தெலுங்கானா மாநிலத்தில் இன்று 11.12.2018 தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. டிஆர்எஸ் கட்சி பெரும் வெற்றியடைந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விடும் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சான்று. இதே டிஆர்எஸ் கட்சி மாநிலத்தை சென்ற முறை ஆண்டது. இவர்களோடு மத்தியில் பாஜக அரசு ஆள்கிறது. மத்திய மாநில அரசுகளின் கீழ் வாழும் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள்? வறிய மாநிலமான தெலுங்கானாவின் விவசாயிகள் அவர்களில் பலர் பெண்கள் -தற்கொலை செய்வது அதிகரித்திருக்கிறது. தேர்தல் பரபரப்பில் இந்த தற்கொலைகள் மறக்கப்படலாம். ஆனால் ஒரு விவசாயி தற்கொலை என்பது மறந்துவிடக்கூடிய ஒன்றா?

ல்கொண்டா (Nalgonda ) மாவட்டம், விஞ்சாமுர் (Vinjamur) கிராமத்தில் அந்த ஒரு அறை மட்டுமே கொண்ட அச்சிறிய வீட்டை வெளிச்சம் கொண்டு தீர்க்க முடியா ஒரு இருள் கவ்வியிருந்தது. அங்கு தான் நகிலா யாதம்மா 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

யாதம்மா ஒரு விவசாயி. அவரிடம் இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் 20,000 ரூபாய் செலவிட்டு பருத்தி பயிரிட்டிருந்தார். 2016-17-ம் ஆண்டில் பருத்திக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.4,160 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டில் அது ரூ.3,000-ஆக குறைந்து விட்டது. விளைந்த இரண்டே குவிண்டால் பருத்தியை வைத்து போட்ட முதலீட்டில் பாதியை கூட அவரால் எடுக்க முடியவில்லை. கடனைத் திருப்பி செலுத்த வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் ஒரு கொடிய காலைப்பொழுதில் ஆர்கனோ – பாஸ்பரஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

யாதம்மாவின் மகன் யாதம்மா.

அவரது 26 வயது மகனான சங்கர் 80 கிலோமீட்டருக்கு அப்பால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது அம்மாவை உடனடியாக கூட்டிச் சென்றார். எனினும் சிகிச்சை பலனில்லாமல் எட்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 28-ம் தேதி அவரது இன்னுயிர் ஓய்ந்து போனது.

நீண்ட நாள் நோயாளியான சங்கரின் தந்தை நிரஞ்சன் 2013-ம் ஆண்டில் இறந்து போனார். அவருக்கான சிகிச்சை செலவு குடும்பத்தை மேலும் கடனுக்குள் தள்ளியது. தனது தாயின் மரணத்திலிருந்து சங்கரால் இன்னும் மீண்டு வர இயலவில்லை. “குடும்பத்தை என் தாயார் கவனித்துக் கொண்டார். நோயாளியான என்னுடைய அப்பா இறந்த பிறகு எங்களுடைய நிலத்தையும் சேர்த்து அவர் பார்த்துக்கொண்டார்” என்று அவர் கூறினார். “அவர் இந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாவார் என்றோ தற்கொலை செய்து கொள்வார் என்றோ நாங்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை” என்றார்.

இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆறு மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தெலுங்கானாவில்தான் பெண் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டில் 232 பெண் விவசாயிகளும் 2015-ம் ஆண்டில் 159 பெண் விவசாயிகளும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

இந்த ஆண்டின் ஜூன் 2 முதல் இன்றுவரையில் 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

யாதம்மாவின் வாழ்வும் மரணமும் அவரது மாவட்டத்தின் தனிச்சிறப்பான குணாம்சங்களில் ஒன்று. வானம் பார்த்த பூமியான யாதம்மாவின் நான்கு ஏக்கர் நிலத்திற்கு 300 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று ஒத்தாசையாக இருந்தது. மோசமான பாசன உட்கட்டமைப்பு கொண்ட தெலங்கானா மாநிலத்தில் இப்படி நிலத்தடி நீரை நம்பி இருப்பது பொதுவான ஒன்று. மகபூப் நகருக்கு (Mahabubnagar) அடுத்ததாக நல்கொண்டா மாவட்டத்தில்தான் அதிக அளவில் கிணற்று பாசன முறை இருக்கிறது. கெடு வாய்ப்பாக, மாநிலத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்யும் முதலிரண்டு மாவட்டங்களும் இவைதான்.

யாதம்மாவிற்கு தனியாரிடம் 3 இலட்சம் ரூபாய் கடன் இருந்தது. யாதம்மாவை போலவே கிராமப்புறங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலான கடனை கந்து வட்டிக்காரரர்களிடம் இருந்துதான் வாங்குகிறார்கள் என்று 2017-ம் ஆண்டிற்கான தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.

படிக்க:
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !

யாதம்மாவிற்கு படிப்பு கிடையாது. ஆனால் அவரது மகள் இரஞ்சிதா 12-ம் வகுப்பு முடித்துள்ளார். எனினும் வேலை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. திருமணம் முடித்து இல்லதரசியாகவே இருக்கிறார்.

மழையை மட்டுமே நம்பியிருக்கின்றனர் தெலங்கானா விவசாயிகள்.

யாதம்மாவின் இரண்டு மகன்களில் ஒருவரான சீனு ஒன்பதாவது வகுப்பு முடித்துவிட்டு தொழிலாளியாக இருக்கிறார். இன்னொரு மகனான சங்கர் ஓட்டுனராக வேலை செய்கிறார். அவர்களது குடும்பம் விவசாயம் சாரா வருவாயின் மூலமாகத்தான் வாழ்ந்து வருகிறது. விவசாயம் அவர்களை மென்மேலும் கடனுக்குள் மட்டுமே தள்ளிவிட்டதாக சங்கர் கூறினார்.

“இங்கே பாசனத்திட்டம் எதுவும் கிடையாது. மழையை நம்பி மட்டுமே பயிர்கள் உள்ளன. இருக்கின்ற நிலத்தை விற்றுவிட்டு பிழைப்பதற்கு வேறு ஏதாவது வழியை பார்ப்பதுதான் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி” என்று அவர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளும் தெலங்கானா விவசாயிகளை களைப்படைய செய்து விட்டது.

தேர்தல் வாக்குறுதிகளும் அவரை களைப்படைய செய்து விட்டது. “கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்” என்று சங்கர் கூறினார். “ஆந்திராவுக்கு மடைமாறி கொண்டிருக்கும் அத்தனை நிதியும் எங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது பிரச்சினைகள் தீரவுமில்லை வேறு எந்த தீர்வுகளும் இல்லை ” என்று அவர் கூறினார்.

யாதம்மா விவசாயத்தை மையப்படுத்தியே குடும்பத்தை நடத்தினார். மேலும் குடும்பத்தினரை விவசாயிகளாகவே அடையாளப்படுத்தினார். அவரது தலைமை இல்லாமல் தடுமாறிய அந்தக் குடும்பம் அக்கிராமத்திலிருந்தும் விவசாயத்திலிருந்தும் வேரோடு கிட்டத்தட்ட நிரந்தரமாகவே பிடுங்கப்பட்டு விட்டது.

அவரது மரணம் வீழ்ச்சியல்ல, அது ஒரு போராட்டம்:

வானபர்த்தி (Wanaparthy) மாவட்டத்தில் ஒரு மலையின் நிழலால் மூடப்பட்டிருக்கும் கானாபுரம் கிராமத்தில் 45 வயதாகும் ஜோகு சவரம்மா தன்னுடைய கணவர் பக்கண்ணாவுடன் வாழ்ந்து வந்திருந்தார். சவரம்மாவின் பெயரில் ஒரு அரை ஏக்கர் நிலமும் அவரது கணவர் பெயரில் ஒரு மூன்று ஏக்கர் நிலமும் இருந்தன.

அவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. “வெள்ளாமை பயிர்கள், வயல் வேலைகள், வீடு மற்றும் குழந்தைகள் என அனைத்தையும் அவளே பார்த்து வந்தாள்” என்று பக்கண்ணா கூறினார். “அவளை போல சிறப்பாக நான் வேலை செய்ததில்லை. எங்களது நிலம் வானம் பார்த்த பூமி. எங்களிடம் கிணறோ வேறு எந்த பாசன வசதியோ கிடையாது. மிகக் கடினமான சமயங்களை சமாளித்திருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

சில ஆண்டுகள் கழித்து பக்கண்ணா நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது சிகிச்சைக்காக அவர்களின் ஆடுகளை 1 இலட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டி இருந்தது.

சவரம்மாவின் கணவர் பக்கண்ணா.

2015-ம் ஆண்டு வாக்கில் அவர்களது கடன் தொகை 12 இலட்சமாக இருந்தது என்று பக்கண்ணா கூறினார். “பல ஆண்டுகள் நாங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. எங்களுக்கு வெள்ளாமை செய்யவும், குழந்தைகளுக்கு திருமணம் செய்யவும், வீடு கட்டவும் பணம் தேவைப்பட்டது. சில பருவங்களில் நல்ல மகசூலை எடுத்து கடனை திருப்பிக் கட்டி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அந்த நல்ல மகசூல் ஒருபோதும் எங்களுக்கு கிடைத்ததில்லை” என்று கூறினார்.

சென்ற ஆண்டு (2017) செப்டம்பர் மாதத்தில் பருத்தியை பயிரிடுவதில் சவரம்மா ஈடுபட்டார். இருவரும் சேர்ந்து வயலை பார்த்து வந்த பிறகு ஒரு காலையில் சவரம்மாவை காணவில்லை.

படிக்க:
இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்
சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !

“நான் அவளை எங்கும் தேடிப்பார்த்தேன்” சொல்லும் போதே அவரது கண்கள் பனித்தன. “பிறகு யாரோ அவளை பார்த்ததாக சொன்னார்கள். நான் அங்கு சென்ற போது முன்பே இறந்துவிட்டாள் என்று எனக்கு தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாள் என்று கூட என்னால் கேட்க முடியவில்லை. என்ன விசம் குடித்தாள் என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

வெள்ளாமை வீடு வந்து சேராததாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக 6 இலட்சம் ரூபாய் மாநில அரசு கொடுக்கிறது. சவரம்மா இறந்த பிறகு வந்து சேர்ந்த அந்த இழப்பீடு கடன் கொடுப்பதற்கே செலவானது. மேலும் ஒரு 40,000 ரூபாய் கடன் இன்னமும் சவரம்மாவின் பெயரில் உள்ளது.

தற்கொலை செய்து மாண்டு தெலங்கானா பெண் விவசாயியின் உடலைப் பார்த்துக் கதறியழும் உறவினர்கள்.

அவர்கள் இருவரும் நெசவாளர் குடும்பப் பின்னணியை கொண்டவர்கள். அதிலும் சவரம்மா நூல்நூர்ப்பு கொண்டு கொங்காலிஸ் (gongalis) எனும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் தரை விரிப்புகளை செய்யும் ஆற்றல் படைத்தவர். குளிர் காலங்களில் 800-900 ரூபாய் மதிப்பில் மாதம் மூன்று விரிப்புகளை செய்வார்கள். அந்தத் தறி இப்பொழுது அமைதியாக இருக்கிறது. “அவளை போல நூல்நூற்பு இனி யார் செய்வார்கள்?” என்று பக்கண்ணா கேட்கிறார். அந்த நூற்பு கருவியை கையில் பிடித்திருக்கும் அவர் சவரம்மா தொடுவது போலவே இன்னும் உணர்கிறார். அவரது நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். “அவள் இல்லாமல் என்னால் விவசாயம் பார்க்க முடியாது” என்று அவர் கூறினார்.

அவரது மரணம் ஒரு பிரியாவிடை :

மன்னே சென்னம்மா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக திகழ்ந்து வந்தார். அவரது மரணம் ஒரு வீழ்ச்சியல்ல. அது ஒரு போராட்டம்.

லக்ஷ்மிபாலி (Laxmipally) கிராமத்தில் குடிநீர் குழாயருகே பெண்கள் சூழ்ந்து இருக்கின்றனர். ஒரு கொள்கலனில் தண்ணீர் நிறைய ஒரு மணி நேரம் பிடிக்கிறது. தாங்கொணா துயரங்களைச் சந்தித்த சென்னம்மாவின் வலிமையை பற்றி அவர்கள் கூறுகிறார்கள்.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த சென்னம்மாவிற்கு படிப்பறிவு கிடையாது. நிலமும் அவரது பெயரில் இல்லை. ஆயினும் எப்படியாவது விவசாயம் செய்வதற்கான பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பதற்கான வழியை கண்டறிந்தார். அவர் ஆறு ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு எடுத்து நிலக்கடலை பயிரிடுவதற்காக வட்டிக்கு கடன் வாங்கினார்.

தண்ணீர் பற்றாக்குறையால் குத்தகை மலிவாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் 180 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. இப்போதோ 230 ஆழம் சென்று விட்டது. கணவன் மனைவி இருவரும் கிணற்றை ஆழப்படுத்த 35,000 ரூபாய் செலவிட்டனர். “அதற்கு பிறகும்கூட குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க அதிக மின்சக்தியை எடுத்துக்கொண்டது” என்று அவரது கணவர் கிருஷ்ணய்யா கூறினார்.

55 வயதான தனது மனைவி வினோதாவை பறிகொடுத்தத் துக்கத்தில், அவரது கணவன்.

நீர்ப் பாசன திட்டம் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. பாசனத்திட்டங்களின் தாமதத்திற்கு மாநில அரசையே தெலங்கானா தணிக்கை அதிகாரிகள் கை காட்டியுள்ளனர். மேலும் ரிது பந்து (Rythu Bandhu) போன்ற ஒரு நேரடி பணப்பட்டுவாடா திட்டங்களும் (ஏக்கருக்கு 4000 ரூபாய்) பெரிய விவசாயிகளுக்கு தான் பயன்பட்டதே தவிர தடுமாறிக்கொண்டிருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு பயன் தரவில்லை.

“நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பிற்பகலில் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டோம். எனக்கு அது புதிராக இருந்தது. ஏனெனில் முன்பு நாங்கள் அப்படி செய்ததில்லை. அது ஒரு பிரியாவிடை போல இருந்தது” என்று அவர் கூறினார்.

படிக்க:
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
விவசாயிகள் தற்கொலை :மோடியின் பொய்யும் புரட்டும் !

“மோசமான நிலையில் பயிர் இருந்ததும் மிக குறைவான மகசூலையே அது தரும் என்பதும் எங்களுக்கு முன்னரே தெரியும்” என்று கிருஷ்ணய்யா கூறினார். 1.5 இலட்சத்தை திருப்பி அடைக்க முடியாது என்றும் மேலும் கட்டவே முடியாத அளவிற்கு அது வளர்ந்து விடும் என்பதும் சென்னம்மாவிற்கு தெரியும்.

வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடிக்க கிருஷ்ணய்யா கிளம்பிச் சென்றார். சென்னம்மா வீட்டிலேயே அதை குடித்துவிட்டார்.

வினவு செய்திப் பிரிவு
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: The wire

1 மறுமொழி

 1. தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியேற்கவுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

  அன்புள்ள க. சந்திரசேகர ராவ் அவர்களுக்கு!

  ’’தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 7-ஆம் தேதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தெலுங்கானா மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  014-ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டு அதன் முதலமைச்சராக நீங்கள் பதவியேற்ற போது நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,‘‘தெலுங்கானா பகுதி தலைவராக தனி மாநிலம் அமைப்பதில் எவ்வாறு வெற்றி பெற்றீர்களோ, அதேபோல் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அம்மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதிலும் வெற்றி பெறுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்று கூறியிருந்தேன். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் விவசாயம், பாசனம், கல்வி, சுகாதாரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, பல சாதனைகளை படைத்திருக்கிறீர்கள்.”
  ..இப்படி நீள்கிறது பாராட்டு.

  தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக்கு முன்பே நிழல் பட்ஜெட்டுகளைப்போட்டு தாக்கும் நிர்வாக அறிவுள்ள பா.ம.க.வுக்கு தெலுங்கானா மாநில விவசாயிகளின் தற்கொலைகள் மட்டும் சாதனைகளாக தெரியும் ரகசியம் என்னவோ? ப.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இப்படித்தான் தெலுங்கானாவாக மாறுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க