ருமுடி தாங்கி கெடுமதியோடு அய்யனை காண பரிவாரங்களோடு போனார் பொன்னார்.  சபரி மலை அய்யப்பன் கோயிலை ஆர்.எஸ்.எஸ்-ன் கலவர மேடையாக்கி வரும் காவிகள், எங்களையா தடுக்குற பாரு! அண்ணன கூப்புட்டு வரோம் என்று புடைசூழ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தாரு பொன்னார் என்று திட்டமிட்ட வேலையோடு பின்னால் வர, விதி வேறு மாதிரி  விளையாடிவிட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஷ் சந்திரா, நிலவும் தடை உத்தரவு விவரங்கள், அமலில் இருக்கும் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை கவனத்துக்கு உள்ளாக்கினார். அமைச்சர் காரில் செல்ல தடை இல்லை அனுமதி உண்டு போகலாம்! திரண்டு வந்திருக்கும் பா.ஜ.க. பரிவாரங்களுக்கு வாகனத்தை அணிவகுக்க அனுமதி இல்லை, மற்ற பக்தர்களைப் போல அரசுப் பேருந்தில் அவர்கள் செல்லத் தடையில்லை எனச் சட்டப்படியான விளக்கங்களை சுட்டிக் காட்டினார்.

இருமுடியும் பக்தியும் இல்லாதவர்களுக்கு அய்யப்பன் கோயிலில் என்ன வேலை என்று மற்றவர்களைப் பார்த்து கேட்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அமைச்சரை சாக்கிட்டுக் கொண்டு அங்கே திரள்வது எந்த வகை மனுதர்ம நியாயமோ? தூத்துக்குடியில் ஒருவர் தும்மினால் கூட யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றும், சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து என்றும் அடிக்கு ஒருதரம் கூவும் பொன்னார் வகையறாக்கள் தாங்களே பீத்திக் கொள்ளும் மதிக்கப்பட வேண்டியதாய் சொல்லும் சட்டம் ஒழுங்கின் படி நடக்கச் சொன்னதையே அமைச்சரை அவமரியாதை செய்து விட்டதாக புளுகாச்சி காவியத்தை அவிழ்த்து விடுகிறது காவிக் கும்பல்.

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

சங்கிகளுக்கு சற்றும் குறையாமல் கடுமையான கட்டுப்பாடுகளால் சபரி மலையில் பத்தர்கள் வருகை குறைந்தது என்றும் சந்தடி சாக்கில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலைக் கோயிலுக்கு செல்ல பத்து முதல் அய்ம்பது வயது வரையிலான பெண்களுக்கு தடையிருந்தது. இது ஒரு பிரிட்டீஷ் ஆய்வறிக்கையில் தெரிய வந்தது என தமிழ் இந்து தடி எடுத்து கொடுக்கிறது.

யதீஷ் சந்திரா, ஐ.பி.எஸ்.

இப்படி பக்தர்கள் கூடுமிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அன்றாடம் சரண கோசம் பார்ப்பன மத வெறி போராட்டம், நாமா வளி பூசை, எங்களை மீறி யாராவது வந்தால் மரண கோசம் என அயோத்தி போல அட்டூழியம் செய்து அச்சுறுத்தும் காவிக் கும்பல்; அதன் அமைச்சர் பொன்னார்; சபரி மலை புனிதத்தை அழிக்கும் முயற்சி என கேரள அரசின் மீதே பழியை திருப்பி போடுகிறார்கள்.

மக்களால் கழுவி கழுவி ஊத்தப் படுவதை தவிர வேறு எந்த புனித தீர்த்தத்தாலும் பாவங்களை கழுவிக்கொள்ள முடியாத பா.ஜ.க. சபரி மலை விவகாரத்தை வைத்து புனிதம் தேடவும் அன்றாடம் தனக்கான நியூஸ் வேல்யூவ்வை ஏற்றிக் கொள்ளவும் சொகுசாக அரசு பாதுகாப்போடு கோயிலுக்கு போய் வந்ததைக் கூட ஒரு போராட்டம் போல சித்தரித்து, பொய் பிரச்சாரத்தின் மூலம் ஏதோ இந்துக்களின் பக்தி உரிமைக்கு கேரளா அரசால் பங்கம் வந்துவிட்டதைப் போல கள்ள ஆட்டம் ஆடுகிறது.

ஒவ்வொரு பா.ஜ.க. அமைச்சர்களும் தொகுதிக்குப் போய் மக்களைச் சந்திப்பதை விட சபரி மலைக்கு போவதிலேயே குறியாய் இருப்பதும் அங்கு வந்து சொகுசாக சாமி கும்பிட்டு விட்டு படியை விட்டு இறங்கியவுடன், படாத பாடு! சபரி மலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடு என்று பத்தர்களை படாத பாடு படுத்தும் இந்த காவிகள் டி.வி.க்கு பேட்டி தருவது ஒரு பிழைப்பாகவே இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்த சீன் தான் இப்போது பொன்னார் விவகாரம்.

அமைச்சருக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று சங்கிகள் என்னதான் சவுண்டு கொடுத்து ‘இந்துக்களை’ உசிப்பி விடப் பார்த்தாலும், பொன்னாரின் ‘இருமுடிக்கு’ அவர் தலையை தாண்டும் சக்தி இல்லை. ஏத்தி விடப்பா! தூக்கி விடப்பா! என்று என்னதான் சங்கிகள் டெரர் காட்டினாலும் ‘ஒழுங்கா பஸ்சை பார்த்து போங்கப்பா, இல்லை கேச போடுவன் வாங்கப்பா’ என்ற எஸ்.பி.யின் உத்தரவுக்கு முன்பு பா.ஜ.க-வின் போங்காட்டம் அடங்கி விட்டது. திரும்பி வரும் போது போலீசின் வாகன சோதனையையும் ஒரு பிரச்சனையாக்கி பிலிம் காட்டலாம் என்ற பொன்னாரின் எண்ணமும் மண்ணாகிப் போனது. பாவம்! பச்ச மண்ணு கோயிலுக்கு போய் அழுதாராம், இருக்கலாம்! “நான் பாட்டுக்கு சாமி கும்பிட்டு போய் இருப்பேன்  என்ன ஒரு சந்துல இழுத்துவிட்டு இப்போ என் அண்ணன் கிட்ட பேசிப்பாருடானு கடைசில மூஞ்சில எதையோ பூசிகிட்ட அவமானம் அவருக்கு இருக்காதா? பின்னே!

இந்த இடத்தில் எச்சு ராஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிள்ளையார் ஊர்வலத்தில், தடையை மீறி போகாதீர்கள் என தயை கூர்ந்த தமிழகத்து காக்கியிடம், “இந்துக்கள்னா எளப்பமாங்குறன்? மானம் இல்ல!, பாதிரியார் கிட்ட காச வாங்கிட்டு தடுக்கிறிங்களே! குட்கா ஊழல் டி.ஜி.பி. வீட்டுல ரைடு நடக்கறது! உங்களுக்கு வெட்கமா இல்ல? ஆல் ஆர் கரப்சன்! கோர்ட்டாவது மயிராவது” என்ற சண்ட பிரசண்ட கோவம் எங்கே? பொன்னாரின் சன்னிதான அழுகை எங்கே? தங்கள் கைக் காசை செலவு பண்ணியாவது ஒவ்வொரு இந்து டேஷ் பக்தர்களும் எச்சு ராஜாவை யதீஸ் சந்திரா வழி பம்பைக்கு அனுப்ப வேண்டியது பக்தாளின் கடமை. சாதுவாகக் காட்டிக் கொள்வது, கோபமாக பேசுவது ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல் வன்மத்தின்
வெவ்வேறு வடிவங்கள். உள்ளடக்கம் குரூரமும், இந்து பாசிசமும்தான்.

ஊரை இழந்து உறவை இழந்து உயிரையும் இழந்து தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் மக்கள், அரசின் அலட்சியத்திற்கு எதிராகப் போராடுவதைப் பார்த்து வன்முறை, போராட்டம் தேவையில்லை என புத்தி சொல்லும் பொன்னார், ஒரு கோயிலுக்கு சகல வசதிகளுடன் போய் வந்ததையே ஒரு பிரச்சனையாக்கி தன்னை அவமதித்து விட்டதாக அண்டப் புளுகை அவிழ்த்து விட்டு அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு என்று வெறியாட்டம் ஆடுவதை விட ஒரு சமூக விரோத வன்முறை இருக்க முடியுமா?

படிக்க:
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் நிலைகுலைந்து போய் உள்ள, அவர்கள் பாஷையில் அந்த இந்துக்களுக்கு இந்த இந்துத்துவ கும்பல் கிழித்தது என்ன? இந்துக்களின் சொத்து கோயில் என்று கூவும் இந்தக் கும்பல் வீடு வாசலை இழந்த டெல்டா மக்களுக்காக கோயிலை திறந்துவிட போராடத் தயாரா? கஜா புயலை யாரும் அரசியலாக்க கூடாது என்று மக்கள் உரிமைகளை ஒடுக்கும் இந்தக் கும்பல் சபரி மலையை அரசியலாக்குவது மட்டும் சரியாம்!

துரை.சண்முகம்
துரை. சண்முகம்
கண்ணுக்கு நேரே நமது தமிழக மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான ஒருவர் தமது எடுபிடிகளுடன் போய் அங்கே தங்கி மக்களுக்கு வேலை செய்யாதது அவருக்கு  அவமானமாகப் படவில்லை, இருமுடி கட்டிக்கொண்டு கோயிலுக்கு போன இடத்தில் ரெண்டு கொசு கடித்துவிட்டதாம்! அதுதான் இப்போது அவமரியாதையாம்! அதற்காக முழு அடைப்பாம்! எவ்வளவு வக்கிரம் பிடித்த ஒரு பாசிச கட்சி இந்த பா.ஜ.க. என்பதை பொன்னாரை விட வேறு யார் இவ்வளவு பொருத்தமாக நமக்கு விளக்க முடியும்?

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

4 மறுமொழிகள்

  1. /மக்களால் கழுவி கழுவி ஊத்தப் படுவதை தவிர வேறு எந்த புனித தீர்த்தத்தாலும் பாவங்களை கழுவிக்கொள்ள முடியாத பா.ஜ.க. சபரி மலை விவகாரத்தை வைத்து புனிதம் தேடவும் அன்றாடம் தனக்கான நியூஸ் வேல்யூவ்வை ஏற்றிக் கொள்ளவும் சொகுசாக அரசு பாதுகாப்போடு கோயிலுக்கு போய் வந்ததைக் கூட ஒரு போராட்டம் போல சித்தரித்து, பொய் பிரச்சாரத்தின் மூலம் ஏதோ இந்துக்களின் பக்தி உரிமைக்கு கேரளா அரசால் பங்கம் வந்துவிட்டதைப் போல கள்ள ஆட்டம் ஆடுகிறது/

    வாக்கியம் நீளம் படிக்க எளிமையாக இல்லை.

  2. பொன்னார் அசிங்கப்பட்ட வீடியோ வெளியானது தான் முழு அடைப்புக்கு காரணம். கட்சிக்கு உள்ளேயே தனது அவமானத்தை சமாளிக்க வேண்டிய தேவை பொன்னாருக்கு இருந்தது. மதவெறி கேடர்களிடம் எச்.ராஜா ஸ்கோர் செய்ததைபோல இல்லாமல் பொன்னார் திறமையில்லாதவர் என்கிற கருத்து உருவகாலாம் என்பதாலும் தான் குமரியில் முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்தது பொன்னார் கோஷ்டி.

    இந்த காமெடி பீஸ்களிடம் அதிகாரத்தை கொடுத்தால் மக்கள் பிரச்சணைகளை விட்டு தங்கள் கோஷ்டி பிரச்சணைகள், மதவெறி தீவிரவாதத்திற்கு தான் செல்வார்கள் என்பதை தஞ்சை மக்களை போல கன்னியாகுமரி இந்துக்களும் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் இந்த கும்பல் ஏழை இந்துக்களுக்கு எதிரானவர்கள்.

  3. ஐய்யப்பாஸ் கடைபிடிக்க வேண்டிய விரதம்:

    1.பொண்டாட்டியோடு உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
    2. தண்ணி அடிக்கக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. tamasic உணவு கூடாது. (அது என்ன tamasic உணவு?)
    3. குடும்பத்திலிருந்து தனித்து வாழ வேண்டும்.
    4.அன்றாட வாழ்க்கையில் தன் குடும்பப் பெண்கள் உள்ளிட்ட எந்தப் பெண்ணுடனும் உரையாடக் கூடாது.
    5. தனக்கான உணவை தானே சமைத்துக் கொள்ள வேண்டும்.
    6. பிரார்த்தனைக்கு முன்பு அன்றாடம் இரண்டு முறை குளியல் போட்டு ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
    7. கருப்பு மேலாடை அணிய வேண்டும்.
    8.ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடுதான்.
    9.வெறுங்காலில் நடக்க வேண்டும்.

    இதுதான் 41 நாட்களுக்கு ஐய்யப்பாஸ் கடைபிக்க வேண்டிய விரதம். இதை மீறினால் விரதம் அசுத்தப்பட்டு விடும்.

    இதுதான் மரபு. பாரம்பரியம். இது நீதியரசர் சந்திரசூட் அவர்களின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு Part B பாரா 25 ல் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்த விரதங்களை மேற்கொண்ட பிறகுதான் பொன்னார் சபரிக்குச் சென்றாரா? இல்லை மற்ற பிற பக்தாள்ஸ் இவற்றை கடைபிடிக்கிறார்களா?

    இந்த வரைமுறையை மீறக்கூடாது என்றால் பதினெட்டு படிகள் மட்டுமல்ல ஐய்யப்பனேகூட சிலந்திக் கூட்டில்தான் சிறைபட வேண்டும்.

    இதை எல்லாம் நீங்கள் மீறும் போது, நீங்கள் போற்றிப்பாடும் புனிதம் கெடவில்லையா?

    மாதவிடாய் காலத்தப் பெண்கள் மட்டும் போகக் கூடாது என்பது அப்பட்டமான தீண்டாமை.

    தீண்டாமையைப் பொருத்தவரையில், மாதவிடாய்ப் பெண், பிணம், தீண்டத்தகாத பறையன் இவர்கள் எல்லாம் ஒன்று என்கிறது பார்ப்பன இந்து மதம். (மனுஸ்மிருதி:5-85)
    எனவே தீட்டுப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீட்டுப் பட்டுவிட்டால் புனிதம் கெடும். புனிதம் கெட்டுப் போனால் அதனோடு சேர்ந்து பார்ப்பானும் பார்ப்பனியமும் சுடுகாட்டுக்குத்தான் போக வேண்டும். சபரிப் பிரச்சனை பார்ப்பனியப் பிரச்சனை.
    மாதவிடாய்ப் பெண்கள் பதினெட்டாம் படியில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பார்ப்பனியத்திற்கு கொடுக்கும் மரண அடி. மரண அடி கொடுக்காமல் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது. பார்ப்பனியம் வீழாமல் தீண்டாமையும் ஒழியாது.
    இணைப்பு : 1
    PART B

    “25 Traditionally though the Vratham period extended over forty-one days, nowadays shorter periods are permitted. While it is expected that for first time initiaties observe the forty-one day Vratham, others shorten the term to two weeks or even six days. A key essential of the Vratham is a sathvic lifestyle and brahmacharya. This is believed to be a step towards a pure body and mind an effort to be aloof from the materialistic world, by taking a step towards the path of devotion.

    The Vratham or penance entails:

    (i) Abstaining from physical relations with a spouse;

    (ii) Abstention from intoxicating drinks, smoking and tamasic food;

    (iii) Living in isolation from the rest of the family;

    (iv) Refraining from interacting with women in daily life including those in the family;

    (v) Cooking one’s own food;

    (vi) Maintaining hygiene including bathing twice a day before prayers;

    (vii) Wearing a black mundu and upper garments;

    (viii) Partaking of one meal a day; and

    (ix) Walking barefoot.

    The penance is to be carried out in the manner prescribed. Maintaining oneself as ‘pure and unpolluted’, it is believed, would lead to the path towards attaining Godhead or to be one with Lord Ayyappa.”
    இணைப்பு : 2
    5-85. When he has touched a Kandala, a menstruating woman, an outcast, a woman in childbed, a corpse, or one who has touched a (corpse), he becomes pure by bathing.
    பறையன், தூமையானவள், பதிபின், பிரசவித்தவள், பிணம், பிணத்தைத் தொட்டவன் இவர்களைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான்.

  4. பார்ப்பனிய மற்றும் ஆணாதிக்க மனநிலையின்
    வெளிப்பாடே சபரிமலை போராட்டம்.இதில் குளிர்காய சங்கிகள் காத்துக்கிடக்கிறார்கள்.ஊரானின் பின்னூட்டம் இவர்களின் முகமூடியை கிழிப்பதை அறியலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க