மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 28

மாக்சிம் கார்க்கி
தெருக்கோடிக்கு அப்பாலுள்ள மைதானத்துக்குச் செல்ல முடியாதபடி, உணர்ச்சி பேதமே இல்லாத முகங்களே இல்லையென்று சொல்லத் தகுந்த ஒரு சாம்பல் நிற மனிதச் சுவர் வழியை அடைத்து மறித்துக் கொண்டு நின்றது. அந்த மனிதர்கள் ஒவ்வொருவரது தோளிலும் பளபளவென்று மின்னும் துப்பாக்கிச் சனியன்கள் தெரிந்தன. அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து நின்ற அந்த மனிதச் சுவரிலிருந்து ஒரு குளிர்ச்சி கனகனத்தது. தாயின் இதயமும் குளிர்ந்து விறைத்தது.

அவள் அந்தக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு. கொடியின் பக்கமாக, அதன் அருகே நிற்கும் தனக்குத் தெரிந்த ஆட்களின் பக்கமாகச் சேர்ந்து நிற்பதற்காக, விறுவிறுவென்று முன்னேறினாள். அங்கு நிற்கும் தனக்கு தெரிந்த நபர்கள் தமக்குத் தெரியாத பிற நபர்களோடு கலந்து அவர்களிடம் ஏதோ உதவியை நாடித் தவிப்பது போல் நின்றார்கள். திடீரென்று அவள் ஒரு நெட்டையான மழுங்கச் சவரம் செய்த ஒற்றைக் கண் மனிதன் மீது பலமாக மோதிக் கொண்டாள். அவளைப் பார்ப்பதற்காக விருட்டென்று தலையைத் திருப்பி அவளைக் கேட்டான்:

”யார் நீ?”

”நான் பாவெல் விலாசவின் தாய் என்று சொன்னாள். இப்படிச் சொல்கையில் தனது கால்கள் குழவாடி நடுநடுங்குவதையும் வாயின் கீழுதடு நடுங்குவதையும் அவள் உணர்ந்தாள்.

“ஆஹா!” என்றான். அந்த ஒற்றைக் கண்ணன்.

“தோழர்களே! நமது வாழ்க்கை முழுவதிலுமே நாம் முன்னேறிக் கொண்டேதான் இருக்க வேண்டும் முன்னேறிச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியே கிடையாது” என்றான் பாவெல்.

அங்கு நிலவிய சூழ்நிலை அமைதியும் ஆர்வமும் நிறைந்ததாக இருந்தது. கொடி மேலே உயர்ந்து ஒரு கணம் அசைந்தது. பிறகு மக்கள் கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக, எதிராகத் தோன்றிய மனிதச் சுவரை நோக்கி நிதானமாக முன்னேறிச் செல்லச் செல்ல, காற்றில் மிதந்து வீசிப் பறந்தது. தாய் நடுநடுங்கிப் போய் மூச்சு முட்டித் திணறிக் கண்களை மூடிக்கொண்டாள். நாலு பேர், கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியே முன்னே சென்றார்கள். அவர்கள் பாவெல், அந்திரேய், சமோய்லவ், மாசின் ஆகியோர் முன்னே சென்றார்கள்.

பியோதர் மாசினின் கணீரென்ற குரல் காற்றில் ஒலித்தது:

இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்….

ஆழ்ந்த பெரு மூச்சைப்போல் தணிந்த குரல்களில் அடுத்த அடி ஒலித்தது.

பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் தியாகிகளே!

அவர்கள் நால்வரும் பாட்டுக்குத் தகுந்தவாறு நடை போட்டு முன்னேறினர்.

பியோதர் மாசினுடைய குரல் பளபளப்பான பட்டு நாடாவைப் போல் சுருண்டு நெளிந்து ஒலித்தது. அந்தப் பாட்டில் தீர்மானமும் வைராக்கியமும் தொனித்தது:

வெற்றி பெறுமோர் லட்சியமாம்
விடுதலைக்காக நீங்களெல்லாம்…..

அவனது தோழர்கள் அவனோடு சேர்ந்து அடுத்த அடிகளைப் பாடினார்கள்:

உற்ற செல்வம் அனைத்தோடும்!
உயிரும் கொடுத்தீர்! கொடுத்தீரே!

“ஆஹா — ஹா!” என்று யாரோ ஒருவன் கரகரத்தான். “ஒப்பாரி பாடுகிறார்களடா!” நாய்க்குப் பிறந்த பயல்கள்!”

“கொடு ஒரு அறை!’ என்று ஒரு கோபக் குரல் கத்தியது.

தாய் தன் கைகளால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். சிறிது நேரத்துக்கு முன்பு அந்தத் தெரு முழுதும் நிரம்பித் ததும்பிய ஜனங்கள், இப்போது அந்த நால்வர் மட்டுமே கொடியைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்வதைக் கண்டதும் உள்ளம் கலங்கித் தடுமாறிப்போய் நின்றாள். சிலர் அந்த நால்வரையும் பின்பற்றிச் செல்லத் தொடங்கினார்கள். எனினும், அவர்கள் ஒவ்வொரு அடி முன்னேறும் போதும், ஒவ்வொருவனும் அந்தத் தெரு தனது உள்ளங்காலைக் சுட்டுப் பொசுக்குவது போல் உணர்ந்து பயந்து துள்ளி. பின்வாங்கி நின்றுவிட்டான்

முடிவில் ஒரு நாள் கொடுங்கோன்மை
மூட்டோடற்றுப் போகுமடா!

பியோதர் மாசின் உபதேசம் செய்வது போல் பாடினான். அவனது குரலுக்குப் பல உரத்த குரல்கள் தீர்மானமாகவும், கடுமையாகவும் பதிலளித்தன.

அடிமை மக்கள் விழித்தெழுவர்
அந்நாள், அந்நாள். அந்நாளே!

என்றாலும் அந்தப் பாட்டுக்கு மத்தியில் கசமுசப்புக் குரல்களும் கேட்டன:

”அவர்கள் இதோ உத்தரவு கொடுக்கப் போகிறார்கள்”

அதே சமயம் முன் புறத்திலிருந்து ஒரு கூரிய குரல் திடீரென்று ஒலித்தது.

“துப்பாக்கிகளை நீட்டுங்கள்!”

உடனே துப்பாக்கிச் சனியன்கள் முன்னோக்கித் தாழ்ந்து நின்றன; நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியை ஒரு வஞ்சகப் புன்னகையோடு வரவேற்றன.

”முன்னேறு!”

”இதோ வந்துவிட்டார்கள்!” என்று அந்த ஒற்றைக் கண் மனிதன் கூறிக்கொண்டே, தனது கைகளைப் பைக்குள் விட்டுக்கொண்டு ஒரு பக்கமாக நழுவிப் போக ஆரம்பித்தான்.

படிக்க:
எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !
நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? புரட்சிகர பாடல்கள்

தாய் கண்ணிமையே தட்டாமல் வெறித்துப் பார்த்தாள். அந்தத் தெருவின் அகலம் முழுவதையும் அடைத்துக் குறுக்காகத் தோன்றிய அந்தச் சிப்பாய்களின் சாம்பல் நிற முன்னணி ஒன்று போல் நிதானமாக, நிற்காமல் முன்னேறி வந்தது. அந்த அணிக்கு முன்னால் துப்பாக்கிச் சனியன்கள் வெள்ளிச் சீப்பின் பற்களைப்போல் மின்னிக் கொண்டு வந்தன. விடுவிடு என்று நடந்து, அவள் தன் மகனுக்கு அருகிலே போய்ச் சேர்ந்தாள். அந்திரேய் பாவெலுக்கு முன்னால் போய் நின்று தனது நெடிய உருவத்தால் பாவெலைப் பாதுகாத்து மறைத்து நிற்பதைக் கண்டாள்.

“உன் இடத்துக்குப் போ, தோழா!” என்று பாவெல் உரக்கக் கத்தினான். அந்திரேய் தனது கைகளைப் பின்னால் நீட்டியவாறு தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவெல் அவனது தோளைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே மீண்டும் கத்தினான்.

“பின்னாலே போ! இப்படி செய்வதற்கு உனக்கு உரிமை கிடையாது கொடிதான் முதலில் போகவேண்டும்!”

“கலைந்து விடுங்கள்” என்று தனது வாளைச் சுழற்றியவாறே அந்தக் குட்டி அதிகாரி மெல்லிய குரலில் உத்தரவிட்டான். அவன் தனது கால்களை உயர்த்தி, முழங்கால்களைச் சிறிதும் வளைக்காமல், பூட்ஸ் காலால் தரையை ஓங்கி மிதித்து நடந்து வந்தான். தாய் அந்தப் பூட்ஸ்களின் பளபளப்பைக் கண்டாள்.

அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.

கட்டையாக வெட்டிவிடப்பட்ட கிராப்புத் தலையும் அடர்த்தியான நரைத்த நிற மீசையும் கொண்ட ஒரு நெட்டை மனிதன் அவனுக்கு புறத்தே பின்னால் நெருங்கி நடந்து வந்தான். அவன் ஒரு நீண்ட சாம்பல் நிறக்கோட்டு அணிந்திருந்தான்; கோட்டின் விளிம்புகளில் சிவப்பு வரிக்கோடுகள் காணப்பட்டன. அவனது கால் சராயின் மஞ்சள் கோடுகள் கீழ்நோக்கி ஓடின. ஹஹோலைப் போலவே அவனும் தன் கைகளைப் பின்னால் கோத்தவாறே நடந்து வந்தான். அடர்ந்த புருவங்கள் உயர்ந்து நிற்க, அவனது கண்கள் பாவெலின் மீது பதிந்து நிலைகுத்தி நின்றன.

தாயால் தான் பார்த்தவற்றை உணர்ந்தறிய முடியவில்லை. அவளது இதயத்துக்குள் ஒரு பயங்கர ஓலம் நிறைந்து விம்மி எந்த நிமிஷத்திலும் வெடித்து வெளிப் பாய்வது போல் முட்டி மோதும் அந்த ஓல உணர்ச்சியால் அவள் திக்குமுக்காடினாள். தன் மார்பை அழுத்திப் பிடித்து அதை உள்ளடக்கினாள். ஜனங்கள் அவளைத் தள்ளினார்கள். எனவே, அவள் தள்ளாடியபடி முன்னே நடந்தாள். ஞாபகமின்றி, அநேகமாக நினைவிழந்து நடந்தாள் அவள். தனக்குப் பின்னால் நின்ற கூட்டம் தம்மை எதிர்நோக்கி வரும் பேரலையால் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச் செல்வது போல் அவள் உணர்ந்தாள்.

கொடியைத் தாங்கி நின்றவர்களும் இன்னும் நெருங்கிப் போனார்கள். அந்தச் சாம்பல் நிறச் சிப்பாய்கள் இறுக்கமான சங்கிலிக் கோர்வையாய் இன்னும் நெருங்கி வந்தனர். பற்பலவித வண்ணங்கள் பெற்ற கண்களோடு ஒழுங்கற்றுத் தெரியும் மஞ்சள் நிற வரிக்கோடுகளோடு, விகாரமாக குலைந்து போன அந்தச் சிப்பாய் முகம் தெரு முழுதும் அடைத்தவாறு முன்னேறி வருவதைப் பார்த்தாள். அதற்கு முன்னால், ஊர்வலம் வருபவர்களின் மார்புகளுக்கு நேராக ஏந்திப் பிடித்த துப்பாக்கிச் சனியன்களின் கொடிய முனைகள் பளபளத்தன; அந்தக் கூட்டத்தினரின் மார்புகளைத் தொடாமலேயே அந்தக் கூட்டத்தை ஒவ்வொருவராகப் பிரித்துக் கலைத்துவிட்டன.

தனக்குப் பின்னால் ஜனங்கள் ஓடுவதையும், கூக்குரலிடுவதையும் அவள் கேட்டாள்:

“கலையுங்களடா!”

“விலாசவ், ஓடிப்போ!”

“பின்னாலே வா, பாவெல்!”

“கொடியை இறக்கு. பாவெல்!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மெதுவாகச் சொன்னான். “என்னிடம் கொடு. நான் அதை மறைத்து வைக்கிறேன்.”

அவன் கொடியின் காம்பைப் பற்றிப் பிடித்து இழுத்தான். கொடி பின்புறமாகச் சாய்ந்து ஆடியது.

“விடு அதை!” என்று கத்தினான் பாவெல்.

நிகலாய் சூடு பட்டது போலத் தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான். அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.

கொடியைச் சுற்றி நின்றவர்கள் சுமார் இருபது பேருக்கு அதிகமில்லை. எனினும் அவர்கள் அனைவரும் அசையாது உறுதியோடு நின்றார்கள். தாய் பயத்தோடும் அவர்களிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று இனந்தெரியாத விருப்போடும் அவர்கள் பக்கமாக நெருங்கிச் சென்றாள்.

”லெப்டினெண்ட் அந்தப் பயலிடமிருந்து அதைப் பிடுங்கு என்று கொடியைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான் அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.

அந்தக் குட்டி அதிகாரி உடனே பாவெலிடம் ஓடிப்போய், கொடியைப் பற்றிப் பிடுங்கினான்.

”கொடு இதை!” என்று அவன் கீச்சிட்டுக் கத்தினான்.”

”எடு கையை!” என்று உரத்த குரலில் சொன்னான் பாவெல்.

கொடி வானில் பிரகாசத்தோடு நடுங்கியது. முன்னும் பின்னும் ஆடியது, பிறகு மீண்டும் நேராக நின்றது. அந்தக் குட்டி அதிகாரி தள்ளிப்போய் பின்னால் வந்து விழுந்தான். நிகலாய் தன் முஷ்டியை ஆட்டியவாறு தாயைக் கடந்து விரைந்து சென்றான்.

”இவர்களைக் கைது செய்” என்று தனது காலைப் பூமியில் ஓங்கியறைந்து கொண்டு சத்தமிட்டான், அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.

தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டாள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது: ”வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே..”

பல சிப்பாய்கள் முன்னே ஓடினார்கள். அவர்களில் ஒருவன் துப்பாக்கியை மாற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான் – கொடி நடுங்கியது. முன்னால் சாய்ந்து விழுந்தது. சிப்பாய்களின் கூட்டத்தில் மறைந்து போய்விட்டது.

“ஹா!” என்று யாரோ ஒருவன் அசந்து போய்க் கத்தினான்.

தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டாள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது:

”வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே..”

தாயின் மனத்தில் இரண்டு எண்ணங்கள் பளிச்சிட்டன், அவன் உயிரோடிருக்கிறான் அவன் என்னை நினைவு கூர்ந்தான்.

”போய் வருகிறேன். அம்மா’!”

அவர்களைப் பார்ப்பதற்காகத் தாய் குதியங்காலை உயர்த்தி எட்டிப் பார்க்க முயன்றாள். சிப்பாய்களின் தலைக் கூட்டத்துக்கு அப்பால், அந்திரேயின் முகத்தை அவள் பார்த்தாள். அவன் புன்னகை செய்து கொண்டே அவளுக்குத் தலை வணங்கினான்.

“ஆ!” என் கண்மணிகளே… அந்திரியூஷா! பாஷா!” என்று அவள் கத்தினாள்.

“போய் வருகிறோம். தோழர்களே!” என்று அவர்கள் சிப்பாய்களின் மத்தியிலிருந்து சொன்னார்கள்.

பல குரல்கள் அவர்களுக்கு எதிரொலியளித்தன. அந்த எதிரொலி ஜன்னல்களிலிருந்தும், எங்கோ மேலேயிருந்தும், கூரைகளிலிருந்தும் வந்து ஒலித்தன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க