ஜா புயலுக்கு பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களின் பல கிராமங்கள் அனைத்து தொடர்புகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. தற்போது நான்கு நாட்களாக அந்தந்த கிராம மக்களே களத்தில் இறங்கி சாலைப் போக்குவரத்து, மற்றும் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்தும் வேலைகளை முடிக்க முடியவில்லை.

குறைந்தபட்சம் முக்கிய சாலைகளில் விழுந்திருந்த மரத்தை மட்டும் அதன் ஓரமாகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் அந்த வேலையையே செய்ய முடியாமல் பல நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும் இருக்கிறது. இந்த  இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் பெரிய அளவுக்கு செய்ய முடியவில்லை.

அரசே நிவாரணப் பணிகளை மேற்கொண்டால் ஒழிய அவை சாத்தியமில்லை என்னும் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக மின் கம்பங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கின்றன. பல முக்கியமான சாலைகளையே சீரமைக்காத அரசு நிச்சயம் குக்கிராமங்களை கண்டு கொள்ளப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள பல கிராமங்கள் வெளிச்சத்தை பார்த்து ஐந்து நாட்கள் ஆகிறது. இன்னும் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. இதற்கே இந்த தாலுகாவில் பாதிப்புகள் அதிகம்தான் என்றாலும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளைவிட குறைவுதான். இருப்பினும் இந்த இடத்தை சீரமைக்கவே தடுமாறி வருகிறது அரசு. குறைந்தபட்சம் மின்துறை ஊழியர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய தேவையைக்கூட பூர்த்தி செய்யவில்லை அரசு. கிராம மக்களே அவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

கடலூரில் இருந்து வந்திருந்த மின் ஊழியர்கள், “நாங்க இருபது பேர் 18-ம் தேதிதான் வந்தோம். வந்ததுல இருந்து இரண்டு நாள்ல 13 போஸ்ட் தான் நட முடிஞ்சது. ஒரு போஸ்ட் நடறதுக்கு அஞ்சி மணி நேரம் ஆவுது. என்ன பண்ண முடியும். இயந்திரம் இருந்தா மட்டும் போதாது. மனித உழைப்பு அவசியமா இருக்கு. அது ரொம்ப குறைவா இருக்கு. இருந்தாலும் எங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்யுறோம். மழை பெய்யிறதால தரையும் ஈரமா இருக்கு. போஸ்ட்ட தூக்கி நட்டதும் மேல ஏற முடியல. சாய ஆரம்பிச்சிடுது. அதுக்கேத்த நேரம் ஒதுக்குறதே போதும்னு ஆகிடுது. மம்மட்டி, கட்டப்பாரை எதுவும் போதுமானதாவும் இல்ல. அதுவே பெரிய பிரச்சனை. காலையில ஏழரை மணிக்கு வேலைய ஆரம்பிச்சா நைட்டு எட்டு மணி வரைக்கும் போகுது… குடிக்க தண்ணி கூட இல்ல. இருப்பினும் மக்கள் படுற கஷ்டத்தை பாக்க முடியல…. இப்ப செய்யிற வேலை ஒரு வருஷத்துக்கான வேலை. இது இன்னும் எத்தன நாள்ல முடியும்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சேதாரம் ஆகி இருக்கு” என்கிறார்கள்.

இந்த தாலுகாவில் வசிக்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள்… பார்க்கலாம்!

பாலன் – வடுவூர்.

புயல் அடிச்சி ஓஞ்சதும் நாங்களே எங்க கிராமத்தை சரி செய்ய ஆரம்பிச்சிட்டோம். முதல்ல வீட்டுல இருந்த மரத்தை எல்லாம் சரி செய்தோம். அது வரைக்கும் அரசாங்கத்துல இருந்து யாரும் வர்ல. அப்புறம் நாங்களே ஈ.பி ஆபிசுக்கு போயிட்டு எழுதி கொடுத்தோம். அதுக்கப்புறமா வந்தாங்க. மொத்தம் 240 போஸ்ட் எங்க ஊர்ல. அதுல 140 வரைக்கும் சாஞ்சிடுச்சி. எங்க பக்கம் எல்லாம் முடிய எத்தன நாள் ஆவும்னு தெரியல.

புருஷோத்தமன் மற்றும் ராமகிருஷ்னன், மூவர் கோட்டை.

வடுவூர் முதல் கொண்டையார் வரை மின்சாரம் வந்து விட்டதாக சொல்கிறார்கள்… இன்னும் இரண்டு நாட்களில் எங்களுக்கும் வந்து விடும் என்று சொல்கிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் அதனை நம்புகிறோம்.  இன்னும் நான்கு கிலோ மீட்டர் வரை சரி செய்ய வேண்டும். நாங்களே சாலையில் இருந்த மரங்களை அறுத்து வழியை ஏற்படுத்தினோம். ஊரே சேர்ந்து இருபதாயிரம் செலவு பண்ணி சாலையை சீரமைச்சி இருக்கோம்.

படிக்க:
சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறி கொடுத்தார் ! நேரடி ரிப்போர்ட்
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

குடி தண்ணீர் கிடையாது. இந்த ஆத்து தண்ணி மட்டும் இல்லையென்றால் எங்க கதை சிரிப்பாய் சிரித்து விட்டிருக்கும். 200 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது. அதனை இறைக்க கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். வெளியில தனியார் வந்து டேங்கை நிரப்ப மணிக்கு 1500 ரூபா கேக்குறான். பேட்டரிக்கு சார்ஜர் ஏத்த 500 லிருந்து 750 வரைக்கும் வாங்குறானுங்க.. இன்னா பன்ன முடியும்???

ஒக்கநாடு கீழையூர் பெண்கள்

புதிய வீடு கட்டும்போது அமைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத செப்டிக் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டிருந்தனர். “இப்படி ஒரு நிலை வரும்னு நாங்க நெனச்சிக்கூட பார்த்ததில்ல. மூனு நாளா தண்ணிக்கு எங்க எங்கயோ அலஞ்சி கெடந்தோம். இந்த தொட்டி இருக்கிற நெனப்பே வர்ல…. முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கயும் அலஞ்சிருக்க மாட்டோம்”.

பாலமுருகன், தி.மு.க., ஒக்கநாடு பஞ்சாயத்து.

எங்க பஞ்சாயத்துல 150 கிராமம் இருக்கு சார். மொத்தமா நாற்பதாயிரத்துக்கு மேல் தென்னை மரங்கள் அடியோட புடுங்கி கிடக்கு.  50 ஈ.பி பாயிண்ட்ல 30 பாயிண்ட் சேதமடைந்து இருக்கு. கிட்டதட்ட 7000 போஸ்ட் மொத்தமா முறிஞ்சிடுச்சி. இப்ப இருப்பு இருக்கிறது வெறும் 1500 தான். அரசாங்கம் அறிவிப்புல தான் இருக்கே தவிர செயல்பாட்டுல இல்ல. புயல் வந்து 4 நாள் ஆவுது. இதுவரைக்கும் 25% வேலைதான் முடிஞ்சிருக்கு. இன்னும் முழுசா முடிய 45 நாள் ஆகும். மெட்டிரியல் இருந்தா 15 நாள்ல முடிஞ்சிடும்.ஆனா அதுக்கேத்த மெட்டிரியல் இல்ல. கணக்கெடுப்புக்கு வரல, பாதிக்கப்பட்டவங்கள பார்க்க வரல…. எதுவுமே செய்யல. மக்களே எல்லாத்தையும் செஞ்சிக்குறாங்க.  மின் ஊழியர்களுக்கு கிராம மக்கள்தான் முடிஞ்சத செய்யுறாங்க!

சசிக்குமார்- முக்குளம் சாத்தனூர்.

வீடு இடிஞ்சி விழும்போதெல்லாம் என் பசங்களோட இந்த வீட்டுக்குள்ளே தான் சார் இருந்தேன். ஆடு, மாடு கட்டியிருந்த கொட்டாவும் சாஞ்சிடுச்சி. எப்படியோ உசுரு மிஞ்சினதே என் புள்ளங்களோட நல்ல நேரம்தான்.

சாமி அய்யா- சிவக்குமார்-இளையராஜா- முக்குளம் சாத்தனூர்.

நீடாமங்கலம் யூனியன்ல 38 பஞ்சாயத்து, 100-க்கும் மேற்பட்ட கிராமம் இருக்கு சார். ஆனா இது வரைக்கும் எந்த அதிகாரியும் வந்து பாக்கல. எங்க ஊரு வி.ஏ.ஒ. மட்டும் வந்து பார்த்து குறிச்சிக்கினு போனாரு. அவ்ளோதான். அவரும் இன்னும் வர்ல. ஓவேல்குடி, முக்குளம், தளிக்கோட்டை, கருவாக்குறிச்சி காலனி, முக்குளம் தர்காசு இத சுத்தி இருக்க எந்த ஊர்லயும் வேலை நடக்கல…. இங்க அதிகம் தென்னை இல்ல.. ஆனா சோளம், நெல்லு, கடலை, மரவள்ளி இந்த மாதிரிதான் பயிர் வச்சிருக்கோம். வேற எந்த பொழப்பும் இங்க இல்ல. அப்படி இருக்கும்போது அரசாங்கம் வர வேணாமா? நாங்க மத்த நேரத்துல எதுவும் கேட்கல. இப்ப தண்ணி கூட இல்லாம இருக்கோம். இப்பயாவது வந்து உதவ வேணாமா? இங்க எல்லாம் அதிகம் குடிசைதான். எல்லா வீடும் தரை மட்டமா ஆயிடுச்சி. ஒரு ஆறுதலுக்காவது வர வேணாமா சார்… அதான் இப்ப எல்லா ஊர் மக்களும் போயிட்டு மன்னார்குடியில சாலை மறியல் பண்ணிட்டு வந்தோம்.!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க