தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் பன்னாட்டுகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம் !

ரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாகப் போராடும் யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ., ஈடான் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் புதுச்சேரியில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், தொழிற்பேட்டைப் பகுதியான TBV பேருந்து நிறுத்தத்தில், 20.10.2018 அன்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொழிலாளிகள் தங்கள் உரிமைகளைக் கேட்க சட்டப்படி தொழிற்சங்கம் வைத்தால், தொழிற்சங்கம் வைத்ததற்காக வேலையைப் பறிக்கும் நடவடிக்கையில் பன்னாட்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. மேலும் தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்குகின்ற வகையிலும், இன்றைய நமது தேவை, உரிமை பறிப்புக்கு எதிரான போராட்டத்துடன், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாகவும் மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை, இணைப்பு சங்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்பேட்டை வாயில், தொழிலாளர் பேருந்து நிறுத்தம், பேருந்து, சிக்னல்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், இப்பிரச்சினைகள் தொழிலாளர் மத்தியில் பரவலான பேசுபொருளாக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு புஜதொமு மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். புஜதொமு பொதுச்செயலாளர் தோழர். மகேந்திரன், பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு ஆகியோரும், பகுதியில் போராடும் ஈடான் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் தோழர். பாஸ்கர், சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர். மாதேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்,  தாங்கள் வாழும் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளும் வேறு வேறல்ல. தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளிகளது செயல்களும், அரசின் நடவடிக்கைகளும் வேறு வேறல்ல. இவை அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது.

எனவே, தொழிலாளர்களாகிய நாம் மட்டும் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள வேற்றுமைகளைப் பார்த்து தனித்தனியே பிரிந்து கிடப்பது, எதிரிகளுக்குத்தான் பலத்தைக் கூட்டுகின்றன. எனவே தொழிலாளர்களது பலம் என்பது அவர்களது வர்க்க ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதை விளக்கி உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் ஒட்டி வட்டாரக் கலைக்குழு தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள், கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் நிகழ்ச்சியைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. மொதல்ல போயி க்யூபா மாதிரி கம்யூனிச நாட்டுல போராட்டம் பண்ணுங்க. தொழிற்சங்கம்ன்னு ஒன்னு வெச்சாலே பிடிச்சி உள்ள போட்டற்றானுங்க. சம்பளத்த கூட்டி குடுன்னு கேட்டா கவட்டையிலயே மிதிக்கறானுங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க