டிசம்பர் 16,17, 2021 வங்கி ஊழியர்கள், அலுவலர்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?
• வங்கிகள் எப்போது நாட்டுடமையாக்கப்பட்டன?
1969-ல் முதல் கட்டமாக 13 பெரிய வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. 1980-க்குப்பின் மேலும் சில வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டு 20 வங்கிகளாயின.
• வங்கிகள் ஏன் நாட்டுடமையாக்கப்பட்டன?
1969-க்கு முன்பு வரை வங்கிகள் இந்திய தரகு முதலாளிகள் கையில் இருந்தன. அந்த காலகட்டத்தில் தனியார் வங்கிகளில் போடப்பட்ட மக்களது பணத்தை ஏமாற்றிவிட்டு ஓடுவது அவர்களது வேறு தொழில்களில் முதலீடு செய்து பல கோடிகளை சம்பாதிப்பது, சமயம் கிடைக்கும்போது திவால் அறிவிப்பது எனப் பல வழிகளில் சூறையாடினார்கள்.
மக்கள் பணத்தை பாதுகாப்பது, அதனை அரசின் தேவைக்கும், சமூகநலத் திட்டத்துக்கும் பயன்படுத்துவதே நோக்கம் என அன்றைய இந்திரா அரசு அறிவித்தது. (இதில் வேறு உள்நோக்கம் இருந்தாலும் குறைந்தபட்சம் மக்களது சேமிப்பு பாதுகாக்கப்பட்டது) அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) நாட்டுடமையாக்கலில் முக்கியப் பங்கு வகித்தது.
படிக்க :
ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !
ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !
• நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் அவ்வளவு பணத்தை வைத்திருக்கின்றவா?
ஆம். சமீபத்திய புள்ளிவிபரப்படி சுமார் 157 இலட்சம் கோடிகள் அந்த வங்கிகளில் வைப்ப்புத்தொகை, சேமிப்புத் தொகையாக இருக்கின்றன.
• இவ்வளவு பணம் இருந்தும் வங்கிகள் நட்டமாக காரணம் என்ன?
பொதுத்துறை வங்கிகள் நட்டமடைந்திருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய். கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் ரூ. 16 இலட்சம் கோடிகள் மொத்த லாபமாக கிடைத்தது. ஆனால், நிகர இலாபம் சுமார் 1.5 இலட்சம் கோடிகளாக குறைந்து போனது.
• இவ்வளவு பெரிய வீழ்ச்சி ஏன் நடந்தது?
வங்கிகள் வைத்திருந்த வாராக்கடன்களில் கடந்த 13 ஆண்டுகளில் ரு.14 இலட்சத்து 46,000 கோடிகள் தள்ளுபடி செய்யப்ப்பட்டு அந்த தொகை மொத்த இலாபத்தில் கழித்துக் கொள்ளப்பட்டது.
• வங்கி ஊழியர் – அதிகாரிகள் திறமை இன்மையால் தான் இந்த அளவுக்கு வாராக்கடன்கள் உயர்ந்தனவா?
ஒருபோதும் இல்லை. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற முதலாளிகள் பல்லாயிரம் கோடிகள் கடனை வைத்துக்கொண்டு நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். இன்னொருபுறத்தில், திட்டமிட்டு கடன்களை செலுத்த மறுத்த முதலாளிகளது கடனில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்பட்டு, எஞ்சிய கடன்கள் வேறு முதலாளிகளுக்கு கைமாற்றிவிடப்பட்டன. மோடி ஆட்சியில், கடந்த 7 ஆண்டுகளில் இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் தொகை ரூ. 6 இலட்சத்து 83,388 கோடிகளாகும். 2008-2014 வரை தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.32,109 கோடிகள். மோடியின் ஆட்சி கார்ப்பரேட்டுகளின் பொற்காலம்.
• சாதாரண விவசாயக் கடன், கல்விக் கடன்களுக்கே கெடுபிடி காட்டும் வங்கிகள் வாராக்கடனை தடுக்கவோ, குறைக்கவோ முடியாதா?
ஒருபோதும் சாத்தியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இனிவரும் நாட்களில் வாராக்கடன் அதிகரிக்கும். உதாரணமாக, 2008-2014 வரை வாராக்கடன்கள் தொகை ரூ.5 இலட்சம் கோடிகள். 2014-2020- ல் வாராக்கடன்கள் ரூ.18.28 இலட்சம் கோடிகள். மோடி அரசு கார்ப்பரேட்டுகளிடம் காட்டும் கரிசனை தான் வாராக்கடனாக மக்கள் சேமிப்பை தின்று விடுகிறது.
• இவ்வளவு நடந்திருப்பதை இத்தனை நாட்கள் வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது வேலைநிறுத்தம் செய்வதில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறதே?
ஒருபோதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக வங்கி ஊழியர்கள் இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக பல வேலைநிறுத்தங்களை நடத்தி இருக்கிறார்கள். அனைத்து சங்கங்களும் சேர்ந்து (சங்கிகளின் பி.எம்.எஸ் தலைமையிலான சங்கம் உள்பட) வங்கி ஊழியர்களின் ஐக்கிய அமைப்பு United Forum of Bank Unions (UFBU) ஒன்றை உருவாக்கி வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
• இவ்வளவு எதிர்ப்பு இருந்தபோதும் ஒன்றிய அரசு அதை பொருட்படுத்தவில்லையா?
காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு இந்த போராட்டங்களுக்கு பணியத் தயாராக இல்லை. இந்த ஆண்டின் (2021-22) பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் இரண்டு நாட்டுடமை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என அறிவித்தார்.அதனை அமல்படுத்தும் பொருட்டு தற்போது ( டிச.2021 ) நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் வங்கிகள் சட்டத்தில் திருத்தம் என்கிற மசோதாவை அறிவித்துள்ளனர்.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், நாட்டுடமை வங்கிகளில் அரசின் பங்கினை பூஜ்ஜியம் அளவுக்கு குறைக்க வழிவகை செய்யப்படும். அதன் பிறகு குறி வைக்கப்பட்ட இரண்டு வங்கிகள் (வங்கிகள் தனியார்மயமாக்கப்படும்) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை தற்போதைய இலக்கில் இருக்கின்றன.)
• அதன் பிறகு எஞ்சிய நாட்டுடமை வங்கிகள் இருக்குமே…ஏன் அஞ்ச வேண்டும்?
அப்படி கனவு காண வேண்டாம். 1990- கள் வரை 20 நாட்டுடமை வங்கிகள் இருந்தன. அவற்றை இணைத்து 12 ஆக சுருக்கியது மோடி அரசு. தற்போது 2 வங்கிகள் மீது குறி. அதன் பின்னர் மேலும் சில வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டு ஒன்றிரண்டு நாட்டுடமை வங்கிகள் மட்டுமே இருக்கும். ஒன்றிய அரசைப் பொறுத்தமட்டில் ஸ்டேட் வங்கி தவிர ஏனைய அனைத்து வங்கிகளையும் தனியார்மயமாக்குவது, ஸ்டேட் வங்கியில் கூட அரசின் பங்குகளை குறைத்துக்கொண்டு பெயரளவுக்கு அரசு வங்கியாக வைத்துக் கொள்வது என்பதை திட்டமாக வைத்துள்ளது.
• நாட்டுடமை வங்கிகள் திறமையாக இயங்கினால் தனியார் வங்கிகளை தவிடுபொடியாக்கலாமே?
இப்போது கூட பொதுத்துறை வங்கிகள் சாத்தியமான அளவு திறமையாகத் தான் இயங்குகின்றன. சுமார் 40,000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பணியாளர் பற்றாக்குறை அதிகரிக்கிறது. வேலைச்சுமையும் அதிகரிக்கிறது. ஆனாலும், ஏற்கனவே சொன்னவாறு ரூ16 இலட்சம் கோடிகளுக்கு மேல் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதே.
ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அரசு / பொதுத்துறைகளை விட தனியார் துறை திறமையாக இயங்குவதாக வைத்துக் கொள்வோம். கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. நட்டமாகி இருக்கின்றன. திவாலாகி இருக்கின்றன. அதனால், வாங்கிய கடனை கட்டமுடியாமல் நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். இதற்கு என்ன அர்த்தம்? தனியார்துறை ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எந்த வகையிலும் திறமையானதல்ல.
படிக்க :
’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
கார்ப்பரேட்டுகள் VS உழைக்கும் மக்கள் : அரசு யார் பக்கம் ?
• மத்திய , மாநில அரசுகளின் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவே கிடையாதா?
அப்படியெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. வங்கி ஊழியர் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி/ தொழில்வாரி சங்கங்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வங்கி ஊழியர்கள் சங்க ஐக்கிய அமைப்பும் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய தயாராகி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மக்கள் கண்டிராத வெற்றியை விவசாயிகளது நெடிய போராட்டம் சாதித்திருக்கிறது. நாடே இந்த வெற்றியை கொண்டாடுகிறது. இந்த வெற்றியில் கொண்டாட்டத்தை தாண்டி கற்கவும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. கடந்த கால போராட்டங்களிலிருந்து கற்போம்.
உழைக்கும் மக்களது ஒற்றுமையைக் கட்டியமைப்போம். காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கெதிரான களம் காண்போம்.
இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க