காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் ! நாடகம் பாகம் 2

முதல் பாகத்தின் இணைப்பு : பாகம் – 1

முதன்மைப் பாத்திரங்கள்: எழுத்தாளர் சுயமோகன், இயக்குநர் முறுக்குதாஸ், முறுக்குதாஸின் தனி உதவியாளர்கள் ஜகன், ஜோதி. நான்கு வருங்கால இயக்குநர்கள் பீட்டர், பல்லவன், தொல்காப்பியன், ஜிப்பா மணி மற்றும் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், தயாரிப்பு உதவியாளர் – கற்பூரம் என்ற செல்லம்.

காட்சி 7:  கதை துவங்கும் படலம்
இடம்: பிஷர்மேன் கோவ் விடுதியின் லக்சுரி அறை
நேரம்: மாலை 8 மணி

உதவி இயக்குநர்கள் நால்வரோடு, இயக்குநர் முறுக்குதாஸ் மற்றும் எழுத்தாளர் சுயமோகனும் விடுதி அறையின் முதல் அறையில் திண்டு மெத்தையில் அமர்ந்திருக்கின்றனர். திண்டின் மூலையில் இயக்குநரும், வயிற்றுப் பகுதியில் நான்கு இயக்குநர்களும் அமர்ந்திருக்கின்றனர். மூட்டு வலி காரணமாக சுயமோகன் மட்டும் சிங்கிள் சீட் சோபாவில் காலை நீட்டியபடி அமர்ந்திருக்கிறார்.

தொல்காப்பியன்: (சுயமோகனைப் பார்த்து) டைரக்டர் சாருக்கு ஃபேவரேட் நம்பர் 7-தான். கூட்டு நம்பர் 7 வர்ற மாறி ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 106, செகண்ட் ஃப்ளோர் 205, தெர்டு ஃப்ளோர் 304 கிடைக்கல. நிக்கில்-கிட்ட முன்னமே சொல்லியும் கோட்ட விட்டார். கடைசியல 203-ன்னு ஐஞ்சாம் நம்பர்தான் கிடைச்சிருக்கு! இது பெரிய குத்தமில்ல. “மாஜினி” படத்துக்கும் கூட்டு நம்பர் ராசி எண் 7 கிடைக்கலே. அவசரத்துக்கு டிரைடண்ட் ஓட்டல்ல இதே ஐஞ்சாம் நம்பர்லதான் ரூம் போட்டோம். படமும் மரண மாஸா ஓடிச்சு!

சுயமோகன்: பரவாயில்லை தொல்காப்பியன், அதிர்ஷடம்கிறது நம்பர்ல இல்லே, நம்ம கிரியேட்டிவிட்டியில இருக்குறத அழகா சொன்னீங்க. மகாபாரதத்துலயும் எண்கள், அவைகள் சொல்ற நல்ல காலம், கெட்ட காலத்துக்கு நிறைய தத்துவம் இருக்கு.

சூதாட்டத்துல தோத்த பிறகு பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழவும், ஓர் ஆண்டு யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவும் ஒப்பந்தம் போட்டாங்க. மொத்தம் 14 வருசத்தை முடிச்சுட்டு வந்து கேட்டால், நாட்டையும் செல்வத்தையும்  அவங்களுக்கு தருவதா கௌவரர்கள் அக்ரிமெண்ட் போட்டாங்க.

பாரத மரபுல ராமாயண வனவாசம் 12 வருசம், மகாபாரத வனவாசம் 13, 14 வருசம் இந்த மூன்று எண்களுமே ரொம்ப முக்கியம். வெஸ்டர்ன் கன்ட்ரிஸ்ல பாத்தீங்கன்னா எல்லா ஓட்டலுங்கள்ளேயும் 13-ஆம் நம்பர் அறை இருக்காது. நம்ம நாட்டுலயம் அந்த காலனிய அடிமைத்தனத்தோட விருட்சமாக அதை ஃபாலோ பண்றாங்க. நம்பர் 13-ன்றது கிறிஸ்டியானிட்டி மரபுப்படி சாத்தானோட எண்.

(பிறகு தான் படித்திருந்த விக்கி மேட்டர் திடீரென நினைவுக்கு வர உடனே ஐ ஃபோனில் எடுத்து வாசிக்கிறார்.)

Some believe this is unlucky because one of those thirteen, Judas Iscariot, was the betrayer of Jesus Christ. From the 1890s, a number of English language sources relate the “unlucky” thirteen to an idea that at the Last Supper, Judas, the disciple who betrayed Jesus, was the 13th to sit at the table.

இப்படித்தான் ஏசுவைக் காட்டிக் கொடுத்த துரோகி யூதாஸ் அந்த விருந்து மேசையில 13-ஆவது இடத்துல உக்காராறு. அதான் பின்னாடி செமிட்டிக் மத வரலாற்றுல துரதிர்ஷ்டமான நம்பரா மாத்தீட்டாங்க.

தொல்காப்பியன் மைண்ட் வாய்ஸ்: டைரக்டரை குளிப்பாட்டுறதுக்கு நம்ம குத்தாலத்து துண்டோட வந்தா இந்த ஆள் மெயின் ஃபால்ஸ் அருவியே எடுத்துணு வர்ராறு….

முறுக்குதாஸ்: (சுயமோகனைப் பாத்து) சார், இதே டீடெயிலை நம்ம ஹீரோ கேரக்டருல எடுத்துனு வந்தீங்கன்ன படம் எங்கயோ போகும். அடுத்த புராக்ஜ்ட்ல, சூப்பர் ஸ்டார் சாருக்குதான் நம்ம கால்ஷீட்டு!

ரைட்டர் சார், இப்ப உங்ககிட்ட ஒண்ணு சொல்றேன். நம்ம படத்தோட ஹீரோ சார் 2:30 மணி நேர படத்துக்காக மட்டும் நம்மகிட்ட வர்ல! கால்ஷீட்டும் கொடுக்கல. அவர் மைண்ட ரீட் பண்ண லெவல்ல வெச்சு நான் சொல்றேன். அவரு மைண்டை ரஜினி சாரோட “காலா” படம்தான் டிஸ்டர்ப் பண்ணுது. கபாலியால ஏற்கனவே நம்ம ஹீரோ மெர்சலாயிட்டாரு!.

கபாலி, காலா படத்தால ரஞ்சித்தோட கேரியர் பிரமோட் ஆச்சோ இல்லையோ, சூப்பர் ஸ்டாரோட கேரியர் கோடம்பாக்கத்தலேர்ந்து கோட்டைக்கு தாவிருச்சு! நம்ம ஹீரோ தளபதி சார், அதை கரெக்டா ஸ்மெல் பண்ணிட்டார். அவர் டேஸ்ட்ட கதையில நாமளும் கரெக்டா ஃபாலோ பண்ணனும் சார்!

ஜிப்பா மணி: சரியான இடத்துல ஸ்பீடு பிரேக்க போட்டீங்க டைரக்டர் சார். இல்லேன்னா கதையில கவுந்திட்டிருப்போம் சார். ஹீரோவுக்குன்னு நினைச்சு கோக்கு மாக்கா ஒரு ஒன்லைன்ல சிக்கியிருப்போம். உங்க ’தாட்டு’-ன்றது ரஜினி திங்க் பண்ற லெவல் சார்! விளையாட்டுக்கு சொல்லலை, வரலாற்ற சொல்றேன்!

இருபது வருசத்துக்கு முன்னால ஒரு படம் பண்றதுக்கு சுந்தர் சி-யை கூப்புடுராறு ரஜினி சார்! அவராண்ட ரஜினி சார் ஒரு ஒன்லைன சொல்ராறு! அதான் சார் அருணாச்சலம் படம்! அந்தக் கதை சுந்தர் சி சாருக்கு சுத்தமா புடிக்கல. ஆனா ரஜின சாரண்ட அதக் காமிச்சிக்கல. “கதை சூப்பரோ சூப்பருன்னு” சொல்ராறு! காரணம், ரஜினி சாரப் பத்தி அவருக்கு பஞ்சு அருணாசலம் அண்ணேன் ஏற்கனவே சொல்லியிருக்காறு. சூப்பர் ஸ்டாரு எடுத்த முடிவ யாருக்காகவும் எதுக்காவும் மாத்திக்க மாட்டாறு! அத பிடிக்காதவங்க கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் அவங்க கூட டிராவல் பண்ண மாட்டாறு!

இது சுந்தர் சி சாருக்கு ஞாபகம் வந்து வாய உடாம உசாராணாறு! அதுனால அவர் அந்த படத்துக்கு டைரக்டரு ஆனாரு! அது மட்டுமில்ல, சூப்பர் ஸ்டார் சொன்ன கதைய பாலிஷ் போட்டு அவருக்கு புதுசா திருப்பிக் கொடுத்தாரு! ரஜினி சார் ஏற்கனவே நடிச்ச கதையெல்லாம் ஏழையா இருந்து பணக்காரனா ஆவாரு. இந்தக் கதையில இவர் பணக்காரனா இருந்து, செலவு பண்ணி ஏழையா ஆவாறு! புது ஒன்லைன் சார் இது!

முறுக்குதாஸ்: ரைட்டர் சார், இதான் சினிமா! ஒன்லைனே நம்மள பெரட்டிடும்! நம்மதான் உசாரா ஆவணும்! என்னோட முதல் படம் தீனா – தல சார் படம் 2001-ல வந்தது. இன்னமும் ஃபீல்டுல கிண்ணுண்ணு நிக்கறோம்ல. நாம சொல்லலை, நம்ம ஒர்க் சொல்லுது சார்!

அடுத்து ரமணா படத்துல விஜய்காந்த் சாரோட பொலிட்டிகல் கேரியருக்கு ஒரு டேக் ஆஃப் கொடுத்தோம்! அத வெச்சி புரட்சிக் கலைஞர் கோட்டையில கொடியேத்திருப்பாரு சார், கெடுத்தது அவரோட மச்சான் சதீஸ்!

சுயமோகன்: சரியா சொன்னீங்க சார்! உங்கள மாறி தமிழ் சினிமாவோட தலையெழுத்தை மாத்துன ஜாம்பவான்கள் எல்லாம் சொந்த சுகம், குடும்பம், குழந்தைங்கன்னு போயிருந்தா தமிழ் சினிமா நொடிஞ்சு போயிருக்கும். வாழ்க்கை, கலை வாழ்க்கை இரண்டுலயும் நம்மளோட உறவுகள பாத்து பாலன்ஸ் பண்ணனும் சார்! மகாபாரதம்கிற காவியமே இந்த உறவுச் சிக்கலில் இருந்துதான் வீரிட்டுக் கிளம்பிச்சு!

கீதையில பாத்தீங்கன்னா கிருஷ்ணன் “வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ  அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின் வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், உண்மையில் அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை.

நானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லைன்னு” உறவுகளோட தற்காலிக சாஸ்வதத்தை அழகா விளக்குறார்.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: ஒண்ணுமே புரியலயே. ஒன்லைனுக்குள்ள போறதுக்குள்ள ஃபீல்ட விட்டே போயிருவேன் போலருக்கே!

முறுக்குதாஸ்: நீங்க சொல்றது நீட்டா இருக்கு சார். இதுல இருந்தே பல கதைங்களுக்கு ஒன் லைன பிடிக்கலாம்! ஆனா நம்ம கதையில ஹீரோ மண்ணுலதான் வாழ்றாரு! விண்ணுலகத்துல இருந்து வரல! முதல்ல நாம தரையில நிக்கணும் சார்! தூங்கும் போது கூட காலாட்டிக்கிணே இருக்கணும், இல்லாட்டி பாடை கட்டிருவானுங்க. அதான் சினிமா! உங்களுக்கு தெரியாதது இல்லே!

பல்லவன்:  ரைட்டர் சார்! இப்ப ட்ரண்டுக்கு சினிமா ஹீரோன்னா நம்ம பக்கத்து வீட்டு பையனாட்டம் இருக்கணும். கதைன்னா நம்ம வீட்டுல நடக்குற கதை மாதிரி ஃபீலாகணும்! இப்ப பேசறது உங்க சரக்குதான் சார். நீங்க எழுதாத கதையா? “அறம்” கதைங்கள்ள ஏதாச்சும் ஒன்னை திருப்பிப் போடுங்க சார்!

நம்ம கதை கள்ளவோட்டு கதை. அதால நல்ல ஓட்டு போட்டாலும் நாடு திருந்தாதுங்கிற மேட்டரை எந்தக் காரணத்துக்காகவும் இந்தக் கதைக்குள்ள நாம சொல்லக்கூடாது! இதான் சார் கதையோட அறம்! நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல! இதுல நீங்க லெஜ்ண்டு!

முறுக்குதாஸ்: பிடிச்சிட்டம்பா பல்லவா! இப்ப நீ சொன்னத அதே டோன்ல திரும்பவும் சொல்லு! டக்குணு சொல்லு!

பல்லவன் மைண்ட் வாய்ஸ்: என்னா சொன்னேன், ஒண்ணுமே சொல்லலையே! ரைட்டருக்கு ஒரு பிரேக் போடப் போனா இப்ப கிணத்துல விழுந்த கதையாயிருச்சே!

சுயமோகன்: கத இப்பதான் தெளிவா ஒரு ஸ்படிகம் போல தெரியுது. சபரி நதியை ராமன் கடக்குறப்போ அந்த நதி சான்றோரின் அறிவு போல ஆழமாவும், பளிச்சுனு ஸ்படிகமாவும் ஓடியதுன்னு கம்பர் சொன்னது நம்ம கதைக்கும் பொருந்தும் சார்!

கள்ள ஓட்டை எதிர்க்குது நல்ல ஓட்டு. கோழைத்தனத்தை எதிர்க்குது தைரியம், கெட்டதை எதிர்க்குது நல்லது, வில்லனை எதிர்த்து நாயகன். அந்த எதிர்ப்புக்கு பலமா ஒரு அறத்த செட் பண்ற எல்லா வாய்ப்பும் நம்ம கதையில இருக்கு! இப்டியே கன்டினியூ பண்ணலாம் சார்!

முறுக்குதாஸ்: சூப்பர் சார்! தம்பி செல்லத்த சூடா டிகிரி காஃபிய எடுத்துணு வரச் சொல்லுங்க!

(நல்லவேளை நம்ம தலை தப்பியதென்று செல்லத்தை அழைக்க விரைகிறார் பல்லவன்)

சுயமோகன்: சார், நம்ம ஹீரோ பக்கத்து வீட்டு பையன் மாதிரின்னா லயோலா விசுவல் கம்யூனிகேசன்ல படிக்கிற மாதிரி வெக்கலாமா? என்னோட பையன் ஆஜிதன் இப்போ மணிசாருகிட்டதான் இருக்கான். அங்க லயோலா விசுவல் ஸ்டூன்ஸ் டெய்லி பத்து பேர் வந்து சான்ஸ் கேக்க கார்ல வருவாங்க. அவங்களோட கேரக்டர இழைச்சு செஞ்சுரலாம் சார்!

முறுக்குதாஸ்: சார், நம்ப படத்தோட பட்ஜெட் 150 கோடி! 200 வரைக்கும் அத இழுத்துகிணு போலாம்! ஹீரோவ யூ.எஸ்-ஐயும் தாண்டி எங்க தேடலாம்ணு யோசிக்கிறேன். ஆனா இப்போதைக்கு அமெரிக்காவ தவிர வேற பெட்டரான எடம் தெரியல. அங்க இருந்து வாரார் சார் ஹீரோ! ஓட்டுப் போடறதுக்கு மட்டும்தான் வராறு! ஓபனிங்கிலேயே ஒரு டிவிஸ்ட்ட போட்டு அங்கயே கட் பண்றோம்.

ஹீரோ தரை இறங்குற ஃபிளைட்டோட சவுண்ட் பேக்ரவுண்டுல கேக்குது. அப்போ மும்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூரு எல்லா சிட்டியிலயும் கார்ப்பரேட் கம்பெனிங்க அர்ஜண்ட் மீட்டிங்க போடுறாங்க!

சுயமோகன்: (குறுக்கிட்டு) சார், அவரை நானோ டெக்னாலாஜியில நோபல் பரிசு வாங்குற நாமினேஷன்ல இருக்குறாரு. அப்டியே உலகம் வியக்குற ஒரு டேட்டா சயிண்டிஸ்ட்டா காமிக்கலாமா?

பீட்டர்: ரைட்டர் சார், அல்ரெடி ஷங்கர் சார் இதே காரக்டரை காட்டிட்டாறு. எந்திரன்ல ரஜினி சார், ரோபா சயிண்டிஸ்ட்டா வராறு.  நம்ம தளபதி சார, நோபல் சயிண்டிஸ்ட்டா போட்டா ஏஜ் செட்டாகாது! அவருக்கு யூத் கெட்டப்புதான் செட்டாகும்.

தொல்காப்பியன்: டைரக்டர் சார், சி.ஐ.ஏ படைக்கு கமாண்டோ பயிற்சி கொடுக்கிற பெரிய கமாண்டோவோ காட்லாமா? யூத்துக்கு யூத்து, பிரெயினுக்கு பிரெய்னுன்னு, எல்லாத்தையும் கட் ஷாட்ல கொண்டாந்துரலாம்.

ஜிப்பா மணி: ஏம்பா தொல்லு, சி.ஐ.ஏ கமாண்டோ என்னா ஜிப்பா போட்டுக்கினா வருவாறு? சிக்ஸ் பேக் பாடி, ஆறடி உயரம் வேணாமா? நம்ம ஹீரோவை, காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரித்தான் ஏத்துக்குவாங்க!

(அந்நேரத்தில் உதவியாளர் செல்லம் உள்ளே வந்து டிகிரி காஃபி கோப்பைகளை வைக்கிறார்.)

முறுக்குதாஸ்: இல்லப்பா மணி, இதெல்லாம் பல ஜானர்ல பாத்துட்டோம். இன்னும் புதுசா வேணும்பா! இங்க எல்லா சிட்டியிலயும் கார்ப்பரேட்காரங்க, மீட்டிங்கில என்ன பேசுவாங்க! ஹீரோவ பாராட்டியா, புகழ்ந்தா, இல்லே அவர வரவேற்கிறதுக்கா? அந்த இடத்துல ட்ரீட்மெண்ட் என்ன?

(உதவி இயக்குநர்கள் நால்வரும், சுயமோகனும் எது சொன்னால் சரியாக இருக்குமென்று மோட்டு வளையைப் பார்க்க நிமிர்ந்தனர். பிறகுதான் அனைவருக்கும் நாம் இருப்பது ஒரு நட்சத்திர விடுதியென்பது தெரிய வந்தது. இயக்குநர் கேட்ட கேள்விக்கு யார் முதலில் சரியாகச் சொல்வது என்ற போட்டிக்கான அவஸ்தை தொடர்ந்தது)

முறுக்குதாஸ்: இது எப்டின்னு பாருங்க. அமெரிக்காவுலேர்ந்து வர்ற நம்ம ஹீரோவப் பாத்து எல்லாரும் பயப்படறாங்க! டெரர்ராவுறாங்க! என்ன நடக்குமோன்னு த்ரில்லாவுறாங்க!

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: வர்றது ஹீரோவா, வில்லனா? ரொம்ப கன்பியூஸ் பண்றாரே! இருந்தாலும் டைரக்டர் என்னமோ முடிவு பண்ணிருக்காரு! நமக்குதான் சிக்க மாட்டேங்குது.

சுயமோகன்:  சார், நீங்க சொல்லும் போதே ஒவ்வொரு ஃபிரேமும் த்ரில்லா இருக்கு. உண்மையிலேயே ப்ளைட்ல வர்றது ஹீரோவா, வில்லனான்னு இன்னம் எனக்கு தெளிவு வரலை சார்! உங்ககிட்ட நான் உண்மைய சொல்றதுல வெட்கப்படறதுக்கு என்ன இருக்கு!

முறுக்குதாஸ்: சார், நம்ம ஹீரோ கார்ப்பரேட்டையே காலி பண்ற ஒரு கார்ப்பரேட் கில்லாடி. யாரும் நினைச்சுப் பாத்துராத மண்ட! அவன் மூளையைச் சொல்றேன் சார்!

சுயமோகன்: இப்ப புரியுது சார், பிடிச்சுட்டேன் சார்! லைஃப் ஜாக்கெட்டயும் கொடுத்து கடல்ல தள்ளி விடுறீங்க! கில்லாடி சார் நீங்க! என்னோட குரு நித்ய சைதன்ய யதியும் இப்படித்தான் மனவெளி புரளுகின்ற அத்துவானக் காட்டுல தள்ளிவிட்டு பனித்துளியில பிரம்ம ரகசியத்தை பாக்குற டெக்னிக்கை சொல்லிக் கொடுப்பாறு! கலை வேறயா இருந்தாலும் நீங்களும் சிலையை ஆழமா செதுக்குறீங்க சார்!

பீட்டர்: அப்புறம் என்ன சார், எல்லா சிட்டியிலயும் எம்.பி.ஏ பிசினஸ் படிக்கிற ஸ்டூடன்ஸ் பேசிக்கிற மாதிரி டயலாக்க கடகடன்னு எழுதிடுவீங்க!

சுயமோகன்: ஆமாமா, ஏற்கனவே மனசுல எழுதிட்டேன். பெங்களூரு ஐ.ஐ.எம்.-ல ஒரு புரபசர் நம்ம ஹீரோவோட கார்ப்பரேட் சாதனைகளை ஸ்டூடன்சுகிட்ட பேசுறாரு. மும்பையில நம்ம ஹீரோவ ஃபாலோ பண்ற ஸ்டூடன்சுக்கு ஒரு அசைன்ட்மெண்ட்டே கொடுக்கிறாங்க. ஹைதராபாத்துல ஒரு சீமாட்டி ஹீரோ காலி செஞ்ச போட்டி பிராண்டுகளோட கதையை சொல்றாங்க… இப்படியே போயிடலாம் சார்.

(அப்போது ஃபோனோடு முறுக்குதாஸின் உதவியாளர் ஜகன் வருகிறார்)

ஜகன்: அமீர்கான் சார் கூப்புடுராறு சார்! ஏற்கனவே ரெண்டு வாட்டி பேசுனாறு. நீங்க பிசின்னு நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணல! ஹீரோ (தளபதி) சாரோட நீங்க புதுசா படம் பண்றீங்களாம், அதைப் பத்தி உடனே பேசணும்கிறார்!

முறுக்குதாஸ்: (சுயமோகனைப் பார்த்து) பாருங்க சார், இப்பதான் கதை ஓபனிங்க பிடிச்சோம். அதுக்குள்ள பாலிவுட்லேர்ந்து ரைட்ஸ் கேட்டு ஃபோன்!… பிரச்சினையே இதான் சார்! இந்த அன்புத் தொல்லதான் நம்மள நிக்காம உழைச்சுக்கிட்டே இருக்கச் சொல்லது!

ரைட்டர் சார், நீங்க என்ன மாதிரியே சிந்திக்கிறீங்க. நீங்க ஒரு இலக்கியவாதின்னு மணி சார் சொன்னப்ப நான் கொஞ்சம் பயந்தேன். இப்பதான் தெரியுது. எதுல ஊத்துனாலும் தண்ணி மாறி அந்த ஷேப்புக்கு கரெக்டா அடாப்ட் ஆகிக்கிறீங்க. எனக்கு கதை பிரச்சன வுட்டுது. இந்த ஓபனீங்க நாலு சீனா டெவலப் பண்றீங்க! வழக்கமான கதை ஸ்ட்ரெக்சர் உங்களுக்குத் தெரியும். இதுல முதல் பிளாட் என்னானு நான் யோசனை பண்ணி வெச்சிருக்கேன். அமீர் சார் விசயத்தை பாத்துட்டு சீக்கிரம் உங்களோட ஜாயிண்ட் பண்றேன்.

(முறுக்குதாஸ் உதவியாளருடன் அவசரமாக வெளியே செல்கிறார்.)

காட்சி முடிகிறது.

காட்சி 9 – கண்ணீர் ஊற்றுப்படலம்

இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதியோடு இணைந்திருக்கும் வங்க கடற்கரை
நேரம்: இரவு 10: 45 மணி

நான்கு உதவி இயக்குநர்களும் சுயமோகனும் மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் ஒரு பழக்கூடை இருக்கிறது.

பீட்டர்: ரைட்டர் சார், டைரக்டர் சார் அடுத்த சீன்ல, ஹீரோ எந்த பூத்துல ஓட்டு போடுறாருன்னு அந்த லொகேசன டீடெய்ல் பண்ணச் சொல்லிருக்கார். கார்ப்பரேட் சி.இ.ஓ-ங்கிறதால நாம அண்ணா நகர், அடையாறு, சாந்தோம், ஆழ்வார்பேட்டன்னு யோசிக்கலாமா?

தொல்காப்பியன்: பீட்டர், இது ஹீரோயின் அறிமுகம் இல்லை. ஹீரோ இன்ட்ரடக்சன். அதுவும் கார்ப்பரேட் கம்பெனிகளே பயந்து நடுங்குற ஒரு ஹீரோ. அவரை ஹை கிளாஸ் மக்கள் கொண்டாடுனாலும், ஆக்சுவலா அவரோட வேரப் பாத்தீங்கன்னா பக்கா லோ கிளாஸ். அது படிச்சவங்களும், பாமர மக்களும் மீட் பண்ற பாயிண்டா இருந்தா நல்லதுப்பா!

சுயமோகன்: அந்த இடம் ஹிஸ்டாரிக்கலாவும் இருந்தா கேரக்டர் கனம் கூடுமில்லையா?

ஜிப்பா மணி: சார் பின்னிட்டீங்க. லொகேஷனயே கேரக்டரா மாத்துறீங்க! நாங்க பரங்கிமலையில பத்துப்படி ஏறதுக்குள்ள எங்களுக்கு மூச்சு வாங்குது. நிமிந்து பாத்தா நீங்க எவரெஸ்ட்டுல அசால்ட்டா நிக்கிறீங்க!

சுயமோகன்: (மகிழ்ச்சியான படைப்பு அவஸ்தை + நிம்மதியான பெருமூச்சுடன் நிதானமாக பேச ஆரம்பிக்கிறார்) அது வந்து பாத்தீங்கண்ணா “கருப்பு யானை” நாவல் எழுதுறப்பவே மெட்ராசோட ஹிஸ்டரியை ஜீரணிச்சிட்டேன். சென்னை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளிதான் சார் நம்ம ஹீரோ வோட்டுப் போடற பூத். அந்த ஸ்கூலுக்கு அப்படி என்ன சிறப்புன்னு கேக்கிறீங்களா?

“கருப்பு யானை” நாவல் ராயப்பேட்டை பிரஸ்ல பிரிண்ட் ஆயிகிட்டிருந்துச்சு. அதோட மை காயறதுக்குள்ள ஆழ்வார்பேட்டையில இருக்குற கமல் சார் வாங்கி படிச்சிருக்கார். இதை அவரோட 59-வது பிறந்த நாள் பார்ட்டியில எங்கிட்ட சொன்னாரு. அவரே படிச்ச ஸ்கூலு சார் அது.

அவரு மட்டுமா கர்நாட சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியம், நோபல் பரிசு சந்திரசேகர், பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் இவங்கெல்லாம் நடமாடுன குருகுலம் சார் அது.

பீட்டர்: சார் என்ன சொன்னாலும் இந்த ஸ்கூலும் இன்னொரு ஆழ்வார்பேட்டை மாறியே ஃபீலாகுது!

பல்லவன்: பீட்டர் அந்த ஸ்கூலுக்கு வர பசங்களப் பாத்தீங்கண்ணா, அயோத்யா குப்பம், மாட்டான் குப்பம், ஜாம் பஜார், ஐஸ் ஹவுஸ் எல்லாம் தரை ரேட்டுப்பா!

சுயமோகன்: (மகிழ்ச்சியோடு மெல்லிய புன்னகையுடன்) பல்லவன், “கருப்பு யானையை” அட்டை டூ அட்டை படிச்சிருக்கீங்க! நாவலோட பிளாட்டே திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ்தான். ஆனா முக்கியமான ஒன்ன எல்லாரும்  மிஸ் பண்றீங்க!

நம்ம தேசியக் கவி பாரதியாரு, லாவண்யான்னு ஒரு யானை அடிச்சு செத்துப் போனாரு. அந்த புண்ணிய பூமிதான் திருவல்லிக்கேணி.

ஜிப்பா மணி: சார், திருவல்லிக்கேணின்னா எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பாய் கடை  பீஃப் பிரியாணிதான். அந்த பிளேட்டுக்கு வெளிய எங்க பார்வை போனதே இல்ல சார்!

தொல்காப்பியன்: ரைட்டர் சார், நீங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க. இந்த ஹீரோ அறிமுக பிளாகை நீங்க ஊதித் தள்ளிருவீங்க! நாம, டைரக்டர் சாருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் சார்! ஓட்டுப் போட வந்த ஹீரோ, ஒரு கள்ள ஓட்டுதான….. அப்டீன்னு போகமா பயங்கரமா கோபப்படுறாரு. அந்த கோபத்தை ஸ்ட்ராங்கா நாம ஜஸ்டிபைஃ பண்ணனும் சார்!

பல்லவன்: ஆடியன்ஸ் கதறணும் சார்! இந்த அரசியல்வாதிங்கள விடக்குடாதுன்னு ஹீரோவப் பாத்து ஆடியன்சு கத்தணும் சார்! அதுக்கு வெயிட்டா ஒரு சீன் பிடிங்க சார்!

சுயமோகன்: அப்டியா, யோசிப்போம். இப்போ ஒரு வருசத்துக்குள்ள தமிழ் மனங்கள ஆழமா பாதிச்ச சம்பவங்கள்னு பாத்தா நிறைய இருக்கு! என்னோட அணுக்கமான வாசகருங்க கடலூர் சீனி, கோவை அரங்கப்பன் சொன்னத வெச்சுப் பாத்தா தூத்துக்கடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்ல ஒரு பெண்ணோட வாயில சுட்டாங்களே அதை சீனா வெச்சுரலாமா?

பீட்டர்: வெச்சுக்கலாம் சார். பட், தேவையில்லாம நம்ம மேல ஒரு பிளாக் மார்க் விழுந்துரும். அர்பன் நக்சலைட்டுங்கள ஆதரிக்கிறோம்னு சொல்லிடுவாங்க. ஆடியன்சு கதறணும், ஆனா அதுக்கு காரணத்த நாம சொல்லக் கூடாது. இவன்தான்னு நாம யாரையும் பழி போடக் கூடாது. அதுல நாம உசாரா இருக்கணும். ஆடியன்சுக்கு அவங்க மேலேயே கோபம் வரணும்! அதான் சார் கதையில நமக்கும் பிசினசுக்கும் பாதுகாப்பான ஏரியா!   

சுயமோகன்: சரி, அப்டின்னா ஒண்ணு பண்ணாலம். திருநெல்வேலி கலெக்டர் ஆபீசுல தீக்குளிச்ச இசக்கி முத்து ஃபேமிலி கதையை அப்டியே சென்னைக்கு மாத்திருவோம். அந்தக் கதைய ஹீரோவோட டிரைவர் சொல்ற மாறி வெச்சுரலாம். கதையைக் கேட்டு ஹீரோ ஷாக் ஆகுறார். இதுக்கு மக்கள் அப்போ என்ன பண்ணாங்க்கன்னு கேக்குறார். எல்லாரும் இந்த நியூச வாட்ஸ்ப்புல ஃபார்வர்டு பண்ணாங்க, வேற ஒண்ணும் பண்ணலேன்னு டிரைவர் சொல்றதா முடிச்சிடலாம்.

ஜிப்பா மணி: இப்ப பாத்து டைரக்டர் சார் இல்லையே சார். இருந்தா உங்களை தூக்கி கொண்டாடுவாரு சார். இந்த டர்னிங் பாயிண்டில கதை  மேல போயிடும் சார். மணி 1.30 ஆவுது. நாங்கதான் ராக்கோழி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க சார்!

சுயமோகன்: நானாவாது படுக்குறதாவது! இனிமேதான் என்னோட தாய் வீட்டுக்கு போவணும். இலக்கியப் பணி தலைக்கு மேல இருக்கு.

(லேசான சோர்வுடன் சுயமோகன் படுக்கை அறைக்கு திரும்புகிறார்)

ஜிப்பா மணி: புரடெக்சன் செல்லம், மத்தியானமே எங்கிட்ட தனியா சொன்னான். ஏதோ மீதி அரை பாட்டில் ஃபாரின் சரக்கு இருக்காம். அதையாவது ஓபன் பண்லாம்.

தொல்காப்பியன்:  ரைட்டர் சார் சொன்ன கந்துவட்டி சீன் லைன் ஓக்கேதான். ஆனா ஹீரோ அமெரிக்காவுல இருந்து 15,000 கி.மீட்டர் பறந்து ஓட்டுப் போடறதுக்கு வராறாம். வரவருக்கு இசக்கிமுத்து செத்த கதைய அவர் டிரைவருதான் சொல்வாராம். ஏன் ஜனங்க இதுக்கு கொதிக்கலேன்னு ஹீரோ கேப்பாராம்,. வாட்ஸ் அப்லயே கொதிச்சிட்டாங்கன்னு டிரைவரு சொல்வராம். உடனே ஹீரோ ஃபீல் பண்ணுவாராம்.

சரி, இந்த ஹீரோ சார் மட்டும் அமெரிக்காவுல அப்ப என்ன புடுங்குனாருன்னு டிரைவரு ஃபீல் பண்ண மாட்டாரா?

காட்சி முடிகிறது

(தொடரும்)

  • தம்பி அழகு மதி – காளமேகம் அண்ணாச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க