புயல் வந்து மூனு நாளாகியும் யாரும் வரலனு மேலவாசல்ல போராட்டம் பண்ணினோம். அதுவரைக்கும் எங்கள பார்க்காத அதிகாரிங்க, நாங்க சாலை மறியல் பண்ணவுடனே வந்துட்டாங்க. வந்த போலீசு அதிகாரிங்க தாசில்தாரு எல்லாம் தனியா தனியா கூப்டு பேசுறாங்க. எல்லோருக்கும் கேட்கிறா மாதிரி இங்கேயே பேசுங்கன்னோம்…

ஊருக்குள்ள நீங்க முன்னாடி போங்க நாங்க வர்றோம்னாங்க. இல்ல நீங்க முன்னாடி போங்க நாங்க பின்னாடி வர்றோமுனு கூட்டிட்டு வந்தோம்.

அதிகாரிங்க மெயின்ரோட்டிலே வந்தாங்க. அதுவும் நாங்க மரத்த எல்லாம் வெட்டி போட்டதால வர முடிஞ்சிச்சி. மெயின்ரோட்டிலே கடைசி வரைக்கும் பார்த்துட்டு போயிட்டாங்க. பாதிப்ப கிட்ட போயிகூட பாக்கலை. மக்கள் மறிச்சி விசாரிச்சதுக்குக்கூட எந்தப் பதிலும் சொல்லாம போயிட்டாங்க.

மெயின்ரோட்ட மட்டும் பார்த்துட்டு அப்படி ஒன்னும் சேதம் தெரியல எங்களுக்குனு ஆர்.ஐ. சொல்லிட்டு போராங்க. ரோட்லயே நின்னு பார்த்தா என்ன தெரியும்? உள்ள வந்து யாரு பார்ப்பா? எங்களுக்குத்தான் தெரியும் எங்க கஷ்டம்.

புயலுக்கு முன்னாடியே எந்த ஏற்பாடும் செய்யலை. ஒரு பள்ளிக்கூடத்தக்கூட திறந்து விடலை. அங்கேயும் மழையால ஒரே தண்ணி. நாங்க நிக்கிறதா? ஆட்ட மாட்ட கட்டறதா தெரில. வெளிய போகமுடியல. மரம் விழுது. ஓடெல்லாம் பறக்குது. பள்ளிக்கூடத்து பூட்ட ஒடச்சிதான் உள்ளயே போனோம். நாங்களா சொந்த காச வச்சி ஏதாவது வாங்கி சாப்பிட்டோம்.

படிக்க:
மன்னார்குடி கருவாக்குறிச்சி : என்னோட குலசாமி உயிரு என் கையிலயே போயிருச்சு | காணொளி | படங்கள்
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

குடிக்கிற தண்ணிக்கு டேங்கல ஏத்தறுக்குகூட அரசாங்கம் எந்த உதவியும் செய்யலை. இவ்ளோ பாதிப்பிலயும் நாங்க எங்க சொந்தக் காசை வசூல் பண்ணி செஞ்சோம்.

சாலைமறியல் பன்னிட்டோம் அதனால பாக்கனுங்கிற முறையினால வந்து பார்த்துட்டு போனாங்க. ரெண்டு மணிநேரத்துல மீட்புக்குழு வரும்னாங்க. இதுவரைக்கும் வரலை.

எப்ப கரண்ட சரிசெய்ய போராங்க. தெரியல. இ.பி. வேல செய்ய எங்க ஊருக்கு இருபது பேர ஒதுக்கியிருக்கிறதா சொன்னாங்க. ஒரு ஆள்கூட இன்னும் வரலை. உள்ளூர் இ.பி. காரங்க மட்டும் வந்து பார்த்துட்டு போனாங்க.

அவங்க கொடுத்த மண்ணெண்ணய வச்சி நாங்க விளக்க வச்சி இருந்திக்கலாம். கரெண்ட் இருந்தாதானே தண்ணி ஏத்த முடியும். தண்ணிக்கு எங்கப் போவோம்? ஆத்து தண்ணிய மோந்து குடிக்க முடியுமா?

உள்ளூர் இ.பி. காரங்க கிட்ட கேட்டா சரி செய்ய ஒருமாசம் ஆகும்னாங்க. பேரையூர்ல போயி கேளுங்கன்னாங்க… அங்க உள்ள அதிகாரிங்க்கிட்ட கேட்டா., மன்னார்குடியில் போஸ்ட் வருது போயி மறிச்சி எடுத்துட்டு வாங்கன்னாங்க… அங்க போயி கேட்டா திருவாரூருக்கு வருது. நீங்க போயி வண்டி வச்சி எடுத்துட்டு வாங்கன்றாங்க. நாங்க போயி மறிச்சு எடுத்துட்டு வரனுமாம்.. அப்புறம் எதுக்கு அரசு அதிகாரிங்க?

கேள்வியெழுப்புகிறார், மன்னார்குடி தாலுகா, கருவாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன்.

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க