தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்டுகளும், அரசும் நடத்தி வருகின்ற தாக்குதல்கள், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் அவலம் ஆகியவற்றை எதிர்த்து புரட்சிகர எழுச்சியின் தலைமை சக்தியாக திகழும் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதும், போராட்டங்களை கட்டியமைப்பதும் முக்கிய தேவையாக இருக்கிறது.
இதை இலக்காக வைத்து அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டுள்ளது. பு.ஜ.தொ.மு, மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக உள்ளது.
MASA சார்பில் எதிர்வரும் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்திலிருந்து புறப்படும் இந்த பேரணி கீழ்க்காணும் 7 கோரிக்கைகளை ஏந்திச் செல்கிறது.
1) தொழிலாளருக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறு!
2) பொதுத்துறைகளையும் வளங்களையும் தனியார்மயமாக்குவதை நிறுத்திடு!
3) தொழிற்சங்க உரிமை,போராடும் உரிமை,வேலை நிறுத்த உரிமை ஆகியவற்றை நிபந்தனையற்ற, அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமை என அறிவித்து உத்திரவாதம் செய்!
4) காண்டிராக்ட், நீம், FTE உள்ளிட்ட அனைத்து வேலைமுறைகளையும் ஒழித்திடு.
60 வயது வரை நிரந்தர வேலை, பணி ஓய்வுக்குப் பின்னர் பென்சன் பெறும் உரிமை ,மகப்பேறு விடுப்புரிமை, அனைத்து வகை சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதப்படுத்து!
5) சம வேலைக்கு சம ஊதியம், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.1000/ வேலையின்மைக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.15000, ஊரகப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புரிமை, பணிப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, குடியிருப்பு, கல்வி, நலவாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்!
மேலும் அலைந்து திரியும் பணித்தன்மை கொண்ட ஜிக் ஊழியர்கள், அங்கன்வாடி, கிராம நலச் சேவகர்கள், சத்துணவு ஊழியர்கள், IT & ITES ஊழியர்கள், வீட்டு வேலைப்பணியாளர்கள் ஆகியோரை ” தொழிலாளர் ” என்கிற வரையறைக்குட்படுத்தி அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்து!
6) உழைக்கும் மக்களிடையே வெறுப்பு, பிளவுப்படுத்தும் அரசியலை நிறுத்திடு!
7) பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்து
மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து MASA நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் முன்னெடுத்து செல்கிறது. அதனடிப்படையில் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதி, ஆலை வாயில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தொடர்பு எண் : 7397404242