கருப்பு – சிவப்பு – வெள்ளை – பழுப்பு :
இந்தியர்களின் வெள்ளை நிறத்தின் மீதான அதீத ஆர்வத்தை மாற்றுவது எப்படி?

ந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் பாகுபாட்டின் ஊற்று பார்ப்பனீயமே. சாதி- மத – பாலின – நிற பாகுபாட்டின் குவிமையமாக பார்ப்பனியம் இருக்கிறது. சாதி – மத – பாலின பாகுபாடு சமூகத்தின் எதிர்ப்புக்கு ஆளாக்கப்பட்டு, சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிற பாகுபாடு அனைத்து மட்டங்களிலும் வெட்கமற்ற பொது உளவியலாக மாறி நிற்கிறது. அதனை எதிர்த்து ஒன்றிரண்டு குரல்கள் அவ்வவ்போது ஒலித்து வருகின்றன. அந்த வகையில் முனா பீட்டியின் செயல்பாடு சிறு மாற்றத்தை துவக்கி வைத்திருக்கிறது. நிறத்தின் அடிப்படையை வைத்தே ஒருவரின் திறமையை மதிப்பிடுகிறது இந்திய சமூகம் என்கிறார் முனா பீட்டி. நிற பகுப்பாட்டுக்கு எதிரான செயல்பாட்டாளரான முனா, இந்தியர்களுக்கு ‘வெள்ளை’ நிறத்தின் மீதுள்ள அளவற்ற கவர்ச்சியையும் ‘கருப்பு’ நிறத்தின் மீதான அசூயையும் விவரிக்கிறார். பொருத்தமற்ற, பொருளற்ற நிறப்பாகுபாட்டை நாம் இன்னமும் கைவிடாமல் இருக்கிறோம் என்கிற கேள்வியை கேட்பதோடு, அதை கைவிடுவதற்கான சிறு முயற்சிகளை முன்வைக்கிறார்.

♦♦♦

ரபி மொழியில் ‘முனா’ என்கிற என்னுடைய பெயருக்கு ‘விருப்பம்’ அல்லது ‘ஆசை’ என பொருள். ஆனால், கடந்த பல வருடங்களாக ‘கருப்பு’ என பொருள்படும் பல பெயர்களில்தான் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.  ஏனென்றால் என்னுடைய தோல் அடர் நிறத்தில் இருந்தது.

என்னுடைய அப்பா அடர் நிறம் கொண்டவர். அம்மா வெளிர் நிறம் கொண்டவர். நான் அப்பாவின் நிறத்தை எடுத்துக்கொண்டேன். என்னுடைய தோலின் நிறம், வெள்ளையாகவும் இல்லை, கருப்பாகவும் இல்லை. அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கருப்பு நிறமாக அடையாளப்படுத்தும் அடர் பழுப்பு நிறம் என்னுடையது.

சிறு வயதிலிருந்தே இது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நிறத்தின் காரணமாக நான் முழுமையடையவில்லை என நம்ப வைக்கப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எப்போதும் என் நிறத்தை மற்றவர்கள் நிறத்துடன் ஒப்பிட்டபடியே இருந்தார்கள். அவர்களுடைய கருத்துகளிலிருந்தும் தீர்ப்புகளிலிருந்தும் என்னால் தப்பிக்கவே முடியவில்லை.

சொந்த குடும்பமும்கூட என்னுடைய தோற்றத்தைப் பற்றி நகைச்சுவை துணுக்குகளை சொன்னது. அதில் பிரபலமான ஒன்று: “அம்மா என்னை பிரசவிக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் நான் கருப்பு நிறத்தில் பிறந்தேன்”.

பள்ளியில் என்னுடைய ஆசிரியர் ஒருமுறை, பல்லிளித்தப்படியே இப்படி கேட்டார், “நீ ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கியா?”.

  • படிக்க: கருப்பாயி !

வளரும் பருவத்தில், வெளிர் நிறத்துக்கு மாறவேண்டும் என எனக்கு அழுத்தம் தரப்பட்டது. பல்வேறு வழிமுறைகள் எனக்குச் சொல்லித்தரப்பட்டன. வீட்டிலே செய்யக்கூடிய மஞ்சள், தயிர், கடலை மாவு பூசுவது முதல் கடைகளில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருட்கள் வரை என்னுடைய தோலில் பூசப்பட்டு என்னுடைய நிறத்தை அழகாக்க, அதாவது வெள்ளையாக்க முயற்சித்தார்கள்.

வளர் இளம் பருவம் முடியும் தருவாயில் என்னுடைய குடும்பத்தில் எனக்குப் பொருத்தமான வரன் தேடுவது குறித்து பேச்சு எழுந்தது. ஒருமுறை என்னுடைய உறவினர் வழியாக வந்த ஒரு திருமண அழைப்பை அப்பா நிராகரித்திருந்தார். அப்போது, அந்த உறவினர், “எப்படி வேண்டாமென்று சொல்லலாம்? உன் மகளின் லட்சணத்துக்கு இதைவிட நல்ல சம்பந்தம் வருமென்று நீ எந்த நம்பிக்கையில் இருக்கிறாய்? நீ அவளைப் பார்த்தியா? அவள் கருப்பு!” என்று பேசியது என் நினைவில் இருக்கிறது.

நான் எப்போதும் இந்த மனிதர்களின் கருத்துக்களுக்கோ என்னை வைத்து அவர்கள் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளுக்கோ எதிர்வினை ஆற்றியதில்லை. என்னுடைய பாதுகாப்பின்மை குறித்தோ ஆத்திரப்படுத்தும் எண்ணங்கள் குறித்தோ ஒருபோதும் எவரிடமும் பகிர்ந்ததில்லை. உணர்வற்றவளாக மாறி, வாயை மூடிக்கொண்டேன். புகைப்படங்கள் எடுக்கப்படுவதிலும் குடும்ப விழாக்களில் கலந்துகொள்வதிலும் எனக்கிருந்த அசவுகரியத்தால், எங்காவது தப்பிப்பிப் போய்விடலாம் என்றிருந்தது.

கடந்து போன ஆண்டுகளில் எனக்குள்ளே இந்த வலியை புதைத்து வைத்திருந்தேன்.  இப்போது திரும்பிப் பார்க்கும் போது, மிக ஆழமாக, பெரும்பாலான விஷயங்களை நினைவில் கொண்டுவருவது கடினமாக உள்ளது.

என்னுடைய உணர்வுகளை கையாள்வதற்குப் பதிலாக,  கடினமான நிதர்சனத்துடன் மவுனமாக வாழ பழகிக்கொண்டேன்.

என்னுடைய நிதர்சனம் எளிமையானது, இந்திய சமூகத்தில் என்னுடைய நிறத்தின் காரணமாக என்னுடைய மதிப்பும் குறைவானதே.

வெளிர் நிறம் இந்தியர்களை ஏன் ஆட்டிப்படைக்கிறது?

இந்தியர்களின் வெளிர் நிறத்தின் மீதான அளவற்ற கவர்ச்சி நன்கு அறியப்பட்டது; ஆழமாக வேரூன்றியும் இருக்கிறது. நிறத்தின் மீதான பாரபட்சம் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. மேலும் நாடு முழுவதும் வெளிப்படையாகவே செயல்படுத்தப்படுகிறது.

இந்திய சமூகம் நிறத்தின் அடிப்படையை வைத்தே ஒரு மனிதரை எடைபோடுகிறது. இந்திய கலாசாரத்தில் நல்லவையெல்லாம் ‘வெள்ளை’ நிறத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கருப்பு நிறம் எதிர்மறையான விஷயங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகிய அனைத்தும் ‘வெள்ளையே அழகு’ என்கிற சிந்தனையை வளர்க்கின்றன.

இந்திய விளம்பர தர நிர்ணய ஆணையம், நிற பாகுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அடர் நிறத்தில் இருப்பவர்கள் தாழ்ந்த மனப்பான்மையுடன் இருப்பதாகக் காட்டும் விளம்பரங்களை 2014-ஆம் ஆண்டு தடை செய்தது. இது மாற்றத்தை நோக்கிய ஒரு அடி என சொன்னாலும், பெரிதாக இதனால் மாற்றத்தை உண்டாக்க முடியவில்லை.

நான்கு ஆண்டுகள் கழிந்தபிறகும்கூட, இந்திய ஊடகங்களும் விளம்பர துறையும் அடர் நிறத்தவர்கள் வெள்ளையாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்கிற சிந்தனையை இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

மேலும், அடர் நிறத்தில் இருக்கும் பெண்கள், இன்னும் மூர்க்கமாக வெள்ளையாக தெரிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வெள்ளை நிற பெண்களைப் போல காட்சியளிக்க மேக்கப்-ஐ பயன்படுத்தில் ‘வெள்ளை அடித்தது’போல காட்சியளிக்க விரும்புகிறார்கள். சிலர் வெளுக்கவைக்கும் ‘ப்ளீச்சிங்’ அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவர்களில் என்னைவிட சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் பலர், அந்த நிறம் தங்களுக்குப் போதவில்லை என குறைபட்டுக் கொள்வதை அறிவேன்.

இன்று, நான் ஒரு தாய். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை எனக்குண்டு. என்னுடைய கணவரும் மகனும் வெளிர் நிறத்தவர்கள். என் மகள் என்னைப் போல அடர் நிறத்தவள்.

அவள் பிறந்தபோது, அவளுடைய நிறத்தின் காரணமாக தன்னை மதிப்பு குறைவானவளாக கருதவிடக்கூடாது என நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். சிறுவயதிலிருந்தே அவள் அழகானவள் என்றும் அவருடைய நிறம் அழகானது என்றும் சொன்னோம். ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என சொல்லிக் கொடுத்தோம்.

ஆனால் நிதர்சனம்… அவள் மூன்று வயதாக இருக்கும்போது அவளுடன் படிக்கும் சிறுவன் அவளை விளையாட அழைத்திருக்கிறான்; அவள் தயங்கியிருக்கிறாள். நாங்கள் காரணத்தைக் கேட்டபோது, “அவன் பழுப்பு நிறத்தில் இருக்கிறான்” என்றாள்.

நான் அதிர்ச்சியானோம், எது அவளை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளும்கூட பழுப்புதான் என நாங்கள் அவளுக்கு புரியவைக்க முயற்சித்தோம்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு, வெளியுலகத்திலிருந்து அவளை காப்பாற்றுவது முடியாது என புரிந்து கொண்டோம். வீட்டை விட்டு, வெளியே செல்ல ஆரம்பித்த பிறகு, பழுப்பு நிறத்தவர்கள் மதிப்பு குறைந்தவர்கள் என்கிற சமூகத்தின் பார்வையை அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

உதாரணத்துக்கு, பள்ளியில் நடக்கு கலை நிகழ்ச்சிகளில் உயரத்தின் அடிப்படையில் வரிசையை அமைக்காமல்  நிறத்தின் அடிப்படையில் வெள்ளை நிற குழந்தைகள் முதல் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள்.  என் மகள் உள்பட அடர்நிற தோலுடைய குழந்தைகள், பின் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள். இது என் இதயத்தை நொறுக்கியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு,  சமூகத்தின் கருத்து மாறும்வரை என் மகளும் இளம் வயதில் நான் நினைத்தது போல நிறத்தின் அடிப்படையிலேயே அனைத்து நிர்ணயிக்கப்படுகிறது என நினைப்பாள் என்பதை உணர்ந்தேன். எனவே, நான் இதை மாற்றும் பொருட்டு எதையாவது செய்ய முற்பட்டேன்.

எனக்கு பொருத்தமான என்னுடைய நிறம்!

என் மகளின் சிறப்பானதொரு எதிர்காலத்துக்கு உதவு வகையில்,  #ColourMeRight என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறேன். இந்திய ஊடகங்கள் கருப்பு நிறத்தவர்களை தன்னம்பிக்கை குறைவானவர்களாக சித்தரிப்பதை நிறுத்தும் வகையிலும் என் மகளைப் போல உள்ள குழந்தைகளுக்கு கருப்பு நிற முன் மாதிரியானவர்கள் இருக்கிறார்கள் என சொல்லவும் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கிறேன்.

இந்தியாவில் போராடத்தக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன; இதெல்லாம் அற்பமான விஷயம் என ஒருவர் நினைக்கலாம். ஆனால், பாரபட்சம் என்பது பாரபட்சம்தான். தோலின் நிறம் குறித்த மக்களின் பார்வையை மாற்றுவதன் மூலம், என் மகளைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறேன்.

’கருப்பானவள்’ என இளம் வயதில் என்மீது திணிக்கப்பட்ட பாரபட்சத்தின் காரணமாக நான் இன்னமும் நம்பிக்கை குறைவானவளாகவே உணர்கிறேன். என் மகள் இதுபோன்றதை அனுபவிக்கக் கூடாது. என் மகளின் குணத்துக்காகவும் அவளுடைய தனிப்பட்ட திறமைகளுக்காகவும் அவளை மதிக்கும் ஒரு முற்போக்கு சமூகத்தில் அவள் வளர வேண்டும் என நினைக்கிறேன்.

change.org இணையதளத்தில் #ColourMeRight பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தனிஷ்க் என்கிற நகை நிறுவனத்தின் விளம்பரத்தை முன்வைத்து தொடங்கினேன். ‘அனைத்து மணமகள்களுக்கான நகைகள்’ என்கிற வாசகங்களுடன் தோன்றிய தனிஷ்க் விளம்பரங்களில் வெள்ளை நிற பெண்கள் மட்டுமே மணமகள்களாக காட்டப்பட்டார்கள்.

கருப்பு நிற பெண்களை திருமணம் செய்வது குறித்து இந்தியாவில் ஒரு மூடநம்பிக்கை உள்ளது; ‘வெள்ளை நிற’ பெண்கள் தேவை என கேட்காத திருமண வரன் தேடும் விளம்பரங்களை காண முடியாது. இதன் காரணமாக வெள்ளை நிற பெண் மட்டுமே மணமகளாக இருக்க வேண்டும் என்கிற விளம்பரங்கள் வருகின்றன. நிச்சயம் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல!

என்னுடைய கருத்தை பலர் ஏற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆயிரக்கணக்கானவர்களின் ஒப்பத்தை பெற்றபோது தனிஷ்க் நிறுவனம் என்னுடைய முறையீட்டுக்கு செவி சாய்த்தது. நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையில் விளம்பரங்களை எடுக்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இது ஒரு சிறிய வெற்றியே, ஆனாலும் நம்பிக்கை அளிக்கிறது. நான் மட்டும் தனியாக இல்லை என்கிற உணர்வை இது அளித்தது. இந்தியாவில் உள்ள ஆண்கள்-பெண்கள் பலர் இந்த பிரச்சினையை சந்திப்பதும், அவர்கள் சமூகத்தின் எண்ணத்தில் மாற்றம் வேண்டும் என கருதுவதையும் அறிந்தேன்.

சமீபத்தில், அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்தியாவின் பெரு நிறுவனமாக ‘லாக்மே’வுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறேன்.

உள்ளாட்டு நிறுவனமான லாக்மே, கடந்த ஐம்பது ஆண்டுகளாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது. இந்திய பெண்களின் அழகு தொடர்பான ஆர்வங்களில் லாக்மே முதன்மை இடத்தில் இருக்கிறது.

ஆனால், அவர்களுடைய இணையதளத்தைப் பார்க்கும் போது அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு நிறம் மட்டுமே முன்மாதிரியாக காட்டப்பட்டிருக்கிறது, அது வெள்ளை நிறம்!

லாக்மே ஃபேஷன் வீக் -இன் இந்த ஆண்டுக்கான பொருள் ‘பாரபட்சமற்ற அழகைக் கொண்டாடுதல்’ ‘எல்லைகளைக் கடந்த அழகு’ என்பதாகும். எனவே இந்நிறுவனம் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தையும் அனைவரையும் உள்ளடக்கியதே என தெரிந்து வைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள வெள்ளை, கருப்பு உள்ளிட்ட அனைத்து நிறங்களுக்கும் ஏற்ற அழகு சாதனங்களை தாயாரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் அந்நிறுவனம் உள்ளது.

என்னுடைய முறையீட்டின் மூலம், லாக்மே தன்னுடைய தவறை உணர்ந்து, சரியான திசையில் செல்லும் என நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் கருப்பு நிறத்தின் மீதான கருத்துருவாக்கத்தை லாக்மே போன்ற ஒரு பெரு நிறுவனத்தால் மாற்ற முடியும்.

நிற பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி

இந்திய பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். #ColourMeRight தவிர்க்க முடியாத, கடினமான, நீண்ட பயணம். என்னைப் போன்ற நிறபாகுபாட்டால் ஒடுக்கப்பட்ட எண்ணற்ற பெண்களுக்கு குரலாக இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க விரும்புகிறேன். இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், எத்தனை பேரின் எண்ணங்களை மாற்றும் என எனக்குத் தெரியாது…ஆனால், என்னுடைய மகளின் வாழ்க்கையில் நான் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பது உண்மை.

ஒருமுறை அவள், அந்த சிறுவனின் பழுப்பு நிறத்துக்காக அவனுடன் விளையாட மறுத்தாள். அவள் சமீபத்தில் சொன்னாள், “நானும் உன்னைப் போல பழுப்பு. எனக்கு பழுப்பு பிடித்திருக்கிறது”

நன்றி : அல்ஜசீரா Colour me right: It’s time to end colourism in India
தமிழாக்கம் : கலைமதி