குறை வளர்ச்சியுடன் (கை, கால் இல்லாமலோ அல்லது அரைகுறை கை, காலுடன்) பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை பிரான்சில் அதிகரித்துள்ள நிலையில், இவ்விவகாரம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இதைப்பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

“பொதுமக்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை” என்று பிரான்ஸ் பொது சுகாதாரத்துறை தலைவரான ஃப்ரான்கோய்ஸ் போர்டில்லன் (Francois Bourdillon) கூறியிருக்கிறார். மேலும் ஏற்கனவே அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது மற்றும் மூன்று மாதங்களில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

கருவுற்றிருகும் போது தோள்பட்டையில் தொடங்கும் கையின் மேல் பகுதி சரியாக உருவாகாமல் இருப்பது ஒரு வளர்ச்சிக் குறைபாட்டின் ஒரு நிலையாகும். இதனால் பாதிக்கப்பட்ட சிசுக்கள், கைகளின் மேல் பகுதியோ முன்னங்கையோ, உள்ளங்கையோ, விரல்களோ இல்லாமல் பிறக்கலாம்.

பிரான்சின் கிராமப்பகுதிகளில் 2009-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இத்தகைய குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் பற்றிய தொடக்க கட்ட ஆய்வின் முடிவு கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்தது. பிறக்கும் போது குறைவளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகளின் தேசிய சராசரியை விட இது அதிகமாக இல்லை என்றும் இத்தகைய குழந்தை பிறப்பிற்கு எவ்வித பொதுவான காரணமும் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !
♦ பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 18 குழந்தைகள் மரணம் !

பிரச்சினையை கையாளுவது குறித்த பிரெஞ்சு அதிகாரிகளின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக 2000-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கைகள் இல்லாமல் குறை வளர்ச்சியுடன் 11 குழந்தைகள் பிறந்துள்ளதாக சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள ’ஐன்’ பகுதியின் கிழக்குப் பகுதியில் இருந்து அறிக்கை வெளியானது.

அந்த இடைப்பட்ட காலத்தில் ஐன்னில் பிறந்ததாக கூறப்படும் அந்த 11  குழந்தைகளில் 7 குழந்தைகள் ட்ருய்லட் (Druillat) எனும் கிராமத்திலிருந்து சுமார் 17  கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பிறந்திருக்கின்றன. மேலும் வடமேற்கு பிரான்சில் உள்ள இரண்டு பகுதிகளில் அதிகப்படியான குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்ததாக அடையாளம் காணப்பட்டிருந்தன.

பிரிட்டனியில்(Brittany) நான்கு குழந்தைகளும் அருகிலுள்ள லாய்ர்-அட்லாண்டிக்கில் (Loire-Atlantique) மூன்று குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

பிரான்ஸ் பொது சுகாதாரத்துறை தலைவரான ஃப்ரான்கோய்ஸ் போர்டில்லன்

குறைவளர்ச்சி சிக்கலின் மூலக்காரணத்தைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்த பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்னஸ் புஜின் இதுவரை எந்த காரணமும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் “இதற்கு சுற்றுச்சூழல் காரணமாக இருக்கலாம். குழந்தைகளின் தாயார் எடுத்துக்கொண்ட உணவும் கூட காரணமாக இருக்கலாம். அவர்கள் மூச்சுவிடும் காற்றும் காரணமாக இருக்கலாம்” என்றார்.

குறைவளர்ச்சிக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய இயலவில்லை என்றாலும் அது வேளாண் தொடர்பாக, குறிப்பாக பூச்சுமருந்தாக இருக்கக்கூடும் என்று விசாரணைக்கு அமைக்கப்பட்ட அரசு அமைப்பான ரெமெரா (Remera) நம்புகிறது.

சுற்றுச்சூழல் தொடர்பாகவோ அல்லது மருந்து தயாரிப்பு தொடர்பாகவோ எந்த காரணமும் இதுவரை குறைவளர்ச்சிக்கு சொல்லப்படாத சூழ்நிலையில் இது ஒருவேளை தலிடோமைடு (Thalidomide) மோசடி போல இருக்குமோ என்று பிரான்ஸ் மக்கள் அஞ்சுகிறார்கள்.

படிக்க :
♦ நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்
♦ பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!

கருவுற்ற பெண்கள் சந்திக்கும் மசக்கையை (உடற்சோர்வு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட காலை நேரத்தில் தோன்றும் சிக்கல்கள்) சரி செய்வதற்காக 1950 மற்றும் 1960 -களில் கிரநெந்தால் (Grünenthal) என்ற ஜெர்மன் நிறுவனத்தால் தாலிடோமைடு சந்தைப்படுத்தப்பட்டது. விற்பனைக்கு வந்த பல ஆண்டுகளுக்கு பின்னரே இம்மருந்து குறைவளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்தது.

இம்மருந்தினால் 2,000  குழந்தைகள் மாண்டனர் மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தவறான மருந்து தயாரித்து குறைவளர்ச்சி சிக்கலை ஏற்படுத்தியதற்காக 2012-ம் ஆண்டு கிரநெந்தால் நிறுவனம் மன்னிப்பு கோரி அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டை பெறுவதற்காக இன்னும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்நிறுவனம் கொடுத்த இழப்பீட்டை விட மக்கள் வரிப்பணத்தினால் ஜெர்மன் அரசு அளிக்கும் இழப்பீடு (ஓய்வூதியம்) மிக அதிகம்.

அன்றைய ‘ஏழை’ நாடான சோசலிச கிழக்கு ஜெர்மனியில் முறையாக ஆய்வுக்குட்படுத்தாத தாலிடோமைடு தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதலாளித்துவ ‘சொர்க்கமான’ மேற்கு ஜெர்மனியில் அன்றைய தேதியில் தேசிய மருத்துவ சட்டங்கள் எதுவுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலாளித்துவ நாடான பிரான்சில் குழந்தை வளர்ச்சி மற்றும் மக்கள் உடல்நல பாதிப்பு குறித்து இருக்கும் விழிப்புணர்வு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருப்பதில்லை. இங்கு மக்கள் பெரும் பிணிகளாலும், பல்வேறு சுற்றுச் சூழல் பாதிப்புகளாலும் (டில்லி காற்று மாசுபாடு) பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து மக்களைக் காப்பதற்கான ஆய்வுகளோ தடுப்பு நடவடிக்கைகளோ அரசால் முன்னெடுக்கப்படுவது இல்லை. இந்நிலை மாற அரசை நிர்பந்திக்க வேண்டியது நமது கடமை !

தமிழாக்கம் :

வினவு செய்திப் பிரிவு

நன்றி:  RT.com
தலிடொமைட் மோசடி பற்றி அறிந்து கொள்ள:
Thalidomide scandal: 60-year timeline

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. மக்கள் நலம் சாா்ந்து இயங்கும் அரசு தான் இவ்வாராக சிந்தனை செய்து செயல்பட இயலும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க