ன்றிய அரசுக்கெதிராக மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த மார்ச் 28–29 அன்று அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவின. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்! பொதுத்துறையை தனியார் மயமாக்காதே! தொழிலாளர் சட்டத் தொகுப்பினை கைவிடு! மின்சாரத் சட்டத்திருத்தத்தை ரத்து செய்! உள்ளீட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் நடைப்பெற்றது.

மாநில \ மாவட்ட தலை நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களான வங்கி காப்பீடு உள்ளீட்ட  இதர நிறுவனங்களின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டன. தமிழகத்திலும் இந்த போராட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

நாட்டின் சரி பாதிக்குமேல் உள்ள கிராமப்புற மக்கள் தனியார் தொழிற்சாலைகளில் பணி புரியும் இளம் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த போராட்டமே தெரியாது என்பது கவலைக்குறிய அம்சமாக உள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டம்  நடந்த  அடுத்த  சில தினங்களிலே பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் செய்து போராட்டத்தின் நோக்கத்தினை செல்லா காசாக்கியது கார்ப்பரேட் கைக் கூலியான மோடி தலைமையிலான பாஜக அரசு.

வருடத்தின் முதல் காலாண்டான மார்ச் மாதத்திலும் மூன்றாவது காலாண்டான செப்டம்பர் மாதத்திலும் நடைபெறும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டங்கள் ஒன்றி அரசை பணிய வைக்கவில்லை. மாறாக, ராவ் முதல் மோடி வரையிலான ஆட்சி காலத்தில் மக்களின் வாழ்வாதரங்களும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பும் தொடர் நிகழ்வாகதான் இருந்து வருகிறது.


படிக்க : சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !


வங்கி, LIC, இரயில்வே, சுரங்கம் இன்னும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் நாட்டுக்கும் – மக்களுக்கும் சேவையளிப்பதின் வழியே ஒர் நிறுவனம் என்கிற முறையில் தன்னையும் தன்னுடன் அங்கம் வகிக்கும் ஊழியர்கள் – தொழிலாளர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையல்லவா? என்ற கோணத்தில் அனுகுகின்றன மத்திய  தொழிற்சங்கங்கள். இவையெல்லாம் பழைய கதைகளாகி பல ஆண்டுகளாகிவிட்டன.

மேற்படி பொதுத்துறை நிறுவனங்கள் (வங்கி LIC இரயில்வே சுரங்கம் தொலைபேசி மின்சாரம்) நமது நாட்டில் உருவானதின் பின்னணியும் அதன் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1930–களின் அன்றைய காலனிய இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்த தரகு முதலாளிகள், மேற்சொன்ன துறைகளை அரசு மூலதனமிட்டு வளர்த்தெடுக்க வேண்டும் என்ற திட்டம்தான் பாம்பே பிளான் என அறியப்படுகின்றது. இதன்பிறகு, 1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு நேரு தலைமையிலான காங்கிரசு, “அரசு சோசலிசம்’’ என்ற போர்வையில் இதற்கான திட்டமிடலை துவக்கி வைக்கிறது.

ஏகாதிபத்தியங்கள் அன்றைக்கு ஒப்பீட்டளவில் பலவீனமைடந்திருந்த இராண்டாம் உலகு போருக்கு பிறகான காலகட்டத்தில் பொதுதுறை நிறுவனங்கள் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியிருந்தது என்பதுதான் அன்றைக்கு நேரு அரசுக்கு முன்னிருந்த யதார்த்த நிலைமை. ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளின் தாக்கம் பாட்டாளி வர்க்க தலைமையிலான சோசலிச முகாம் தந்த அழுத்தம் ஆகியவை ஏகாதிபத்திய அடிவருடி அரசுகள் தங்களது ஆதிக்கத்தை அடங்கி போகும்படி செய்தது.

ஏகாதிபத்தியங்கள் தங்களது சுரண்டல் – அடக்குமுறையை புதிய வடிவில் மேற்கொள்ள துவங்கின. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் இதற்கான முன்கையை எடுத்தது சர்வதேச ரீதியில்.

இதுதான்  1990-களுக்கு பிறகு கொண்டு வரப்பட்ட தனியார்மயமாக்கல் மற்றும்  இன்னும் பல பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் யாவும் நாட்டின் கேந்திரமான துறைகள் அனைத்தும் தங்கள் வசமாக்கி கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் பாம்பே பிளான் திட்டம் தங்களின் தேவையைத் நிறைவேற்றித்தரும் பொருளாதார திட்டமாக உலகமயமாக்கல் வாய்த்தது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வர பிரசாதம்தான்.

முதலாளித்துவ வர்க்கம், தான் பெற்ற பல்வேறு அனுபவ – படிப்பினைகள், 19-ம் நுற்றாண்டின் தொழிற்புரட்சி காலங்களில் வெடித்த போராட்டம் 8 மணி நேர கோரிக்கையாக பரிணமித்து முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திய மகாத்தான நவம்பர்–7 சோசலிசப் புரட்சி இன்னும் எண்ணற்ற அரசியல் கிளர்ச்சிகள் போன்றவைகளை ஆளும் வர்க்கம், தொகுத்து வைத்துக் கொண்டுதான் உலமயமாக்கலை நடைமுறைப்படுத்தின.

அதன்படி மத்திய – மாநில அரசு ஊழியர்கள் குட்டி முதலாளித்துவ பிரிவினரை நீண்ட திட்டமிடலில் அவர்களை நகர்த்திக் கொண்டு வந்ததின் தொடர்ச்சியாக 7–வது ஊதிய கமிஷன் அதன் அடிப்படையிலான பிற சலுகைகள் வழங்கப்பட்டது.

சமூகத்தில் நிகழும் அநீதி அடக்குமுறைக்கெதிராக கருத்து ரீதியாக வினையாற்றும் சிந்தனைக்கு சிறை வைத்த முதலாளித்துவ சமூகத்தில் இருந்து தன்னை பார்க்காமல் தன்னில் இருந்து சமூகத்தை பார்க்கும் பண்பாட்டிற்கு பயிற்றுவிக்கப்பட்டதுடன் பரந்துப்பட்ட மக்களிடமிருந்து தன்னை துண்டித்துக் கொள்ள வைத்தது (நடுத்தர மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கப் பிரிவினரை)  முதலாளித்து வர்க்கம்.

தனது சந்தைக்கு தகுதியானவர்களை பாதுகாப்பதும் அவர்களை பொருட்களை வாங்கி குவிக்க வைப்பதென்பது உலகளவிய தனது அதீத உற்பத்திக்கு ஈடு செய்யும் பொருளாதார நடவடிக்கைதான்  நுகர்வு பண்பாடு இந்த சங்கலியில் சகலரும் இணைக்கப்படுகின்றனர்.

இந்த சூழலில் வாழ நிர்பந்திக்கப்படும் தொழிலாளி – ஊழியர்களை அரசியல் படுத்தும் கடமை புறக்கணிக்கப்பட்டது. ஏனெனில் இதற்கான திட்டமே இல்லாமல்தான் போலி கம்யூனிஸ்ட்டுகளும் பிற மத்திய தொழிற்சங்க தலைமைகளும் இருந்தனர். மறுபுறம் சங்கமாக திரள்வது முதல் ஊதிய உயர்வு சட்டபடியான உரிமைகள், பிற சலுகைகள் யாவும் ஒரு பிரிவினருக்கு மட்டும் தாரளமாக வழங்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்படாமல் போவது குறித்த பிரச்சினையை சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது ஏனெனில் சட்டபடி அவர்களுக்கு உரிமையில்லை என தொழிற்சங்கங்களை ஏற்க வைத்ததின் தொடர்ச்சியாக இன்று NEEM என்ற பெயரில் நாகரீகமான முறையில் அடிமைத்தனத்தை உருவாக்கியிருப்பதுடன் நிறுவனமயப் படுத்தியிருக்கின்றது.

தொழிற்சங்க இயக்கங்கள் அவை இடது சாரி சித்தாந்தத்தை ஏற்றுள்ள அமைப்புகள் கூட தொழிலாளர் பிரச்சினையை சட்டவாத வரம்புகளுக்குள் மட்டுமே நிறுத்தி அனுகியதுதென்பது மார்க்சியத்திற்கு எதிரானது. இந்த போக்கு விரிவடைந்து தொழிற்சங்க இயக்கங்களில் பொருளாதாரவாதமாக பிரதிபலித்து அது ஒன்றே தொழிற்சங்கங்களின் பணியாகியது.

உலகமயமாக்கலின் வளர்ச்சி போக்கானது அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆகப் பெருவாரியான தொழிலாளர்களை (நீம் டிரெய்னி அப்ரெண்டீஸ் ஒப்பந்த தொழிலாளி) பஞ்சை பராரிகளாக வைத்துக் கொண்டு சிறு பிரிவினரை மட்டும் சலுகைப் பெற்றவர்களாக வைத்திருக்கும் முதலாளித்துவம் தனி நபர் சுவகரிப்பு என்ற தனது சுரண்டலின் உள்ளடகத்தைதான் சமூக ரீதியில் வெளிப்படுத்துகின்றது.


படிக்க : அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!


இந்த அடிப்படையான உண்மையை பார்க்க மறுக்கும் மத்திய தொழிற்சங்க தலைமைகள் அவை முன்னெடுக்கும் போராட்டங்கள் வெற்றிபெற போவதில்லை. பொருளாதார ரீதியில் சலுகைப் பெற்ற பிரிவினராக ஊழியர் – தொழிலாளர்களை  மாற்றியமைத்ததென்பது  ஒரு வகையில் இராணுவ ரீதியில் சுற்றி வளைத்தலுக்கு ஒப்பானதுதான்.

சில தனி நபர்களை ஊழல்படுத்தி சீர்ழிப்பது அதன் வழியாக தொழிற்சங்க இயக்கத்தை முடக்குவது பழைய பானி.  இன்றைக்கு ஒரு வர்க்கத்தையே (பெரு திரளான பிரிவினரை) ஊழல்படுத்தி தங்களது சொந்த கோரிக்கைகளுக்காக ஒன்று சேரமால் பிரிந்து கிடக்க வைப்பது புதிய நிலைமை என்பதுடன் வர்க்கப் போராட்டத்தின் வீச்சை குறைக்கின்றது அல்லது திசை திருப்புகின்றது.

அந்த வகையில் அமைதியாக போவது மறுத்துப் போராடினால் கண் முன்னே தெரியும் ஏதுமற்ற பிரிவினரான பஞ்சை பராரிகள் பக்கம் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சம் சலுகைப் பெற்ற பிரிவினரை பிடித்தாட்டுகின்றது. ஆக சலுகைப் பெற்ற பிரிவும்  ஏதுமற்ற பிரிவும் எதிரும் புதிருமாக நிறுத்தியிக்கும் முதலாளித்துவம் இந்த அநீதிக்கெல்லாம் சட்ட வடிவம் கொடுத்து அதிகார வர்க்கத்தின் துணைக்கொண்டு அடக்குமுறையை ஏவி வருகின்றது.

எந்த சட்டத்தின் பேரில் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்கு உரிமைகள் சலுகைகளை வழங்கியதோ அந்தச் சட்டங்களை முதலாளித்துவம் மறுப்பதின் பின்னணி என்ன? இன்று பல்வேறு துறைகளில் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உற்பத்தி கருவிகள் பிரம்மாண்டமான முறையில் வளர்ந்து இருக்கிறது. முதாலாளி வர்க்கம் இல்லாமலே தொழிலாளி வர்க்கமே ஒரு நிறுவனத்தை – ஆலையை நடத்த முடியும். இந்த உணர்வுக்கு தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பகுதி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நிரந்தர தொழிலாளர்களை வில்லனாக சித்தரித்து எல்லோருக்கும் வேலை என பசப்புகின்றது முதலாளித்துவம்.

மறுபுறம், அரசியல் மற்றும் சமூக ரீதியில் பின் தங்கிய உணர்வை பெற்றுருக்கும் உற்பத்தி சக்திகளான (நமது தொழிலாளர்கள்) சுரண்டலின் அடிப்படையான “முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை எதிர்த்து தாக்குதல் தொடுக்கவில்லை” என்றார்களே மார்க்சும் ஏங்கெல்சும் அதுதான் இன்றைக்கு நாம் காணும் யதார்த்தம். (மேற்படி திசை வழியில் தொழிலாளி வர்க்கத்தை வளர்த்தெடுக்கும் மாபெரும் பணியியை பு.ஜ.தொ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் செய்தாலும் அவை சிறு துளிதான்)

ஏற்கெனவே, சொன்னதுப்போல உற்பத்தி கருவிகள் பிரம்மாண்ட வளர்ச்சியின் தொடர்ச்சி… சிக்கலான வேலைகளை எளிமைப்படுத்தியிருக்கும் தற்போதைய நிலையும் எதிர் காலத்தில் மேலும் மேலும் இலுகுவாக மாறும் நிலையிருப்பதால் எதற்காக நிரந்தர தொழிலாளர்கள்? என்ற கோணத்தில் முதலாளித்துவம் அரசை நிர்பந்திக்கிறது அதன் எதிர் வினைதான் தொழிலாளர் சட்டத்திருத்தம் இதன் நோக்கம் வேலை பறிப்பினை சட்டபடியே அரங்கேற்றுவதுதான் பாசிச மோடி அரசின் எதிர் கால இலக்காக உள்ளது.

தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தியினை (நீம் டிரெய்னி அப்ரெண்டீஸ் ஒப்பந்த தொழிலாளி) சட்ட படியே மதிப்பற்றதாக்கி எப்போதும் சந்தையில் தூக்கி எறியும் சடப் பொருளாக தொழிலாளர்களை மாற்றி வைத்திருக்கும் முதலாளித்துவம் மாற்றை (ALTERNATIVE) ஏற்படுத்திக் கொண்டே தனது சுரண்டல் மற்றும் அடக்குமுறை விரிவடைய செய்வது புதிய நிலைமையாகும்.

அந்த வகையில் 21–ம் நுற்றாண்டின் தகவல் தொழில்நுட்ப புரட்சி முதலாளி வர்க்கத்திற்கு பல வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றது. சுரண்டலை மட்டும் அல்ல தனது சுமைகளை (நெருக்கடிகளை) சமூகமயமாக்கியிருக்கின்றது. ஆன்லைன் விற்பனை என்ற பெயரில் சகல பொருட்களையும் போன் மூலமே விற்பனை செய்வது என்பது இது தொடர்பான பல்வேறு துறைகளில் ஏற்படுத்தியிருக்கும் வேலை வாய்ப்பானது ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்த போவதில்லை.

என்றாலும் வாழ்க்கையை ஓட்ட உடனடியாக ஒர் வேலை தற்காலிகமானதுதான் என சமாதானம் செய்து கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் நிலவுகின்ற சமூக அமைப்பு நீடிப்பதற்கான கருத்துகளை பதிய வைத்து தொடர்ந்து பராமரித்து தற்காலிகம் என்பது நிரந்தரமாகி பிரச்சினையும் அதிகமாகி காரணத்தை காணாதபடி வாழ்க்கையின் பரபரப்பிற்குள் சிக்கி விடுகின்றனர் தொழிலாளர்கள்.

முதலாளித்துவம் தன்னையொத்த உலகத்தை படைத்திட விரும்புகின்றது என மார்க்சிய ஆசான்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னே வரையறுத்த அரசியல் கோட்பாட்டு முடிவுதான் நாம் காணும் உலகமயமாக்கல். நுறு கோடிக்கும் அதிகமான சொத்துள்ள கோடிஸ்வரர்கள் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் வளர்ந்திருக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியும் தற்செயலானது அல்ல. மூலதனம் பெருக வேண்டுமானால் சுரண்டல் இரக்கமற்ற முறையில் நடந்தேற வேண்டும். பெருந்திரளான தொழிலாளர்கள் கூலியடிமைகளாக மாற்றப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் மத்திய தொழிற்சங்கங்களின் பணி என்பது, தான் பணிபுரியும் நிறுவனம் அங்குள்ள பிரச்சினை அந்த தொழிலாளர்களின் ஊதியம் – போனஸ் தொடர்பான பிரச்சினைகளுக்கு மட்டும்தான் போராட்டம் என்பது நடைமுறையாக உள்ளது.

ஆனால், பிரச்சினை மக்கள் ஒவ்வொருவரின் கதவை தட்டிக்கொண்டிருக்கின்றது. அவை விலை வாசி உயர்வு அல்லது வாழ்வாதாரம் பறிப்பு என இன்னும் எண்ணற்ற வகையில் அநீதியும் – அடக்குமுறையும் சமூகமயமாக்கத்திற்கு வித்திட்ட உலகமயத்தை வரம்பிற்கு உட்பட்டு கண்டிக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் செயல்பாடு பரந்துப்பட்ட மக்களின் நலனில் இருந்து துண்டித்துக் கொண்டது.

தொழிற்சங்கங்கள் அடக்கு முறைக்கெதிராக போராடி உருவானவைதான். இதில், இந்தியா விதி விலக்கு அல்ல. ஆனால், அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறும் நிலைமைகளுக்கு போதமையளிக்காமல் திரிபுவாத தலைமையான சி.பி.ஐ – சி.பி.எம் மேற்படி தொழிற்சங்கங்களை கைப்பற்றிக் கொண்டனர்.


படிக்க : தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !


தொழிலாளர்களுக்கும் – சி.பி.ஐ, சி.பி.எம் தலைமையிலான தொழிற்சங்க தலைமைக்கும்மான உறவு சித்தாந்த ரீதியானது அல்ல. சுயநலத்தின் அடிப்படையானது. இப்படிப்பட்ட தலைமையால் தன் முன்னால் இருக்கும் புறநிலைமை புரிந்து கொள்ளாமல் போவது வியப்பேதும் இல்லை.

இன்றைக்கு முதலாளித்துவ உற்பத்தியை நடத்தி செல்பவர்கள் இளம் தொழிலாளர்கள்தான். அவர்கள் நீம், டிரெய்னி, அப்ரெண்டீஸ், ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பிரிவினர்தான். எந்தவொரு ஆலையை எடுத்துக் கொண்டாலும் நிரந்தர தொழிலாளர்களை காட்டிலும் அவர்கள் இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.

தொழிலாளர்களை சங்கமாக திரட்ட சட்ட வரம்புகளும் – வாய்ப்புகளும் மறுக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அரசின் அடக்குமுறையை எந்த பெரிய தொழிற்சங்கங்களும் அம்பலப்படுத்தாமல் அமைதி காக்கின்றனர். நடைமுறையில் முதலாளித்துவ வரம்பை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் தங்கள் மீது ஏவப்படும் அடக்குமுறையை மட்டும் எப்படி முறியடிக்க முடியும்? சுய முரண்பாட்டில் சிக்கிக் கொண்டதன் பின்னணிதான் போராட்டம் முட்டுச் சந்தில் நின்று திணறுகின்றது.

புரட்சிகர அரசியலும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு வடிவங்களும் சட்டங்களும், ஏற்கெனவே சமூகத்தில் இருப்பதை தகர்த்துதான் புதியதை படைக்கின்றன என்பதுதான் வரலாறு அதன் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு நாம் செயல்படுவோம்.

நம் காலத்திய தொழிலாளி வர்க்கம் (கூலியுழைப்பை செலுத்துபவர்கள்) மேற்சொன்ன இளம் தொழிலாளர்களான இவர்கள்தான் பாட்டாளி வர்க்கமாக மாறும் நிகழ்ச்சிப் போக்கையும் கொண்டுள்ளனர். ஏற்கெனவே சொன்னதுப்போல, முதலாளித்துவ உற்பத்தியியை தங்கு தடையின்றி நடப்பதற்கு காரணமான  இத்தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவோம் தலைமையாக உயர்த்துவோம். இந்த திசை வழியியை மறுக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் தலைமை தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று கடமையை புறக்கணிப்பதாகவே உள்ளது. எனவே நாம் போரட்டத்தை இங்கிருந்து தொடங்குவோம்! “ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!


ஆ.கா.சிவா,
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்,
பு.ஜ.தொ.மு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க