“ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்” என நவம்பர் 17 அன்று ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. சில ஊடகங்கள் 1000 கிலோ என்றும் வேறு சில 2000 கிலோ நாய்க்கறி என்றும் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிட்டன.

வழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா? அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்? இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இறைச்சி

ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 1000 கிலோ இறைச்சி வந்த பெட்டிகளை கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று ரயில்வே போலீசு பரிசோதித்தது. அந்த இறைச்சி வந்த பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதில் இருக்கும் இறைச்சி குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பரிசோதிக்க அழைத்தது. கூடுதலாக ஊடகங்களில் நாய்க்கறி கைப்பற்றப்பட்டது என்ற வதந்தியை செய்தியாக கிளப்பிவிட்டது போலீசு. இல்லை போலீசின் பெயரில் விலங்கு நல ஆர்வலர்களாக நடிக்கும் பார்ப்பனிய என்ஜிவோக்காளவும் இருக்கலாம். ஒரு சிலர் போலீசு மாமூல் பிரச்சினை காரணமாக இச்செய்தி வெளிவந்ததாக கூறுகின்றனர்.

நாய்க்கறியல்ல என்று நேர்காணல் அளிக்கும் சகிலா

இந்நிலையில் ஜோத்பூரிலிருந்து கறியை ஆர்டர் செய்திருந்த சகிலா என்பவர், அந்த பார்சலில் வந்தவை அனைத்தும் ஆட்டுக்கறிதான் என்றும் சந்தேகம் இருந்தால் அந்த கறியை பரிசோதனைச் சாலையில் கொடுத்து பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதை சவாலாகவும் வீடியா ஆதாரங்களுடனும் கூறினார். மேலும் அவர்களுக்கு மாமூல் கொடுக்காததால்தான் இப்படி புரளியைக் கிளப்பியுள்ளனர் என்றும் கூறினார்.

ஆனால் ஊடகங்கள் சகிலாவின் தரப்பு வாதத்தை மழுங்கடித்துவிட்டு போலீசு கிளப்பிவிட்ட சந்தேகத்தை மட்டும் பிடித்துக் கொண்டன. அனைத்து செய்தி ஊடகங்களும் இந்தச் செய்தியை பரபரப்பு செய்தியாக்கியதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஆட்டுக்கறி விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர், வியாபாரிகள்.

”நாங்கள் அதை துவக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய கறி என்றுதான் கூறிவந்தோம்.” – ரயில்வே பாதுகாப்புப்படை எஸ்.பி லூயிஸ் அமுதன் – மீசையில் மண் ஒட்டவில்லை

நாய்க்கறி சந்தேகத்தைக் கிளப்பிவிட்ட ரயில்வே போலீசு, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கொடுத்த நேர்காணல் அனைத்திலும், உணவுத்துறை அதிகாரிகள் அந்த ‘சந்தேகத்திற்குரிய’ இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பதாகவும், தாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை சந்தேகத்திற்குரிய இறைச்சி என்றே குறிப்பிட்டு வந்ததாகவும் கூறியிருக்கிறது.

தொடங்கி வைத்த ரயில்வே போலீசே ‘ஜகா’ வாங்கிய பின்னரும், ஊடகங்கள் அதனை விட்டபாடில்லை. ஆய்வு முடிவுகளில் ’அது நாய்க்கறி இல்லை’ என வந்தாலும் ஊடகங்கள் அதனை ஆட்டுக்கறி என்று நம்பத் தயாரில்லை என்பது அவர்களது செய்திகளில் பளிச்சென தெரிகின்றது.

இன்று (22-11-2018) மதியம்வரை அது என்ன இறைச்சி என உறுதியாகாத நிலையில், புதிய தலைமுறை இணையதளத்தில் நவம்பர் 22, அன்று காலையில் வெளியிட்ட, ‘நாய்க்கறி விவகாரம்: ராஜஸ்தான் சென்றது தனிப்படை’ என்ற தலைப்புக் கொண்ட செய்தியை, “ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்” என்றே தொடங்குகிறது.

படிக்க:
♦ மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு ? – மனலி சக்ரவர்த்தி
♦ மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

வதந்தியைக் கிளப்பிவிட்ட போலீசே ’சந்தேகத்திற்குரிய இறைச்சி’ எனக் கூறிய பின்னரும் அதை நாய்க்கறி என்றே 22-11-2018 அன்று காலையில் எழுதியிருக்கிறது பாஜக கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை. மாலையில் ஆட்டுக்கறி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், நல்லபிள்ளையாக ”நாய்க்கறி அல்ல, ஆட்டிறைச்சிதான்” என்ற செய்தியோடு நிறுத்திக் கொண்டது. ஒரு தன்னிலை விளக்கமும் இல்லை.

ஒருவேளை இவ்விவகாரத்தில் ’சகிலா’ என்பவர் சம்பந்தப்படாமல் இருந்திருந்து, ஒரு ‘ஹரிஹரன்’ சம்பந்தப்பட்டிருந்தால், ஊடக அறத்தின்படி சந்தேகத்திற்குரிய இறைச்சி என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருக்கலாம்.

அது நாய்க்கறியா என சந்தேகத்தை கிளப்பிவிட்ட போலீசு, இப்போது அந்த விவகாரத்தை விட்டுவிட்டு, ’மீன்’ என்ற பெயரில் ஏன் பார்சல் ’புக்’ செய்யப்பட்டது என்ற புதிய பஞ்சாயத்தை முன் வைத்து பார்சல் ’புக்’ செய்தவரைக் கைது செய்ய ராஜஸ்தான் விரைந்திருக்கிறதாம்.

இதுகுறித்து தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஆய்வு செய்யாமல் ஒரு இறைச்சியை நாய் இறைச்சி என்று எவ்வாறு செய்திபரப்பலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி இது குறித்துக் கூறுகையில், “ இராஜஸ்தானின் வெள்ளாடு வகையின் வால் ஒரு அடி வரையில் வளரக் கூடியவை. தமிழக வெள்ளாடு வகைகள் குட்டை வால் கொண்டவை. வடமாநிலங்களில் ஆட்டின் விலை குறைவாக இருப்பதாலும், இந்த ஆட்டின் சுவை நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஆட்டையே பெரும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். இதில் ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று புரளியைக் கிளப்பிவிட்ட ரயில்வே அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஆட்டுக்கறியாக இல்லாமல் நாய்க்கறியாக இருந்திருந்தால், வியாபாரிகள் மறியல் போராட்டம் செய்திருக்க மாட்டார்களல்லவா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நக்கீரன் இணையதளம், தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர், ராயபுரம் ஏ.அலி-யிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.

இக்காணொளியில் வால் நீளமான ஆடுகள், சென்னையில் உரிக்கப்படும் காட்சியை பேட்டியின் இடையே காட்டுகிறார் அலி. அதில் காணப்படும் ஆடுகளின் வால் பெரியதாகவே இருக்கிறது.

அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.

இந்த மோசடி ஒன்றும் புதிதல்ல. அக்லக் கொலையில் முதல் ஆய்வில் ஆட்டுக்கறியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது, அடுத்த ஆய்வில் மாட்டுக்கறியாக உயிர்த்தெழுந்து வந்து அறிக்கையில் அமர்ந்தது போல, இங்கும் தாமதமாக வரவிருக்கும் ஆய்வு அறிக்கையில் நாய்க்கறி ஏதேனும் உயிர்த்தெழுமோ என்றெல்லாம் சந்தேகங்கள் அவாளின் மனதை ஆக்கிரமித்திருந்த சூழலில் அது ஆட்டுக்கறிதான் என ஆய்வறிக்கை தெளிவாகக் கூறியிருக்கிறது.

வினவு செய்திப் பிரிவு இந்த ஆட்டுக்கறியை , நாய்க்கறி என்பதாக உறுதியாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றன . மவுனத்தைக் கலைக்க வேண்டியது நாம்தான்! உரக்கக் கேட்போம் “ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனது எவன்டா ?”

13 மறுமொழிகள்

 1. முதலில் இந்த இறைச்சியை எதற்கு மீன் இறைச்சி என்று பதிவு செய்து பார்சலை அனுப்ப வேண்டும். ஆட்டிறைச்சி என்றே அனுப்பி இருக்கலாமே…மேலும் இந்த இறைச்சிகள் அனைத்தும் கெட்டு பொய் அழுகி துர்நாற்றம் வீசியதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அதனால் தான் சந்தேகப்பட்டு இதனை சோதனை செய்துள்ளார்கள். ஆகவே இது என்னமோ காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆய்வு முடிவுளோ என்று தோன்றுகிறது. வினவு பாணியில் கூற வேண்டுமானால், மக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறைந்த செலவில்(நாய்கறி) லாபத்தை பெருக்க முதலாளிகள் எந்த கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தயங்க மாட்டார்கள்..

  • என்னமோ காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆய்வு முடிவுளோ என்று தோன்றுகிறது. ////..அது மத்த மதத்தினர் சம்மந்தப்பட்டிருந்தா வினவார் அப்படி சொல்லியிருப்பார்.பாய்ங்க கேர்ள்ங்க எல்லாம் சுத்த சுயம்பிரகாசங்க

   • அசடு, அசடு, நம்மவா மீடியாவிலேயே இப்போ கால பைரவனில்லே, ஆட்டு மாம்சம்தான்னு ஒத்துண்டு மீனுன்னு சொல்லி ஆட்டுக் கறியை அனுப்பியிருக்கா, அதுவும் கெட்டுப் போன கறின்னு மடை மாத்தும் போது இப்படி அம்பி அம்மாஞ்சியா காசு கொடுத்து வாங்குன ஆய்வுன்னு உளறுனா கேக்கவே நன்னா இல்லேயேடா? மணி கண்டு சார் காப்பி ஃபேஸ்ட் பண்றார்னா, நீ அதையே டபுள் காப்பி ஃபேஸ்ட் பண்ணுணா நன்னாவா இருக்கும்? பெங்களூரு கேசவன் சென்டர்ல வினாயக்ஜி என்ன ட்ரெயினிங் கொடுத்தார்?

  • அம்மணி நீங்க முன்ன ஒரு பதிவுல இப்படி போட்டிருக்கீங்க,

   // இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டு கறி என்கிற பெயரில் அனுப்பபட்ட 1000 கிலோ நாய் கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசைவ உண்ணிகள் கவனமாக சாப்பிடவும்.//

   இப்ப மீனுன்னு மச்சஅவதாரம் போட்டு மடை மாத்துறீங்கன்னு யாராவது துஷ்டர்கள் வந்து பாரிஸ்டர் ராம்தாத் போல கேட்டுடப் போறாள். வரலாறுல சமத்தா இருக்கணும்.

   சரி வுட்டுடங்க, வினவு கூரூப் கூட கூவுனது எவன்டான்னுதான் கேட்டுருக்கு, எவடீன்னு கேக்கலை, எஸ்கேப் ஆயிடுங்க! கலிகாலம் முத்தி உங்கள மாறி தேசபக்த ஸ்தீரிகளையே இவா கொஸ்டீன் கேப்பா!

 2. பத்தாது.நல்லா முட்டு குடுக்கணும்.குடுத்தா சவுதி ஷேக் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல பணத்த போடுவாரு

  • அது வேற ஒன்னும் இல்ல… இந்த கூட்டத்துக்கு பிடிச்ச நோய். எந்த செய்தியா இருந்தாலும், அதுல ஓரத்துல, பார்ப்பன, முதலாளித்துவன்னு சொல்லலன்னா, அவங்க சுடற வட ருசியா இருக்காதுன்னு நினைக்கிறாங்களோ என்னவோ.

 3. எதோ ஒரு பத்திரிக்கை செய்தி என படிக்க ஆரம்பித்தால் பார்பன என்று ஒன்று எழுதப்பட்டிருந்தது…மத்த பத்திரிக்கை தர்மம் என்று பேசும்போது நமக்கும் அது உண்டல்லவா…அழுகி போன கறி நாய்கறியானால் என்ன மாட்டு கறி யானால் என்ன..காய்கறி ஆனால் என்ன..எல்லாம் ஒன்றுதான்….கறி கணேஷ் யாரு என்றே தெரியவில்லை

 4. பீப்பிள் பார் கேட்டில் இண்டியா என்ற அமைப்பை நடத்தும் ஜி.அருண் பிரசன்னா என்ற பார்ப்பனர் நடத்தும் நாடகம் தான் இது.

  இவர் கால்நடை பாதுகாவலன் போல் தன்னை காட்டி கொண்டாலும் உண்மையில் கார்ப்ரேட் கைகூலி

  உலக சந்தையில் ஆட்டிறைச்சிக்கு உள்ள தட்டுப்பாட்டை சமன் செய்ய இந்தியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினாலே போதுமானது

  அதற்க்கான வேலையைதான் செய்கிறார் இந்த அருண் பிரசன்னா என்ற பார்ப்பனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க