வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம்!

 நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட- சிறுபான்மையினர், தலித்துகள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், புரட்சிகர போராளிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் மோடி அரசு நிகழ்த்தி வரும் பாசிச தாக்குதல்களை அம்பலப்படுத்தி,  “வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க….. ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” இந்தியா முழுவதும் ஐந்து முனைகளிலிருந்து நடந்து வருகிறது.

தமிழகத்தில் செப்-22 கன்யாகுமரியில் தொடங்கி செப்-25 வரை சென்னையிலும், தொடர்ச்சியாக அக்டோபர் 13 வரை பயணித்து டெல்லியில் நிறைவுறுகிறது.  இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது என்பதே. அந்த அடிப்படையில் தமிழகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் சங்கம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இருபத்தி ஐந்து அமைப்புகள் இந்தக் கூட்டமைப்பில் பங்கெடுத்துள்ளன.

தமிழக பயணத்தின் இறுதி நாளான செப் 25-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்தினம் ஆடிட்டோரியத்தில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முதல் நிகழ்ச்சி இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவருக்காக உருவாக்கப்பட்ட பாடல் ஒலிபரப்புடன் இந்நிகழ்ச்சியை பேராசிரியர் கல்பனா தொகுத்து வழங்கினார்.

அவருடையை அறிமுகவுரையில், “பெண்களின்  இந்தப் பிரச்சார பயணம் வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு பயணமாக அமைந்துள்ளது. இன்று நமது அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தை காக்க, அமைதியை நிலைநாட்டுவதற்காக,  வன்முறை இல்லாத  ஒரு இந்தியாவை, சாதி வெறி, மதவெறி, வர்க்க ரீதியான வன்முறைகள் இல்லாத இந்தியாவை படைப்பதற்காக பெண்கள் நாடெங்கும் போர்க்களத்தில் இறங்கியிருக்கிறோம்.  இந்தியாவின் ஐந்து முனைகளில், தமிழ்நாடு,கேரளா,ஜம்மு காஷ்மீர், அசாம், டில்லியிலிருந்து  பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய இப்பிரச்சார பயணம்,  செப்டம்பர் 22-ம்தேதி தொடங்கி  அக்டோபர் 13 தேதி டெல்லியில் சங்கமிக்க உள்ளனர்.  நாடு தழுவிய இந்த இயக்கத்தில் சுமார் ஐநூறு இயக்கங்களும், பெண்களும் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கல்பனா.

அடிப்படை உரிமைகளுக்காக போராட பெண்கள் களத்தில் இறங்கிவிட்டால் வெற்றி நிச்சயம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  இதை நான் எந்த அடிப்படையில்  சொல்லுகிறேன் என்றால், ‘இங்கிலாந்தின் க்ரீன்ஹாம் காமன் என்று சொல்லக்கூடிய பகுதியில் இங்கிலாந்து அரசு அணு ஆயுதங்களை குவித்தது. இது நடந்த பிறகு  1981 லிருந்து 2001  வரை கிட்டதட்ட  19 ஆண்டுகள் அந்த இடத்தில் பெண்கள் அமைதி முகம் அமைத்து குவிந்தனர்.  “இந்த அணு ஆயுதங்கள் எங்களுக்கு வேண்டாம். நமது நாட்டுக்கு தேவை இல்லை.  எங்களுக்கு தேவை அமைதி. வளர்ச்சி.  சமாதானம்.  நாங்கள் தான் எங்கள் உயிரை கொடுக்கின்றோம்.  எனவே எங்கள் குழந்தைகளுக்கு வருங்காலம் வேண்டுமென்றால் அணு  ஆயுதங்கள் இருக்கக் கூடாது” என்று சொல்லி க்ரீன்ஹாம் காமன்  என்னும் அந்த மிலிட்டரி பேஸில் கிட்டதட்ட 3,00,000 பெண்கள் சூழ்ந்து கைகோர்த்து இரவிலும் தங்கி போராடினார்கள்.

அடுத்து, 1977  அர்ஜண்டினாவில் ராணுவ சர்வாதிகார அரசு ஒன்று வந்த போது அந்நாட்டின் பல இளைஞர்கள் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டு, பல சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.   அப்போது அந்த நாட்டின் சராசரி பெண்கள்  “பிரிடென்ஷியல் பேலஸ்” முன்னால் ஒவ்வொரு வாரமும் கூடினார்கள். 77 லிருந்து 83 வரை  “எங்கே எங்கள் குழந்தை” என்று கேள்வி எழுப்பினார்கள்.

(பிரச்சார பயணத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்ளே முழக்கமிட்டவாறு வருகின்றனர்)

இதன் பிறகு தான் உலகிற்கு அந்த மனித உரிமை மீறல் தெரிந்தது. இந்த போராட்டம் தான் அரசு பதில் சொல்லும் கடமைக்கு ஆட்பட்டது. அவர்கள் ’தாய்’ என்னும் அடையாளத்தை முன்வைத்து,  அரசியல்படுத்தி ஒரு சர்வாதிகார அரசை வீழ்த்தினார்கள்.

அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில், தஞ்சம் மனோரமா 2004-ல் அஸ்ஸாம் ரைபிள்ஸ்… ராணுவத்தினரால் சிதைக்கப்பட்டு வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் பன்னிரண்டு  பெண்கள்,  இந்திய ராணுவ அலுவலகம் முன்பு கூடி ”இந்திய ராணுவமே எங்களையும் கற்பழி” என்று போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகே இந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது.

இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூர் பெண்கள் போராட்டம்

எனவே நமது முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வீரவணக்கம் சொல்கிறோம். தாய்மை என்ற அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றியவர்கள் பெண்கள்.

‘தாய்மை தான் உன் அடையாளம் என்று இந்த சமூகம் பெண்களை பார்த்தது சொல்லும்போது  அந்த அடையாளத்தையே போருக்கான ஆயுதமாக  மாற்றியவர்கள் நம் பெண்கள்’ என்பதை மறந்து விடக்கூடாது.  உடலை வைத்துதான் உன்னை தாக்குவோம் என்று சொல்லும்போது தன் உடலையே  ஒரு போராயுதமாக மாற்றிய பெண்களை நாம் மறந்து விடக் கூடாது.

இந்த வீர ஆவேசத்துடன் அமைதிக்கான உரையாடல்களை நடத்துவோம். ஜனநாயகத்தை பாதுகாப்போம். வன்முறை இல்லாத இந்தியாவை படைப்போம்.  அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்காக போராடுவோம்” என்று சொல்லி அறிமுக உரையை முடித்தார்.

அதனைத்தொடர்ந்து “புத்தர் கலைக் குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி” நடைபெற்றது.

முனைவர் வசந்தி தேவி அவர்களின் தலைமையுரையில்  “இன்று நம்பிக்கைகள் எல்லாம் நசிந்து போய்க் கொண்டிருக்கின்ற ஒரு காலத்திலேயே  பெண்களுடைய எழுச்சி, இருள் சூழ்ந்த நேரத்திலேயே ஒரு ஒளிக்கற்றையாக இருக்கிறது. இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கின்ற அபாயத்திற்கு இந்த படைதான் முன்னிற்க வேண்டும்.

மத்தியிலே இருக்கும் அரசும்,  அதை  சார்ந்து இருக்கின்ற சித்தாந்தமும்,  இந்துத்துவ வெறித்தனங்களும் இன்றைக்கு நாட்டையே சூறையாடிக்கொண்டிருக்கின்றன.   இதிலிருந்து நாம் எப்படி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற போகின்றோம் என்ற மிகப்பெரிய கேள்வி நம் முன்னால் இருக்கிறது.

முனைவர் வசந்தி தேவி.

பாசிசத்தின் கொடிய பிடியில் இந்தியா இருக்கிறது.  எங்கு பார்த்தாலும் வன்முறை. ஒன்று அரசு பயங்கர வாதத்தின் வன்முறை. மற்றொன்று அதன் துணையோடு நடந்து கொண்டிருக்கின்ற கும்பல்களின் வன்முறை.  இதற்கு பலியாகின்றவர்கள் எல்லாம் நாட்டின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள். தலித், முசுலீம் தான்.

பல ஆண்டுகள் போராட்டத்திகிற்கு பிறகு கிடைத்த அரசியல் சாசன உரிமைகள் எல்லாம் நசுக்கக்கப்பட்டு வருகின்றன.  பயங்கரமான கருப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் இவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக நடக்கிறது. தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது. போலீசின் அராஜகம் நடந்து வருகிறது.

மத்தியிலேயே இருக்கும் அரசுக்கு ஆட்சியை பிடிக்க ஒரே வழி  வன்முறையை தூண்டுவது.  மக்களை பிரித்து ஆள்வது, எதிரெதிர் அணியை உருவாக்கி வருகிறது.

வியாபாரிகள், விவசாயிகள் எல்லாம் வீழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பயங்கர பொருளாதார வீழ்ச்சி. அனைத்தும் கார்ப்பரேட் கையில் உள்ளது. ரஃபேல் ஊழலில் மிகப்பெரிய கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அணிதிரள வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் உரையை முடித்துக் கொண்டார்.

தி.மு.க. மகளிரணி புரவலர் திரு.விஜயா தாயன்பன்

அடுத்ததாக தி.மு.க. மகளிரணி புரவலர் திரு.விஜயா தாயன்பன் அவர்கள் வாழ்த்துரையில்,  “இது பேச்சுக்கான இடமில்லை. உணர்வுக்கான சங்கமம் என்று உணர்ந்து கொண்டேன்.  இந்த நாட்டிலே எந்த சாரரும் நிம்மதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளை நாம் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். கதுவாவில் அந்த 8 வயது சிறுமிக்கு நடந்ததை நிச்சயமாக நாம் மறக்க முடியாது.  சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பிலே நடந்த வன்புணர்வை முடியாது.

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் இந்த மோசமான நிலை அறவே ஒழிக்கப்பட வேண்டும். இன்று எந்த பேச்சு சுதந்திரமும் இல்லை, எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லை. நாம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதோ அதைப் போன்ற நிறைய பேச்சாளர்கள், எழுத்தாளர்களை ஒழிக்கும் ஆட்சிதான் மத்தியில் ஆகட்டும், மாநிலத்தில் ஆகட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை மாற்றவேண்டுமென்றால் இந்த பயணம் வெற்றிகரமாக மாறவேண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற அரசு மாற்றப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும். அதற்கான வழியை இந்த பயணம் ஏற்படுத்தும்” என்று முடித்தார்.

நிஷா சித்து.

அவரைத்தொடர்ந்து பிராச்சாரக் குழுவில் தலைமையேற்பவரில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த நிஷா சித்து அவர்கள் பேசுகையில்,   “நாம் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நம்முடைய ஒரே ஒரு நோக்கம் அமைதியான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் உதவித்தொகை பற்றி கேட்டால் தேசத் துரோக வழக்கில் கைது செய்கிறார்கள். அக்லக், பெகுலுகான் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.  மத்தியில் இருக்கும் ஆட்சி பொய் மேல் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறது. இனி இந்த ஆட்சியை ஒருபோதும் வர விட மாட்டோம். பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டது அதை தடுப்பதற்கு மோடி ஆட்சி எந்த காரணம் கொண்டும் வரவிடக்கூடாது. நமக்கு ஜியோவும் வேண்டாம்.. ராம்தேவின் எந்த பொருளும் தேவையில்லை. நமக்கு தேவை ஒரு அமைதியான இந்தியா” என்று  முடித்தார்.

அடுத்ததாக பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் பத்மாவதி அவர்கள் பேசியபோது, “ இன்றைக்கு இந்த நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சனைகள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட சட்டங்கள் நம் கையில் வந்து சேருவதற்கே பல்வேறு போராட்டங்கள் நடத்த வேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தோழர் பத்மாவதி.

அந்த ஜனநாயகத்தை தேடித்தேடி அலைந்து அலைந்து அந்த கோவத்தின் உச்சம் ஒன்று திரண்டு இந்தியா முழுவதும் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பு இந்த பிரச்சார யாத்திரையை முன் வைத்திருக்கிரார்கள். வருங்காலத்தின் இந்த ஜனநாயக அமைப்பும், நாடும் அதிகாரமும் நமக்கானதாக மாற வேண்டும்.” என்று கூறி முடித்தார்.

அவரைத்தொடர்ந்து பிரச்சாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆன்னிராஜா பேசுகையில்,  “இந்தியாவில் இதற்கு முன்பு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்பொழுது அவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை. வீடு, பள்ளி, பஸ், கோவில், மசூதி, சர்ச் என எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத நிலை.

அதுமட்டுமல்லாமல், எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க மந்திரிகள் போராடுகிறார்கள். “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்- பெண் குழந்தைக்கு கல்வி கொடுப்போம்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் ஹரியானாவில் சி.பி.எஸ்.இ பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்.  அங்கு இருக்கக் கூடிய ஒரு எம்.எல்.ஏ “ இளைஞர்களுக்கு வேலை இல்லாததால்தான் அப்படி செய்கிறார்கள்” என்று சொல்கிறார்.

தோழர் ஆன்னிராஜா.

ஜார்கண்டில் மாட்டை எடுத்து சென்ற ஒரு இளைஞரை கோடாரியால் அவருடைய காலை வெட்டி கொலை செய்கிறார்கள். அந்த இளைஞரின் தாய் கொலை செய்தவனை பிடித்து நியாயம் கேட்கிறார். அப்பொழுது அவருடைய கையில் இருந்த கண்ணாடி வலையல் உடைந்து கொலையாளியின் கையை அறுத்து விடுகிறது… அதற்கு அந்த தாயின் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் கொடுமை நடக்கிறது.

சந்தோஷ் என்ற சிறுமி உணவில்லாமல் இறக்கிறார்.  ஒருபக்கம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது என்கிறார்கள். மற்றொரு புறம் பட்டினி சாவுகள் அதிகரித்து வருகிறது.  இப்படி ஒரு நிலை இருக்கும்போது எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார் ஆன்னிராஜா.

நம்ம குழு அஜிதா பாடல்.

தொடர்ந்து,  பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் நம்ம குழு பாடல்கள் சார்பாக, “பாரத மாதா நீயுமம்மா… பாத்து இருந்துக்க பத்திரமா… எட்டு வயசு குழந்தைய குதறும் வக்கிர தேசமம்மா… அஸ்வினி.. நந்தினி..ஆசிபா-ஹாசினி ரத்தம் கொதிக்குதம்மா…. இந்த சிசுவை மேய்ந்த சேவகர் எல்லாம் பசுவுக்கு காவலம்மா…” என்ற பாடல் அரங்கம் அதிர ஒலித்தன.

மஞ்சள் நாடகத்திலிருந்து ஒரு காட்சி.

அதனைத்தொடர்ந்து கட்டியக்காரி நாடகக் குழுவினரின்…  பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சாதி தீண்டாமையை தோலுரிக்கும் விதமாக “ மஞ்சள்” நாடகத்தின் ஒரு பகுதியை அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய சமூக செயற்பாட்டாளர் தோழர் கீதா அவர்கள் ,  “ இந்து மதம் சாதியை, பெண்ணடிமைத்தனத்தை காப்பாற்றும் மதம். இங்கு இருக்கக் கூடிய எல்லா மூட நம்பிக்கைக்கும், ஏற்றத்தாழ்விற்கும் அரணமைத்துக் கொடுக்ககூடியது இந்து மதம்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரியாரும், பெரியாரை சார்ந்த இயக்கங்களும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் வருகின்றன.

இந்து மதம் மிக மோசமான, வக்கிரமான எந்த வகையிலும் நம்முடைய உரிமைகளை மீட்டுத்தர முடியாத  குடும்ப வன்முறையையும் தடுக்க வக்கில்லாத ஒரு மதம்.

சமூக செயற்பாட்டாளர் தோழர் வ.கீதா.

நாம் அரசு வன்முறையைப் பற்றி பேசுகிறோம்… பெண்கள் மீதான வன்முறையைப் பற்றி பேசுகிறோம். ஆனால் குடும்ப வன்முறையைப் பற்றி  பேசுவது கிடையாது.  அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் முதல் இளவரசன் கொலை வரை நமக்கு தெரியும்.  இதனை எல்லாம் யாரும் ஏவி விட்டு செய்வதில்லை. அதற்கு அடித்தளமிட்டுக் கொண்டிருக்கும்  சாதியும், குடும்ப வன்முறையும் தான் இதை சாத்தியப்படுத்துகின்றன.

இந்த நாட்டில் வக்கிரம் பிடித்த சாதியமைப்பும், குடும்ப அமைப்பையும் வைத்துக்கொண்டு வன்முறையற்ற இந்தியாவை எப்படி உருவாக்க முடியும?  இந்த இரண்டையும் கட்டிக் காக்கும் அரசு எத்தகைய கொடூரமானதாக இருக்கும்…. என பேசினார்.

அடுத்த நிகழ்வாக “மனிதி மற்றும் ஆக்ட் நாடகக் குழுவினரின் “பல்லக்கு தூக்கிகள்” வாழ்க்கை அவலத்தை சொல்லும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா.

நாடகத்தைத் தொடர்ந்து கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியா, பேசுகையில்,  “குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் எப்படி இருக்குமோ அது மத்திய அரசு…  அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பத்து எட்டு அரிவா.. என்பார்கள் அது தமிழக அரசு… ஒரு ஆட்சிய நடத்தத் தெரியாதவன் கிட்ட கொடுத்தா கம்பராமயணத்த எழுதினவரு கூட சேக்கிழாரா மாறுவாரு…

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான். அரசியலமைப்பு சட்டத்தில் அது ஒன்றியம் என்றே அழைக்கப்படுகிறது. அதனை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியா என்றார்கள். இந்தியா என்று அழைத்தால் இந்து-இந்தி- இந்தியா என்று அழைத்தாக வேண்டும் என்று நமக்கு பதிய வைக்கப்படுகிறது. எனவே  நாமே அதற்கு வழி வகுக்கக் கூடாது.  வன்முறை இருக்கிறதென்றால் அந்த வன்முறை யாரால் யாருக்காக நடத்தப்படுகிறது.. அம்பானி அதானி போன்றோருக்காக நடத்தப்படுகிறது. அதற்கு நாம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த அமைதி தான் அவர்களுக்கு பலமாகிறது. எனவே அந்த வன்முறையை நாம் ஒழிக்க வேண்டும்.

இந்துத்துவத்துக்கு எதிரா தீர்ப்பு கொடுத்த லோயா மர்ம மரணம். அமித்ஷாவுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா ஆளுநர் பதவி கிடைக்கும். இது நீதித்துறையில் இருக்கும் வன்முறை. ஆக வன்முறை என்பது எல்லா இடங்களிலும் நிலவி கிடக்கிறது. எனவே நம்முடைய பயணம் அமைதியானதாக இருக்கக் கூடாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் இந்த இந்துத்துவ வன்முறையை ஒழிக்க புரட்சி என்ற வன்முறையை கையில் எடுக்க வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் அருள்மொழி.

தொடர்ந்து காளீஸ்வர குழுவின் கரகாட்டம் நடைபெற்று  முடிந்த பிறகு திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி அவர்கள் பேசுகையில்,  “இந்தியாவ காப்பாத்தனும்னு இப்பதான் நாம் முடிவெடுத்திருக்கோம். அதுக்குள்ளவே அவங்க அவ்வளவு ஆட்டம் காட்டிடாங்க. இந்தியாவ யார்கிட்ட இருந்து காப்பாத்துறது? இதான் இங்க பிரச்சனை. அல்லது, எங்க முறையிட்டு காப்பத்துறது?

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி… இந்த நாட்டின் ஆளும் கட்சியின் தேசிய தலைவருக்கு சம்மன் அனுப்புகிறார். தண்டனை கொடுக்கவில்லை. வழக்கு விசாரணை முடியல. சம்மன் அனுப்பினார். சம்மன் அனுப்பினா என்ன பண்ணனும்.. கோர்ட்டுக்கு வரனும்… யார் வருவாங்க.. சாதாரண குடிமக்கள் வருவாங்க. இவங்க எல்லாம் அப்படி இல்ல. அவர் வர்ல.  வராததால் அந்த நீதிபதி கொஞ்சம் கடுமையா , நான் டிரையலை நடத்தி முடிக்க போறேன். நீங்க வர்லன்னா வாரண்ட் போட்டுடுவேன். இதை சொல்லுவதற்கு ஒரு நீதிபதிக்கு அதிகாரம் இருக்கு   என்று அவர் நம்பியது சட்டம். அப்படி நம்பியதற்கு அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்த நாட்டின் நிலமை.

கொலை செய்வது, குண்டு வைப்பது. எத்தனை விதமான வன்முறையில்  நடவடிக்கையில் ஈடுபட்டது யார்? சாமியார் அசீமானந்தா. சாமியார் என்றால் சாதாரண  சாமியார் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய அமைப்பான வனவாசி கல்யாண் என்ற அமைப்பின் தலைவர். பழங்குடி மக்களை தாய் மதம் திரும்புவது என்ற பெயரில் கர்வாப்சி செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுவதற்கான அதிகாரம் பெற்ற அசீமானந்தா.. வெளிப்படையாக வாக்குமூலம், பேட்டிகள் கொடுத்தார். பத்திரிக்கைகளில் வந்தது.

மாலேகான் முதல் ஹைதராபாத் குண்டு வெடிப்பு வரை எப்படி திட்டமிடப் பட்டது. ரயில்ல வெடிச்சதே ஒரு குண்டு. அந்த ரயில்ல வெடிச்ச குண்டை வச்சி படமே எடுத்துட்டாங்க. இந்த கூட்டத்திற்கு பயிற்சியும் கொடுத்து, வெடிகுண்டுகள் வழங்கியது புரோகித் என்ற ராணுவ அதிகாரி. இது சம்பந்தபட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி ஒருவர் கொஞ்சம் கடுமையா இருந்ததால அவருக்கு நடப்பது மரணம்.

இதனுடைய இன்னொரு குண்டு வெடிப்பு நடந்த ஹைதராபாத் வழக்குல அந்த அசீமானந்தா உட்பட அத்தனை பேரையும் விடுதலை செய்த நீதிபதி, ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார்.  அந்த நீதிபதி ராஜேந்திரன் பாஜகவில் சேர்ந்து விட்டார். உலகில் இப்படி ஒரு வெட்கக்கேடானா ஜனநாயகமா இது? உலகத்துல எந்த நாட்டுலயாவது  நடக்குமா? ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக முக்கியாக குண்டு வெடிப்பு வழக்கில் இருக்கும் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறார் என்று சொன்னால் இதைவிட இந்த நாட்டில் ஜனநாயகப் படுகொலை நடப்பதற்கோ, பேசுவதற்கோ வேறு மிச்சம் இருக்கா?

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இப்ப யார் யார் எல்லாம் ராணுவத்துல பதவியில இருப்பாங்கன்னு யோசிச்சி பாருங்க. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ல பயிற்சி அளிக்கப்படவர்கள் தான் ராணுவத்தில் இருப்பார்கள். நம்ம ஊரில் ஒரு கலவரம் என்றால் ராணுவம் வரும். அப்ப என்ன நடக்கும்?

பாஜக கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜிக்கே பாதுகாப்பு இல்லை.  ஒரு இந்து-முசுலிம் தம்பதியினருக்கு  பாஸ்போர்ட் மறுக்கப்படுகிறது. இதற்க்காக அந்தப் பெண் சுஸ்மாவிற்கு கடிதம் எழுதுகிறார். உடனடியாக பாஸ்போர்ட் மறுத்த அந்த அதிகாரி மாற்றப்படுகிறார். அனுமதி வழங்க உத்தரவிடுகிறார். இந்த சம்பவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா போடுகிறார். அதை கண்டித்து ஒரு லட்சம் பேர் தாகாத முறையில் திட்டுகிறார்கள். இதை எந்த அமைச்சர்களும் கேட்கவில்லை என்று சுஷ்மா சொல்லும் போதுதான் ராஜ்நாத் சிங் இதனை கண்டிக்கிறேன் என்று அறிக்கை விடுகிறார்.

தன் சொந்தக் கட்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இதுதான் கதி என்றால்…. கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டத்தில் ஆச்சரியமில்லை. இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்? இந்த உயிர்களை காக்க வேண்டும் என்று அக்கறை கொண்ட பெண்கள், ஆண்களுடைய போர்களால் அழிந்து போன பெண்கள், அந்த போர்களின் அழிவின் விளைவுகளை எல்லாம் தாங்குகின்ற பெண்கள்… அவர்கள் தான் இன்றைக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்” என்று முடித்தார்.

அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா

இறுதியாக உரையாற்றிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா அவர்கள் பேசுகையில்,  “கொத்தடிமை- குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இது சாதியத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு முறையாக உள்ளது.இது பெண்ணடிமைத்தனத்தோடு பிணைந்து விட்டது. இந்தக் கொடுமையைப் பார்க்கும்போது இது சுதந்திர நாடா என்ற கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள் சட்டத்தை திருத்தி தொழிலாளர்களை அடிமையாக்குகிறது இந்த அரசு.  வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழித்து, நகரத்தில் குடிசையை அகற்றி வேலையில்லாதவர்களாக மாற்றுகிறார்கள்.  உழைக்கும் மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. எனவே இந்த வாழ்வாதாராம் பாதுகாக்க நிலம் உறுதி செய்யப்பட்டாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

இறுதியா அமைதிக்கான உரையாடல் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் மஞ்சுளா அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க