நிர்வாகத்தின் அடாவடித்தனம் – தொழிற்சங்கத்தின் துரோகம் :
இரட்டை நுகத்தடிக்கு எதிரான மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் !
சென்னை மணலியில் இருக்கும் SRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் 09.8.2021 அன்று ஆலைவாயில் முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தை போலீசு, நிர்வாகம், தொழிற்சங்கம் ஆகிய 3 தரப்பும் சேர்ந்து தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையாக தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் (ஏப்ரல்-2020) மீன்வலை தயாரிக்கும் பிரிவை (IYB) எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடுவதாகவும், குவாலியர் போன்ற தொலைதூர ஆலைகளுக்கு இடமாற்றம் செய்வதாகவும் நிர்வாகம் சுமார் 140 தொழிலாளர்களுக்கு கடிதம் அனுப்பியது. கடுமையான ஊரடங்கு நிலவிய காலகட்டத்திலும் அன்றைய பொதுச்சங்க தலைமை (பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் தலைமையிலான நி.கு) தொழிலாளர் துறையை அணுகி தொழிற்தாவா எழுப்பியது.
படிக்க :
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
அடுத்தடுத்த மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாய இடமாற்றத்துக்கு தடையாணை வாங்கியது. செப்டம்பர் 2020 வரை மாதாந்திர ஊதியமும், அக்-நவம்பரில் இடைக்கால பராமரிப்பு தொகையும் வாங்கிக் கொடுத்தது. தொழிற்தகராறு மற்றும் உயர்நீதிமன்ற வழக்கு ஆகிய இரு முனைகளிலும் தடுப்பரண் செய்யப்பட்டது.
ஜனவரி 2021-ல் நடந்த பொதுத்தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தலில் தி.மு.க-வின் தொழிற்சங்க பிரமுகர் திரு.ராஜகாந்தம், ம.தி.மு.க-வின் தொழிற்சங்க அமைப்பின் (எம்.எல்.எப்) பொதுச்செயலாளர் திரு.அந்திரிதாஸ் தலைமையிலான அணி, மேற்படி IYB தொழிலாளர்களது பிரச்சினையை எவ்வித போராட்டமும், வழக்குமின்றி தீர்க்கப்போவதாக வாக்குறுதி அளித்து தேர்தல் களம் கண்டது. தோழர் விஜயகுமார் தலைமையில் அந்த தேர்தலை பு.ஜ.தொ.மு எதிர்கொண்டது. தலைவர் பதவிக்கு தோழர் விஜயகுமார், திரு.ராஜகாந்தம் ஆகிய இருவரும் சம ஓட்டுகள் வாங்கிய நிலையில் குலுக்கல் முறையில் ராஜகாந்தம் தலைவராக தேர்வானார். செயலாளர் பதவிக்கு பு.ஜ.தொ.மு அணியிலிருந்து திரு.பி.ஆர்.சங்கர் இரண்டாவது முறையாக தேர்வானார். (பு.ஜ.தொ.மு பிளவின் போது இவர் சீர்குலைவுவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு போய்விட்டார்)
புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டவுடன் நிர்வாகத்துடன் நடந்த அறிமுகக் கூட்டத்தில், எல்லா பிரச்சினைகளையும் எவ்வித போராட்டங்களுமின்றி பேச்சுவார்த்தையில் தீர்க்கப்போவதாக திரு.ராஜகாந்தம் சவடால் அடித்தார். இரண்டாவது முறையாக தேர்வான செயலாளர் திரு.சங்கர் ஒருபடி மேலே போய், கடந்த முறை தலைமையில் இருந்தவர்கள் (தோழர் விஜயகுமார்) சொல்படிதான் நடந்தேன் என்று ஆள்காட்டி வேலை செய்து நிர்வாகத்துக்கு சமாதானச் செய்தியனுப்பினார்.
நாட்கள் ஓடின. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த தொழிற்தாவா மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெறுவதாக நிர்வாகத்துடன், புதிய தொழிற்சங்கத் தலைமை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. சங்கத்தின் செயலாளர் கையெழுத்திடாமல், தலைவர் ராஜகாந்தம் கையெழுத்து போட்ட ஜனநாயகவிரோத செயலை வெளிப்படையாக கண்டித்து போராட இந்த ஆலையை தமது கோட்டை என்று சொல்லிக் கொண்ட சீர்குலைவுவாதிகள் பதுங்கிக் கொண்டனர். இன்னொரு கேலிக்கூத்தாக, தொழிற்தகராறு எழுப்பினாலோ, வாபஸ் பெற்றாலோ பொதுக்குழுவில் முடிவெடுக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியைக்கூட திரு.ராஜகாந்தம், திரு.அந்திரிதாஸ், திரு.பி.ஆர்.சங்கர் அடங்கிய நிர்வாகக்குழு காற்றில் பறக்கவிட்டது.
இதற்கிடையில் தி.மு.க ஆட்சியிலும் அமர்ந்தது. இனி பாலாறும், தேனாறும் ஓடும் என சவடால் அடித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினார், திரு.ராஜகாந்தம். நிர்வாகமோ, 10 முதல் 30 வருடங்கள் வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு அற்பத்தொகையை இழப்பீடாகத் தருவதாக சொன்னது. வேலை தர மறுத்துவிட்டது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான நீம், அப்ரண்டீஸ் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது.
இதை எல்லாம் கேள்வி கேட்டு கலகம் செய்ய வேண்டிய சங்கமோ, தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் இழப்பீடு வாங்கினால் அதை தடுக்க மாட்டோம் என்று அறிக்கை விட்டு, தொழிலாளர்களை கைகழுவி விட்டது. இந்நிலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேறுவழியின்றி இழப்பீடு வாங்கிக் கொண்டனர். அப்படி இழப்பீடு வாங்கும்போது கூட சொந்த விருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்வதாக எழுதி வாங்கிக் கொண்டது. நிர்வாகத்தின் இந்த நயவஞ்சகத்தைக்கூட தொழிற்சங்கம் எதிர்க்க திராணியற்று கிடந்தது. நிர்வாகமோ, ஒருபடி மேலே ஏறித்தாக்கத் தொடங்கியது. சங்க நிர்வாகிகள் பம்மத் தொடங்கினர்.
நிர்வாகத்துடனான முதல் பேச்சுவார்த்தையில், போராட்டத்தைவிட பேச்சுவார்த்தையில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக சவடால் அடித்த திரு.ராஜகாந்தம் பல்டியடித்தார். தொழிலாளர்கள் போராடத் தயாராக இல்லை என தொழிலாளர்கள் மீது பழியைப் போட்டார். செயலாளர் பி.ஆர்.சங்கரோ தலைவர் ராஜகாந்தத்தின் ராஜதந்திர ஆலோசனைப்படி தொழிலாளர் அமைச்சர், உள்ளூர் தி.முக. எம்.எல்.ஏ என ஓடிக் கொண்டிருந்தார், (கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு ஓட்டுகேட்ட சீர்குலைவுவாதிகளது பாடம் நல்ல பலனைத் தந்தது) இறுதியில் தொழிலாளர் அமைச்சர் உள்ளிட்ட அனைவரது பரிந்துரைகளும் மீண்டும் தொழிலாளர் துறைக்கே வந்து சேர்ந்தன.
எந்த அலுவலகத்தில் அவசர, அவசரமாக தொழிற்தாவாக்களை வாபஸ் வாங்கினார்களோ அதே அலுவலகத்துக்கு நடையாய் நடக்கின்றனர். சட்டப் போராட்டத்தின் மூலம் விஜயகுமார் தங்களை தவறாக வழிநடத்திவிட்டார் என்று நிர்வாகத்திடம் மண்டியிட்டவர்கள், இப்போது சட்டத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறனர். இந்த சூழலில், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் ஆகிய இரு தரப்பின் மீதும் நம்பிக்கை இழந்த பல தொழிலாளர்கள், இழப்பீடு வாங்கினாலும், போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் கணிசமான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். கடந்த ஆண்டு எம்மை வழிநடத்திய தோழர் விஜயகுமார் தலைமை மீண்டும் வேண்டும் என்று குரலெழுப்புகின்றனர். ஆலையில் வேலை செய்து கொண்டிருக்கும் எஞ்சிய தொழிலாளர்களும் அந்த குரலையே எதிரொலிக்கின்றனர்.
நிர்வாகத்தின் அடாவடித்தனமும், அடக்குமுறையும் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் 09.8.2021 அன்று நடத்திய போராட்டம், எதிர்வரும் காலங்களில் நடத்தப்போகும் போராட்டங்கள் ஆகியவற்றுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
பு.ஜ.தொ.மு.,
சென்னை-திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்கள் .
தொடர்புக்கு ; 9444831578

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க