துரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கோவிலின் அறங்காவலரான ஆர்.எஸ். நாயுடு. சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servents of the Goddess புத்தகத்தில் ஆலயப் பிரவேசத்தில் இவரது பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அவரைப் பற்றி தனிப்பட்ட விவரங்கள் அதிகமாக இல்லை.

madurai-temple-entry-protest-history-R-S-Naiduஆர்.எஸ். நாயுடுவின் வழித்தோன்றல்கள் இப்போதும் மதுரை நகரில் வசிக்கிறார்கள். ஆர்.எஸ். நாயுடுவின் பேரன்கள் வழக்கறிஞர் ஆர். கோபிநாத் மற்றும் சேக்ஸ்ஃபியர் ஆகிய இரண்டு பேரையும் நான் சந்தித்தேன். இவர்களிடம் தங்கள் தாத்தா குறித்த தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், நாயுடுவின் பல புகைப்படங்களை அவர்களிடமிருந்து பெற முடிந்தது.

சென்னையில் பாரி அண்ட் கம்பனியில் ஆடிட்டிங் பிரிவில் பணியாற்றியவர் ரெங்கமன்னார் நாயுடு. அந்த காலத்திலேயே ஆயிரக் கணக்கில் மாத ஊதியம் பெற்றவர். இவருக்கு இரு மகன்கள். ஒருவர் ஆர். சேஷாச்சலம் நாயுடு. மற்றொருவர் ஆர். நெம்பெருமாள் நாயுடு. இவர்களில் சேஷாச்சலம் நாயுடு தன் பெயரை ஆர்.எஸ். நாயுடு என கெஸட்டிலேயே மாற்றிக்கொண்டார், நெம்பெருமாள் நாயுடு ஆர்.என். நாயுடு என மாற்றிக்கொண்டார். நெம்பெருமாள் நாயுடு மருத்துவர். ஆர்.எஸ். நாயுடு இங்கிலாந்தில் பார் அட் லா முடித்தவர்.

இதற்குப் பிறகு மதுரை திரும்பிய ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சியில் பெரும் ஈடுபாடு காட்டினார். அந்தக் கட்சியின் சார்பில் மதுரை நகர சபைக்குப் போட்டியிட்டு நகர சபைத் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவர் நகரசபைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் சைமன் கமிஷன் என பரவலாக அழைக்கப்பட் சர் ஜான் சைமன் தலைமையிலான The Indian Statutory Commission மதுரைக்கு விஜயம் செய்தது.

R-S-Naidu-welcome-simanகாங்கிரசும் ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீகும் இந்த கமிஷனை புறக்கணித்த நிலையில், இந்த கமிஷன் சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு நிலவியது. ஆனால், இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகள் இந்த கமிஷனை ஆதரித்தன. ஒன்று முகமது ஷாஃபி தலைமையிலான முஸ்லீம் லீக். இரண்டாவது நீதிக் கட்சி.

ஆகவே, மதுரைக்கு வந்த சைமன் கமிஷனை நீதிக் கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு வரவேற்றார். அந்த கமிஷனில் இடம்பெற்றிருந்த, பின்னாளில் பிரிட்டனின் பிரதமரான லேபர் பார்ட்டியைச் சேர்ந்த கிளமன்ட் அட்லி, ஆர்.எஸ். நாயுடுவின் வீட்டிற்கும்கூட வந்தார். (கிளமன்ட் அட்லியும் ஆர்.எஸ். நாயுடுவும் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். இதை உறுதி செய்ய முடியவில்லை).

R-S-Naidu-Glament-atlee12 ஆண்டுகள் மதுரை நகர சபையின் தலைவராகப் பணியாற்றிய பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக 1937-ல் நியமிக்கப்பட்டார் ஆர்.எஸ். நாயுடு. நீதிக் கட்சி ஆட்சியின் இறுதிக் காலத்தில் மதுரையில் செல்வாக்குடன் விளங்கிய நீதிக் கட்சித் தலைவர் பி.டி. ராஜனால், நாயுடு நியமிக்கப்பட்டார்.

மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஆர்.எஸ். நாயுடு செய்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பாரதூரமானவை. அவர் நிர்வாக அதிகாரியாக இருக்கும்போதுதான் ஆலய நுழைவு நடந்தது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தில் அவர் செய்த மாற்றங்களும் மேம்பாடுகளும் போற்றத்தக்கவை.

ஆலயப் பிரவேசத்தை ஒட்டிய காலத்தில், ஆர்.எஸ். நாயுடு மிக கண்டிப்பாக நடந்து கொண்டார். அதனாலேயே, பட்டர்களின் கலகத்தை மீறியும் ஆலயப் பிரவேசம் நிலைத்து நின்றது. ஆலயப் பிரவேசத்திற்கு அடுத்த நாள் சந்நிதானக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சாவியைத் தர மறுத்த முத்து சுப்ப பட்டரையும் மேலும் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்தார். அதற்குப் பிறகு, அன்றைக்கு பூசை உரிமை உள்ளவர்கள் கோவிலுக்கு வராமல் போனால், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

madurai-temple-entry-protest-history-Sandhu-patter
சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.

சில வாரங்களில் சாந்து பட்டரைத் தவிர எல்லா பட்டர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பூசைகளைத் தொடர்ந்து செய்ய திருநெல்வேலியிலிருந்து 12 ஆதி சிவாச்சாரியார்களை வரவழைத்தார் நாயுடு.

1939 ஜூலை 29-ஆம் தேதி கோவிலுக்குள் சென்று சுத்தீகரண சடங்குகளைச் செய்ய வேண்டும் என சில பட்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, கோவில் கதவுகளை மூடியதோடு சஸ்பென்ட் ஆன பட்டர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று விதித்தார். சுத்தீகரணச் சடங்கையும் அனுமதிக்க மறுத்தார்.

ஆகஸ்ட் மாதம் ஆவணி மூலத் திருவிழாவின்போது வேத பாராயணம் செய்யும் பாடகர்கள் கோவிலை விட்டு வெளியேறியபோது, வேறு கோவில்களில் இருந்து வேத பாராயணம் செய்யவைத்தார். முடிவில் 1945 செப்டம்பர் மாதத்தில், சுத்தீகரணச் சடங்கு ஏதும் செய்யாமல், ஆர்.எஸ். நாயுடுவுடன் சமரசம் செய்துகொண்டுதான் பட்டர்கள் மீண்டும் கோவிலுக்குள் நுழைய முடிந்தது.

இந்த அர்ச்சகர்கள் கோவிலில் இல்லாத காலகட்டத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்தார்.

1. 1939 ஆகஸ்டில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் சீட்டு வாங்க வேண்டும். பட்டர்களிடம் நேரடியாக காசு கொடுக்கக்கூடாது. சீட்டின் விலை 3 அணா. இதில் 1 அணா பட்டருக்கு. 2 அணா கோவிலுக்கு.

2. நாயுடு வருவதற்கு முன்பாக கோவிலில் 2 உண்டியல்கள் மட்டுமே இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

3. முக்கியப் பிரமுகர்கள் வரும்போது அவர்களை பட்டர்கள் வரவேற்றனர். அதை மாற்றிய நாயுடு, கோவில் நிர்வாக அதிகாரிகளே இனி முக்கியப் பிரமுகர்களை வரவேற்பார்கள் என செயல்படுத்தினார். இப்போதுவரை அந்த முறையே நீடிக்கிறது.

4. மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடக்கும் போது அவர்கள் செங்கோல்களை முதன்மை பட்டர்தான் எடுத்துச் சென்றார். ஆனால், 1940-ல் இந்தப் பழக்கத்தை நாயுடு மாற்றினார். சாந்து பட்டர்தான் கடைசியாக இப்படி செங்கோலைக் கொண்டுசென்ற பட்டர். அதற்குப் பிறகு, நிர்வாக அதிகாரியோ, அறங்காவலரோதான் செங்கோலைப் பெறுகின்றனர்.

5. கோவில் பேஷ்காராக அதுவரை பிராமணர்களே நியமிக்கப்பட்டனர். ஆனால், முதல் முறையாக பிராமணரல்லாத ஒருவரை 1945 பிப்ரவரியில் நாயுடு நியமித்தார்.

6. எந்தெந்த நேரத்தில் வழிபாடு நடக்கிறது என்பது பலகைகளில் எழுதி வைக்கப்பட்டது. அந்தந்த நேரத்தில் பூஜை நடக்கிறதா என்பதை பேஷ்கார் கண்காணிக்கும் முறை வந்தது.

7. புதிய பட்டர்கள் தீட்சை பெறும் அதிகாரம் பட்டர்கள் கையிலிருந்து கோவில் நிர்வாகத்தின் கைக்கு வந்தது.

1945-ல் ஆர்.எஸ். நாயுடு கோவில் நிர்வாகத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

ஆர்.எஸ். நாயுடுவுக்கு மூன்று மகன்கள். ராஜேந்திரன், எஸ்டி ராய், கிருஷ்ணமோகன். இவர்களில் ராஜேந்திரனும் வெளிநாட்டில் சட்டம் படித்தவர். ஆனால், படிப்பை முடிக்கவில்லை. தந்தையின் சொத்தை குதிரைப் பந்தையத்தில் செலவழித்தார். மதுரையிலிருந்து செயல்பட்ட சித்ராலயா ஸ்டுடியோவில் சில காலம் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இவரது மகன்கள் கோபிநாத், ஷேக்ஸ்பியர் ஆகியோரைத்தான் நான் சந்தித்தேன். ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்ததால், ஷேக்ஸ்பியர் என தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிறார் ராஜேந்திரன்.

கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஆர்.எஸ். நாயுடுவுக்கு பக்கபலமாக நின்ற சாந்து பட்டரின் மகன் சுப்பிரமணியன், ஆர்.எஸ். நாயுடு மிக உறுதியான, அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிர்வாகி என நினைவுகூர்கிறார்.

ஆர்.எஸ். நாயுடுவுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த கடிதங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டதாக ஷேக்ஸ்பியர் சொல்கிறார். ஆர்.எஸ். நாயுடு மதுரை நகர சபை தலைவராக இருந்தபோது செய்த பணிகள் என்ன என்பது இன்னொரு ஆய்வுக்குரியது.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க