ஜா புயலின் பேரழிவால் பல இலட்சக்கணக்கான விவசாயிகள்,  கூலித் தொழிலாளர்கள் வீடு இழந்து, வேலை இழந்து, தண்ணீர் – உணவின்றி  வீதிகளில் தன்னார்வலர்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் அவலம் ஊருக்கே சோறுபோட்ட டெல்டா மண்ணில் அரங்கேறி வருகிறது. அதன் உச்சகட்டமாக தங்களுடைய அவலத்தை உலகுக்கு தெரியபடுத்தும் விதமாக சுடுகாட்டில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துறங்கும் கொடுமையும் நடந்து வருவது பார்ப்பவர்களின் மனதை உலுக்கி எடுக்கிறது. ஆனால் சொரணைகெட்ட இந்த அரசுக்கு மட்டும் உறைக்கவில்லை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர், கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதரம் முழுவதும் இழந்து விட்ட நிலையில் ஊருக்கு அருகில் இருக்கும் சுடுகாட்டில் ஒரு டெண்ட் அமைத்து மதிய உணவு தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பெண்கள். ஊர் பெரியவர்கள்  அருகே இருந்த கடற்கரை சாலையில் நிவாரண வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை நெருங்கியதும் அனைவரின் பார்வையும் எங்களை நோக்கியே மையம் கொண்டது.

(இடமிருந்து) ராஜேந்திரன் மற்றும் சந்திரன்.

கூட்டத்திலிருந்து ராஜேந்திரனும், சந்திரனும் தங்களுடைய துயரத்தை கொட்டித் தீர்த்தனர். “கஜா புயல் பாதிப்பு, படுக்க இடம் இல்லாம உடுத்த துணி இல்லாம, வீட்டுக்கும் போக முடியாம இங்க வந்துட்டோம். ரோட்டுல வரும் தண்ணிய கொண்டும், போற – வரவங்க தரும் தண்ணி, சாமானை வச்சிதான் இத்தன நாளா சமச்சி சாப்பிட்டு இருக்கோம்.

எங்க ஊர்ல இருக்கவங்க எல்லாம் விவசாய கூலிங்க. நடவு இருக்க மூனு மாசத்துக்குத்தான் வேலை இருக்கும். அதுக்கப்புறம்  100 நாள் வேலைக்கு போவோம். அதுவும் முடிஞ்சா கேரளாவுக்கு கட்டிட வேலைக்கு போவோம்.

ஜீவா காலனியில மொத்தம் 46 குடும்பம் இருக்கு. யாருக்கும் சொந்த நிலமில்ல. இரண்டு பேருக்கு மட்டும் ஒரு ஏக்கர்ல நிலம் இருக்கு. அவ்ளோதான். 36 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 120 பேர் இருக்கும்.

புயல் வரும்னு சொன்னதுக்கு பிறகு எல்லோரையும் பள்ளிக்கூடத்துல தங்கிக்கச் சொன்னாங்க. ஆனா அங்க ஏற்கனவே வேற தெரு மக்க தங்கி இருக்காங்க. அதுல 40 குடும்பம் இருக்கு.  அதனால நாங்க இங்கேயே சமைத்து சாப்பிட்டு 6 நாளா இங்கயே இருக்கோம். படுக்க பாய், போர்வை, மாத்து துணி எதுவும் இல்லை. முகாம்ல இருக்கவங்களுக்கும் இதேதான் நெலம. நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும். ஒன்னும் முடியல, புடுங்கி எடுக்குது.

புயல்னு சொன்னப்ப பகல்ல இப்ப இருக்க மாதிரிதான் வெய்ய காஞ்சது. அதனால கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருந்துட்டோம். நைட்டு எல்லோரும் படுத்த பின்னாடிதான் காத்து பலமா வீச ஆரம்பிச்சிடுச்சி. தொறந்த கதவ மூட முடியல. ஓடு போட்ட வீட்ல ஒரு ஓடு பேத்துகிட்டதும் எல்லா ஓடும் தூக்கிட்டு போக ஆரம்பிச்சிடுச்சி.

எங்க எல்லாரோட வீடும் கூரைவீடு. கீத்து போட்டிருக்கும். கீத்து காத்து போவாத மாதிரி அடர்த்தியா இருந்ததால அதால உள்ள போக முடியல. மேல சிலிப்பிக்கிச்சி. ஆனா, அந்த காத்தால கீத்து கட்டியிருக்க பாலையை அறுக்க முடியல.  கூண்டோட வீட்ட தூக்குற மாதிரி இருந்துச்சி. வீட்டுல இருந்த எல்லோரும் வீட்டுக்கு உள்ள இருக்க கழிய புடிச்சி தொங்கிட்டே இருந்தோம். அந்த நேரம் நாங்க எல்லோரும் செத்துட்டோம்னுதான் நெனச்சோம். காத்து நின்ன பிறகுதான் உசுரு வந்துச்சி. இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு” என்றார் ராஜேந்திரன்.

அந்த நேரம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்ததும் டெண்ட் கொட்டாயில் இருந்த பெண்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு பொருட்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்தனர்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு அருகில் அமர்ந்திருந்த சந்திரன் பேச ஆரம்பித்தார். “அமைச்சர் காமராஜ் இந்த வழிதான் வந்தாரு. எங்களப் பார்த்து பேசி  10 கிலோ அரிசி, ஒரு புடவை ஒரு வேஷ்டி, ஆளுக்கு 1000 ரூபா பணம் கொடுக்க செல்றேன்னு சொன்னாரு. இன்னும் யாரும் எதுவும் கொண்டு வந்து தரல.  இப்பக்கூட நாங்க சொசையிட்டில போயிட்டு கேட்டோம். அதுக்கு அவரு இன்னும் அரசாங்கத்துல இருந்து எதுவும் வர்லன்னு சொல்லி அனுப்பிட்டாரு. அதேமாதிரி டி.டி.வி. தினகரன் வந்து பார்த்துட்டு, “வீட்டுக்கு போங்க, உங்களுக்கு வேண்டியத செய்ய சொல்றேன்னு” சொல்லிட்டு கெளம்பிட்டாரு. நாங்க எங்க போறது? வீடு இருந்தா எதுக்கு இங்க வந்து சமைக்க போறோம், சொல்லுங்க?

இதுவரைக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, மெட்ராசுன்னு எங்க எங்கயோ தொலைவுல இருந்து வரும் மக்கள்தான் எங்க நிலமைய பார்த்துட்டு பிஸ்கட், பால், ரொட்டின்னு இருக்கிறத கொடுத்துட்டு போறாங்க. வேற யாரும் எதுவும் செய்யிறது இல்ல.

நாங்க எங்ககிட்ட இருக்க அரிசிய போட்டு தினமும் இந்த உசிர புடிச்சிக்க எதோ புளி சாதம், பொங்க சாதம்னு செஞ்சி சாப்பிடுறோம். இந்த மாதிரி இன்னும் எத்தன நாளைக்கு இருக்க போறோமோன்னு தெரியல.

படிக்க:
பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?

எங்களுக்கு வேலை கொடுக்கிற முதலாளி சரியானாத்தான் அவரால வேலை கொடுக்க முடியும். இந்த பக்கம் எல்லாம் நெல்லுதான். தண்டு உருண்டு வர நேரத்துல அடிச்ச காத்துல எல்லாம் ஒடஞ்சி இருக்கும். இனிமே கதிர் வராது. வந்தாலும் பதரா தான் போவும். பொன்னி, கல்சர், சி.ஆர்.1009 போன்ற ரகம்தான் அதிகம் போட்டிருக்காங்க. இப்ப அவங்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும்போது எப்படி இந்த நெலமைய எங்களால் சரி செய்ய முடியும்?

ஊருல இருந்த ஆடு, மாடு எல்லாம் இறந்துடுச்சி. மிச்சமிருக்க ஆட்டு, மாட்டுக்கும் தீவனம் இல்ல. அதுவும் இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்கும்னு தெரியல. கட்டு இடம்கூட சரிஞ்சிடுச்சி.

செத்துபோன ஆட்டுக்கு இழப்பீடு தர்றேன்னு சொன்னாங்க. மனுசனுக்கே ஒன்னும் பண்ணாதவனுங்கதான் ஆட்டு மாட்டுக்கு கொடுக்கப் போறானுங்களா? இங்க ரோட்டுல நாங்க கெடக்குறோம். எங்கள வந்து பாக்காம மோடிய பாக்க போயிருக்காறாம் எடப்பாடி. மொதல்ல எங்களுக்கு எதாவது பண்ணிட்டு யாரயாது போயி பார்க்கட்டும்.

எடப்பாடிய விடுங்க. இந்த தொகுதி எம்.எல்.ஏ ஒருத்தன் ஆடலரசுன்னு இருக்கான். 6 நாளா சுடுகாட்டுல கெடக்கோம். இன்னும் என்னாச்சின்னு வந்து எட்டிப் பாக்கல. இவனுங்க எல்லாம் மனுஷனுங்களா? அமைச்சர மறிக்கிறோம்னு சொல்லுறாங்க. நாங்க எதுக்கு சும்மா இருக்கவன மறிக்கனும். எங்களுக்கு இந்த ஆபத்துல எதாவது உதவி செஞ்சா நாங்க எதுக்கு மறிக்க போறோம்?

எங்க ஊர்ல அஞ்சாவது வரைக்கும்தான் சார் இருக்கு. மேல படிக்கனும்னா நாச்சிக்குளம் வரைக்கும் போவனும். அப்படி படிச்சி இதுவரைக்கும் 6 பேர் பட்டதாரி, எஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. ஆனா யாருக்கும் ஒழுங்கா வேலை கெடக்கல. எங்க ஏரியால இருந்து ஒருத்தவங்ககூட இது வரைக்கும் கவர்மெண்ட் வேலைக்கு போனவங்களே கிடையாது சார். ஏனோ எங்களுக்கு மட்டும் தர மாட்றாங்க.

என் பையனும் எஞ்சினியரிங் முடிச்சிட்டு மெட்ராசுக்கு போயிட்டான். வெறும் பதினொராயிரம் சார் அவனுக்கு சம்பளம். அவன் வாங்குற சம்பளத்த நாங்க எதிர் பாக்கல. இந்த வெலவாசில அவங்களுக்கே பத்தாது. அதால அவன் சம்பாதிக்கிறத கொண்டு அவன காப்பாத்திக்கிட்டா அதுவே போதும் சார் எங்களுக்கு.

இப்பக்கூட தீபாவளிக்கு பையன் வந்தான்… சுத்தமா காசி இல்லன்னு சொன்னான். இருக்கிறத பொரட்டிபோட்டு மூனாயிரம் கையில கொடுத்தனுப்சேன் சார். நாங்க எப்படி அவன் வருமானத்த எதிர்பார்க்க முடியும் சொல்லுங்க….

என்ன இந்த புயலுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி பேசினான். அதோட சரி. இப்ப வரைக்கும்  பேச முடியல சார்…  வீடு இடிஞ்சி சோத்துக்கு வழி இல்லாம போற வரவங்கள எதிர்பாத்து கெடக்கோம். இந்த நேரம் என் பையன் கூட இருந்திருந்தா தெம்பா இருந்திருந்திருக்கும். இப்பதான் சார் வருத்தப்படுறேன்’ னு சொல்லிக்கொண்டே இருந்தவரின் கண்களின் சாரை சாரையாக கண்ணீர் வழிந்ததை துடைத்துக்கொண்டே பேச முயற்சித்தார். தேம்பிய கண்கள் தொண்டையை அடைக்க அவரால் பேச முடியவில்லை. சுற்றி இருந்தவர்கள் மத்தியில் கனத்த மெளனம்..!

கொஞ்ச நேரம் கழித்து தோளில் இருந்த துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினார் சந்திரன்…. “எங்க உடம்பு வைரம் பாய்ஞ்ச உடம்பு… எவ்ளோ வெய்ய, மழை குளிர வேணா தாங்கும். ஆனா இனிமே இந்த காத்து மட்டும் வரக்கூடாது சார். எல்லாரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க. நாங்க உயிரோடவே வந்து பார்த்துட்டோம்.” என்கிறார் பயம் கலந்த சோகத்துடன் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க