SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர்கள் மகத்தான வெற்றி !
SRF மணலி தொழிலாளர்களை வாழ்த்துகிறோம் !
31.01.2021 அன்று நடந்து முடிந்த SRF மணலி பொதுத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையை ஏற்றுக் கொண்ட எமது NDLF – தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் 5 பேரை மகத்தான வெற்றி பெறச் செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகள், அச்சுறுத்தல்களையும் மீறி நமது அணிக்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து தொழிலாளர்கள் தங்களது மிகப் பெரிய நம்பிக்கையை பதிவு செய்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் பா. விஜயகுமார் (முன்னாள் பொருளாளர், பு.ஜ.தொ.மு) அவர்கள் வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கையானது, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏனைய மூன்று வேட்பாளர்களது ஓட்டுக்களின் கூட்டு எண்ணிக்கையை விட 52 ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது. நீண்ட காலம் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த திரு. சுப.தங்கராசுவுக்கு 65 ஓட்டுகளும், பு.ஜ.தொ.மு-வின் ஏகபோக உரிமையாளராக கூறிக்கொண்ட சீர்குலைவுவாதிகள் அணியிலிருந்து போட்டியிட்ட திரு. சுதேஷ்குமாருக்கு 32 ஓட்டுக்களும்தான் கிடைத்தன.
படிக்க :
ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
துணைத் தலைவராக போட்டியிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளரும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் & டெக்னீசியன்கள் சங்கத்தின் நிறுவன பொதுச் செயலாளருமான தோழர் சி.வெற்றிவேல் செழியன் நான்குமுனைப் போட்டியில் 140 ஓட்டுகள் பெற்று வெற்றிவாகை சூடினார். சீர்குலைவுவாதிகள் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. பார்த்தசாரதி வெறும் 38 ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.
சீர்குலைவுவாதிகளது சீடராகவும், 4 முறை பொதுச்செயலாளராகவும் இருந்த திரு. பி.ஆர். சங்கர் வெறும் 48 ஓட்டுகள் பெற்று நமது முன்னணி தோழர் வி. தேவராஜ் அவர்களிடம் தோற்றுப்போனார்.
சீர்குலைவுவாதிகளின் இன்னொரு முக்கியப் புள்ளியான முன்னாள் மாநில துணைத்தலைவர்) திரு. சதீஷ் வெறும் 48 ஓட்டுகள் வாங்கி எமது தோழர் பொ.பிரகாஷ் அவர்களிடம் மண்ணைக் கவ்வினார். நான்குமுனைப் போட்டியில் இன்னொரு முன்னணி தோழரான எம்.எஸ்.ஆனந்த் முதன்முதலாக போட்டியிட்ட தேர்தலில்) 3-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்று இணைச்செயலாளராக வென்றார்.
நமது அணி தோழர்கள் சீர்குலைவுவாதிகளை விட அதிகபட்சம் 5 மடங்கு ஓட்டுகளைப் பெற்று, நாம்தான் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு – வின் உண்மையான வாரிசுகள் என்பதை நிலைநாட்டியுள்ளனர். இது நமது தலைமைக்கும், அரசியல் – அமைப்பு உறுதிக்கும் கிடைத்த வெற்றி.
கடந்த ஜனவரி 2021 முதலாகவே தொழிற்சங்கத்தின் மீதும், தொழிலாளர்கள் மீதும் நிர்வாகம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அப்போது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த சீர்குலைவுவாதிகளது சீடரும், தலைவர் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் வடசென்னை தொழிற்சங்க முகமாக இருந்தவரும் சங்கத்தின் உரிமைகளை நிர்வாகத்துக்கு பலியிட்டனர்.
நமது அணி தோழர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்தது. முகநூலில் லைக் போட்டவருக்கு சஸ்பென்சன் கொடுக்கின்ற அளவுக்கு அடக்குமுறை தலைவிரித்தாடியது. எதிர்பார்ப்புகள் நிராசையானது. சங்கத்தலைமை வெறும் பொம்மையாக இருந்தது. இந்த தருணத்தில் சீர்குலைவுவாதிகள் நம்மீது அவதூறுகளை பொழிந்து கொண்டிருந்தனர்.
ஆனாலும், இந்த அவதூறுகளை புறந்தள்ளிய தொழிலாளர்கள் நிர்வாகத்தை எதிர்க்கொள்வதற்கு பொருத்தமான அரசியல் – அமைப்பு ஆளுமை கொண்ட அணி நமது அணிதான் என்பதை தொழிலாளர்கள் மிகச்சரியாக உணர்ந்துள்ளனர். இந்த உணர்தல் மற்றும் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றென்றும் உண்மையானவர்களாக இருப்போம் என்பதை தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.
இந்த வெற்றி தொழிலாளர்களது வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த வர்க்க ஒற்றுமையை கூட்டாக பேணிப்பாதுகாக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு
தொடர்புக்கு : 8056386294