கலையரசன்

முதலாம் உலகப் போர் முடிவடைந்து நூறு வருடங்கள் ஆகிவிட்டன. 28-6-1914 அன்று, சரயேவோ (பொஸ்னியா) நகரில், ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுவே முதலாம் உலகப் போரின் தொடக்கமாக கருதப்பட்டு வந்தது. உண்மையில் அது “உலகப்” போர் அல்ல. ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பங்கெடுத்த “ஐரோப்பியப்” போர் ஆகும். ஆனால், அது ஒரு காலனியாதிக்க காலகட்டம் என்பதால், ஐரோப்பிய நாடுகள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால், அது இன்றளவும் “1-ம் உலகப் போர்” என்று அழைக்கப்படுகின்றது.

நூறு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரிய இளவரசரை சுட்டுக் கொன்ற கவ்ரிலோ பிரின்சிப்பிற்கு சரயேவோ நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கவ்ரிலோ பிரின்சிப் (Gavrilo Princip) பற்றி சில குறிப்புகள்.

கவ்ரிலோ பிரின்சிப் சிலை.

உலகம் முழுவதும், அரசியல் காரணங்களுக்காக திரிபுபடுத்தப்பட்ட வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. அனேகமாக எல்லா வரலாறுகளும் “அங்கீகரிக்கப்பட்ட பொய்கள்” தான். இளவரசர் பெர்டினன்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம்தான், 1-ம் உலகப் போரை தொடக்கி வைத்தது என்று எல்லா சரித்திர நூல்களிலும் எழுதி இருக்கிறார்கள். உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.

இளவரசரை சுட்டுக் கொன்ற கவ்ரிலோ பிரின்சிப் ஒரு “பயங்கரவாதி” அல்லது “செர்பிய தேசியவெறியன்” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்கள். அநேகமாக ஆஸ்திரிய சாம்ராஜ்யவாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்தே அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளது.

கவ்ரிலோ பிரின்சிப் உண்மையில் ஒரு பயங்கரவாதி அல்ல. யூகோஸ்லேவியா என்ற தாயக விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைப் போராளி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி நிலவியது. அந்தக் காலத்தில் தேசியவாதம் ஒரு முற்போக்கான கொள்கையாக கருதப்பட்டது.

படிக்க:
அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

பொஸ்னியாவும், குரோவாசியாவும் ஆஸ்திரிய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தன. ஆஸ்திரியா அந்தப் பிரதேசத்தை காலனி மாதிரி நடத்தி வந்தது. பொஸ்னியா முழுவதும் நான்கு இடைத்தர பாடசாலைகள் மட்டுமே கட்டப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா (அல்லது இலங்கையில்) ரயில் பாதை, நெடுஞ்சாலை அமைத்தார்கள் என்று சொல்லிக் கொள்வதைப் போன்று, ஆஸ்திரிய காலனிய ஆதரவாளர்களும் கூறி வந்தனர். ஆனால், அந்த ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் யாவும், பொஸ்னியாவின் இயற்கை வளங்களை, ஆஸ்திரியாவுக்கு எடுத்துச் செல்வதற்காக போடப்பட்டவை. ஆஸ்திரிய காலனிய சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் பயங்கரவாதம் ஆகாது.

கவ்ரிலோ பிரின்சிப் கைது செய்யும் இராணுவ வீரர்கள். (சித்திரம்)

சரித்திர பாடநூல்கள் குறிப்பிடுவது போன்று, கவ்ரிலோ பிரின்சிப் ஒரு “செர்பிய தேசியவாதி” அல்ல. அன்று அவனுடன் ஒரு பொஸ்னிய முஸ்லிம், குரோவாசியர் ஆகியோரும் கூட்டுச் சேர்ந்து தான் தாக்குதலுக்கு திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் செர்பியா, பொஸ்னியா, குரோவாசியா ஆகிய பகுதிகளை இணைத்த யூகோஸ்லேவியா குடியரசு.

மேற்குறிப்பிட்ட தகவல்கள், சரித்திர பாட நூல்களில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இன்று செர்பிய தேசியவாதிகள் கவ்ரிலோ பிரின்சிப் தங்களது நாயகன் என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளியுலகமும் அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்டு பரப்பி வருகின்றது.

இதில் இருந்து நமக்குக் கிடைக்கும் பாடம், உண்மையான தேசியவாதத்தை விட, குறுந்தேசியவாதமும், இனவாதமும் ஏகாதிபத்தியத்திற்கு நன்மை தரத்தக்கது. அதனால், உலகம் முழுவதும் அந்தக் கோட்பாட்டை வளர்ப்பதில் குறியாக உள்ளது.

முகநூலில் : கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம்  தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க