திரு. அருள் எழிலன் அவர்களே நீங்கள் யார் பக்கம்?
பாக்ஸ்கான் மறியல் – நாம் தமிழர், இடதுசாரிகள், சில அரசு ஊழியர்கள் பரப்பிய வதந்தி!” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் திரு. அருள் எழிலன் அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வட இந்தியாவில் மதக்கலவரங்கள் பரவுவதற்கு வதந்திகள் காரணமாக இருக்கின்றன. இங்கே தங்கள் அரசியல் மாறுபாடுகள் உள்ளவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு வதந்திகளை பரப்புகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
மேலும், குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு தரமற்ற உணவுகள் கொடுக்கப்பட்டதாகவும் அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாகவும் அது ஆலைவாயில் போராட்டமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
போராடியவர்களில் 8 பேரை போலீசார் கொண்டு சென்று கொன்று விட்டதாக வதந்தி பரவியதால் பலமணிநேரம் சாலைகள் முடங்கியதையும் குறிப்பிடுகிறார்.
படிக்க :
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
இடதுசாரிகள் எனப்படுவோர் இப்போதும் இந்த வதந்தியை பரப்புவதாகவும் அவர்களில் சிலர் அரசு ஊழியர்களாக இருப்பதாகவும் தெரிவித்து போலீசுக்கு போட்டு கொடுக்கின்ற வேலையையும் சிறப்பாக செய்கிறார்.
வட இந்தியாவில் நடைபெறும் பார்ப்பன பாசிச சக்திகளின் திட்டமிட்ட கலவரத்தையும் பன்னாட்டு நிறுவனமான பாக்ஸ்கான்-க்கு எதிரான பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் ஒன்றாகச் சமப்படுத்துவதன் மூலம் அவர் யார் பக்கம் நிற்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வதந்திகளை பரப்பியதாக கூறும் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும்  என்பதுதான் அவர் வைக்கும் மறைமுகமான கோரிக்கை.
திரு அருள் எழிலன் முகநூல் பதிவு
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகத்தான் சி.ஐ.டி.யூ. தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான தோழர் வளர்மதியை டிசம்பர் 18 முதல் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.
பெண் தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், இந்தப் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் திமுக அரசின் அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
10 பேர் தங்கக் கூடிய அறையில் 20 பேர் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 20 பேருக்கு ஒரு கழிவறை என்றால் எப்படி அங்கே இருக்க முடியும்? இப்படி ஒரு சூழலில் நாம் இருந்திருந்தால் எப்படி ஒரு முறையான போராட்டத்தை நடத்த முடியும்? 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்ற எதுவும் முறையாக இல்லாத இந்தச் சூழலில் சமூகத்தில் முறையான பண்பாட்டையும் முறையான ஒரு போராட்டத்தையும் எதிர்பார்ப்பது தான் அறிவீனம்.
இன்று காலையில் சி.ஐ.டி.யூ.வின் தோழர்கள் பலர் போலீசார் கடுமையாக தாக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்திருக்கின்றன. பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாக போலீஸ் தாக்கியதாகவும் இதற்கு காரணமான மாவட்ட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தரம் கெட்ட உணவினால் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இதுவரை விடுதிக்குத் திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதுதான் தொடக்கப் பிரச்சனை. மையமான பிரச்சனை என்பது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அவல நிலையும் தான்.
பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இப்பிரச்சனை தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அடுத்த நடவடிக்கையை தொழிலாளர்கள் வேறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
தரமற்ற உணவு வழங்கிய விடுதி மேலாளர் அப்பொழுதே கைது செய்யப்பட்டிருந்தால் இதற்கு காரணமான பாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வதந்தியை பரப்பி இருந்தாலும் ஏன் இந்த பிரச்சனை எழுகிறது?
போராடும் பெண் தொழிலாளர்கள் அத்துமீறும் போலீசு
பெண் தொழிலாளர்களின் நீடித்த அந்தப் போராட்டம், தமிழக அரசிடமும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடமும் “மருத்துவமனையில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு தாங்களே பொறுப்பு” என்று எழுதி வாங்கி இருக்கிறது. இதுதான் தமிழக தொழிலாளி வர்க்கம் கற்றுக்கொள்ள வேண்டியது ஆகும்.
போராடுகின்ற தொழிலாளர்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் என்பதும் ஒரு முறைக்குள் வரவில்லை என்பதும் பலரும் சொல்லுகின்ற குற்றச்சாட்டு.
தொழிலாளர்கள் பல இடங்களில் பிரித்து தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்கள், விவரம் ஏதும் பெரிய அளவில் அறியாதவர்கள்.
தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு எரிமலையாய் வெடித்தார்கள். அவர்கள் ஆங்காங்கே தங்களுக்கு தெரிந்த செய்தியை வைத்துக் கொண்டு போராட துவங்குகிறார்கள். அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய தமிழக அரசும் நிறுவனமும் அதை அடக்குமுறையாக கையாண்டதன் விளைவாகத்தான் சாலைகளையும் முடக்கினார்கள். முறையற்ற வகையில் அரசும் நிறுவனமும் நடந்து கொண்டதற்கு எதிர்மறையாகவே முறையற்ற போராட்டம் துவங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றம் அல்ல, கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை அவ்வளவுதான்.
தொழிற்சங்க வரலாற்றையும் தொழிற்சங்க உரிமைகளையும் கற்றுத் தேர்ந்து அந்தத் தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்னணியில் நிற்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்களுக்கு தொழிலாளி வர்க்க உணர்வை ஊட்டுவது தொழிற்சங்கத்தின் கடமை என்பதையும் இந்த போராட்டம் உணர்த்துகிறது.
முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு பிரச்சனை என்றால் எல்லா இடங்களுக்கும் ஓடிச்சென்று ஆதரவளித்த  மு.க. ஸ்டாலின், இங்கே வந்திருக்க வேண்டியதுதானே.
அவ்வேளையில் அவரோ பங்காரு அடிகளாருக்கு சால்வை போர்த்திக்கொண்டிருந்தார். இதைப்பற்றி அருள் எழிலன் போன்றவர்கள் ஏன் எழுதுவதில்லை.
எரிமலை வெடிப்பதற்கு ஒருபோதும் வதந்திகள் பயன்படுவதில்லை. இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல, பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்? அவர்களின் நோக்கம் திமுக அரசின் மீது எவ்வித குறையும் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மட்டுமல்ல. இந்த அரசின்,  ஆளும்வர்க்கத்தின் தூண்களாகவேத்தான் இருக்கிறார்கள்.
பாசிசத்தை வீழ்த்த திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பலரும் தங்கள் வேட்டி சட்டை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்று கூறிவந்தவர்களில் சிலர் கூட தேர்தலில் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்தி வலியுறுத்தி திமுக-வின் வாயாகவே மாறி போனார்கள்.
பாசிசம் என்றால் என்ன? அரசு என்றால் என்ன? அது யாருக்கு செயல்படும் என்பதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்கள். கடவுள் மீதான மூடநம்பிக்கை போல வேறுவழியில்லை என இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
கடந்த ஏழு மாத கால ஆட்சியில் மக்களின் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
அன்றாடம் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுக அரசை எப்படி காப்பாற்றுவது என்பதையே அனுதினமும் யோசித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு,  பெண் தொழிலாளர்களின் இந்த போராட்டம் கொடுத்த அச்சமே இப்படி எல்லாம் அவர்களை சிந்திக்க வைக்கிறது.
படிக்க :
ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ
எழும்பூர், கொளத்தூர், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படும் மக்களின் போராட்டங்கள் அரசை நாறடிக்கச் செய்திருக்கும் இந்த சூழலில்தான், பாக்ஸ்கான் போராட்டம் எரிமலையாய் வெடித்து இருக்கிறது.
தாங்கள் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
அதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
நெருக்கடியான காலகட்டங்களில் ஒவ்வொருவரும் யார் என்பதை வரலாறு அறிவிக்கிறது. தான் ஒரு சாதி வெறியன்தான் என்பதை கண்மணி குணசேகரன் தெரிவித்தார்.
அருள் எழிலன் அவர்களோ தான் ஆளும் வர்க்கத்துக்கானவர் என்பதை அறிவித்திருக்கிறார்.
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” தோழர் மாவோ சொன்னது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் வர்க்கம் இருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள்.

மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.

3 மறுமொழிகள்

 1. ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவது கூடாது என்று சொல்ல வருகிறீர்களா? அகற்றப்படும்
  மக்களுக்கு அதற்கு மாற்று நிவாரணம் கேட்க
  வேண்டுமேயொழிய அரசை விமர்சிப்பது தவறானது. கையாலாகாத அரசு என்பதெல்லாம் உங்களின் வன்மத்தைக் காட்டுகிறது. அப்படியென்றால் நீங்கள் அதிமுகவைப்போன்று எவ்விதப்பணியும் செய்யாமல் ஆட்சி நடத்தவேண்டும் என நினைக்கிறீர்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.இல்லையெனில் சென்னையில் முன்னேற்றம் என்பது கேள்விக்குரியாகிவிடும்.

  • சென்னையில் முன்னேற்றம் என்பதை யாருக்கான முன்னேற்றம் என்பதோடு சேர்த்து சொன்னால், சிறப்பாக இருக்குமே அண்ணா ….

   ஸ்மார்ட் சிட்டியில், மாதம் ஆறிலக்க சம்பளம் வாங்கும் கனவான்கள் சொகுசாகப் பயணம் செய்வதற்கு, ஆண்டுக்கு ஆறிலக்க வருவாய்கூட பெற முடியாத சென்னை பூர்வகுடிகள் வீடில்லாமல் விரட்டியடிக்கப்படுவதற்குப் பெயர்தான் முன்னேற்றமா அண்ணா ?

 2. சரியான நேரத்தில் வந்திருக்கும் தேவையான அறிக்கை.
  பாக்ஸ்கான் பெண்தொழிலாளர்கள்,3 மாவட்டங்களில் உழைப்புக்கொட்டடிக்குள் வதைப்படுகிறார்கள்.கொரனோ முடக்கத்திற்கு பிறகு தங்கள் குடும்பத்திற்கு கால்வயிறு கஞ்சிகிடைக்குமே என்று பலநூறு மைல்தாண்டி வந்திருக்கும் பெண் தொழிலாளர்கள்கூட அல்ல பெண் குழந்தைகள் இவர்கள்.
  கார்ப்பரேட் கும்பலுக்கு இரையாகும் இவர்களில் பலர் 17 வயதிற்கும் குறைவானவர்கள். தொடக்கப்ப பள்ளியில் மதியம் போடும் உணவுக்காக 3 வயதிலேயே 5வயது என்று கிராமங்களில் 1 ஆம் கிளாஸ் சேர்ந்தவர்கள்.இப்படி,15,16 வயதிலேயே+2வைஅரைகுறையாகமுடித்து,முதன்முறையாக சென்னைக்கு பஸ்ஏறி கூலி அடிமையாக குவிந்தவர்கள்.
  இவர்களின் ரத்தத்ததை குடிக்கும் கார்பரேட் கும்பலின் கங்காணிதான் இந்தஅரசு.
  தொழிலாளர்கள்.போராட்டத்தில் இறங்கியதன்மூலம் அவர்கள் வேலை எந்நேரமும் பறிபோகலாம்.தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையே பிணைவைத்துள்ளனர்.
  சில மணிநேர போக்குவரத்து பாதிப்புக்கே துடிக்கும் ஸ்டாலின் அரசு மறுபுறம் சாஸ்த்தா பல்கலைக்கழகம் ஆட்டையைப்பபோட்டஅரசுநிலத்தைஉச்சநீதிமன்றஉத்தரவுக்குப்பிறகும் சீண்டாமல் இருப்பதோ வனத்திருடன் ஈஷாவுக்கு கிளின் சர்டிப்பிகேட் கொடுத்ததோ தற்செயல் அல்ல.
  அருள் எழிலன் தரப்பு ஊடக அணியின் கவ்வுரவ தலைவர் இதே அலைவரிசையில் பல தலைப்புகளில் ஊடகங்களில் விவாதிக்கிறார். அதில் ஒன்று, தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மூச்சுவிட நேரம் கிடைக்கும் என்று சொன்னீர்களே..என்று நெறியாளர் கேட்டால்.. போலீசு அடிக்கதான் செய்யும்.துப்பாக்கியாலும் சுடும்..அதற்கு என்ன இப்போ..நீதான் துணிச்சலாக போராடவேண்டும் என்கிறார்.ஆக,இவர்கள் ஒருமுடிவோடு செயல்படுகிறார்கள்.ஊடகங்களின் தொடர்பு எல்லையைவிட்டு நகர மாட்டார்கள். இந்த கருத்து கந்தசாமிகளுக்கு மில்லிமீட்டர் சுத்தமாக ஊடக வெளிச்சத்தின் பரப்பளவின் அளவு தெரியும்.
  https://youtu.be/YI_iPrxoHp4
  நேரம் இல்லாதவர்கள் 27 நிமிடங்களிலிருந்து பார்த்தால் மூச்சுவிட நேரம் பற்றியான விளக்கத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க