FoxConn நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம்!
அன்பார்ந்த தொழிலாளர்களே,
தைவான் நாட்டு பகாசுர நிறுவனமான பாக்ஸ்கான் (சுங்குவார் சத்திரம்) ஆலையின் பெண் தொழிலாளர்களது போராட்டம் வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மரணத்திற்குக் காரணமான பிணந்தின்னி பாக்ஸ்கானுக்கு, இளம் பெண் தொழிலாளர்களது போராட்டத்தை நசுக்குவது பெரிய விசயமுமல்ல. புதிய விசயமுமல்ல.
பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக குறை கூலிக் கொத்தடிமைகளாக, கொட்டடியில் அடைக்கப்பட்டு கசக்கிப் பிழியப்படும் பெண் தொழிலாளர்களின் அவல நிலையை பாக்ஸ்கான் தொழிலாளர்களது போராட்டம் மீண்டும் ஒருமுறை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் பிடிப்பது தனிக் கலை.
பாக்ஸ்கானில் வேலை செய்யும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 90 சதவிதம் பேர் உள்ளூர்காரர்கள் அல்ல. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். டிப்ளமோ/கல்லூரி முடித்த பெண்களை கான்டிராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு எடுத்து மிகக் குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்திக் கொள்கின்றனர். அந்த குறைந்த சம்பளத்திலும் “உணவு – தங்குமிடம் தருகிறோம்” என்று ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு, ஹாஸ்டல் என்ற பெயரில் கொட்டடியில் அடைத்துக் கசக்கிப் பிழிகின்றனர்.
படிக்க :
♦ டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு
♦ தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்
சற்றேறக் குறைய 10X10 அளவுள்ள அறையில் 20, 30 பேர் வீதம் தங்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. தொழிலாளர்களது சம்பளத்தில் உணவுக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பது இரண்டாவது நிபந்தனை. தொழிலாளர்களது பணத்தில் தரப்படும் உணவு தரமற்றதாகவோ, கெட்டுப்போனதாகவோ இருந்தாலும் கேள்வி கேட்காமல் சாப்பிட வேண்டும். இவை எல்லாவற்றையும் குடும்பத்தில் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு சகித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், இனிமேல் சகித்துக் கொண்டிருந்தால் வாழவே முடியாது என்கிற நிலை வந்தபோது ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
15/12/2021 அன்று, நடந்த சம்பவம் தொழிலாளர்களது மனதில் நீறுபூத்த நெருப்பாக இருந்த கோபமும் ஆத்திரமும் வெடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது. பூந்தமல்லி வெள்ளவேடு ஐ.எம்.ஐ. விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, உடல்நிலை மோசமானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியே தெரியாமல் பாக்ஸ்கான் நிர்வாகம் மறைத்திருக்கிறது.
மற்ற தொழிலாளர்கள் இது குறித்துக் கேள்வி கேட்டபோது நிர்வாகம் முறையான பதில் எதுவும் சொல்லாமல் உதாசீனப்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்ததால் சந்தேகப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
