ஞ்சாப்  மாநிலம் அமிர்தசரஸில் நடந்த இரயில் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் விலகவில்லை. பெண்களும் குழந்தைகளுமாய் சுமார் 59 பேர் அந்த விபத்தில் கொல்லப்பட்டனர். கடந்த 19-ம் தேதி (அக்டோபர்) அமிர்தசரஸில் நடந்த தசரா விழா நிறைவின் போது கொண்டாடப்படும் ராம் லீலாவைக் காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். நிகழ்வின் இறுதியில் பிரம்மாண்டமான ராவணன் பொம்மை கொளுத்தப்படுவதற்கு முன் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இதைக் கண்டுகளிக்க பெரும் மக்கள் திரள் கூடியிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தையும் தாண்டி அருகில் ஓடிக் கொண்டிருந்த ரயில் பாதையின் மேல் பலர் நின்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் இரயில் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த கூட்டத்தின் மீது பாய்ந்துள்ளது. இதில் 59 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர் – மேலும் சுமார் 50 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது இராவணன் வேடமிட்ட தல்பீர் சிங் என்பவர், சம்பவ இடத்தில் இருந்து ஓடிப் போகாமல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சித்து அந்த முயற்சியிலேயே பலியாகியும் இருக்கிறார் என்கின்றன பத்திரிகைச் செய்திகள்.

இதற்கிடையே நடந்த துயரச் சம்பவத்திலும் தனது வழக்கமான கழிசடை அரசியலைத் திணிக்க முயன்றனர் சமூகவலைத்தளங்களில் செயல்படும் பா.ஜ.க.வினர். முதலில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான காங்கிரசு பிரமுகர் நவ்ஜோத் சிங் சித்துவும் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) அவரது மனைவியும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்தை விட்டு ஓடி விட்டனர் என்கிற தகவலைப் பரப்பினர். ஆனால், மருத்துவரான சித்துவின் மனைவி சம்பவத்திற்கு முன்பே அங்கிருந்து சென்று விட்டதாகவும், பின் விபத்தைக் கேள்விப்பட்டு அங்கே வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்ததாகவும் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகின. அதன் பின் ரயிலின் ஓட்டுநர் இசுலாமியர் என்கிற வதந்தியைக் கிளப்பி விட்டனர் – எனினும், அந்த ஓட்டுநர் ஒரு இந்து என்பதும் பின்னர் செய்தியாக வெளியானது.

அமிர்தசரஸ் இரயில் விபத்து குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனினும், முதற்கட்டமாக இதில் பா.ஜ.க. ஆர்வலர்கள் ஆசைப்படும் அளவுக்கு “சதிச் செயல்” ஏதும் இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. விழா ஏற்பாட்டாளர்கள் இரயில்வே துறையிடம் நிகழ்ச்சியின் நேரத்தை அறிவித்து அந்த சமயத்தில் செல்லும் இரயில்களின் வேகத்தைக் குறைத்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்பட வில்லை என்றும் சில பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரியவருகின்றது. போலீசு விசாரணையின் போது விபத்து நடந்த இடம் ஒரு திருப்பத்திற்கு அப்பால் இருந்ததாகவும், திடீரென பெருந்திரளான மக்கள் கூடி நிற்பார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும், இரயிலின் ஹாரனை அடித்தும் மக்கள் விலகவில்லை எனவும், குறைந்த தூரத்தில் பிரேக் பிடித்தும் பலனின்றிப் போய் விட்டதாகவும் இரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2015-17 ஆகிய இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த மொத்த இரயில் விபத்துக்களில் பலியானவர்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்திய இரயில்வேதுறை வெளியிட்டுள்ள விவரங்களின் படி, குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 49,790 பேர் இரயில் விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டுக்கான தரவுகள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !
அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

நடந்த விபத்துக்களில் அதிகபட்சமாக வடக்கு இரயில்வே மண்டலத்தில் மட்டும் சுமார் 7,908 பேரும் தென்னக இரயில்வே மண்டலத்தில் சுமார் 6,149 பேரும் கிழக்கு இரயில்வே மண்டலத்தில் 5,670 பேரும் இறந்துள்ளனர். பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளங்களைத் தாண்டிச் செல்லும் போதும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தாலும் நடந்திருப்பதாக இரயில்வேதுறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் சுமார் 1,20,923 பேர் இரயில்வே சட்டப்பிரிவு(1989) 147-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 2.94 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சர்தார் பட்டேல் சிலை போன்ற சில்லறை சமாச்சாரங்களுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தெளித்து வருகிறார் பிரதமர். இப்படி ஆடம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் நிதியை இரயில்வே துறையின் பாதுகாப்புக் கட்டுமானங்களுக்காக செலவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் பல பத்தாயிரம் உயிர்கள் வீணாய் மடிந்து போவதைத் தவிர்க்க முடியும்.

இந்த மரணங்களுக்கான காரணங்களாக இரயில்வே துறை அதிகாரிகள் சொல்வதை அப்படியே ஏற்பதற்கில்லை. ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வெறுமனே “அஜாக்கிரதையினால்” மட்டும் கொல்லப்பட்டிருப்பதும் சாத்தியமில்லை. கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாத கணக்கின் படி இந்தியா முழுவதும் சுமார் 30,000 த்திற்கும் மேலான இருப்புப் பாதை சந்திக்கடவுகள் (Railway Level crossings) இருப்பதாகவும் இதில் சுமார் 11,000 சந்திக்கடவுகள் ஆளில்லாதவைகள் எனவும் தெரியவருகின்றது. இந்தியாவில் நடக்கும் இரயில் விபத்து – மரணங்களில் சுமார் 40 சதவீதம் ஆளில்லா சந்திக் கடவுகளினாலேயே நடப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சுமார் 1.1 லட்சம் கோடி செலவழித்து மும்பைக்கும் குஜராத்துக்கும் இடையே புல்லட் இரயில் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் மோடி. தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சர்தார் பட்டேல் சிலை போன்ற சில்லறை சமாச்சாரங்களுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தெளித்து வருகிறார் பிரதமர். இப்படி ஆடம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் நிதியை இரயில்வே துறையின் பாதுகாப்புக் கட்டுமானங்களுக்காக செலவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் பல பத்தாயிரம் உயிர்கள் வீணாய் மடிந்து போவதைத் தவிர்க்க முடியும்.

ஆனால் வெட்டி விளம்பரப் பிரியர்களாய் ஆட்சி நடத்தும் இந்தக் கும்பல் மக்களின் உயிர்களை மலிவானதாய்க் கருதுவதாலேயே ஆடம்பரங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகின்றனர். நாமும், அமிர்தசரஸ் போன்ற பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழும் போது ஓரிரு நாட்கள் துணுக்குற்று விட்டு மறந்து போய் விடுகிறோம். மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால்தான் முடியும்.

செய்வீர்களா?

செய்தி ஆதாரம்:

2 மறுமொழிகள்

  1. I would blame the organizers and the people who stood on the railway track. We should not blame the governments for everything. Who asked them to stand there on the track ?
    Even if someone directed them to stand there to watch the programme, what happened to their common-sense ?
    When you see the videos you can see that there were lots of people watching and taking videos even after the train was passing them without realizing the seriousness. Do you think it is fair to blame others ?

  2. இக்கட்டுரை இந்தியாவில் இரயில் விபத்துகள் அதிகரித்து வருதையும் அதில் அமிர்தசரஸ் இரயில் விபத்து ஒன்று என்பதாகவும், மோடி அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இரயில் தடம்புரளுதல், இரயிலில் தீப்பிடித்தல், எதிரெதிரே வந்த இரயில்கள் மோதிக்கொள்ளுதல், ஆளில்லா லெவல்கிராசிங்கில் ஏற்படும் விபத்துகள் போன்ற அனைத்தையும் இரயில்வே துறை விபத்துகள்தான். கட்டுரையாளர் கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்களும் இந்த கோணத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆனால், அமிர்தசரஸ் விபத்து குறித்து குறிப்பிடும் கட்டுரையாளர், “ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் இரயில் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த கூட்டத்தின் மீது பாய்ந்துள்ளது.” என்றுதான் குறிப்பிட்டுள்ளார். செய்தி ஊடகங்களும், இரயில்வே துறையும் இப்படித்தான் பதிவிட்டுள்ளன. இதனை மேற்கண்ட இரயில்வே விபத்துகளின் ஒன்றாக எப்படி சேர்க்கமுடியும்?

    இரயில்வே டிராக்கில் (தண்டவாளத்தில்) நடப்பதே குற்றம் என்று இருக்கும் போது ‘மக்களை’ யார் இரயில்வே டிராக்கில் நின்று வேடிக்கைப் பார்க்க சொன்னது? அதுவும் இரவு நேரத்தில்? இப்படி ரயில்வே டிராக்கில் கூடியதே சட்டபடி குற்றம்? அதன் பிறகு வாணவேடிக்கை நிகழ்த்தினால் ரயில்வரும் சத்தம் காதில் விழாதுதான்? அதற்கு இரயில்வே எப்படி பொறுப்பேற்க முடியும்?

    விழா ஏற்பாட்டால் அந்த நேரத்தில் இரயிலை மெதுவாக இயக்க சொல்லி இருக்க வேண்டுமாம். இது எப்படி சரியாகும்?

    திடலுக்கு அருகில் இரயில்வே தண்டவாளம் செல்கிறது எனில், ரயில்வே நிர்வாகம் அங்கு வேலி அல்லது தடுப்புச் சுவர் அமைக்காமல் இருந்தால் மட்டும்தான் இரயில்வே நிர்வாகத்தைக் குறைகூறமுடியும். அப்படி கட்டுரையாளர் எந்த விவரத்தையும் முன்வைக்கவில்லை.

    “விபத்தின் போது இராவணன் வேடமிட்ட தல்பீர் சிங் என்பவர், சம்பவ இடத்தில் இருந்து ஓடிப் போகாமல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சித்து அந்த முயற்சியிலேயே பலியாகியும் இருக்கிறார் என்கின்றன பத்திரிகை செய்திகள்” என கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனை புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், தினகரன் போன்ற பத்திரிகைகளில் வந்த செய்திகளில் இரண்டு இரயில்கள் எதிரெதிரே சிறு நேரத்தில் வந்துள்ளன என்று குறிப்பிட்டுருந்தது. கட்டுரையாளர் சொல்வது இதனால் இருக்கலாம். இருப்பினும் இதனைத் தெளிவுப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

    கட்டுரையாளர் கொடுத்திருக்கும் புள்ளி விரங்களில், “நடந்த விபத்துக்களில் அதிகபட்சமாக வடக்கு இரயில்வே மண்டலத்தில் மட்டும் சுமார் 7,908 பேரும் தென்னக இரயில்வே மண்டலத்தில் சுமார் 6,149 பேரும் கிழக்கு இரயில்வே மண்டலத்தில் 5,670 பேரும் இறந்துள்ளனர்.” என்ற விவரம் கவனிக்கத்தக்கது.

    இரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வது; இரயிலை மறித்து தண்ணீர் பிடிப்பது போன்றவை எல்லாம் அங்கு வாழும் மக்களின் பின் தங்கிய நிலைமையில் இருந்து வரும் பிரச்சினைகள். அதில் ஒன்றுதான் இது போன்ற ‘விபத்து’களும்.

    அமிர்தசரஸ் சம்பவத்திற்கு முன்னதாக இன்னொரு சம்பவமும் இதுபோல நடந்தது. 2013-ம் ஆண்டு பீகாரில் ஒரு சிறிய இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கோவிலில் விழா முடித்துவந்த ‘பக்தர்கள்’, இரயில் நிலையத்தில் நிற்க வாய்ப்பில்லாத எக்ஸ்பிரஸ் இரயினை நிறுத்த தண்டவாளத்தில் நின்று இரயிலை மறித்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத இரயில் ஓட்டுனர், 80 கிமீ வேகத்தில் வந்த இரயிலை உடனடியாக நிறுத்தியதால் பலி எண்ணிக்கை 35 உடன் நின்றது. இருப்பினும், இந்த ‘பக்தர்கள்’ கூட்டம் மற்றொரு இரயிலுக்கு தீ வைத்தது. (இதுவும் விபத்தில் அடங்கும்). இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக வடமாநிலங்களில்தான் நடக்கின்றன.

    இரயில் இந்தியாவில் புழக்கத்திற்கு வந்து சுமார் 150 களுக்கும் மேலாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். இன்னும் லெவல்கிராசிங் விபத்துகள் நடக்கத்தான் செய்கின்றன. இதில் அரசின் பங்கு முதன்மையானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகளே அதிகம். இருப்பினும், மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நிலைமையும் அவர்களது பின் தங்கிய வாழ்க்கை நிலையும் அடிப்படையானது. ஜனநாயக உணர்வு, பகுத்தறிவு சிந்தனைகள், பொது இடங்களிலான ஒழுக்கம், அடிப்படை கல்வி, சுகாதாரம், சமூக வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை மக்களை சென்று அண்டவிடாமல் பார்த்துக் கொண்ட பா.ஜ.க.வும் காங்கிரசும் இவர்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்து ஆட்சியை ருசித்த பிற கட்சியினரும்தான் இதற்கு முழு முதல் பொறுப்பு எனக் கருதுகிறேன்.

Leave a Reply to பரமேஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க