ஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக உருக்குலைந்து கிடக்கின்றன. எந்த கிராமத்திற்குச் சென்றாலும் மக்களின் அழுகுரலும், ஓலமுமாகத்தான் இருக்கிறது. ஆம்பலாப்பட்டு கிராம தென்னை விவசாயிகள் நல்லத்தம்பி, ராசப்பன், சுப்பையன் கூறுவதைக் கேட்போம்.

அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) நேரு, தங்கராசு, நல்லத்தம்பி மற்றும் ராசப்பா.

“தென்னையின் வீழ்ச்சி உற்பத்தியாளர்களை மட்டும் பாதிக்கவில்லை. இந்த தென்னையை நம்பி இருக்கும் உப தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால்தான்.

தென்னையை நம்பி கீத்து பின்னும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், மரம் ஏறி காய் பறிக்கும் தொழிலாளர்கள், கொப்பரைத் தேங்காய் தொழிலாளர்கள், தென்னை பாலைத் தொழிலாளர்கள், கீத்துக் கொட்டகை போடும் தொழிலாளர்கள் மற்றும் பெண் தொழிலாளர்கள் என்று இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கிறது. இது எல்லாமே இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைத் தொழில்கள்.

அரசின் கணக்கீட்டுப்படி புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை சுமார் அரை கோடிக்கும் மேல் என்கிறார்கள்.  4000 ஹெக்டேர் தென்னை விவசாயம், 4 கோடி மரங்கள் உள்ளது. இதில் நில உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கிலும், தொழிலாளர்கள் இலட்சக்கணக்கிலும் இருக்கிறார்கள்.

தேங்காயின் கொட்டாஞ்சி, தென்னையின் அடிமட்டை கூட பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ கொட்டாஞ்சி 13 ரூபாய் வரை எடுக்கிறார்கள். அவை எரிபொருளாக பயன்படுகிறது. எரிக்கப்படும் இடத்திலும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். தென்னையில் தூக்கி வீசக்கூடியது என்று எதுவும் இல்லை. ஆனால், எல்லாருடைய வாழ்வையும் புயல் தூக்கி வீசி விட்டதே….. அதுதான் பிரச்சனை.

மரம் ஏன் சரிந்தது?

தென்னை, பனை, ஈச்சமரம், கூந்தப்பனை எல்லாம் மோனோகாட் பிளாண்ட் என்பார்கள். அதாவது ஒரு விதைத் தாவரம். இதில் தென்னையை தவிர மற்ற அனைத்து மரங்களின் வேர்களும் செங்குத்தாக செல்லும். நீர் எவ்வளவு ஆழம் இருந்தாலும் அதை நோக்கி செல்லும். ஆனால் தென்னை அப்படி இல்லை. இதன் வேர்கள் பக்கவாட்டில் படர்ந்து செல்லும். மூன்று அடி ஆழம் மட்டுமே வேர்கள் இருக்கும். பக்கவாட்டில் வேர்கள் செல்ல காரணம், அருகாமை நிலத்தில் இருக்கும் நீரை உறிஞ்சி தன்னை பாதுக்காத்துக்கொள்ள செல்லும். இதனால்தான் இதனை இடம் பெயர்ந்த வேர்கள் என்கிறார்கள். அதனாலயே இந்த காற்றில் பல மரங்கள் வேர்களோடு பிடுங்கிக் கொண்டு விட்டது. அதிக வெயில் அடித்தாலும் பட்டு விடும், காற்று வீசினாலும் விழுந்து விடும். அதிக நோய்கள் தாக்கக் கூடியதும் தென்னைதான். வைரஸ் தாக்கும். தஞ்சை வாடல் நோய் என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த நோய்த் தாக்கினால் காய் பெருக்காது. ஆக எதுவாகினும் சுலபமான முறையில் தென்னை பாதிக்கப்பட்டு விடுகிறது.

மரங்கள் ஏன் பாதியிலேயே முறிந்தது?

அதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு மரமும் அதிக பாரம் கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு தென்னையை பொருத்தவரை ஆரம்பத்திலும், கடைசி காலத்திலும் பலன் தராது. அதன் நடுநிலையான காலத்தில் மட்டும்தான் நல்ல பலன். அதிக காய்காய்க்கும். இப்பொழுது விழுந்த மரங்கள் எல்லாமே வருமானம் ஈட்டித்தரும் காலகட்டத்தில் இருப்பவை. வளமான காய்கள் இருந்ததால் பாரம் தாங்க முடியாமல் பாதிலேயே முறிந்து விட்டது.

அப்ப விழாத மரங்கள் எல்லாம் பலமான மரங்களா?

உண்மையென்னவெனில், விழாத எந்த மரத்திலும் காய்கள் இல்லை. குலை தள்ளாத மரங்கள்தான் விழாமல் இருக்கின்றன. நீங்கள் பார்த்தால் உங்களுக்கே உண்மை தெரியும்.

அரசின் நிவாரணத்தொகை போதுமானதாக இருக்கிறதா?

நெற்பயிர், தென்னை, போன்றவை வருவாய்த் துறையின் அடங்கல் பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது. நான்காண்டுக்கு முன்பே எடுத்ததில் 4000 ஹெக்டேர் என்று சொன்னார்கள். இன்று தென்னை விவசாயம் அதிகரித்துள்ளது. ஆனால், இதனை எல்லாம் அரசு கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுது அறிவித்திருக்கும் இந்த நிவாரணமும் பழைய கணக்கீட்டின்படி தான் அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு கண்துடைப்பு. வேண்டுமானால் விவசாயிகளுக்கு இது ஒரு ஆறுதலாக இருக்கும். அவ்வளவுதான்.. மற்றபடி இழப்பை ஈடுகட்டவே முடியாது. 1000 மரம் வச்சிருக்கவன் வருஷத்துக்கு இருபது இலட்சம் சம்பாதிப்பான். அப்படி பார்த்தா இது எந்த மூலைக்கு?

படிக்க:
தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

குறைந்தபட்சம் அரசு, தென்னை மரங்களை எல்லாம் அப்புறப்படுத்திக் கொடுக்க முன்வந்தால் மீண்டும் தென்னை வைப்பதை பற்றி யோசிக்கலாம். இல்லையென்றால் மொத்த வாழ்க்கையும் இழக்க நேரிடும்.  இங்கே வாழக் கூடியவர்கள் அனைவருக்கும் வங்கி செக்குரிட்டி பாண்ட் தேங்காயில்தான் உள்ளது. இனி வங்கியிலும் கடன் வாங்க முடியாது. மீண்டும் தென்னை வைத்து வருமானம் பார்க்கவே பத்து ஆண்டுகள் ஆகிவிடும்… இதனாலயே தென்னை உற்பத்தியாளர்கள் மனதளவில் உடைந்து விட்டார்கள்.

வினவு களச் செய்தியாளர் இதுவரை எந்த அரசும் எங்களைப் பார்க்கவில்லை. வெளி நபர்களும் பார்க்கவில்லை. சென்னையில் வெள்ளம் வந்தபோது இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கினோம். ஆனால் அவர்களும் எங்களை கண்டுகொள்ளவில்லை.  விவசாயிக்குத்தான் யாரும் இல்லை” என்று ஆதங்கத்துடன் மனக் குமுறலை கொட்டுகிறார்கள்!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க