1962ஆம் ஆண்டின் அக்டோபர் நெருக்கடி அல்லது க்யூப ஏவுகணை நெருக்கடி என்று அழைக்கப்படும் சம்பவம் ஒன்று உண்டு. க்யூபாவில் சேவியத் யூனியன் பெரிய அளவில் ஏவுகணைகளைப் பொருத்தியதையடுத்து, இத்தாலியிலும் துருக்கியிலும் அமெரிக்கா ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்தது. இந்த நிலை 13 நாட்கள் நீடித்தது. இந்தப் பதிவு அதைப் பற்றியல்ல. அந்தத் தருணத்தில் நடக்கவிருந்த ஒரு விபத்தைப் பற்றி.

இந்த நெருக்கடி காலகட்டத்தில் கறுப்பு சனிக்கிழமை என வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட அக்டோபர் 27ஆம் தேதியன்று, அமெரிக்க கப்பற் படை கப்பல்கள் சோவியத் நீர்மூழ்கியான பி- 59 மீது சிறிய ரக குண்டுகளை வீசின. அந்த நீர்மூழ்கியை நீரிலிருந்து வெளியில் வர வைக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். ஆனால், அந்த சோவியத் நீர்மூழ்கியில் அணுஆயுதம் இருக்கிறது என்பது தெரியாது.

குண்டுகள் நீர்மூழ்கி மீது விழ ஆரம்பித்ததும் அதன் கேப்டனான Valentin Grigorievitch Savitsky பதற்றமடைந்தார். யுத்தம் துவங்கிவிட்டதென நினைத்து, அணு ஆயுதத்தை வீச தயாரானார். ஏனென்றால், அந்தக் கப்பல் இருந்த ஆழத்திலிருந்து அவரால் ரேடியோ மூலம் தலைமையகத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், அவரே அந்த முடிவை எடுத்தார்.

ஆனால், இம்மாதிரி நடவடிக்கைக்கு கப்பலில் உள்ள அனைத்து அதிகாரிகளின் ஒப்புதலும் தேவை. அதில் இருந்த Vasili Arkhipov என்ற அதிகாரி இதனை ஆட்சேபித்தார். இதையடுத்து அணு ஆயுதம் வீசப்படவில்லை.

*****

ந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி.

உண்மையில் இம்மாதிரியான நீர்மூழ்கிகள் தேசத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது தி ஹிந்துவில் இன்று (17.11.2018) வெளியாகியிருக்கும் கட்டுரை.

அரிஹந்த் மாதிரியான நீர்மூழ்கிகளால் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல் என்பது இந்தியாவிற்கு இல்லை என்கிறது கட்டுரை.

க்யூப ஏவுகணைச் சிக்கல் காலகட்டத்தில் நடந்ததைப்போல நம் நீர்மூழ்கி தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருக்கும் நேரத்தில், இம்மாதிரி ஒரு முடிவை, தவறாக எடுத்தால் என்ன ஆகும்?

உண்மையில் இம்மாதிரி நீர்மூழ்கிகள், அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் அதிகாரத்தை சிவில் அரசுகளிடமிருந்து ராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவதை நோக்கித் தள்ளுகிறது.

இதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும், இதுபோல நான்கு நீர்மூழ்கிகளை வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிடுகிறது. ஒரு நீர்மூழ்கியைக் கட்ட ஆகும் செலவு, 70,000 கோடி ரூபாய். இவற்றை இயக்க வருடத்திற்கு 2,000 கோடி ரூபாய் வரை ஆகும் என்கிறது கட்டுரை. இந்தக் கப்பல்கள் நாற்பது ஆண்டுகளுக்கு பணியில் இருக்கும். மொத்தச் செலவு ஒன்றரை லட்சம் கோடியைத் தொடும். இந்தச் செலவு ஒரு கப்பலுக்கு.

படிக்க:
♦ இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?
♦ இரசியாவில் மானத்தை வாங்கிய இந்திய இராணுவ டாங்கிகள் !

சில ஆயிரம் கோடி ரூபாயில், ஒன்றரைக் கோடி குடும்பங்களுக்கு மிக்ஸியும் டிவியும் கொடுத்தால் குதிப்பவர்கள், யாருக்கும் பயனில்லாமல் இப்படி ஒன்றரை லட்சம் கோடி செலவழிப்பது குறித்து என்ன சொல்வார்கள்?

சந்தேகமே வேண்டாம்.. இதை ஆதரிப்பார்கள்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan
தி ஹிந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரை:
Unnecessary, destabilising and expensive