தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ

சவுமியாவின் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.

ருமபுரி மாவட்டம் சிட்லிங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சவுமியா. அருகில் உள்ள நகரில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 5 அன்று தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். மாலையில் சிறுநீர் கழிக்க அருகில் உள்ள மறைவிடப் பகுதிக்கு சென்ற சவுமியாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ் என்ற இருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சிதைத்து கொல்லப்பட்ட சவுமியா.

சவுமியா வெளியில் சென்று வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டு மூச்சுத்திணறிக் கொண்டிருந்த சவுமியாவை உடனடியாக துணி கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர், நடந்த விவகாரத்தைக் கேட்டு குற்றவாளி சதீஷை பிடித்து சவுமியாவின் அண்ணன் விசாரித்த போது, சதீஷ் தனது நண்பர்கள் உறவினர்களை வரவழைத்து சவுமியாவின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின்னர் சவுமியா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

ஆனால், புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தது போலீசு. பாதிக்கப்பட்ட பெண்ணே வந்து புகாரளிக்க வேண்டும் எனக் கூறியது. சட்டப்படி, பாலியல் வன்முறையைப் பொருத்தவரையில் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண் வரவேண்டும் என அவசியம் இல்லை. அப்பெண்ணின் சார்பாக புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கும், அப்பெண் இருக்கும் இடத்திற்கும் ஒரு பெண் போலீசு அதிகாரி சென்று விசாரணை நடத்த வேண்டும், இதுதான் விதிமுறை. ஆனால், அதனை செய்யாமல் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வா என அலைக்கழித்திருக்கிறது போலீசு.

போலீசு சட்டம் தெரியாததும் அல்ல. குற்றவாளி ரமேஷ் குடும்பத்தின் கள்ளச்சாராய வியாபாரத்தின் மூலம் வரும் வருமானம் குறித்தும் அறியாததும் அல்ல. சவுமியா நேரில் சென்று அங்கு புகார் பதிவு செய்துள்ளார். புகார் பதிவு செய்யும் போது உடன் அவருடன் யாரையும் அனுமதிக்கவில்லை.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்து சவுமியாவிடம் விசாரிக்க வந்த பெண் போலீசு, சவுமியாவின் வீட்டிற்குள் விசாரிக்கையில் சவுமியாவின் குடும்பத்தினர் யாரையும் விசாரணையின் போது உள்ளிருக்க அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க கிரிமினல்தனமாக சட்டத்தை மீறியிருக்கிறது போலீசு.

அதன் பின்னர் நவம்பர் 7-ஆம் தேதி அரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோம் என சவுமியாவை அழைத்துச் சென்று காப்பகத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  அங்கும் அவரது தாயாரை அருகில் கூட இருக்க அனுமதிக்கவில்லை. போலீசே சவுமியாவின் பெற்றோரை பேருந்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் பின்னரும் குற்றவாளிகளைத் தண்டிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாலியல் வன்முறை சம்பவம் நடந்த இடத்திலிருந்த தடயங்களைக் கூட எடுக்கவில்லை.

இந்நிலையில், சவுமியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளதாகவும் போலீசு தரப்பிலிருந்து தகவல் வருகிறது. உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர்களும் அலட்சியமாகவே சிகிச்சை அளித்துள்ளனர். பாலியல் வல்லுறவு காரணமாக ஏற்பட்ட இரத்த இழப்பு அவரது உடல்நிலை மோசமடையக் காரணம் என்று கூறப்பட்டது. அதற்கு உரிய மருத்துவம் அளிக்காமல், சவுமியாவிற்கு தூக்க மாத்திரை மட்டுமே மருத்துவர்கள் கொடுத்தனர் என்கிறார் சவுமியாவின் அக்கா.

கொலைகார கிரிமினல்கள்.

கடந்த சனிக்கிழமை (10-11-2018) அன்று காலையில் சிகிச்சை முறையாக கொடுக்கப்படாததன் காரணமாக சவுமியா மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்களும் சவுமியாவின் உறவினர்களும் போலீசின் அயோக்கியத்தனத்தையும், மருத்துவர்களின் அலட்சியப் போக்கையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு துணை போன போலீசு மற்றும் மோசமான சிகிச்சை அளித்த மருத்துவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போதைக்கு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாகவும், 48 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்வதாகவும் கூறி மாணவியின் உடலை வாங்கச் செய்தது மாவட்ட நிர்வாகம்.

மக்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் இச்செய்தி மைய ஊடகங்களில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினையின் உண்மையான நிலை வெளிவரக் கூடாது என்பதை மனதில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் சவுமியாவின் குடும்பத்தினரிடம், ஒரு கோடி நிவாரணப் பணம் பெற்றுத் தருவதாகவும், இச்சம்பவம் குறித்து மீடியாக்களிடமும், விசாரிக்கும் யாரிடமும் எதுவும் பேசக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

பல்வேறு பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பான, வன்முறைக்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்கள் 12 பேரும்  ஆண் தோழர்கள் 2 பேரும், ஒரு பள்ளிக் குழந்தை என மொத்தம் 15 பேர், இது குறித்து விசாரிக்கவும், மரணமடைந்த மாணவி சவுமியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் அங்கு கடந்த நவம்பர் 13 அன்று சென்றுள்ளனர்.

நவம்பர் 13 அன்று அ.தி.மு.க. அமைச்சர் அன்பழகன், வரவிருந்ததை ஒட்டி, சவுமியாவின் வீட்டில் முன்னமே வந்திறங்கியிருந்த அ.தி.மு.க. அல்லக்கைகள், சவுமியாவின் குடும்பத்தாரை பெண் தோழர்களிடம் எதுவும் கூறக்கூடாது என மிரட்டியிருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் வரும் நேரம் நெருங்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசு படைகளைக் குவித்து சந்திக்கச் சென்ற பெண் தோழர்களை உடனடியாக அங்கிருந்து கிளம்பக் கூறி வலியுறுத்தியது போலீசு.

போலீசோடு வாக்குவாதம் செய்தும் பலனற்ற நிலையில், பாலியல் வன்முறை சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட பெண்கள் கூட்டமைப்பினர் சென்றிருக்கின்றனர். சுமார் 100 பேர் கொண்ட குண்டாந்தடி போலீசு கும்பல் ஒன்று அவர்களை சுற்றி வளைத்து அப்பகுதியிலிருந்து அவர்களை வெளியேறுமாறு நிர்பந்தித்தது. அவர்களை போலீசு வாகனத்தில் ஏறுமாறு மிரட்டியது.

தடயத்தைக் கூட இன்னும் சேகரிக்கவில்லை போலீசு.

அதனை மறுத்து தாங்கள் வந்த வாகனத்திலேயே திரும்பினர் பெண் தோழர்கள். அவர்களது பாதுகாப்பிற்காக வருவதாகக் கூறி அவர்களது வாகனத்திற்கு முன்னும் பின்னும் போலீசு வாகனங்கள் புடைசூழ அழைத்து வந்தது. இடையே திருநங்கையர் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்லவேண்டும் எனக் கூறியபோது, போலீசாரும் உடன் வருவார்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் கூறி கெடுபிடி செய்திருக்கிறது போலீசு.

அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் அரூர் சி-1 போலீசு நிலையத்தில் இருக்கவைத்தது. தனது தாயுடன் இந்தக் குழுவில் உடன் வந்த பள்ளி மாணவி நேயாவிற்கு உடல் பிரச்சினைக்கு மருத்துவம் எடுக்க வேண்டிய சூழலை அவரது தாயார் எடுத்துக் கூறியும் அதற்கு அனுமதிக்க மறுத்துள்ளது போலீசு. இத்தனைக்கும் மாணவி நேயா தலைவலி தொடங்கி அழ ஆரம்பித்திருக்கிறார். அச்சூழலிலும் மருத்துவமனைக்கு அனுமதிக்க மறுத்துள்ளது போலீசு காட்டுமிராண்டிக் கும்பல்.

அதன் பின்னர், மாலையில் 4 பேர் மீது மட்டும் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் சட்டவிரோதமாகக் கூடுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்துள்ளது போலீசு. கைது செய்தால் அனைவரையும் கைது செய், இல்லையேல் அனைவரையும் விடுதலை செய் என பெண் தோழர்கள் அனைவரும் கூறியிருக்கின்றனர். ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல் மற்றவர்கள் அனைவரையும் தனி வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள நகர்ப்பகுதியில் இறக்கி விட்டுள்ளது போலீசு.

கைது செய்யப்பட்டு ரிமாண்டு செய்யப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு.

தோழர் வளர்மதி – பொது நல மாணவர் எழுச்சி இயக்கம்.
தோழர் மகாலெட்சுமி – பெண்கள் எழுச்சி இயக்கம்.
தோழர் ராமகிருஷ்ணன் – வங்கி அலுவலர்.
தோழர் வேடியப்பன் – சமூக ஆர்வலர்.

மாணவி சவுமியா படுகொலையில் முதல் குற்றவாளி போலீசு, இரண்டாவது குற்றவாளியாக இருப்பது மருத்துவமனை நிர்வாகம் என குற்றம்சாட்டுகின்றனர், உண்மையறியும் குழுவினர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர், அதுகுறித்து புகார் கொடுக்கப்பட்ட போது உடனடியாக ஏற்க மறுத்திருக்கிறது போலீசு. அதன் பின்னர் உயரதிகாரிகளைப் பார்த்து மனுகொடுக்கப் போகிறோம் என சவுமியா குடும்பத்தினர் சொன்ன பிறகுதான் வழக்குப் பதிவு செய்துள்ளது. மாணவி என்ற வகையில் இந்த வழக்கை போக்சோ பிரிவின் கீழ் முதலில் பதிவு செய்யவில்லை. நெருக்கடி கொடுக்கப்பட்ட பிறகே பதிவு செய்துள்ளது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட போதே கடுமையான உதிரப் போக்குக்கு ஆளான சவுமியா உடல் நலமில்லாத நிலையில் இருந்த போதும், மருத்துவமனையில் அனுமதிப்பதற்குப் பதிலாக அருகில் உள்ள அரசு காப்பகத்தில் அவரை ஒரு நாள் வைத்துள்ளது.

வினவு செய்திப் பிரிவு

அங்கும் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீசு. மருத்துவமனை நிர்வாகம் மாணவி சவுமியாவிற்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தூக்க மாத்திரை கொடுத்துள்ளது. முறையாக மருத்துவர் வந்து பார்க்கவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் மாணவி சவுமியா கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்தப் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.

#JusticeForSowmiya

தொடர்புடைய பதிவு:

அரியலூர் நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க