லகம் முழுதும் 15 வயதுக்குட்பட்ட சுமார் 63 இலட்சம் குழந்தைகள் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் தடுக்கப்படக் கூடிய நோய்களால் இறந்திருப்பதாக ஐநாவின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது ஒவ்வொரு ஐந்து நொடிக்கும் ஒரு குழந்தை மரணமடைவதாக உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), உலக சுகாதார நிறுவனம் (WHO), ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகைப் பிரிவு ஆகியவை சேர்ந்து தயாரித்த குழந்தைகள் இறப்புகள் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

குழந்தை பிறந்து முதல் மாதம்தான் மிகவும் ஆபத்தான காலமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரண எண்ணிக்கை 54 இலட்சம் என்றும் பிறந்து ஒரு மாதத்தில் மரணித்த பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 25 இலட்சம் – அதாவது அதில் கிட்டத்தட்ட சரிபாதி என்று கூறுகிறது அந்த அறிக்கை.

ஒரு மாதத்திற்குக் குறைவான குழந்தைகளின் மரணத்தில் சகாராவுக்கு தெற்கிலிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், பணக்கார நாடுகளை விட 9 மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பின்னர், 1 மாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதில் உள்ள முன்னேற்றம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதில் உள்ள முன்னேற்றத்தை விட  குறைவாகவே இருக்கிறது.

5 வயதிற்குள் மரணிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை மகப்பேறுச் சிக்கல்கள், நிமோனியா, வயிற்றுப் போக்கு, சீழ்பிடித்தல் மற்றும் மலேரியா உள்ளிட்ட எளிதில் தடுக்கக்கூடிய அல்லது சிகிச்சையளிக்கக்கூடிய பிரச்சினைகளின் காரணமாக இறக்கின்றனர். 5 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களில் சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் போன்றவையே ஒப்பீட்டளவில் முதன்மையான காரணங்களாக இருக்கின்றன.

15 வயதிற்குள் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையிலும் பகுதி வாரியான வேறுபாடுகள் உலக அளவில் இருக்கின்றன. சான்றாக, சகாராவிற்கு தெற்கிலிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணிக்கும் விகிதம் ஐரோப்பாவை ஒப்பிடும் போது 15 மடங்கு அதிகமாக உள்ளது.

ஒரே நாட்டிற்குள்ளேயே இத்தகைய வேறுபாடுகள் நிலவுவதாகத் தெரிவிக்கிறது, அந்த அறிக்கை. கிராமப்புறங்களில் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நகர்ப்பகுதிகளை காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. இன்னும் குறிப்பாக, குறைந்தபட்ச பள்ளிக் கல்வியை முடித்திருக்கும் தாய்க்குப் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையை விட படிப்பறிவற்ற தாய்க்குப் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

“உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் 2030-க்குள் 5 வயதிற்குட்பட்ட 56 இலட்சம் குழந்தைகள் மரணிப்பதை தடுக்க முடியாது மேலும் பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை அதில் பாதியாக இருக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கான (UNICEF) ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான இயக்குனர் லாரன்ஸ் சண்டி கூறினார்.

மேலும், “குழந்தைகள் இறப்பைக் குறைப்பதில் 1990-க்குப் பிறகு உலக நாடுகள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. ஆனால் நாடுகள் மற்றும் மக்களுக்கிடையேயான பாகுபாடுகள் காரணமாக இன்னமும் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் மரணித்துக்கொண்டே இருக்கின்றன” என்று கூறினார்.

“மருந்துகள், தூய்மையான நீர், மின்சாரம் மற்றும் தடுப்பூசி மருந்துகள் போன்ற எளிய தீர்வுகளால் ஒவ்வொரு குழந்தையின் விதியையும் மாற்ற முடியும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டைப் பொறுத்தவரையில் உலகளவிலான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களில் சுமார் 50% மரணங்கள் சகாராவிற்கு தெற்கிலிருக்கும் ஆப்பிரிக்கா நாடுகளில் நிகழ்ந்தன. 30% மரணங்கள் தெற்காசிய நாடுகளில் நிகழ்கின்றன.

உலகம் முழுவதும் குழந்தைகள் மரணங்களில் இப்படியான சவால்கள் இருந்தாலும் குழந்தை இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்தே வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டில் 1 கோடியே 26 இலட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம், தற்போது 54 இலட்சமாக குறைந்திருக்கிறது. அதே போல 5-லிருந்து 14 வயதிலான குழந்தைகள் மரணிக்கும் எண்ணிக்கை 17 இலட்சத்திலிருந்து 10 இலட்சத்திற்கு குறைந்துள்ளது.

நன்றி: The Hindu  A child under 15 dies every 5 seconds around the world: UN
தமிழாக்கம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க