விஜய்ண்ணாவும் சற்குணம் ஐஏஎஸும் இல்லாத நாட்கள் !

1966 நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியான ஒரு செய்தி : “கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். சிலரிடம் மறைத்துக்கொள்ள எதுவும் இல்லை. சிலர் குடையைப் பிடித்துக்கொண்டும் சிலர் பையை தலைமேல் போட்டுக்கொண்டும் நிற்கிறார்கள்”. இப்படித்தான் இருந்தது அப்போது நிலைமை. அந்தத் தருணத்தில் விஜய்ண்ணா பிறக்கவில்லையென்பதால் என்ன செய்வதென அரசுக்கும் தெரியவில்லை.

1943 அன்றைய வங்காளத்தில் பட்டினிக் கொடுமையால் மாண்டு போன குழந்தையின் புகைப்படம். (படம் நன்றி : விக்கிபீடியா.)

1965-ல் மிகப் பெரிய உணவுதானிய பஞ்சத்தை இந்தியா எதிர்நோக்கியிருந்தது. 1964 – 65ல் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி 65-66ல் 72.3 டன்களாகக் குறைந்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை. கேட்கவும் வேண்டுமா? இந்தத் தருணத்தில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966 நவம்பர் 16-ல் இந்தத் திட்டம். ஆனால், எல்லா குடும்பங்களுக்கும் கார்டுகள் கிடைக்கவில்லை.

1967-ல் முதலமைச்சரான சி.என். அண்ணாதுரையால் (இவர் விஜய்ண்ணா இல்லை.. வேறு ஒரு அண்ணா) வாக்குறுதி அளித்தபடி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால், அப்போதுதான் தமிழக நிர்வாகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்தது என்கிறார் இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை செயலராக இருந்து ஒய்வுபெற்ற எஸ். நாராயணன்.

அண்ணா துரை வலியுறுத்தியதால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி சில மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் சி.என். அண்ணாதுரை மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கி செயல்படுத்தப்படுவது வழக்கம்.

அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான் கீழிருந்து மேல் நோக்கி திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது என்கிறார் அவர்.
1969-ல் மு. கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மாறியது. பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டறிந்து தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் பிரச்சினைகளைச் சொன்னால், அதிகாரவர்க்கம் அதற்கு காதுகொடுக்க வேண்டியிருந்தது.

1960-களில் துவங்கி 80-களுக்குள் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமங்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள்.

1975-க்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. அரிசிக்காக துவங்கப்பட்ட இந்த முறையின் மூலம் சர்க்கரை, மண்ணெண்ணையும் வழங்கப்பட்டன. 1972-ல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. இந்த கார்டை வைத்தே கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்படுகிறன. அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

ரேஷன் கார்டுகளுக்காக அடிதடியில் ஈடுபட்ட காலம் மாறி, வருவாய்க்கேற்றபடி வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள், பொருட்களே வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் வரை வந்துவிட்டது. மக்கள் தொகையின் பெரும் பகுதி அரசி வாங்க ரேஷன் கடைகளைச் சார்ந்திருந்த காலம் மாறியிருக்கிறது.

1970-க்கும் 76-க்கும் இடையில் மாநிலத்தின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்தது. தனிநபர் வருவாய் 30 சதவீதம் அதிகரித்தது. 1971-ல் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 1981-ல் 54.4 சதவீதமாக மாறியது. 1971-ல் 125ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 77-ல் 103ஆகக் குறைந்தது. வறண்ட நிலங்களுக்கு நில வரி ஒழிக்கப்பட்டது. 1974-ல் கொண்டுவரப்பட்ட சட்டம், பரம்பரைக் கர்ணம் முறையை ஒழித்தது. இதையெல்லாம் இடஒதுக்கீட்டை வைத்து, தகுதியில்லாமல் வேலைக்குச் சேர்ந்தவர்களே செய்தார்கள்.

திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின, திராவிடச் சித்தாந்தம் என்பது எப்படி மக்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை உண்மையிலேயே அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் Dravidian Years: Politics and Welfare in Tamilnadu. எழுதியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன்.

*****

வளர்ந்த நாடுகள் இலவசங்களை வழங்குவதில்லையா ?

ந்தியா போன்ற ஊழல் அரசியல்வாதிகளும் ஏழ்மையான மக்களும் நிறைந்த நாடுகளில் மட்டும் இலவசங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஊழலுக்காகவே தோன்றி, நிலைபெற்றிருக்கும் திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில் இது அளவுக்கு மீறி போய்விட்டது. எந்த வளர்ந்த நாடும் இலவசங்களை வழங்குவதில்லை என்கிறார்கள் நண்பர்கள். உண்மையில் வளர்ந்த நாடுகளில் இலவசங்கள் இல்லையா?

சில வளர்ந்த நாடுகளில் வழங்கப்படும் இலவசத் திட்டங்கள், மானியங்கள் பின்வருமாறு. இவை இணையத்திலிருந்து தொகுக்கப்பட்டவை. அந்தந்த நாடுகளில் வசிப்பவர்கள் தவறுகளோ, கூடுதல் திட்டங்களோ இருந்தால் சேர்க்கலாம்.

1. ரஷ்யா: நாட்டின் கிழக்குப் பகுதியில் மக்கள் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஹெக்டேர் நிலம் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த சட்டவிரோத நடவடிக்கையும் அங்கு நடக்கவில்லையெனில் ஐந்தாண்டுகளில் நிலம் பயனாளிக்கு முழுமையாக மாற்றித்தரப்படும்.

2. வடக்கு அயர்லாந்து: மருந்துச் சீட்டுகளுக்கு மருந்துகள் இலவசம். ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மருந்துகள் இலவசம்.

3. நியூசிலாந்து: வேலைக்காக வேறு இடங்களுக்கு நிரந்தரமாக குடிபெயர்பவர்களுக்கு வரியில்லாமல் 3,000 நியூசிலாந்து டாலர்கள் – 1500 பவுண்டுகள் – வழங்கப்படுகிறது.

4. அமெரிக்கா :

  1. பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பேச சலுகை விலையில் தொலைபேசி.
  2. வருவாயில் பின்தங்கிய வகுப்பினருக்கு உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்கும் Supplemental Nutrition Assistance Program திட்டம்.
  3. வீட்டு வாடகையோ, சலுகை விலையில் வீடுகளையோ வழங்கும் Federal Public Housing Assistance திட்டம்
  4. National School Lunch Program’s Free Lunch Program – அமெரிக்காவில் இதுபோல பல திட்டங்கள் உண்டு.

5. சிங்கப்பூர் : மக்கள் தொகையை அதிகரிக்க முதல் இரண்டு குழந்தைகளுக்கு தலை சுமார் 3,890 பவுண்டுகளும் மூன்றாவது குழந்தை முதல் ஒவ்வொரு குழந்தைக்கும் 4,870 பவுண்டுகளும் வழங்கப்படுகின்றன.

6. போர்ச்சுகல் : இங்குள்ள Alcoutim-ல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 4,430 பவுண்டுகள் வழங்கப்படுகின்றன.

7. ஹங்கேரி : மணமாகும் இளந்தம்பதிகள் 3 அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெறுவதாக வாக்குறுதியளித்தால் தனியாக வீடு வழங்கப்படுகிறது.

8. இத்தாலி : பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 வயதாகும்வரை மாதம் 61 பவுண்டுகள் வழங்கப்படுகிறது.

9. ஸ்பெயின் : பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 2 ஆயிரம் பவுண்டுகள்.

10. பிரான்ஸ் : கர்ப்பிணி பெண்களின் ஏழாவது மாதத்தில் சுமார் 900 பவுண்டுகள் வழங்கப்படும். ப்ரீ ஸ்கூல் வகுப்பு குழந்தைக்கு இலவசம்.

11. கனடா : பல நகரங்கள் குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் வகையில் மானியங்களை அளிக்கின்றன. அதாவது ஒருவர் குறைந்தபட்ச வருவாயை சம்பாதிக்க முடியாவிட்டால், மீதமிருக்கும் தொகையை அரசு வழங்கும்.

12. நெதர்லாந்து : Utrecht-ல் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது.

13. நார்வே : பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம்.

14. ஃபின்லாந்து : கல்வி முழுக்க முழுக்க இலவசம். (தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முழுக்க முழுக்க இலவசம்).

15. டென்மார்க் : ஐக்கிய ராஜ்ஜியம், போலாந்து : மருத்துவ சேவைகள் இலவசம்.

*****

ரசு இலவசமாகக் கொடுத்த பொருட்களை தூக்கியெறிவது, உடைப்பது என ஒரு விரல் புரட்சி காட்சிகள் வீடியோக்களில் பார்க்கக் கிடைக்கின்றன.

https://youtu.be/3YIvi3buxE0

நம் வீடுகளில் உள்ள மின் இணைப்பில், முதல் 100 யூனிட்டுகளை அரசு இலவசமாக வழங்குகிறது. அதுவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெட்கமேயில்லாமல் இலவசமாக அனுபவிப்பவர்கள் எப்படி இதை திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்?

அந்த மின்சாரத்திற்கான மானியத்தை டாஸ்மாக் வருமானத்தில் இருந்து அனுப்பாமல், தமிழக அரசு மூட்டை தூக்கி, கூலி வேலை செய்து மின்வாரியத்திற்கு அனுப்புகிறதா?

நன்றி: Muralidharan Kasi Viswanathan

3 மறுமொழிகள்

      • Simply generalized every thing as free in this article. As a public I am clearly understand that Education, Medicare, Water and clean air must be delivered by the government for free. uninterrupted Electricity, clean water, well maintained roads, and well established police forces and law and order are the ones public wanted. Governments should focus on these concepts rather than free stove, free grinder, free tv etc. etc….
        Every common people knew that in this movie focus on unnecessary free things. Not free education or free healthcare.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க