ஜா புயலின் கொடூரக் கரங்கள் பல உயிர்களையும், பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரங்களையும் வாரிச்சுருட்டிச் சென்றுள்ளது. அதில் திருவாரூர் மாவட்டம் கருவாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த  ஒன்பது வயது சிறுவன் கணேசனும் அடக்கம்.

புயலின்போது மரம் விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசன்.

தங்கள் குழந்தையைப் பறிகொடுத்த  பிரதீப்பும், பாத்திமாவும் இழப்பைத் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். அவர்களுக்கு அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்தவரை ஆறுதல் தெரிவித்து சென்றனர்.

இத்தம்பதியினர் நாகப்பட்டினத்தில் இருந்து இடம்பெயர்ந்து கருவாக்குறிச்சி கிராமத்தில் முன்னாள் ஊராட்சித்தலைவர் குபேந்திரன் அவர்களின் தென்னந்தோப்பை காவல் காத்து வருகின்றனர். தோப்பில் விழும் மட்டைகள், தேங்காய்கள் இவற்றை சேகரித்து வைப்பது, பராமரிப்பது ஆகிய வேலைகளைச் செய்து வந்துள்ளனர்.

புயலின்போது மரம்விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசனின் குடும்பம்.

நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நாகப்பட்டினம் பகுதிக்கு உறவினர் ஒருவர் மூலம் வந்து, அங்கு காவலாளியாக பணிபுரிந்திருக்கிறார். இந்த சமயத்தில்தான் அப்பகுதியில் ஏற்கனவே சுனாமிக்கு தன் பெற்றோரை பலி கொடுத்திருந்த பாத்திமாவைச் சந்திக்கிறார். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து நாகப்பட்டினத்திலேயே வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள். குடும்பம் பெரிதாகிப் போனதால் வருமானம் பத்தாமல் போய் வறுமையில் உழன்று கொண்டிருந்தனர்.

போதிய வருமானம் இல்லாது வாழ வழியின்றி தவித்த நேரத்தில்தான், குறைந்த அளவாக இருந்தாலும், ஒரு நிலையான வருமானம், தங்க ஒரு இடம் என்ற அடிப்படையில் உறவினர்கள் மூலம் தகவல் தெரிந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த தென்னந்தோப்பிற்கு வேலைக்கு வந்துள்ளனர்.

பிரதீப் மற்றும் நடராஜ்.

இந்த தோப்பின் உரிமையாளர் தஞ்சையில் இருப்பதால் அவருடைய உறவினர் நடராஜன்தான் இந்த குடும்பத்திற்கான அரிசி பருப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்வது; மாதச் சம்பளத்தை பிரதீப்புக்கு வங்கியில் இருந்து பெற்றுத் தருவது; குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாது போனால் மருத்துவச் செலவுகளை கவனிப்பது போன்றவற்றைச் செய்துவந்துள்ளார். மேலும் அவரது பிள்ளைகளை கருவாக்குறிச்சியில் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டுள்ளார்.

இந்நிலையில் புயல் குறித்த செய்தி தெரிந்தபின்னர் அதற்கு முந்தைய நாளே (15.11.2018) மாலை 6 மணியளவில் பாத்திமா மற்றும் குழந்தைகள் தோப்பில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி அருகில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கியுள்ளனர். அன்றும் கூட இரவு 9 மணிவரை தோப்பில் இருந்துவிட்டு, அதன்பின்னர்தான் பிரதீப் அவரது மனைவி குழந்தைகள் தங்கியிருந்த நடராஜனின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் இரவு 12 மணியளவில் இருந்து புயல் சுற்றி சுழன்றடித்து மரங்களையும் பல வீடுகளின் கூரைகளையும் துவம்சம் செய்ய ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் சிறுவன் (இரண்டாவது குழந்தை) கணேசன் சிறுநீர் கழிக்க வெளியே சென்றுள்ளான். வாசலில் இருந்த ஒதிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து அச்சிறுவனின் மீது விழுந்து வீட்டு வாசலிலேயே மூச்சு பேச்சற்று போயுள்ளான்.

படிக்க:
மெயின் ரோட்ல நின்னு பாத்தா எங்க சேதம் எப்படித் தெரியும் ?
எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

வீட்டின் உரிமையாளர் நடராஜனும் பிரதீப்பும் வந்து குழந்தையை மீட்டனர். கண்மூடி அசைவற்று கிடந்த சிறுவனை மடியிலேந்தி கதறியழுதுள்ளார் அவனது தாய் பாத்திமா. குழந்தை இறந்துவிட்டது என்பது உறுதியானதால் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார் நடராஜ். ஆனால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே, மன்னார்குடி அரசு பொது மருத்துவமனைக்கு உடலைக் கொண்டுவந்துவிடச் சொல்லியுள்ளனர். குழந்தையின் உடலைத் தூக்கிக் கொண்டு ஊர் மக்கள் தங்களது இருசக்கர வாகனத்திலேயே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கு உடற்கூறாய்வு செய்து முடித்து 18.11.2018 அன்று உடலைக் கொண்டுவந்து ஊரிலேயே அடக்கம் செய்துள்ளனர்.

பொதுவாகவே அந்தக் குடும்பத்தை வேற்று ஆளாக கருதாமல் சக ஊர்காரர்கள் போலவே அப்பகுதி மக்கள் நடத்தியுள்ளனர். அந்த குழந்தைகளும் கூட ஊர்காரர்களை அத்தை மாமா என உறவு வைத்து கூப்பிட்டு பழகி வந்துள்ளனர். இந்த ஊர் மக்கள் தங்கள் பகுதி பாதிப்பை பார்க்க எந்த அதிகாரிகளும் வரவில்லை என்பதால் மேலவாசலில் போராட்டம் நடத்தியதன் விளைவாக தாசில்தார் கருவாக்குறிச்சி பகுதியை பார்வையிட வந்துள்ளார். அப்போதும் கூட கிராம மக்கள்தான் குழந்தை இறந்த குடும்பத்தை பார்க்க வேண்டும் என அழைத்து வந்துள்ளனர்.

தோப்பில் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பும் மரங்கள் விழுந்து அவர்கள் உடமை முழுவதுமாக நனைந்து சேதமடைந்துள்ளதால் இப்போதுவரை, நடராஜன் வீட்டிலேயே குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.

அந்த ஊர்மக்களும் கூட, நம் ஊரை நம்பி பிழைக்கவந்த குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பிற்காக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்சம் அரசின் இழப்பீட்டை வாங்கித் தர உதவ வேண்டும் என கருதுகின்றனர். ஆனால் புயலைவிடவும் இரக்கமற்ற இந்த அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும்…?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க