னது கிளினிக்கிற்கு கடந்த சில வருடங்களாக நோய் நிமித்தம் சந்திக்கும் பெண்மணியின் கதை;

ப்போது வந்தாலும் தனது கணவரை பற்றியும் அவரது குடிப்பழக்கம் எப்படி தங்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும் என்னிடம் கூற ஒரு நிமிட கதையாவது வைத்திருப்பார்.

அந்த சிறுகதைகளை கேட்பதைத் தவிர அவருக்கு வேறெதுவும் என்னால் செய்ய இயலாத போதும்.. நான் அந்த கதைகளுக்கு செவி கொடுப்பதே அவருக்கு ஆறுதலாய் அமைந்ததென்பதை உணர்ந்தேன்.

இப்படியாக சில சமயம் கணவர் உடன் வரும்போது என்னிடம் கூறி அவரது கணவரை கண்டிக்க கூறுவார்.

நானும் என்னால் இயன்ற அளவு அவரது கணவரை குடியின் கொடூரங்களை கூறி விடுங்களேன்; என்று அச்சமூட்டி, எச்சரித்து பிறகு சில காலம் கெஞ்சி, கொஞ்சியும் கூறினாலும் குடியை அவர் நிறுத்தியபாடில்லை.

குடி நோய் சூழ் கொண்ட மனிதனுக்கு மருத்துவனே எதிரியாகத்தான் தெரிவான்.
காரணம் அவன்தானே சதா குடிக்காதே என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறான்.

சில மாதம் முன்னர் கணவனும் மனைவியும் என்னை சந்திக்க வந்திருந்தபோது நிகழ்ந்த நிகழ்வை உரையாடலாய் காண்போம்

“சார்..
குடிச்சுட்டு ரோட்டுல அம்மணமா படுத்துக்கிறார்.. என்னை அடிக்குறாரு . வீட்டுல கல்யாணம் பண்ற வயசுல ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்கு சார்..

இவரு தொல்லை தாங்க முடியல சார்.. நாங்க எல்லாரும் மருந்து சாப்ட்டு சாகலாம்னு இருக்கோம்.. இவரு குடிய விடனும்.. இல்லனா நாங்க உசுர விடனும்.. அசிங்கமா இருக்கு சார் ” என்று புலம்பினார்

“ஐயா.. ஏன் இப்டி உங்க குடும்பத்த இவ்ளோ கஷ்டப்படுத்தி நீங்க மட்டும் சந்தோசமா குடிக்கிறீங்க? நான் பெரியாஸ்பத்திரிக்கு எழுதித்தரேன். குடி மறக்க வைக்குற வார்டு இருக்கு அங்க அட்மிட் ஆகுங்க.. புது மனுசனா வெளிய வரலாம்.. ”

“சரி சார்.. அட்மிட் ஆகிக்கிறேன்.. எழுதிக்கொடுங்க.. என்ன நெனச்சா எனக்கே வெறுப்பா இருக்கு .. குடிய விட்ரலாம்ல சார்.. என் புள்ளைங்களே என்ன கண்டா பயந்து ஓடுது”

படிக்க:
♦ மதுவை ஒழிக்க முடியுமா ?
♦ மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

“கண்டிப்பா வெளிய வந்துரலாம் ..போய் அட்மிட் ஆகுங்க உடனே”

சில வாரங்கள் முன்பு அவரது மனைவி வந்தார் முதுகு வலி என்று;

“சார்.. அந்த பாழாப்போனவன் திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சுட்டான் சார்..
நேத்து வீட்டுக்கு வந்து பிள்ளைங்கள கேவல கேவலமா கேக்குறான். பிள்ளைங்களாம் ஒரே அழுகை.. என்னனு கேட்டதுக்கு.. என்னை கீழ தள்ளிவிட்டு மண்டை ஒடஞ்சிருச்சு சார். பெரியாஸ்பத்திரிக்கு போய் நைட் தையல் போட்டுட்டு வந்தேன்.
முதுகு நல்லா வலிக்குது.”

“மா.. உங்க நிலைமைய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுங்கம்மா.. உங்க சொந்த ஊரு எது. அங்க போய் இருங்க.. அது தான் உங்களுக்கும் உங்க பிள்ளைங்களுக்கும் நல்லது போல தெரியுது”

“எனக்குனு நாதி இல்ல சார். இந்த ஆள லவ் பண்ணி வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணேன். நல்லாதான் இருந்தான். இந்த பாழாப்போன ஃப்ரெண்ட்ஸ்னு நாலு பேரு. சேர்ந்து தண்ணி.. தண்ணினு எங்க உசுர வாங்குறான். எப்ப அவனுக்கு சாவு வரும்னு இருக்கு. நிம்மதியா தாலிய அறுத்துப்போட்டுட்டு இருந்துருவேன் சார்” என்று கதறி அழுதார்..

அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன், சில நாட்கள் முன்பு
என்னை சந்தித்தார் அந்த பெண்மணி

” என்னமா.. வீட்டுக்காரரு என்ன பண்றாரு இப்ப? கொஞ்சம் பரவாயில்லையா..? ”

“போன வாரம் தான் சார் இறந்து போனாரு.. குடிச்சுட்டு வண்டில வீட்டுக்கு வரும் போது ரோட்டுல அடிபட்டு சார்…”

நான் ” ஐயோ… கவலைப்படாதீங்கமா.. நீங்க அவரால பல கொடுமைகளை அனுபவிச்சுருக்கீங்க.. நீங்க கடைசியா என்ன பாக்கும் போது கூட சாவு வந்தாதான் நிம்மதியா இருப்பேன்னு சொன்னீங்க.. அதுவே நடந்துருச்சு.. கஷ்டமா இருக்குமா”

“சார்..அப்டியா சொன்னேன்.. தெரியாம அப்டி சொல்லிட்டேன் சார்.. குடிச்சாலும் கொடுமைபடுத்துனாலும் எனக்குனு சொல்லிக்குறதுக்கு அவரு இருந்தாரு.. இப்ப நாங்கலாம் அனாதி ஆயிட்டோமே சார்.. “

“……………..”

“என்ன குடிச்சுட்டு வந்தாலும் அடிச்சாலும் வீட்டுக்கு தேவையானத செஞ்சுடுவாரு சார். தினக்கூலிய என் கைல குடுத்துட்டு தான் குடிக்கவே வாங்கிட்டு போவாரு.. நான் பட்டினியா கெடந்தா தாங்க மாட்டாரு சார்.. குடி மட்டும் இல்லனா என் கூட இருந்துருப்பாருல சார்”

என்ன பேசுவது என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. ஒரு துளி கண்ணீரை தவிர எனக்கு வேறு பேசவும் தோணவில்லை. நிச்சயம் மரணம் ஓர் வடிகட்டி தான் என்பதை உணர்ந்த தருணம்.

ஆயிரம் வலிகள் ஒருவர் நமக்கு தந்திருந்தாலும் அவரை பிரிந்த பின் அவர் தந்த இன்பங்களை மனம் தேடுவது மனித இயல்பு.

மரணம் ஒரு வடிகட்டி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

1 மறுமொழி

  1. யதார்த்தம் என்பது அற்புதமான பல புனைவுகளையும் கற்பனைகளையும் தாண்டி வலுவான உண்மைகளை நெத்தியடியாக உரைக்கிறது….

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க