எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

விருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாட்களை விடுமுறையில் கழிப்பதற்காக போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை.

‘சரி சரி அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்’ என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியை துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர் ‘முடிந்துவிட்டது’ என்று சொன்னது போல எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அந்த ஏமாற்றத்தை மறைப்பது ஆகப் பெரிய சவாலாகவும் ஆனது.

எனக்கு ஒருவிதத்திலும் சம்பந்தம் இல்லாத விருந்து அது. என்னுடைய நண்பருடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மூன்று வருடமாகக் காதலித்தவளுக்கு இப்பொழுதுதான் காதலன் ஒரு மோதிரத்தை கொடுத்து காதலை உறுதிப்படுத்தியிருந்தான். அடுத்து திருமணம்தான். இந்தக் காதலர்களுக்கு வாழ்த்து சொல்கிற மாதிரி அந்தப் பெண்ணின் அலுவலகத்தை சேர்ந்த சில நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த விருந்துக்குத்தான் நான் போகவேண்டுமென்று விரும்பினேன். காரணம் நண்பர் போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவல்தான். அந்தக் காதலன் வேலை செய்வது சி.ஐ.ஏ ( Central Intelligence Agency) நிறுவனத்தில். அதாவது  அமெரிக்காவின் மைய உளவுத்துறையில். என்னுடைய ஆர்வம் அதுதான். நான் என் வாழ்க்கையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தது கிடையாது. இனிமேல் சந்திப்பேன் என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

உளவுத்துறை பற்றி நான் அறிந்தது எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். மீதியை அமெரிக்க சினிமாவில் பார்த்து தெரிந்துகொண்டேன். சினிமாவில் நான் பார்த்த துப்பறிவாளர்கள் எல்லாம் மனதில் திகில் எழுப்பக்கூடியவர்கள். அவர்கள் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். சிறுவயதில் படித்தது சங்கர்லால். அவர் சத்தம் எழுப்பாத மெல்லிய ரப்பர் சூக்களை அணிந்தபடி நாலு மாடிக் கட்டடங்களில் அனாயசமாக பாய்ந்து ஏறிவிடுவார்.

அடுத்து படித்து வியந்தது வந்தியத்தேவன். இவன் தைரியசாலி. வாய் திறந்தான் என்றால் புதுப்புது பொய்களை அந்தக் கணமே உண்டாக்கிவிடுவான். ஆனால் அவன் புத்திசாலியல்ல; மூடத்தனம் கூடியவன். அவன் கண்டுபிடித்தது எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. ஆகவே நவீன துப்பறிவாளன் என்ன செய்வான், எப்படி திட்டமிடுவான், எப்படி செயல்வடிவம் கொடுப்பான் என்பதையெல்லாம் நேருக்கு நேர் நான் அறிய துடித்தது இயற்கையானது.

பின்னேரம் அலுவலகத்திலிருந்து திரும்பிய நண்பர் ‘சரி, பிரச்சினை இல்லை’ என்றார். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை நடந்த விருந்துக்கு என்னை அழைத்துப்போனார். போகும் வழியில் காரில் நண்பரிடம் அந்த சி.ஐ.ஏ அதிகாரிக்கு பக்கத்தில் எனக்கு ஓர் ஆசனம் பிடித்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அந்த உளவாளியிடமிருந்து அத்தனை விசயங்களையும் ஆகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிவிடவேண்டும் என்பது என் திட்டம். நண்பரும் ரோட்டை பார்த்தபடி சரி என்று தலையாட்டினார்.

ஆனால் விருந்து நடந்த இடத்துக்கு போய்ச் சேர்ந்தபோது எனக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கே ஆசனங்களே இல்லை, அது ஒரு கொக்ரெய்ல் (காக்டெயில்) விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தை கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான்.

நண்பன் நான் கேட்டதை மறக்கவில்லை. முதல் வேலையாக என்னை அழைத்துப்போய் தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். முற்றிலும் மென்சிவப்பு வர்ணத்தில் அவள் இருந்தாள். அவளாகவே தான் மணமுடிக்கப் போகும் சி.ஐ.ஏ அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு  மறைந்துபோனாள். முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஆள். சதுரமான முகம், சதுரமான உடம்பு. என்னுடைய கைகளை குலுக்கியபோது முறிந்து விழுந்துவிடும்போல இருந்தது. ஒரு ஜேம்ஸ் பொண்டின் உருவத்தை மனதிலே சித்தரித்து வைத்திருந்த எனக்கு அவருடைய உடலமைப்பும், முக வெட்டும், சொண்டுக்குள் மறைந்திருந்த சிரிப்பும் அப்படியே பொருந்திப் போனது. ஆனால் அதற்கு பிறகு நடந்ததுதான் நான் எதிர்பாராதது.

அந்தக் கூட்டத்தில் ஒருவராவது நின்ற இடத்தில் நின்று பேசவில்லை; சுற்றிக்கொண்டே இருந்தார்கள். உளவுத்துறை அதிகாரியும் என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்துவிட்டார். விருந்துக்கு டிவி சீரியலில் நடிக்கும் ஒரு சின்ன நடிகரும் வந்திருந்தார். இளம் பெண்கள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று பேசினார்கள். அவர் நகர்ந்தபோது சொறி பிடித்த நாயை சுற்றி இலையான்கள் (ஈக்கள்) மொய்ப்பதுபோல அவர்களும் நகர்ந்தார்கள். ஒரு பெண் எழுத்தாளரும் வந்திருந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். எகிப்திய கடவுள்கள் பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று ஏற்கனவே வெளிவந்திருந்தது. அதிலே பிரதானமாக தோத் என்ற கடவுள் மீது தான் ஆராய்ச்சி செய்ததாகவும், தோத் கடவுள் ஆண் உடம்பும் ஐபிஸ் பறவையின் தலையும் கொண்டிருப்பார் என்று விளக்கினார். தன்னுடைய அடுத்த புத்தகம் தயாராகிவிட்டது ஆனால் அதற்கு ஒரு பதிப்பாளரை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார். அது என்ன புத்தகம் என்று நான் கேட்கவில்லை. அது இன்கா இனத்தவரின் கடவுள்களாக இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டேன்.

ஒருவர், யாரோ பாடப் போகிறார் என்று அறிவித்தார். ஒரு சீனப் பெண் கையிலே வட்டமான வைன் கிளாசை தூக்கிப்பிடித்தபடி கூடத்தின் நடுவுக்கு வந்து நின்றார். தரையை தொடும் ஆடையில் அவர் நடந்து வந்தபோது அவர் பாதங்களை ஒருவரும் பார்க்கவில்லை. இனிமேல் பாடப்போகும் மெட்டுக்கு ஏற்ப அசைந்து வந்தார். முதுகு நேராக நிற்க அவருடைய இடை மாத்திரம் பெண்டுலம்போல இரண்டு பக்கமும் ஆடியது. அந்தப் பாடல் ஒரு பழைய சீனப் பாடல் என்று சொல்லிவிட்டு பாடினார்.

ஒலிவாங்கியை பிடிப்பதுபோல வைன்கிளாஸை வாய்க்கு கிட்ட வைத்துக்கொண்டு பாடியபோது எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தைபோல ஒலித்தன. உயிர் எழுத்துக்கள் எல்லாம் மூக்கினாலும், மெய் எழுத்துக்கள் வாயினாலும் ஒலிவடிவம் பெற்றன என்று நினைக்கிறேன். பாடலின் இசை சாதாரணமாகத் தொடங்கி முடிவில் ஒரு மெல்லிய சோகரசத்தை தொட்டுவிட்டு நின்றது. பாட்டு முடிந்ததும் எல்லோரும் கைதட்டி அவரை சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள்.

கூட்டம் ஒருவாறு அகன்றதும் நானும் பாராட்டிவிட்டு ‘இது ஒரு சோகப் பாடலா?’ என்று வினவினேன். அவர் அது சரி என்றார். நீங்கள் பாடியதன் பொருள் என்ன என்றேன். அவர் அதிசயித்தார். ஒருவருமே அவரிடம் அதைக் கேட்கவில்லை. புதிதாக மணமான ஆண், மனைவின் பிரிவை தாங்கமுடியாமல் அரற்றியது. மெல்லிய குரலில் சீன மொழியில் ஒவ்வொரு வரியாக உச்சரித்து அதன் மொழிபெயர்ப்பையும் சொன்னார். வீட்டுக்கு வந்தபோது எல்லாமே மறந்துவிட்டது, சில வரிகளைத் தவிர.

“பளிங்குத்தரையில்  உனது பட்டாடை
உரசும் சத்தம் நின்றுவிட்டது.
புழுதி சேர்ந்துவிட்டது.
பழுத்த இலைகள் வாசல் கதவடியில்
குவிந்துவிட்டன.
உன்னையே ஏங்கி அடிக்கும் என் இருதயம்
ஓய்வதற்குள் திரும்பிவிடு.”

ஒரு குறுந்தொகை பாடலை நினைவூட்டுகிறது என்று அவரிடம் சொன்னேன். அவர் குறுந்தொகை என்றால் என்னவென்று கேட்டார். பின்னர் அது பற்றிப் பேசினோம்.

அவரை எனக்கு நல்லாகப் பிடித்துக் கொண்டது. நான் பேசியபோது ஒரு வார்த்தையையேனும் தவற விட்டுவிடக்கூடாது என்பதுபோல உன்னிப்பாகக் கேட்டார். அவ்வளவு கூர்மையான கவனத்தை நான் முன்னர்  ஒருவரிடமும் கண்டதில்லை. ஒரு நிமிடத்தில் வெடிக்கப் போகும் வெடி குண்டை செயலிழக்க வைப்பது எப்படி என்று ஒருவர் கூறுவதை  உள்வாங்குவதுபோல அவர் முழுக்கவனத்துடன் கேட்டார். தன்னுடைய தொலைபேசி எண்ணை ஒரு பழைய கார் தரிப்பு டிக்கட்டின் பின்பக்கத்தில் பேனையால் எழுதி என்னிடம் தந்தார். மறுபடியும் சுற்றில் அவர் கலந்துகொண்டபோது நான் அவர் பாதங்களை காணவில்லை.

மீதிச் சுழற்சியில் மேலும் இரண்டு முறை அமெரிக்க உளவாளியை சந்தித்தேன். இரண்டு இரண்டு நிமிடங்கள் பேசினார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்  காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று படித்திருந்தேன். ஆனால் இன்றுவரை அதில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. எந்தெந்த நாடுகளில் அமெரிக்க உளவாளிகள் மறைந்திருக்கிறார்கள் என்பதும் ஒருவரும் அறிந்ததில்லை. நிறுவனத்தின் பட்ஜெட் வருடத்துக்கு 40 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்று சொன்னார். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது. எனக்கு முன் நின்று பேசிய உளவாளி பார்த்தால் மெல்லிய ரப்பர் ஒட்டிய சப்பாத்து அணிந்த சங்கர்லால் போலவோ, முரட்டுத் தோற்றம் கொண்ட வந்தியத்தேவன் போலவோ இல்லை. ஒளிவு மறைவு இல்லாமல் நேராக கண்களைப் பார்த்து நேசமுடன் பேசினார். ரோட்டிலே இவரைப் பார்த்தால் நான் ஒரு வீடு விற்பனை முகவர் என்றோ அல்லது விமான ஓட்டி என்றோதான் ஊகிப்பேன்.

நான் மறுபடியும் சுழற்சியில் சேர்ந்து நகர்ந்தபோது விவாதம் செய்யும் இருவரிடம் அது என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. ஒருவர் அந்த கூடத்தையே நிறைத்து விடுவதுபோல நடுவிலே நின்றார். பக்கத்திலே ஓர் இளம் பெண். அங்கு வந்திருந்த பெண்களில் அவரே அதிக அழகானவர். மாலை வெய்யில் நிறம். அவருடைய கண் இமைகள் அவருடைய கண்களை பாதி மறைத்துவிட்டன. தன்னுடைய வம்ச வேர்களைத் தேடிப்போன கதையை அவர் சொன்னார். தன்னுடைய தகப்பன் வழி ரஸ்யாவில் தொடங்கி போலந்துக்கு வந்து இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததென்றும், தன் தாய் வழி நேராக கிரீஸிலிருந்து வந்ததாகவும் கூறினார். ரஸ்ய முடியும் கிரேக்க கண்களும் அவருக்கு அப்படி அமைந்திருந்தன.

கூடத்தின் நடுவில் நின்ற மனிதர் தன்னுடைய பெயர் கிப்ளிங் என்றும், தன்னுடைய மூதாதையர் இங்கிலாந்தின் பிக்கரிங் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும்,  தனக்கு பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் சொந்தமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். எல்லாவிதமான வம்சத் தேடலும் ஓர் அரசகுமாரனிலோ, புகழ்பெற்ற எழுத்தாளனிலோ, பிரபலமான பாடகனிலோதான் முடிவடையும். ஒரு கொலைகாரனிலோ, கொள்ளைக்காரனிலோ, நாட்டை விட்டு துரத்தப்பட்டவனிலோ முடிவடைவதில்லை.

பத்து மணியளவில் விருந்து முடிந்ததும் நான் நண்பனின் காரில் ஏறிக்கொண்டேன். அவன் கார் சாவியை துளையில் நுழைத்துவிட்டு காரை கிளப்பாமல் சும்மா அமர்ந்திருந்தான். பின்னர் என்னை திரும்பி பார்த்து ‘நான் உங்களுக்கு இன்னும் கூட உதவி செய்திருக்கலாம்’ என்றான். ‘இதுவே பெரிய உதவி’ என்றேன் நான். காரை மௌனமாக எடுத்து நெடுஞ்சாலைக்கு விட்டான். எதிர் வெளிச்சத்தை வெளிச்சத்தால் வெட்டிக்கொண்டு வேகமாக காரை ஓட்டிய நண்பன் ‘அமெரிக்க ஒற்றருடன் நிறையப் பேசினீர்களா? என்ன கண்டு பிடித்தீர்கள்?’ என்று கேட்டான். எனக்கு டக்கென்றது.

யோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர், எங்கேயெங்கே வேலை செய்தேன், என்ன வேலை, யார் யாரைத் தெரியும், என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் ஆசைகள், என் திட்டங்கள் என சகலதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவருடைய மூன்றெழுத்து முதல் பெயர்தான் தெரியும். முழுப்பெயரைக்கூட நான் கேட்டு அறியவில்லை. இந்த உண்மை தலையில் இறங்கியதும் நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

அந்த விருந்துக்கு என்னிடமிருந்த ஆகத் திறமான உடுப்பு தரித்து, ஆகத்திறமான சப்பாத்து அணிந்து, ஆகத்திறமான அமெரிக்க ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டு போனது எவ்வளவு வீண் என்று பட்டது. உளவாளியிடம்  நான் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒன்றுமே மிஞ்சவில்லை. மிஞ்சியது ஒரு சீனக் கவிதை மட்டுமே.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)