கற்பனைதான் ஒரு படைப்பின் துவக்கம். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ  அதை கற்பனை செய்யுங்கள். நீங்கள் எதை கற்பனை செய்வீகிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள். இறுதியில் நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ அதையே படைப்பீர்கள்!

– ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா

காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்

முதன்மைப் பாத்திரங்கள்: இயக்குநர் முறுக்குதாஸ், எழுத்தாளர் சுயமோகன், முறுக்குதாஸின் தனி உதவியாளர்கள் ஜகன், ஜோதி. நான்கு வருங்கால இயக்குநர்கள் பீட்டர், பல்லவன், தொல்காப்பியன், ஜிப்பா மணி மற்றும் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், தயாரிப்பு உதவியாளர் – கற்பூரம் என்ற செல்லம்.

காலம்: தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக் காலம்.

காட்சி 1 – வருகைப் படலம்.     
நேரம் : விடியற் காலை பகல் 11.00 மணி
இடம்: (LUXURY SEA VIEW SUITE) கடலைப் பார்த்த ஆடம்பர விடுதி அறை, தாஜ்ஃபிஷர்மேன் கோவ் – ரிசார்ட், சென்னை மாமல்லபுரம் அருகே உள்ள 5 நட்சத்திர டீலக்ஸ் காட்டேஜ் விடுதி.

புரடக்சன் காரில் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், உதவியாளர் கற்பூரம் என்ற செல்லம், நான்கு வருங்கால இயக்குநர்கள், ஆளுயர டிபன் கேரியர்,
உதவி இயக்குநர் பெட்டி (பெட்டிக்குள் ஏ 4 பேப்பர் கட்டு, ஜூனியர் விகடன் – நக்கீரன் கட்டுக்கள், பத்திரிகைகளின் கிளிப்புகள், டஜன் ஷார்ப் பேனாக்கள் – பென்சில்கள் – ஷார்ப்னர்கள், ஸ்டேப்ளர்கள், எழுத்துப் பலகைகள், டேப்லட், லேப்டாப்புகள், வாய்ஸ ரிக்கார்டர்).

அனைவரும் நெருக்கிக் கொண்டு அமர்ந்த இண்டிகா காரிலிருந்து இறங்குகின்றனர்.

ஜிப்பா மணி: (சுற்றும் முற்றும் பார்த்த படி) இந்த ஓட்டல்ல நமக்கு எங்க போட்டுருக்காங்களோ ரூமு, காம்பவுண்டுல எறக்கி வுட்டானுங்க!

பீட்டர்: உனக்கு ஆசைதான்! போனவாட்டி என்னை ரிசப்சன்லயே படுக்கச் சொல்லிட்டானுங்க. அவங்க தங்குற சூட்ல ஒரு ஓரமா வுடுவாங்களா பாரு!

செல்லம்: சீக்கிரம் எறங்குங்க சார், உங்க டிஸ்கசனை வெளிய வெச்சுக்குங்க, நாங்க ரிடர்னாகணும் சார்! டிஸ்கசனுக்கு வர்ரறது நாலு பேரு. எட்டு எடம் போய் வரணும் சார்….ஒவ்வொருத்தரும் ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க என்னன்ன வேணும்னு! அத்த தேடி எடுத்துன வரதுக்குள்ள நீங்க நாலு கதை டிஸ்கஸ் பண்ணலாம் சார், கோவிச்சுக்காதீங்க!

தொல்காப்பியன்: ஏம்பா நீ கூட அசிஸ்டஸ்ண்ட டைரக்டருன்னா மதிக்க மாட்டியா?

பல்லவன்: தொல்லு, உனக்கு தெரியாதாப்பா, செல்லத்துக்கு ஆயிரம் வேலை, நம்பளுக்கு ஒரே ஆதரவு அவன்தான்!

பீட்டர்: ஆமா, இவருதான் இந்தப் படத்துக்கு புரடீயூசர், ஹீரோயின் கீர்த்தி ரமேஷை கொச்சிக்கு ஃபிளைட்ல போய் புக் பண்ண போறாரு…..

செல்லம்: ஆமா சார், உங்களுக்கு நான்தான் கிடைச்சேன்….எங்கப்பன் பேச்ச கேட்டுருந்தா நானே நாலு படம் எடுத்துருப்பேன். கேக்காததால இப்ப கேரியர தூக்குறேன். பாக்குறவனுக்கெல்லாம் எளக்காரமாயிருச்சு…

வரவனுங்க டிஸ்கசனுக்கு வரானுங்களா, துன்றதுக்கு வராணுங்களான்னு தெரியலை. ஃபோன்லயே லிஸ்ட் கொடுத்துட்டாங்க. உட்லண்ட்ஸ்ல தயிர் வடை, காரைக்குடியில கோலா உருண்டை, அப்பால டிசி மேனர்ல பகளா பாத், டிராகன்ல சிக்கன் கிளீயர் சூப்புன்னு இன்னும் எவ்ளோ இருக்குது சார், நாங்க போகணும் ஆள வுடுங்க…

(உதவி  இயக்குநர்கள் பெட்டியுடன் காட்டேஜ்ஜை நோக்கிப் போக, புரடக்சன் கார் திரும்பியது.)

காட்சி முடிகிறது.

காட்சி 2 : துயிலெழுப்பும் படலம்
நேரம்: அதிகாலை பகல் 11.00 மணி
இடம்: இயக்குநர் முறுக்குதாஸின் தனி பங்களா

முதல் மாடி பால்கனியில் தனி உதவியாளர்கள் ஜகனும் ஜோதியும் பதட்டத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.

ஜகன்: டேய் நீ எழுப்புடா போய்!

ஜோதி: அந்த வேலை எனக்கு கிடையாதுப்பா, நீதான் செய்யணும், ஏற்கனவே ஏகப்பட்ட டோஸு வாங்கிட்டேன், ஓன் முகத்துல முழிச்சாத்தான் ராசியாம், போய் எழுப்புடா.

ஜகன்: ஆமாண்டா ராசி அவருக்குத்தான், எனக்கு…..?
எவ்வளோ மிதிச்சாலும் தாங்குவேன்னு என் மூஞ்சிலேயே எழுதி வெச்சுருக்கா?

(அந்தநேரம் பார்த்து முறுக்குதாஸ் சோம்பல் முறித்துக் கொண்டே பெர்முடா சகிதம் என்ட்ரி.)

முறுக்குதாஸ்: டேய் இன்னிக்கு டிஸ்கசன் இருக்கேடா. அந்த வேலைய பாக்காத இங்க என்ன பண்றீங்க?

ஜோதி – ஜகன்: சார்………
(மேற்கொண்டு பேச தயங்கி நிற்கிறார்கள்)

முறுக்குதாஸ்: டிஸ்கசனுக்கு காரை அனுப்பிச்சீங்களா? எல்லாரும் ஓட்டல் போய் சேந்துட்டாங்களா? அவங்களுக்குஃபோன் பண்ணீங்களாடா?

ஜோதி: சார், அல்லாரையும் அனுப்பிச்சிட்டேன் சார்…

ஜகன்: சார் ரிசப்சன்ல இருந்து 9 மணிக்கே ஃபோன் பண்ணாங்க. “உங்க ஆளுங்க யாரோ டிஸ்கசனுக்கு வந்திருக்காங்க, ரூம் கீ கொடுக்கவான்னு” கேட்டாங்க சார்! அந்த ஃபேமஸ் எழுத்தாளர்னு சொல்லுவீங்களே, அவருதான் வந்துட்டராம், சாவிய கொடுக்கச் சொல்லிட்டன் சார்……

முறுக்குதாஸ்: டேய் நான் எப்படா சொன்னேன் ஃபேமசுன்னு? அவனுங்களே சொல்லிக்கிறாங்கடா… அவங்கல்லாம் பன்ச்சுவல் ஆசாமிங்கடா. ஆனா நம்ம கிட்ட கதைய பன்ஞ்சுவலா கொடுப்பாங்களான்னு தெரியல. டேய், அவரு மணி சார் ஆளுடா!

ஜோதி: சார், ஸ்டோரி லைன் கேக்குறதுக்கு புரடியூசர் சைடுலேர்ந்து சக்சேனா சார் ஃபோன் பண்ணார். ….கலைநதி சார் எப்ப ஓட்டலுக்கு வரணும்னு கேக்கச் சொன்னாராம்.

முறுக்குதாஸ்: ஆரம்பிச்சுட்டானுங்களா! ஓட்டல் பில் கட்டும்போதே ஃபர்ஸ்ட் காப்பி கேக்குறானுங்க. இவனுங்கள விட்டாலும் நமக்கு ஆளு எவனும் இல்லை.
புடுங்கி, சொல்றேன்னு சொல்டா. இல்லெல்லை, சாருகிட்ட பேசலை, அவரு மூடு அவுட்டா இருக்காராறுன்னு சொல்லுடா. எல்லாத்தயும் எங்கிட்டயே கேட்டுக்கிணு! இதல்லாம் மட்டும் ஏங்கிட்ட வக்கனையா கேளுங்க.

ஜகன் மைண்ட் வாய்ஸ் ( இவனுங்க ஒரிஜினல் கதை பண்ணாங்கன்னா இன்னும் துள்ளுவாங்க, ராத்திரி பூரா சி.டியில கதைய தேடுறதுக்கே இந்த டென்சன்…)

ஜோதி: சரி சார். ஓட்டலுக்கு உங்க திங்க்ஸெல்லாம் எடுத்து வெச்சிருக்கோம், பாத்தீரீங்களா. இப்ப மூணு நாள்தான் சார் தங்கப் போறீங்க.

குளிர்காலம் சார். பீச்சுக்கு போவீங்க. ஏற்கனவே உங்களுக்கு சளி பிடிக்கும். அம்மா திட்டுவாங்க. அயர்லாண்ட் வெதர் ஜாக்கெட்ட ரெண்டு செட்டு வெச்சிருக்கேன், பெர்முடாஸ் போடாதீங்க சார்…. அப்பால ட்ராக் சூட்டு ரெண்டு வெச்சுருக்கேன். ஷார்ப் அல்டிமேட் கோல்டு பேனா ரெண்டு எடுத்து வெச்சிருக்கேன். ஓகே-வா சார்?

ஜகன்: (மெல்லிய குரலில்) சார்,  டின் பீர் சாப்பீடாதீங்க சார், பெரிய அம்மா திட்டுனாங்க. மூஞ்சி ஊதுனாப்புல, தொப்பயும் தெரியுதான் சார். ஹென்னசி, சென்ட் ரெமி, மார்டெல் மூணுலயும் ரெண்டு ஃபுல் எடுத்து வெக்கவா சார்?

ஜோதி: சார், ஹீரோயின் மேனேஜர் பேசுனார். டேட் சம்பந்தமாக உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னாரு. அவருக்கு என்ன சார் சொல்லணும்? அவரை அங்க வரச் சொல்லலாமா சார்?

முறுக்குதாஸ்: டேய் கிளம்புங்கடா, எல்லா டிஸகசனையும் இங்கயே முடிச்சிருவீங்களடா …..

(ஒருவழியாக அனைவரும் பி.எம்.டபிள்யூ காரில் ஏறி மாமல்லபுரம் நோக்கி பயணிக்கிறார்கள்.)

காட்சி 2 முடிகிறது.

காட்சி 3: தவிப்புப் படலம் (ஏசி ரூமு வேற…)
நேரம்: பகல் 12.00 மணி
இடம்: லக்சுவரி டீலக்ஸ் சூட் பாத்ரூமின் உள் அலங்கார அறை.

எழுத்தாளர் சுயமோகன் குளித்து முடித்து விட்டு ஃபிஷர்மேன் கோவின் புகழ் பெற்ற எகிப்திய காட்டன் ஈரத்துண்டை இடுப்பில் கட்டியவாறு ஐ ஃபோன் மாடல் 15-இல் எண்களை எழுதுகிறார். எவரும் சிக்கவில்லை. கடைசியில் இண்டியன் டாய்லட்டில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த அவரது சீடரான அரங்கப்பன் கிடைத்தார்.

சுயமோகன்: வணக்கம் அரங்கா, எப்படி இருக்கீங்க?

அரங்கப்பன்: ஆசானுக்கு வணக்கம். இப்பதான் எந்திருச்சேன். இன்னிக்கு நீங்க போட்ட நகல்முரசு பாகம் இன்னும் படிக்கல. நேத்து படிச்சதுல  கிடைச்ச தரிசனத்தலேர்ந்தே இன்னும் வெளியில வர முடியல.

சுயமோகன்: அப்டியா, நானும் அதை எழுதும் போதே உணர்ந்தேன். நேத்து  வெளியான பாகத்துல பாத்தீங்கன்னா ஆழ்மனசுல அலையாம தவிப்போட இருக்கும் ரெண்டு குறுகுறுப்புகளை மனசாந்தியோட விதார விடுப்புக்களோடு நான் அதை அனுபவிச்ச போதே, சொன்னா நம்ப மாட்டீங்க, எனக்கே ரெண்டு நாள் தூக்கம் வரலே..

அரங்கப்பன்: ஆசானே, உங்க குரல்ல ஒரு சோகம் தெரியுதே? என்னாச்சு?

சுயமோகன்:  ஆமா, அரங்கு. நான் இப்ப திருவனந்தபுரத்துல இல்லை. ஒரு வேலையா சென்னை வந்துட்டேன். காலையில ஃபிளைட்டல இறங்கி தாஜ் கூரூப்போட பிஷர்மேன் கோவில இருக்கேன். டீலக்ஸ் சூட்டாம். இந்த ரெசார்ட்டுதான் இளையராஜா சாரோட மனசுக்கு பிடிச்ச இடமாம். இந்த மனநிலையில எழுத்துத் தவம், வேலைப் பணம்னு மூளை ரொம்பவே பேரக்னியா தகிக்குது.

அரங்கப்பன்: ஆசானே யார்? மணி சாரா, கமல் சாரா, பாலா சாரா? யாரோட ஃபில்ம்?

(கழிப்பறையின் ஃபிளஷை அழுத்தி நீரை வெளியேற்றுகிறார்.)

சுயமோகன்: இப்போ தீடீர்னு முறுக்குதாஸ் புது புராஜக்ட்டுனு கூப்ட்டாரு, அவருக்கு மணி சார் சொன்னாராம் அரங்கா. நல்லவேளை மிச்ச வேலையெல்லாம் ஞாபகப்படுத்துனீங்க. இன்னி தேதிக்கு ஒரு மூளை பத்தல எனக்கு. அதுக்குள்ள நகல்முரசோட 333-வு படலத்தை முடிச்சாத்தான் மூணு மாசம் தாங்கும். அதுக்கு மேல விருது விழா வேற! இன்பாக்ஸ மூணு நாளா திறக்கல. இனி ஒன்றரை மாசம் நான் வேற உலகம். அதுக்கு பெறகுதான் நம்ம உலகத்துல பெறக்கணும்.

அரங்கப்பன்: நம்ம அன்பான எதிரிங்க செத்தாங்க சார். நீங்க கொண்டாடுர இலக்கிய உலகத்துக்காரங்களே இதை தாங்க மாட்டாங்க சார். அறாத்து ஸ்டேட்டஸ்ல அனானிமசா கமெண்டு போட்டா பாரு நிவேதிதா வரைக்கும் நமக்கு நல்ல பிரமோசன் கிடைக்கும் சார்.

சுயமோகன்: அரங்கு, நான் உங்ககிட்ட சொன்னது எங்கிட்ட சொன்னது மாதிரி. வேற யாருக்கும் வேணாம். நம்ம வேலை அதுவா? சூரியனுக்கு எதுக்கு டிரைலர்?

(கதவு மணியிசை கேட்கிறது. அரங்கப்பனிடம் அவசரமாக விடை பெற்ற சுயமோகன் கதவை நோக்கி போகிறார்.)

காட்சி 3 முடிகிறது.

காட்சி 4 – புலம்பல் படலம்
நேரம் பகல் 1.00 மணி
மாமல்லபுரத்தை நோக்கிச் செல்லும் பி.எம்.டபிள்யூ காரில் முறுக்குதாஸ் உதவியாளர்களுடன் பேசியபடியே வருகிறார்.

ஜகன்: எனக்கே ரொம்ப கஷ்டமாருக்குது சார், காலையிலே உங்கள எழுப்புறதுக்கு! நேத்தும் லேட்டாதான் தூங்குனீங்க. கண்ணெல்லாம் செவந்து போயிருக்குது. அடிக்கடி அம்மா என்னய திட்டுராங்க, அவர் உடம்பை நீ கவனிக்க மாட்டேங்கிறன்னுட்டு.

முறுக்குதாஸ்: டேய் டேய் நிறுத்துரா, நைட்டு நான் தண்ணியடிச்சதை காத்தால அம்மாகிட்ட போட்டு குடுத்துருப்ப, அதுக்கு பரிகாரம் தேடுறியா?

ஜோதி: இல்ல சார். எனக்கும் உங்களப் பாத்தா பரிதாபமா இருக்குது. காலையில எதுவும் சாப்பிடறதில்ல. மதியமும் லேட்டு. நைட்டு மட்டும் தண்ணியடிக்கிறத குறைச்சுக்கிட்டா நல்லாருக்கும். இது எங்களுக்கே தோணுது, அதுக்கு ஏன் நம்ம அம்மாவ இழுக்குறீங்க!

முறுக்குதாஸ்: டேய் எனக்கு தெரியாதாடா? டென்சன்டா. கொடாக் பிலிம் ரோல் போனாலும் போச்சு. டிஜிட்டல் வந்துருச்சு. குப்பையில கிடக்குற கேமரவா எடுத்துணு வந்து ஷூட்டிங் நடத்துரானுங்க! அதுவும் நல்லாருக்குணு பொழப்பத்தவனுங்க சோசியல் மீடியாவுல கொண்டாடுறானுங்க! நம்பள மாதிரி மெகா பட்ஜெட்டு, பெரிய ஸ்டார்னு தலையிடி தாங்கிகிணு படம் எடுத்தா, அதை நொட்ட சொல்லி ஒரே நாள்ல கவுத்துரானுங்க.

நம்ம வொர்க் டிரண்டியா இல்லேன்ன சொல்லிடுனுவாங்க. அதாண்டா மணி சார், ஷங்கர் சார் ரூட்ல போக வேண்டியிருக்குது!

ஜகன்: என்ன சார், படத்த வேற மாதிரி திங்க் பண்றீங்களா? ஃபாரின்லேர்ந்து வில்லன இறக்குமதி பண்ணப் போறீங்களா? இல்ல, கிராஃபிக்கஸுக்கு ஹாலிவுட் போறீங்களா?

முறுக்குதாஸ்: அப்டி போனாலும் வில்லங்கம்தான்டா. கதையில நேட்டிவிட்டி கேக்குறாங்கடா. டயலாக்ல பன்ஞ் மட்டும் பத்தாது, ஃபிலாசபியும் வேணுமாம். இது எல்லாத்துக்கும் மொத்தமா ஒரு ஆளு இருக்கான்னு மணி சார் சொன்னாரு. ஷங்கர் சாருகிட்ட கிராஸ் செக் பண்ணேன். அவரும் பெருமையா சொன்னாருடா! ஓவர் நைட்ல 400 பக்கம் டெலிவரி பண்ணுவாராண்டா! அத எப்படி படிக்க போறோன்னுதான் த்ரில்லா இருக்குடா!

ஜோதி: சார், கொஞ்சம் வூட்டு மேலயும் கவனம் வைங்க சார்! வேல வேலன்னு பேசிகிட்டு… வூட்ல அம்மா திட்றாங்க. நேத்து வந்தவனெல்லாம் அண்ணா நகர், அசோக் நகருன்னு வீடு வாங்கிட்டாங்க. ஈசிஆருல பண்ண வூடு கட்டுறாங்க! ஏற்கனவே நாலு புரோக்கரு நம்மகிட்ட வந்து போனாங்க! சொல்லிக்கிணே இருக்குறோம். நீங்க வந்து அந்த இடத்த பாக்க மாட்டேங்கிறீங்க. போனா வராது. நீங்க டெக்னிக்கலாதான் பெரிய ஆளுங்கள ஃபாலோ பண்றீங்க! லைஃப்லயும் அவங்கள ஃபாலோ பண்ணுங்க சார்! அவங்க எப்டி செட்டிலாயிட்டாங்க பாருங்க!

போறது போறோம், ஈசிஆருல எம்.ஜி.எம் பக்கத்துலதான். கதவைத் தொறந்தா கடல்ல காலை நனைக்கலாம். ரெண்டு பண்ண வீடு இருக்குதாம். ஏற்கனவே அதுக்குப் போட்டியாம். அதைப் பாத்துட்டு ஓட்டல் போலாமா சார்!

முறுக்குதாஸ்: டேய், முதலுக்கே மோசம் வெக்காதீங்க. இப்பதான் புரடியூசர் ஃபோன் பண்ணி கத கேட்டாருன்னு நீதான சொன்ன? அட்வான்ஸ்தான் வாங்கியிருக்கிறோம். அடுத்தது வாங்கணும்ல! இப்ப நீ என்னா பண்ற, சார் டிஸ்கசன்ல இருக்காறு, அடுத்த பேமண்டு என்னாச்சுன்னு கேக்கச் சொன்னாருன்னு கேளு!

ஜகன் மைண்ட் வாய்ஸ்: (எப்படி சோப்பு போட்டாலும் கடைசியில நம்ம கண்ணுதான் எரியுது)

(பிஷர்மேன் கோவில் பி.எம்.டபிள்யூ நுழைகிறது)

காட்சி முடிகிறது.

காட்சி 5 – டென்சன் படலம்
நேரம் பகல் 1.52
இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதி அறை

நான்கு உதவி இயக்குநர்களும் முறுக்குதாசை வரவேற்று அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் முறுக்குதாசின் கண்களுக்கு யாரும் தெரியவில்லை. அவசரமாக அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறார். உதவி இயக்குநர்களும், தனி உதவியாளர்களும் அச்சத்துடன் அறை வெளியே நிற்கின்றனர்.

சுயமோகன்: வாங்க சார்

(இயக்குநர் முறுக்குதாஸின் முகத்தில் தென்படும் பதட்டைத்தைப் பார்த்ததும் அவரும் பதட்டமடைந்தார்)

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: மெகா டைரக்டருன்னா டென்சன் இருக்கத்தான் செய்யும். முதல் சந்திப்பே துர்சகுனம் ஆயிடக் கூடாது…. மனதில், வாலி – இளையராஜாவின் பழைய விபத்து கதை ஓடியது.

அந்தக் கதை பின்வருமாறு…

வெளிநாட்டுப் பயணத்திற்காக இசைஞானி இளையராஜா தனது சொந்தக்காரில் கவிஞர் வாலியை அமர்த்திக் கொண்டு விமான நிலையம் சென்றார். எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு பயணம் ரத்தாகிறது. நல்வாய்ப்பாக இருவரும் பெரிய காயம் இல்லாமல் வீடு வந்து சேர்கின்றனர்.

வாலியின் மனைவிக்கு போன உயிர் திரும்பியது போல ஒரு சந்தோசம். மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் வைத்துக் கொண்டு, “இந்த பாக்கியத்தை கொடுத்தது இளையராஜாதான். அவர் கூட இருந்ததால்தான் கடவுள் கடாச்சத்தினால் என் வாலி மாமா உயிர் பிழைத்தார்” என்று பிரார்த்திக்கிறார். இதை கேட்ட கவிஞர் வாலி, உடனே ஃபோன் போட்டு இளையராஜாவிடமும் அதையே சொல்லுமாறு மனைவியிடம் கேட்கிறார். இது ஒரு கவித்துவ வாய்ப்பு என்று மகிழ்கிறது வாலியின் மனம்.

வாலி மனைவி உணர்ச்சியுடன் பேசியதைக் கேட்ட இளையராஜா “எல்லாம் கடவுள் அருள்” என்று ஃபோனை வைத்தார். ஆனால் அவரது மைண்ட் வாய்சோ வேறு ஒன்றை யோசித்தது. வாலியை நான் காப்பாற்றினேன் என்றால், விபத்து நடப்பதற்கே அவர்தான் காரணமோ, கெட்ட சகுனமோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.

இதை பஜார் தெரு திரைப்பட டிஸ்கசனில் ஒரு மூத்த சினிமா ஆளுமை சொன்னது இப்போது சுயமோகனனின் ஞாபகத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே அவர் உசாரானார். இந்த கதை டிஸ்கசனில் தான் ஒரு கெட்ட சகுனத்தின் துவக்கமாக ஆகிவிடக்கூடாதே என்று பதட்டமடைந்தார்.

சுயமோகன்: என்ன சார், நீங்க எப்பவுமே ஒரு தேஜஸோட சிரிப்பீங்களே, ஏதோ ஒரு மெல்லிய வாட்டம் தென்படுதே?

முறுக்குதாஸ்: ஒண்ணுமில்லை சார்.

சுயமோகன்: சார் நீங்க வரதுக்கு முன்னால எனக்கு ஒரு தாட் போயிகிட்டிருந்துச்சு. பாத் டப்புல இருந்த டவலைப் பாத்தேன். அது எகிப்து நாட்டுலேர்ந்து வந்த ஒரு அழகான காட்டன் துண்டு. எகிப்துன்னா நம்ம வணிக சினிமாவுல பெல்லி டான்சு மட்டும்தான் தெரியும். பாத்தீங்கன்னா அங்க நூறாண்டுகள் கடந்த பிரமீடுகள் இருக்கு. மனித குலத்தோட தொல்லிய நாகரீகத்தின் கீற்றுகள் துவண்டு கிடந்த பூமி சார் அது. கிளியோபாட்ரா மூக்கு அழகுன்னு ரசிக்கிறவங்க, அந்த ராணி குளிக்கும் கழுதைப் பாலைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டாங்க.

ஒரு ராணியோட அழகியல் உணர்வு எவ்வளவு அசாத்தியமா இருந்திருந்தா அரண்மனையில ஒரு கழுதைத் தொழுவம் வெச்சு அதுல 1,500 கழுதங்களை பராமரிச்சு அதுக்கு ஒரு சிப்பந்தி படையே போட்டு………. அந்த ஈஸ்தடிக்கஸ் அசாத்தியமானது சார்…….. இதெல்லாம் ஏழை – பணக்காரன்ன்னு பயன்பாட்டு வாதிங்க உளறுவாங்க. இவங்களுக்கு உலகத்தோட அழகும், அந்த அழகோட பிரமிப்பும் என்ன தெரியும். எகிப்தை நினைக்க நினைக்க வரலாற்றோட ஆழ்ந்த நதியில முடியாம போற ஒரு பயணம் மாதிரி இருக்கு. இதை எல்லாம் ஒரு தொடர் தொன்மக் குறியீடா உங்க கதை நாட்ல கொண்டு வர்ற மாதிரி நினைச்சேன். அப்பதான் சார் உங்க என்ட்ரி.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: (ஸ்ஸ்….எப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே! இதை கூகுள்ள தட்டுனாவே டன் கணக்குல கொட்டுமேடா!)

முறுக்குதாஸ்: நீங்கல்லாம் வேற லெவல் சார், உங்க மீட்டர் வேற, என் மீட்டர் வேற. ஆரம்பத்திலயே என்ன பயமுறுத்திராதீங்க சார். மணி சார் தாங்குவாறு. ஷங்கர் சார் கூட சமாளிச்சுறுவாறு. அந்த கெப்பாசிட்டி எனக்கு இல்ல சார். இப்பதான் எனக்கு நெஜமா உங்க மூலமா ஒளி கிடைச்சிருக்கு. இந்தக் கதை கண்டிப்பா நிக்கும் சார். நம்பிக்கை வந்திருச்சு சார்.

சுயமோகன்: மணி சார் கூட உங்கள மாதிரி அட்சரம் பெசகாம பேசுவாறு. இன்டஸ்ட்ரியில பெரியவங்க எல்லாரும் ஒரே மாதிரி எப்படி சார் திங்க் பண்றீங்க? எனக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தாலும் சின்ன வயசுல நீங்க அசத்துறீங்க!

முறுக்குதாஸ்: சார் சாப்டீங்களா, நாங்கதான் நேரம் கெட்ட நேரத்துல வேலை பாப்போம். உங்களுக்கு தெரியாததது இல்லை….

(உடனே……..டேய் யார்ரா வெளியில – என்று கதவைத் திறந்து கூப்பிடுகிறார்.)

காட்சி முடிகிறது.

காட்சி ஆறு: தின்னும் படலம்
நேரம் பிற்பகல் 2.20
இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதி அறை

இயக்குநர் குரல் கேட்டதும் மோதிக் கொள்வது போல உதவி இயக்குநர்கள் ஓடி வந்தனர். அவர்களின் பின்னால் ஆளுயரக் கேரியருடன் கற்பூரம் என்ற செல்லமும் அவருடன் நிக்கிலும் வந்தனர்.

நிக்கில்: கற்பூரத்திடம் – டேய் பார்சலை டேபிள்ள எடுத்து வைடா, ஹாட் கேரியரை திறந்து வை! சார் நீங்க எல்லாம் கைகழுவினு வாங்க

(முறுக்குதாஸை நைசாக அணுகிய நிக்கில் கிசுகிசு குரலில்)

நிக்கில்: டின் பீரை எடுக்கட்டா சார்.

(இதை சைடு பார்வையில் அவதானித்த சுயமோகன் சிரித்தவாறு)

சுயமோகன்: நீங்க நீங்களா இருங்க சார், அதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன அன்னியனா நினைச்சுராதீங்க!

முறுக்குதாஸ்: இல்ல சார். படுக்குற நேரம் கொஞ்சம். அதிலயும் தூக்கம் வரதில்லை. பசங்க பாத்துட்டு கஷ்டப்படுறாங்க. நம்ம வீட்ல மனமுடைஞ்சு போறாங்க. ஏதோ கொஞ்சம் ரிலாக்சுக்கு இது உதவுது!

ஜிப்பா மணி: சார், புரடியூசர் கதை கேக்க வரதுக்கு டைம் கேட்டத ஞாபகப்படுத்த சொன்னீங்க!

முறுக்குதாஸ்: அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்துறீங்க! முதல்ல சாப்புடுவோம். அப்பறம் கொஞ்சம் சாயணும். ஈவினிங் ஷார்ப்பா 7 மணிக்கு வேலைய ஆரம்பிக்கலாம்.

(உடனே செல்லம் தட்டுக்களில் பதார்த்தங்களை வைக்கிறார்.)

செல்லம்: (முறுக்குதாசைப் பார்த்து) சார் மன்னிச்சுக்குங்க சார். ரைட்டர் சாருக்கு நீங்க சொன்ன நாகர்கோவில் ரசவடை, உப்பேரி, முந்திரிக் கொத்து, சக்க வரட்டி, இதெல்லாம் வாங்க நேரமில்லை சார். அது அடையாறு பாலக்காடு அச்சன் கடையிலதான் கிடைக்கும். சாயங்காலம் வாங்கியாறேன் சார்!

சுயமோகன்: (முறுக்குதாஸைப் பார்த்து) சார், என்ன நீங்க சேத்துக்கவே இல்லை. தனியா பாக்குறீங்க. நான் வேல செஞ்ச “நான் கடவுள்” வெறும் படமில்லை சார். அது என்னோட வாழ்க்கை. காசியில அகோரிங்க கூட வாழ்ந்தவன் சார் நான். பச்சைக்கறி கூட சாப்புடுவேன். இப்போ உங்கள மாதிரி பாத்துப் பாத்து எனக்கு வசதி செய்யுறவங்க வந்த பிறகு அதை ஏத்துக்குற உடம்பில்லாம போச்சு சார்! ஐஞ்சு வருசமா டயட்ட ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றேன்.

நம்ம பாரத மரபு எடுத்துக்கிட்டீங்கன்னா, உணவே மருந்து மட்டுமில்லை சார். உணர்வு, உணர்ச்சி, உடுப்பு, உறைவிடம், உலை, ஊர்னு எல்லாமே நம்ம உடம்ப ஒரு ஆலயமா பாத்த நாடு சார் இது! இன்னிக்கு காலனி அடிமைத்தனத்துல பல பேர் பேலியோ, வேகன், நேச்சுரல்னு பேசுறாங்க! நம்ம மரபுல ஒரு கல்யாண விருந்தையே மொத்தமா உள்ள தள்ளுன கும்பகர்ணனும் இருந்தாங்க, காத்தடிச்சா விழுற குச்சி மாதிரி நகுலன் – சகாதேவனும் இருந்தாங்க. இரண்டு பேரும் அவங்க அவங்க கர்மாவுல சாதனை படைச்சுருக்காங்க! இந்த உணவு – கட்டுப்பாடு – எச்சரிக்கை – இங்கிலீஸ் மருத்துவமெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவையே இல்லை சார்……

(அடுத்த பாயிண்டை சுயமோகன் ஆரம்த்தால், எங்க சாப்பிட ராத்திரி ஆயிருமோ என்று பயந்த இயக்குநர் முறுக்குதாஸின் குறிப்பறிந்து, செல்லம் குறுக்கிட்டார்)

செல்லம்: எப்பவுமே சீரிசா வேலை வேலைண்ணு பேசிக்கிணு இருக்காதீங்க சார். சாப்பிடுங்க சார்!

முறுக்குதாஸ்: டேய், கரெக்டா சொன்னடா. சாப்பாட்ட போட்டுட்டு ரெத்தத்தை கேக்குறாங்கடா புரடியூசருங்க. நாமதான் அலர்ட்டா வேலையை பாக்கணும்.

(இந்த சாப்பாட்டு உரையாடல் நடக்கும் போது உதவி இயக்குநர்கள் தங்களது எல்லையான தாண்டக் கூடாது என்ற கடமை உணர்வுடன், எப்படா சாப்பிட்டு முடிப்பாங்க, செல்லம் நம்மள எப்ப கவனிப்பான், பசி வயத்தைக் கிள்ளுது என்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.)

நிக்கில்: டைரக்ட்ர் சார், உங்களுக்கு புடிச்ச மஞ்ச வஞ்சிரம் கிடைக்கல. பையன் ஃபோன் பண்ணாப்ல. நான்தான் அஞ்சப்பர்ல ஆந்திரா சிவப்பு நண்டு ஃப்ரை வாங்கியாடா, சாருக்கு பேலன்ஸ் ஆயிடும்னேன்.

செல்லம்: ஆமா சார், கூட வவ்வால் மீன் சினைப் பொறியலும் இன்னைக்கு கிடைச்சுது. ஸ்பெசலா பிச்சுக்கோழி பிரட்டியும் இருக்கு.

முறுக்குதாஸ்: டேய் எனக்கு இப்போ எதுக்கும் மூடு இல்ல. சூடு ஏத்தாதீங்க. நீங்க சாப்புடுங்க. (என்று சாப்பிட ஆரம்பித்தார் இறால் வதக்கலை கையில் எடுத்தவாறே, ஜிப்பா மணி பக்கம் திரும்பி)

முறுக்குதாஸ்: ஜிப்பா மணி, அந்த ஒன்லைட் பேட எடு, சார்கிட்ட காமிக்கலாம்.

ஜிப்பா மணி: என்னண்ணே, அதான் சரியா வரலேன்னு நீங்களே வேணாமுன்னு சொல்லிட்டீங்க, ஃபிரஷ்ஷா திங்க் பண்ணலாமுன்னு சொன்னீங்கண்ணே!

முறுக்குதாஸ்: ஆமாம்பா, நான்தான் மறந்துட்டேன், ஏன்டா பீட்டர் ஒரு ஹீரோ இன்ரடக்சன் புதுசா சொன்னியே, அத டெவலப் பண்ணச் சொன்னனே என்னாச்சு?

பீட்டர்: சார், நான் பண்ண சீன், சிவகாசி படத்துல வர்ற வில்லன் என்ட்ரி மாதிரி இருக்குண்ணு பல்லவன் ஃபீல் பண்றாப்புல. என் மனசுல புது லைன் ஓடிக்கிட்டுருக்கு, கொஞ்சம ஃபாலிஷ் பண்ணிட்டு சொல்றனே சார்!

முறுக்குதாஸ்: (சிவப்பு நண்டை எந்தப் பக்கம் சுரண்டுவது என்று குழம்பிக் கொண்டிருந்த சுயமோகன் பக்கம் திரும்பி) சார், டெண்டுல்கர் மாதிரி நம்ம ரிக்கார்டை நாமளே முறியடிக்கணும், அதான் தலைவலி! பிஸ்டல் படம் வசூல் 100 கோடின்னு அல்லாரும் வாயப் பொளந்தாங்க சார்! அதை நாமதான் “வாள்” படம் எடுத்து முறியடிச்சோம். அப்புறம் 200 கோடி புது ரிக்கார்டுனு அலறுனானுங்க. இதான் இங்க சிக்கலு! புரடியூசருக்கு நாமளே ரூட்ட காமிச்சுட்டோம். அவன் இப்ப கலெக்சன் 250 கோடி வேணுமுன்னு நிக்கிறான். இதை சிந்திச்சு சிந்திச்சு எனக்கு மூளை சூடாவுது சார்!

சார், இந்த படத்துக்கு நாலு நாட் திங்க் பண்ணிருக்கேன். எது சொன்னாலும் பசங்க பொல்லாதவன் ஷேடு மாறி இருக்கு, வேலைக்காரன் மாறி இருக்குன்னு ஏதாவது சொல்றாங்க. ஃபிரஷ்ஷா ஒரு லைன் திங்க் பண்ணிருக்கேன். உங்கள நம்பித்தான் இந்த ஒன்லைனயே இப்பதான் சொல்றேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஓட்டு போட பூத்து போறார் சார். ஏற்கனவே அவரு ஓட்ட யாரோ போட்டுருக்காங்க. ஷாக்காவுறார். இதான் சார் கதை. சரியான நாட் சார். மேற்கொண்டு சாயங்காலம் திங்க் பண்ணலாம். சாப்புடுங்க சார்!

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: நம்மள மாதிரி 400 பக்கல் இல்லேன்னாலும், 40 கோடி வாங்குற டைரக்டர் வெறும் 4 பக்கமாவது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வைக்க கூடாதா? நாலு வார்த்தையில முடிச்சிட்டாரே. கோடு போட்டா ரோடு போடலாம். புள்ளி வெச்சா கோலம் போடலாம். கதையைக் கொடுத்தா வசனம் எழுதலாம். இப்ப எந்தப் பக்கம் போறது, என்ன செய்யறது? நாம் படிச்சு ஹோம் வொர்க் பண்ணியிருந்த எதுக்கும் இப்ப தேவையே இல்லையா? – ஆழ்ந்த சிந்தனையிலும், குழப்பத்திலும் ஆளானார்.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: ஏற்கனவே நாம சுட்டு வெச்சுருக்குற கதையை யாராவது கண்டுபிடிக்கிறாங்களான்னு பாப்போம்! இதான் இங்க டெஸ்ட்டு! இது ஒர்க்கவுட் ஆயிருச்சுன்னா, இன்ட்ரவல் பிளாக், எண்ட் கார்டு, இன்ட்ரடக்சன்னு குறைஞ்சது ஒரு மூணு சீன் புதுசா தேத்துனா, சுட்ட கதை நம்ம கதையா மாறிடும். அந்த வேலைக்காவது இந்த எழுத்தாளர் தேறுவாரா பாப்போம்.

அங்கே ஒரு பெரும் வேலைக்கான ஆயத்த மனங்களின் அமைதி. எழுத்தாளர் சுயமோகன் அறை வளாகத்தின் பிரெஞ்சு சன்னலை நோக்கி நடந்தார். எதிரே வங்கக் கடல் சீற்றமில்லாமல் இசைத்துக் கொண்டிருந்தது. அவருள்ளே ஒரு பெரும் படைப்பிற்கான கரு சூல் கொண்டது. நான்கு நகல் முரசு கோரும் உழைப்பிற்கு ஈடான அந்த படைப்பு அவஸ்தை அவரை வாட்ட ஆரம்பித்தது.

(தொடரும்)

  • தம்பி அழகு மதி – காளமேகம் அண்ணாச்சி

4 மறுமொழிகள்

  1. விறுவிறுவென்று போகிறது, அதுவும் மனம் நிறையும் அளவுக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அடுத்த வேளைக்கு வெயிட்டிங்

    நம்ம ரைட்டர் சார் மைண்ட் வாய்சில் டைரக்டருக்கு போடும் சோப்பு கொஞ்சம் வீக்காதான் இருக்கு. கதைத் திருட்டுக்கு முட்டுக் கொடுக்க எழுதின பதிவை வைச்சு பார்த்தாலே உள்ளே என்னென்னமோ ஓடியிருக்கும்னு தோணுது. உள்ளொளியை இன்னும் அழுத்தமா எட்டிப் பார்த்து வெளியில் கொண்டு வரவும்.

    நன்றி

  2. முருகதாஸ்,சுயமோக கும்பல் இந்த நாடகத்தை படித்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறார்கள் எச்சரிக்கை!!! அவ்வளவு மானரோஷமெல்லாம் எங்களுக்கு கிடையாது என்று அவுங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுது…

  3. நாடகம் மீள்வாசிப்புக்கும், பலப்பல கோணத்தில் அசைபோட வைக்கிறது. எழுதிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்! இன்னும் மெயின் பிக்சருக்கு நாடகம் வரவில்லை. ஸ்டோரி டிஸ்கசன் எப்படி நடக்கும் என்று வெயிட்டிங்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க