கஜா புயலினால் ஏற்பட்ட பேரழிவில் தென்னை விவசாயம் முக்கியமானது. டெல்டா மாவட்டங்களில் தென்னை விவசாயிகளின் வாழ்க்கை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி அடித்துச் செல்லப் பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, சமயன்குடிகாடு கிராமத்தில், விழுந்து கிடந்த தென்னை தோப்பில் கலங்கிய முகத்துடன் தங்களால் முடிந்த வரை சரி செய்து கொண்டிருந்தார்கள் ராஜேந்திரனும் அவருடைய மனைவி சரோஜாவும். நம்மைப் பார்த்ததும் அவரால் எதுவும் பேச முடியவில்லை. தடுமாறி பேச ஆரம்பித்தார்.
“கடந்த பதினஞ்சி வருஷமாதான் இந்த விவசாயத்துக்கு வந்தேன். நான் ஐ.டி.ஐ படிச்சி முடிச்சிட்டு 1976-ல திருநெல்வேலியில இருக்க அப்காஸ் சிமெண்ட் கம்பனியில வேலை பார்த்தேன். அப்ப கம்பனி சார்பா 400 ரூபா சம்பளம். கவர்மெண்ட் சார்பா 400 ரூபா. இதுக்கு மேல ஓ.டி. பார்த்தா 1,000 ரூபா கெடைக்கும். இதுல வர வருமானத்தை வச்சிகிட்டு குடும்பத்த பார்த்து கிட்டேன்.
1980-ல திருமணமானதால அங்கிருந்து மாத்திகிட்டு கும்பகோணத்துல இருக்க ஸ்ரீராமன் ராமன் டிராக்டர் கம்பனியில வேலைக்கு சேர்ந்துட்டேன். எட்டு வருஷத்துக்கு பிறகு 1988-ல மன்னார்குடியில சொந்தமா ஒரு ஒர்க்சாப் ஆரம்பிச்சேன். ஆனாலும் வேலைய விட்டு நிக்கல. பகல்ல கம்பெனியிலயும் இரவானா ஒர்க்சாப்புக்கும் போயிடுவேன். தூக்கமே கிடையாது. வேலைக்கு போகும்போதும், சர்வீசுக்கு வெளியூருக்கு போகும்போது பஸுல தூங்கிக்குவேன். அவ்ளோதான்.
ஓடியாடி வேலை செஞ்சாலும் வர வருமானம் பத்தல. இரண்டு குடும்பத்துக்கும் செலவு பன்னனும். ஒன்னு பொண்டாட்டி புள்ளையோட கும்பகோணத்துல வாடகை வீடு. எங்க அப்பா – அம்மா மழைய நம்பிதான் சவுக்கு விவசாயம் பண்ணிட்டு இங்கயே இருந்தாங்க. மழை இல்ல. அப்பப்ப சவுக்கு பட்டுடும். வெறுப்பாகி போர் போடலாம்னு லோன் கேட்டோம், கொடுக்கல. அதனால என்னோட ஒரு ஆளு வருமானம் இரண்டு குடும்பத்துக்குமே சரியா இருந்துச்சி.
என்னோட நிலைய பார்த்த எங்க மாமா என்ன சிங்கப்பூர் அனுப்புறேன்னு சொன்னார். அதனால நானும் வேலைய ராஜினாமா பன்னிடேன். கம்பனியில கொஞ்சம் காசு கொடுத்தாங்க. அதைக் கொண்டு 1995-ல சிங்கப்பூர் போயிட்டு நிசான் டீசல் வொர்க்சாப்புல வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாளைக்கு இருபது வெள்ளி சம்பளம். ஓ.டி பார்த்தா இன்னும் அதிகம் கிடைக்கும். மொத்தம் அஞ்சி வருசம் கஷ்டப்பட்டு 2,000 ஆண்டு ஊரு வந்தேன். மொத்தம் இருபது லட்சம் கொண்டு வந்து ஸ்டேட் பாங்குல போட்டுட்டேன். அந்த பணத்தைக் கொண்டுதான் இந்த தென்னையை வச்சேன்” என்று சொல்லிகொண்டே கண் கலங்குகிறார்.
படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
♦கரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை
தென்னையில நெட்டை ரகம், நெட்டை குட்டை ரகம், குட்டை ரகம்னு இருக்கு. நெட்டை ரகம் வளர்ந்து காய் காய்க்க 8 ஆண்டுகளுக்கு மேல ஆகும். 70 அடி வரைக்கும் வளரும். இதன் வாழ்நாள் 70 வருஷம். நெட்டை குட்டை ரகம் 7-லிருந்து 8 வருஷமாகும். 50 அடி வளரும். இதன் வாழ்நாள் 50 ஆண்டுகள்… குட்டை ரகம் 3 வருஷத்துலயே காய் காய்க்கும். இருபத்தி அஞ்சி அடி உயரம் வளரும். இதன் வாழ்நாள் 15 வருடங்கள் தான். இதில முதல் இரண்டு ரகம் தலைமுறை தாண்டி வாழவைக்கும்.
என்னோட ஒரு ஏக்கர்ல நெட்டை குட்டை ரகம் போட்டிருக்கேன். மொத்தம் 75 கன்னு. தென்னைய போட்டதும் போர் போட்டுட்டேன். ஆனா உடனே மின்சாரம் கெடைக்கல.. அக்கம் பக்கம், பங்காளிங்க கொல்ல. அவங்க கிட்ட மணிக்கணக்கு பேசி தண்ணி பாய்ச்சினேன். இதுக்கிடையில என்னோட ஒர்க்சாப்ப ஒரத்தநாடுல திறந்து வேலையும் பார்த்துக்கினு தென்னையையும் பார்த்தேன். ஏழாவது வருஷம், காய் காக்கிறதுக்கு முன்னாடி 50,000 பணம் கட்டி சர்வீஸ் வாங்கிட்டேன். இல்லனா காப்பாத்தியிருக்க முடியாது. 2008-ல முதல் வெட்டு நடந்தது. அப்பதான் என்னோட மனசே நிறஞ்சது. அதுக்கப்புறம் கொஞ்சம் உடம்பு முடியாததால ஒரத்தநாடு ஒர்க்சாப்ப மூடிட்டு முழுசா தென்னையில கவனம் செலுத்திதான் இதையெல்லாம் பார்த்து பார்த்து காப்பாத்திட்டு வந்தேன்.
ஒரு வெட்டுக்கு 15 ஆயிரத்துல இருந்து 20,000 வரைக்கும் கெடைக்கும். ஒரு வருஷத்துக்கு 4 வெட்டு பண்ண முடியும். ஒவ்வொரு வெட்டு முடிஞ்சதும் அதுக்கு உரம் போடனும். பத்து வண்டி மாட்டு சான எரு தேவைப்படும். ஒரு வண்டி 300 ரூபா. ஒரு மரத்துக்கு இரண்டு கூடை எரு கொட்டிடனும். மூன்று மூட்டை யூரியா, ஒரு மூட்டை பொட்டாஷ், ஒரு மூட்டை டி.ஏ.பி. இதையெல்லாம் கலந்து ஒரு மரத்துக்கு இரண்டு மரக்கா கொட்டி பாசனம் செய்யனும். இதுக்கு ஆட்கூலி எல்லாம் சேர்த்து எட்டாயிரம் செலவாகிடும். இதுல ஊடுபயிரா கடலை, உளுந்துன்னு எதுவும் வக்க முடியாது… அணில், எலின்னு தோப்புல நிறஞ்சிருக்கும். அதுகிட்ட இருந்து காப்பாத்த முடியாது.
இதுபோக குருத்துப்பூச்சி, வண்டோட பிரச்சனை அதிகமா இருக்கும். குருத்து பூச்சி மரத்துல இருக்க எல்லாத்தையும் கட் பன்னி போட்டுடும். அதுக்கு மருந்து அடிக்கனும்…. அதே மாதிரி மரத்துல ஒரு துளை போடும் பூச்சிங்க தொல்லை. அதை சரிபன்னவே கஷ்டம். அப்படி வந்துட்டா மானோடபாஸ், ரோக்கர் கலந்து துளைய அடைக்கனும். இல்லனா மரம் எவ்ளோதான் செழிப்பா வளந்தாலும் காய் காய்க்காது. இதுக்கு ஆயிரபா செலவாகிடும். இதை பராமரிக்கவே தனியா கவனம் செலுத்தனும்…
இப்படியெல்லாம் பார்த்து பார்த்து புள்ளைய மாதிரி வளர்த்தோம். மொத்தமும் நாசமாக்கிட்டு போயிடுச்சி இந்த புயல்… இதுல இருந்து எப்படி மீளப்போறோம்னு தெரியல… விழாத மரத்தையும் நம்ப முடியாது…வேரும் விட்டிருக்கும்… இதுவும் எத்தன காலத்துக்கு வரும்னு தெரியல…” என்று கண்கலங்குகிறார் ராஜேந்திரன்.
செய்தி – படங்கள்: