தலைப்புச் செய்திகளுக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் வழக்கமான காலை நேர தேனீர்கடை உரையாடலின் போது “அந்த பொண்ணு பிரியாணிக்காரன் கூட சேர்ந்து டப்ஸ்மாஷ்லாம் பண்ணிருக்குங்க…” என்றார் நடைப்பயிற்சி நண்பர்.  அன்றே செல்போனில் மேற்படி செயலியை நிறுவி என்னதான் இருக்கிறதெனப் பார்க்கத் துவங்கினேன்.

♦♦♦

மியூசிக்கலி செயலியை இப்போது சீனாவைச் சேர்ந்த (அதே போன்ற செயலியைக் கொண்ட) நிறுவனம் ஒன்று கையகப்படுத்தி இணைத்து அதன் பெயரை டிக்டோக் (Tik Tok) என மாற்றியுள்ளனர். எனவே மேற்கொண்டு புதிய பெயரிலேயே குறிப்பிடுவோம்.

செயலியின் வடிவமும் பாவிக்கும் முறையும் மிக எளிமையானது. கணக்கு துவங்க தொலைபேசி எண் மட்டுமே கூட போதுமானது. 13 வயதுக்கு மேலிருப்பவர்கள் கணக்குத் துவங்கலாம், ஆனால் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அதன் விதிமுறைகள். ஆனால், விதிமுறையை யாரும் வாசிப்பதில்லை என்பதோடு 18 வயதுக்கு கீழான பயனரின் அருகே யார் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணிக்கும் வசதியும் டிக்டோக்கிடம் இல்லை. எனவே விதிமுறை / கட்டுப்பாடுகள் எல்லாம் ’உலூலுவாய்க்கி’ என்று வைத்துக் கொள்வோம்.

கணக்கைத் துவங்கியதும் ”உங்களுக்காக” (for u) எனும் பகுதியின் கீழ் உங்களுக்கே உங்களுக்கென்று அந்த செயலி தெரிவு செய்யும் காணொளிகள் ஓடத் துவங்கும். நீங்களே யாரையாவது பின் தொடர்கிறீர்கள் என்றால், அவர்களது காணொளிகள் பின்தொடர்வோர் ”Following” எனும் தலைப்பின் கீழ் வரும். ஒவ்வொரு காணொளியும் முடிந்தவுடன் திரையை மேலே இழுத்தால் அடுத்தது வரும்; பக்கவாட்டில் இழுத்தால் அதே பயனரின் மற்ற காணொளிகளைப் பார்க்கலாம்.

செயலியின் உள்ளேயே பதிவாக்கப்படும் காணொளிகள் ஒவ்வொன்றும் 15 நொடிகள் தான். ஏற்கனவே பதிவாக்கப்பட்ட சற்றே நீண்ட காணொளிகளையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பின்னணியில் பாடல், திரைப்பட வசனம், சொந்த வசனம், நகைச்சுவை வசனம் போன்றவை ஒலிக்க திரையில் அதற்கு வாயசைக்கலாம், நடன அசைவுகளையும் காட்டலாம். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்றுக்கு (ஒரிஜினல் வசனத்திற்கு) நடித்துக் காட்டலாம்.

நீங்கள் பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.  வெறுமனே செயலியை நிறுவி இருந்தாலே கூட உங்களுக்குப் ”பொருத்தமான” காணொளிகள் வந்து கொண்டிருக்கும். அநேகமாக இந்த செயலி உங்கள் புவி இலக்கை (Geo Location) அறிந்து கொள்ளும். நீங்கள் ஒரிசாவுக்கும், மும்பைக்கும் பயணம் சென்றால் அந்த மொழி காணொளிகளும் இடையிடையே வரும். மற்றபடி நீங்கள் எந்த மாதிரியான காணொலிகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறீர்களோ (ஹார்டின்) அதே விதமான காணொளிகள் தொடர்ந்து வரும். இவை வழக்கமாக சமூக வலைத்தளங்கள்  செயற்கை நுண்ணறித் திறன் கொண்டு செய்யும் மலிவான வித்தைகள் தாம்.

♦♦♦

முதல் விசயம் : இந்த செயலி மற்ற சமூக வலைத்தள செயலிகளைப் போல் நேரத்தைக் கொல்கிறது; அதோடு கைப்பேசியின் மின்கலத்தையும் (Battery) அநாயசியமாக தின்று தீர்க்கிறது. இதில் இரண்டாவது விசயம் குறித்து யாராது துறைசார் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். யுடியூப் போன்ற காணொளி செயலிகளைக் காட்டிலும் அதிகளவு மின்கல ஆற்றலை இச்செயலி கோருகின்றது. வெறுமனே காணொளிகளை மட்டும் காட்டுகின்றதா அல்லது பின்னணியில் வேறு வேலைகளையும் செய்கின்றதா எனத் தெரியவில்லை.

அடுத்து, பயனர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப பல்வேறு வகையான காணொளிகளை பதிவேற்றுகின்றனர். ஆனால், அந்த ”ரசனை” தான் கவனத்திற்குரியதாக இருக்கிறது. சிலர் மென் சோக இளையராஜா பாடல்களுக்கு குளோசப்பில் வாய், கண் முதலிய முகத்தின் பல்வேறு உறுப்புகளை சுழித்துக் கொணஷ்டை செய்கிறார்கள். சிலர் வடிவேலுவின் நையாண்டி வசனங்களுக்கு தங்களால் முடிந்த கொணஷ்டைகளையும் செய்கின்றனர் – இவையெல்லாம் பிரச்சினையில்லை. ஆதித்யா சானலில் இவை அதிகம் வரும். மியூசிக்கல் செயலியின் வெற்றியும் ஆதித்யா சானலோடு கூட பயணப்பட்டிருக்கும்.

ஆனால், மிகப் பலர் குத்துப்பாட்டுகளுக்கு அறைகுறை ஆடைகளோடு ஆபாச உடலசைவைக் காட்டுகின்றனர். ஹரஹரமகாதேவகியின் அருவெறுப்பான பாலியல் காமெடிகளுக்கு வாயசைப்பது, சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களை (இணையுடனோ, இணை இல்லாமலோ) நடித்துக் காட்டுவது, ஆபாச பாடல் / வசனங்களுக்கு ஏற்ப ஏழெட்டு அடுக்கில் மேக்கப்புடன்  வருவது, பாலியல் தொழிலாளிகளைப் போல் கண் ஜாடை காட்டுவது… இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

அடுத்து, ரசிக மகாஜனங்களின் வழக்கமான அக்கப்போர். விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு பைக்குகளில் சாகசம் செய்து எதிரணி ரசிகர்களுக்கு சவால் விடுவது. சில காணொளிகளில் வெட்டுவேன் குத்துவேன் ரக சவடால்களும் காணக்கிடைத்தது. ஒரு காணொளியில் பத்துப் பதினோரு வயது மதிக்கத்தக்க எலும்பும் தோலுமாய் மெலிந்திருந்த அஜித் ரசிகன் ஒருவன் கையில் நீண்ட அரிவாளை தூக்க முடியாமல் தூக்கிக் காட்டி.. “டேய் தல ஃபேன்டா.. அறுத்துப் போட்னு போய்னே இருப்பேண்டா” என இல்லாத மீசையைத் தடவியதை அவனது பெற்றோர் பார்த்திருக்க வேண்டும்; ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பர்.

ரசிகர்களைக் கூட வயதுக்கு வராத சிறுவர்களின் ஆர்வக் கோளாறுகள் என கடந்து போய் விடலாம்.. சாதி வெறியர்கள் தனி ரகம். “டேய் ____ நாயே சத்திரிய வன்னியன்டா.. எங்கள்ட்ட வாங்கித் தின்ன நாய்களா.. எங்களுக்கே மீசைய முறுக்கிக் காட்றீங்களாடா” என்கிறார் தீச்சட்டியில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ’ஷத்திரியர்’(!?) ஒருவர். “எலேய் _____ பசங்களா ஆண்ட வமுசம்டா… அரிவாளத் தொட்டா ரத்தம் காணாம விட மாட்டோம்டா” என்கிறார் தெற்கத்திய ஆண்ட வம்சத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு ‘ஷத்திரியர்’(!?). இதற்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கிறார்கள் – அதே சாக்கடைத் தரத்தில்.

இத்தனை ரணகளத்திற்கும் இடையில் திராவிட நிறம் கொண்ட பெண்களின் சுயகழிவிறக்க காணொலிகள்.. “அண்ணே.. நாங்கெல்லாம் தமிழ் பொண்ணுங்க. எங்க கலரே இது தாம்ணே. முழுசாப் பார்த்து லைக் போடுங்கண்ணே.. வீடியோவ தூக்கி விட்றாதீய”. குத்துப்பாட்டுக்களுக்கு திருநங்கைகள் சிலருடைய நடன முயற்சிகளும் இடையிடையே தலை காட்டுகின்றன. சில விடலைப் பையன்கள், பெண் பயனர்களின் காணொலியை ஒரு ஓரத்தில் ஓட விட்டு பதிலுக்கு சில அசைவுகளைச் செய்து காட்டுகின்றனர்; பொருந்தாக் காதலுக்கான அவர்களது இம்முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியடைந்தன என்பது பற்றி நமக்கு தெரியாது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த செயலி பெரும் குப்பைக் கிடங்கு.

♦♦♦

குப்பையை ஏன் கிளறியாக வேண்டியிருக்கிறது? 2018-ன் முதல் காலாண்டில் முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற எல்லா சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் மிக அதிகமாக (45 மில்லியன்) தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது டௌயின் (Douyin). இந்த டௌயின் செயலி தான் பின்னர் ம்யூசிக்கலியை தன்னோடு இணைத்துக் கொண்டது. கடந்த 2017 நவம்பர் மாதம் 1 பில்லியன் டாலர் கொடுத்து ம்யூசிக்கலியை கையகப்படுத்திய டௌயின், சென்ற மாதம் இணைப்பு வேலையை முடித்து “டிக் டோக்” எனும் பெயரில் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத துவக்கத்தில் டௌயின் செயலிக்கு 500 மில்லியன் பயனர்களும், ம்யூசிக்கலிக்கு 100 மில்லியன் பயனர்களும் இருந்தனர். தற்போது சுமார் 65 கோடி பயனர்கள் இருப்பதாகவும், டிக்டோக் பிற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை விஞ்சி சென்று கொண்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ம்யூசிக்கலியில் வரும் தமிழ்க் காணொளிகளின் முறைமையை (Pattern) அவதானித்துப் பார்த்ததில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் கணிசமாகவும் அதில் பெரும்பாலும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தச் செயலியின் வடிவமைப்பே ஒரு குறிப்பிட்ட பயனர் எந்தவிதமான காணொளியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. உதாரணமாக ஒரு சீசனில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா” எனும் பாடல் பிரபலம் ஆனால், பலரும் அந்தப் பாடலுக்கு நடன அசைவுகள் (இடுப்பசைவு) செய்து பதிவேற்றுகிறார்கள். இதில் யார் அதிகம் லைக் பெறுவது என்கிற போட்டியே யார் குறைந்த உடையுடனும் அதிக ஆபாசத்தோடும் காட்சியளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. இது சினிமா குத்துப் பாடல்களுக்கிடையே உள்ள போட்டி போன்றது.

முகநூல் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களைப் போலவே டிக்டோக்கும் பயனர்கள் தம்மையே ஒருபண்டமாக கருதத் தூண்டுகின்றது (commodification of Self). ஆனால், மற்றவற்றில் முகம் காட்டும் அல்லது காட்சிப்படுத்தும் கட்டாயமில்லை. மேலும், முகநூல் ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் அரைகுறையாகவாவது ”விவாதம்” என்கிற ஒன்று நடக்கிறது. அதற்கு கருத்து என்கிற ஒன்றைச் சொல்லியாக வேண்டும் – அது எத்தனை மொக்கையானதாக இருந்தாலும்.

டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை; இங்கே காட்சியே பிரதானம். அதிலும் சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை என்பதால் அபாயத்தில் அளவு அதிகரிக்கிறது. காட்சியின் மூலம் பின் தொடர்வோர் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? விஞ்ஞான, அரசியல், ஆன்மீக விளக்கங்கள் அளிக்கலாம் தான் – ஆனால், பதினைந்து நொடியில் அது சாத்தியம் இல்லை. எனவே ஆபாசப் பாடல்களும், வசனங்களுமே அதிகபட்ச சாத்தியம். அதிலும், பாடலின் வரிகள் எந்தளவுக்கு பாலியல் தன்மை கொண்டிருக்கிறதோ அது தோற்றத்திலும் எதிரொலித்தாக வேண்டும்.

ஒன்றை ஒன்றை வளர்த்துக் கொள்ளும் இந்த அம்சங்கள் எங்கே இட்டுச் செல்கின்றன? ஆண்களுடைய விருப்பத்தின் அளவு எந்தளவுக்கு மேலே செல்கிறதோ அந்தளவுக்கு மேலாடையின் அளவை கீழே இறக்குகிறது. தோலின் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை ஆடைக் குறைப்பின் மூலமும், ஆபாச அசைவுகளின் மூலமும் கிடைக்கும் பிரபலத்தின் மூலமும் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமும் சமன்செய்து விடுகிறது. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம். ஆண்களைப் பொருத்தவரை சாதிவெறி, ரசிக கும்பலின் சல்லித்தனங்கள். உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

மேலை நாடுகளிலும் இதே பிரச்சினைகளுடன் தற்கொலையைத் தூண்டும் பதிவுகள் உள்ளிட்ட வேறு சிலவும் உள்ளன. அவையெல்லாம் விரைவில் ’தமிழ்ச் சூழலுக்கும்’ இறக்குமதியாகிவிடும் என எதிர்பார்க்கலாம். இவையனைத்தையும் விட முக்கியமானது – இதில் செலவழிக்கப்படும் நேரமும், இந்தச் செயலியால் வடிவமைக்கப்படும் சிந்தனைப்போக்கும்தான். நடுத்தர வயதை எட்டிய ஒரு பெண் “பட்டுக்கோட்டையிலே ங்கோத்தா பருப்பு விக்கையிலே” என்கிற பாட்டுக்கு ’நடனமாடுகிறார்’; பின்னூட்டத்தில் ஒரு விடலைப் பையன் “ஆண்டி அப்படியே உங்க பேக்கையும் ஆட்டிக் காட்டுங்க” என்கிறான். அதற்கு பதிலாக அந்தப் பெண்மணி ஸ்மைலி போடுகிறார்.

பொது வெளியில் ஒரு பெண்ணிடம் பேசக் கூசும் வார்த்தைகள் அநாயசியமாக புழங்குவது ஒருபக்கம் என்றால், அவ்வாறான வார்த்தைகளைப் பொது இடத்தில் கேட்டால் காட்டும் எதிர்வினைகளுக்கு நேர்மாறாகவே இங்கே எதிர்வினை காட்டுப்படுகிறது. (பெரும்பாலும்) தன்னுடைய பண்டம் விற்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் என்னதான் தரக்குறைவான வார்த்தைகள் சொன்னாலும் சகித்துக்கொண்டு சிரிக்கும் சிறுவணிகர்களைப்போல உருமாறி நிற்கிறார்கள். ஆண் ரசிகர்களைக் கவர பெண் பயனர்கள் கீழிறங்கிப்போவது அருவெறுப்பு என்றால் பெண்களை (ஆண்டிகளை) கவர ஆண் பயனர்கள் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு பக்கம் பெண்களை சந்தைப் பொருட்களாக உணரச் செய்வதோடு இன்னொரு பக்கம் ஆண்களை பெண்களை அடையத்துடிக்கும் வேட்டை நாய்களாக உணரச்செய்கிறது டிக்டோக். இறுதியில் ஃபோர்னோ எனப்படும் ஆபாச காணொளிகள் இங்கே ஜனரஞ்சகமாக ரசிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பாலியல் உறவு காரணமாக குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகள் – கொலைகள் பெருகி வரும் காலத்தில் மியூசிக்கல் செயலியின் பெரு வெற்றி எதைக் காட்டுகிறது?

♦♦♦

தென்னிந்தியாவில் – குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தில் – பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை வடஇந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் குறைவு என்பதை பல்வேறு சந்தர்பங்களில் செய்திகளில் படித்திருப்போம். இது இம்மாநிலங்களில் கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்காகவும், சமநீதிக்காகவும் நடந்த அரசியல் போராட்டங்கள் கலாச்சார விழுமியங்களின் மீது செலுத்திய தாக்கம். கேரளாவில் பொதுவுடைமை இயக்கமும் தமிழகத்தில் பெரியாரின் செயல்பாடுகளும் பெண்களை ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும் என்கிற உணர்வை ஓரளவுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தது. எனினும், அடிப்படையில் பழைய நிலபிரபுத்துவ பிற்போக்கு கண்ணோட்டமே செல்வாக்கு செலுத்திவரும் ஒரு சமூகத்தில் கருத்தளவிலான பிரச்சாரங்களின் வலிமை என்னவென்பதை இந்த நவீன தொழில் நுட்பங்களின் பரவல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பெண்களை வெறும் உடைமைகளாக பார்க்க பழக்கப்படுத்தியிருக்கும் பார்ப்பனியத்தின் புண்ணிய பூமியில் டிக்டோக் போன்ற சமூகவலைத்தள செயலிகள் சமூகத்தின் மீண்டும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கின்றன.

– சாக்கியன்

மேலும் வாசிக்க :

13 மறுமொழிகள்

  1. இங்கே கற்றறிந்த ஆன்றோர்களே இந்த கழிசடை சூழலில் சிக்கி சீரழியும் போது அல்லது மற்றவர்களை சீரழிக்கும் போது இளம் வயதினரை பற்றி என்ன சொல்ல முடியும்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து பாடுவதற்கும் கருவிகளை இசைப்பதற்கும் முன்னுரிமை தரும் இசைக்குழுக்களை அமைக்க வேண்டும். அல்லது பல கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சேர்த்து ஒரு இசைக் குழுவை அமைக்கலாம். வாரம் ஒரு மணி நேரம் இசைப் பயிற்சிக்கு ஒதுக்கினால் போதும் மாணவர்கள் பண்பட்டு விடுவார்கள். பாலியல் நாட்டத்தை ஓரளவுக்காவது குறைக்க முடியும். அனைத்து மாணவர்களையும் இசைப் பயிற்சியில் ஈடுபடுத்தவேண்டும். உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை திரையிட்டு விவாதம் நடத்தும் பிலிம் கிளப்கள் ஆகியவற்றையும் தொடங்கலாம். நான் படித்த உயர் கல்வி நிறுவனத்தில் ஈரானின் மஜித் மஜிதியின் திரைப்படத்தை ஜமக்காளம் விரித்த தரையில் உட்கார்ந்து பார்த்த மாணவர்கள் முடிவில் கைதட்டியது பசுமையாக நினைவிருக்கிறது. மாதம் இரண்டு திரைப்படங்களை ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் திரையிடலாம். மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுவது இந்த விடயத்தில் பலனளிக்கும் என்று தோன்றவில்லை விளையாட்டில் அதிகமாக ஈடுபடும் மாணவர்கள் சிலரின் யோக்கியதையை பார்த்தாலே பயமாக இருக்கிறது மேற்கண்ட விடயங்கள் அரசு கல்வி நிறுவனங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்துக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் தற்போது தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிராமணர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் மட்டும் இசை குழுக்கள் உள்ளன. இது விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும் கல்வியானது ஓரளவுக்காவது மன அழுத்தத்தை கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடைசி 10 நாளில் எதையாவது மனப்பாடம் செய்து எழுதினால் பாஸ் செய்து விடலாம் என்று மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றித்திரிவார்கள். இப்போது சமச்சீர் கல்வி அந்த நிலையைத் தான் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாதிரியான அரைகுறை கல்விமுறையை ஆதரிப்பது சமூக விரோதம். மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எதிரானது.

  2. சின்னா.2.0
    நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் செப்டம்பர் இதழை அவசியம் படிக்கவும்.

  3. ஹஹா முரளி, மரியாதையுடன் ஒன்று கூறுகிறேன், தங்களை விட இந்த கான்ஸ்பிரசி பன்னாடை தியரிகள் பற்றி நன்கறிந்தவன் நான். இல்லுமினாடி பத்தி யார் பேசியது இப்போ? மிக வித்தியாசமான விடயம் நான் பேசியது. அப்படியே உங்களுக்கு ஒத்து போகாவிடினும் , மணிகண்டன் வகையறாக்களின் அர்த்தமற்ற அலம்பல்களை கூட வெளிவிடும் வினவு , சுருக்கென யூதர்களை பற்றி பேசியவுடன் சொல்லாமட் கொள்ளாமல் முழு பின்னூட்டங்களையே நீக்குவது ஏன்? வரலாற்றில் நடந்தவைகளை தானே கேட்டேன்?? உதாரணம் தோழர் ஸ்டாலினின் மரணம் பற்றியது, அதை கூட நீக்க வேண்டிய அவசியம் என்ன??? அதை விட்டு லாலிபாப் போல நீங்க சொல்றதையே கேக்க சொல்லாதிங்க. சரி எனது கருத்து ஆதாரம் இல்லாத பொய் என்றால் அதை படிப்பவர் முடிவு பண்ணட்டுமே? நீங்க விழுந்தடித்து நீக்குவது ஏன்? எத்தனையோ அநாகரிக காவி மறுமொழிகள் இன்னும் உள்ளனவே??? என்னமோ போங்க நான் இனிமே என்னோட ப்ளாக்கில் இதெல்லாம் எழுதிகிறேன். வினவை நம்பியது போதும்.

    • சின்னா2.0 சபாஷ் சரியான போட்டி தயவுசெய்து தங்களது பிளாக்கின் முகவரியை குறிப்பிடவும்…. மரியாதை தராமல் கூட இருக்கலாம்…

      • சின்னாவின் மறுமொழிகளை தடைசெய்தது பற்றி வினவு பதில் கூறலாமே !
        சின்னா ஆழமாக சிந்திக்கும் நண்பர். அவர் கருத்துக்கள் முரண்பட்டாலும் அது நட்பு முரணாகக் கொள்ளலாமே !

        இதை சற்று ஆரோக்கியமாக கையாளலாம் என எனக்கு படுகிறது.

        • கார்த்திகேயன், சின்னா மறுமொழிகள் கருத்து வேறுபாட்டினால் நீக்கப்படவில்லை. தற்போது அவர் எந்தக் கட்டுரையாக இருந்தாலும் யூதர் சதி எனும் முட்டாள்தனத்தை வரம்பின்றியும், விவாதத்தை திசை திருப்பவும் வலிந்து வெளியிடுகிறார். அவர் முற்போக்காக பேசுவது போன்ற கருத்துக்கள் வெறும் முகமூடிதான். அவருக்கென்று ஒரு நோக்கம் உள்ளது. அவர் ஹீலர் பாஸ்கர் அல்லது ஆர்.எஸ்.எஸ் அல்லது நாம் தமிழர் என்று ஏதோ ஒரு கருத்துக் கொண்டவராக இருக்கலாம். அதுவும் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு கட்டுரையின் கருப்பொருளை விடுத்து கருப்பொருள் சார்ந்து விவாதிப்பதை விடுத்து, யூதக் காய்ச்சல் பேசுவது நிச்சயம் ஒரு உள்நோக்கம் கொண்டதுதான். ஆரம்பத்தில் ஓரளவுக்கு அனுமதித்தோம். தற்போது அவரது பிணி முற்றிய நிலையில் அவரை குணமாக்குவதற்காக்கவும் இப்படி சில வெட்டி கருத்துக்களை நீக்க வேண்டியிருக்கிறது. நன்றி

      • ப்ளாக்கிங் புதியவன் நான் இனிமேல்தான் வேர்ட்ப்ரெஸ் பரிச்சயபடவேண்டியுள்ளது, ஆனால் நான் கூற விரும்புவது அனைத்தும் வினவு வெளிய விரும்பவில்லை, அத்தோடு பொதுவாக எனது பின்னூட்டங்களும் பதிவை விட பெரிதாக உள்ளது. அதனால் பதில்கள் அனைத்தும் சேமித்து வைத்துள்ளேன் அவற்றை கட்டுரை வடிவில் மாற்ற வேண்டும், விரைவில் பதிவேன். இது வினவுடன் போட்டியோ வெறுப்போ அல்ல, சொல்ல வருவதை வெளிவிடாமல் தடுக்கும் விரக்தி மட்டுமே. யூதர்கள் தவிர்ந்த அனைத்திலும் வினவு பக்கம் நான்.

  4. முதலில் மியுசிக்கலி எனும் செயலியை உருவக்கியது கல்வி தொடர்பான வீடியோக்களை பகிர்ந்துக்கொள்ளத்தான். ஆனால் அது தோல்வியடையவே இதை பொழுதுபோக்கு செயலியாக மாற்றினார்கள். உடனே ஹிட் அடித்துவிட்டது. இப்போதும் இந்த செயலியை கல்வி தொடர்பான செயலியாக மாற்றலாம என முயற்ச்சிகள் மேற்கொண்டு தான் வருகிறோம்.
    பெண்கள் ஆபாசமாக செய்கைகளை செய்கிறார்கள் என்பது உண்மை தான் ஆனால் அது ஏற்கனவே சினிமா, தொலைகாட்சி நடன நிகைச்சிகள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வித ஆபாச அசைவு கலாச்சாரத்தின் தொடர்ச்சி தான்.
    இதில் உளவியல் ரீதியாக பயனாளர்களுக்கு விழும் லைக்குகள் தரும் போதை மெல்ல அவர்களை இதை போன்ற ஆபாச அசைவிற்க்கு தூண்டலாம். ஆனால் அது சமுகம் அங்கிகரித்திருக்கும் தொலைகாட்சி ஆபாச அசைவுகளுக்கு ஒத்தது தான். இன்றும் கிராமபுரங்களில் ஆடால் பாடல் நிகழ்ச்சிகலை கேள்விபட்டதில்லையா?

    மற்றொன்று வடநாட்டிலும், வெளிநாட்டிலும் பெண்கள் சிறிய ஆடைகளையே அணிகிறார்கள். அவர்களுக்கு அது தவறாக தெரியவில்லை. அதனாலேயே அவர்களை இந்த லிஸ்டில் சேர்கலாம என்று தெரியவில்லை.ரஷியாவில் பாஃலே நடனத்தை பார்த்த லால பகதூர் சாஸ்திரி ,அவர்கள் அணிந்திருக்கும் குட்டை பாவடையும் , இருக்கமான ஆடையும் கூச்சம் தந்ததாக கூறினார். பாலேவின் நலினமும், நேர்த்தியும் அவர் பார்வையில் படவில்லை..
    இந்த செயலியை குப்பை என்று நீங்கள் கடிந்துக்கொண்டாலும் இது மாதிரியான செயலிகள் தான் எதிர்காலம். ஒரு காலத்தில் ப்ளாக்(BLOG) உலகிலும், சமுக வலைதளத்திலும் வினவு என்ன செய்ததோ அதை இனி எதிர்காலத்தில் ம்யுசிக்கலியில் செய்யலாம்.

    வினவு அக்கவுண்டில் கோவன் பாடல்களை போட்டு பாருங்களேன், அதன் வரவேற்ப்பு புரியும்.. ஏற்கனவே பெரியாரிஸ்ட்டுகள் பெரியார் வசனங்களை ம்யுசிக்கலியில் பதிவிட தொடங்கிவிட்டார்கள்.

    இந்த கட்டுரையின் Conclusion சற்றே வலதுசாரி தனமாக இருக்கிறது.. அப்படி ப்ளாக் உலகத்தில் அன்றைய பதிவுகளை பார்த்து இதே முடிவுக்கு வந்திருந்தால் இன்று வினவு இல்லை..

    • சிரிப்பு அவர்களே உங்கள் கருத்து முழுவதும் ஒப்பாரியாகவுள்ளது.தொழில்நுட்பத்தை முதலாளித்துவம் எத்தனை வக்கிரமாக தனது சுயலாப வெறிக்கு பயன்படுத்துகிறது என்பதையும் அத்துடன் அதன் சமூக அவலத்தையுமே அம்பலப்படுத்தியுள்ளது வினவின் கட்டுரை.மேலும் வினவு என்றும் தொழில்நுட்ப அறிவியலுக்கு ஆதரவாகவே உள்ளது.இதில் எங்கிருந்து வலதுசாரித்தனம் வந்தது? இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில் பார்ப்பனீய இந்து மதமே அனைத்திலும் கோலோச்சுகிறது என்ற யதார்த்தத்தையும் கணக்கில் கொண்டே கட்டுரையாளர் எழுதியுள்ளார்.
      கலிலியோ டெலஸ்கோப்பை கண்டுபிடித்ததுடன் அன்றய பெரிய மனிதர்கள் தொலைவில் குளிக்கும் பெண்களை பார்க்க பயன்படும் என்று கூறினர்.அது அன்றைய சமூக ஆண்களின் கண்ணோட்டம்.இன்றைய உலகமயம் ஆண் பெண் பேதமின்றி வக்கிரமான கண்ணோட்டத்தையே வாரிவாரிவழங்குகிறது.

    • நண்பர் சிரிப்பு,
      கட்டுரை குறித்து காத்திரமான விமர்சனம் அளித்தமைக்கு நன்றி! இத்தகைய விவாதங்களே எங்கள மேம்படுத்திக்க கொள்வதற்கு உதவும் என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சி. இந்தக் கட்டுரையின் தொனி சற்றே வலதுசாரிப் பார்வையில் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. எந்த ஒரு தொழில்நுட்ப அறிமுகத்திலும் நன்மை, தீமை அல்லது பயன் மதிப்பு, விரய மதிப்பு என்பவை இருக்கிறது என்றாலும், அவைகளை பிரபலப்படுத்த மலிவான வழி என்பவை ஏற்கனவே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியோடு இணைகிறது. இந்த இணைதலில் வணிகமும் சேரும் போது அது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகிறது.

      பெண்களின் ஆபாசமான நடனம் என்பவை நீங்கள் குறிப்பிட்டவை போல் சினிமா, தொலைக்காட்சியிலும், கிராமப்புற கோவில் நடனங்களிலும் இருப்பது உண்மைதான். ஆனால் அவை மக்களின் விருப்பு, தேவையிலிருந்து நிலை நிறுத்தப்படவில்லை. மலிவான ரசனையை தூண்டிவிட்டு வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற வணிக முனைப்புதான் பிராதனம். குத்துப் பாட்டு, ஐட்டம் சாங் போன்றவையும் கூட அப்படியானவையே. உடை குறைப்பு என்பதற்கு பாலே நடனமோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டோ, நீச்சல் போட்டிகளோ பொருத்தமானவை அல்ல. அங்கே குறிப்பிட்ட விளையாட்டின் நேர்த்தியும், திறமையும், கலையின் பரவசமும் இருக்கின்றன. உடைகளே குறைக்காமல் கூட ஒரு அபிநயத்தின் மூலம் ஃபோர்னோ செய்கைகளை செய்ய முடியும். மியூசிக்கல் செயலியில் பிரபலமாவதும், மக்கள் போலச் செய்து பதிவேற்றும் வீடியோக்களும் குறிப்பிட்ட திசை வழியில் செல்கின்றன. அதைத்தான் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

      மியூசிக்கல் செயலியில் பெரியாரோ, பகத்சிங்கோ, கோவன் பாடல்களோ நாம் வெளியிடலாம். அதானாலேயே அவை மற்ற ஆபாச நடனங்களை வென்றுவிடுவதற்கான அடிப்படை இல்லை. குடிப்பவன் திருந்தி விட்டால் டாஸ்மாக்கிற்கே தேவை இருக்காது என்பது போன்ற பார்வைதான் மக்களிடையே இந்த வகை விருப்பம் இருப்பது என்பதும். மக்கள் குடிக்க கூடாது என்பதை நாம் பிரச்சாரம் செய்தாலும் பிரதானமாக அரசு அதை மூடவேண்டும் என்ற போராட்டமே முக்கியம். இன்று பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, கொலைகள் அதிகரித்திருப்தற்கு இத்தகைய புதிய ‘தொழில் நுட்ப’ சாத்தியங்கள் காரணமே இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதே நேரம் அவற்றை முற்றிலும் அழிக்கவும் முடியாது.

      மியூசிக்கல் செயலியை கல்வி நோக்கத்திற்காக நீங்கள் பயன்படுத்த முயன்றாலும் அது அதனுடைய பிரதான திசைவழிக்கு போட்டியாகவோ, தீர்வாகவோ இருக்குமென்று நம்புகிறீர்களா என்ன? எனினும் இத்தகைய இருபக்கப் பார்வையோடு வினவு கட்டுரை இல்லை என்பதை ஏற்கிறோம். வரும் காலத்தில் திருத்திக் கொள்வதோடு, இது தொடர்பாகவும் எழுதுகிறோம். உங்களுடைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

      • நன்றி.
        ஒரு கட்டுரையில் இந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடுவதில்லை ஆனால், தொடர்ச்சியான விவாதங்களே தீர்க்கும் என நம்புகிறேன்.

        என் கமெண்டிற்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

  5. பெண்களை கட்டுக்கோப்பாக இருக்க சொல்வதை அடிமைத்தனம் என்றும், கவர்ச்சியாக உடை உடுத்தி என்னைப்பார் என் அழகைப்பார் என்பதை நவநாகரீகமாக கருத்துவதன் விளைவே இது போன்ற செயலிகள் வெற்றி

Leave a Reply to சிரிப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க