கடந்த ஆகஸ்டு 12 அன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பநாடு என்ற பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 23 வயது இளம்பெண்ணை கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பொறுக்கிகள் கடத்திச்சென்றுள்ளனர். கஞ்சா போதை தலைக்கேறிய அக்கும்பல் கடத்திச்செல்லப்பட்ட பெண்ணின் தலையில் பீர் பாட்டிலை உடைத்து, உடைந்த பீர் பாட்டில் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அக்கொடூரத்தை காணொளியாகவும் பதிவு செய்துள்ளது.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண் பாப்பநாடு போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது அங்கு பணியில் இருந்த பெண் போலீசு எஸ்.ஐ. சூர்யா, “இது எங்கள் லிமிட்டில் வராது” என்று சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை கூட வாங்காமல் அலட்சியமாக திருப்பி அனுப்பியுள்ளார். உடல்நிலை மோசமானதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது “இது போலீசு பிரச்சனை, நாங்கள் சிகிச்சை அளிக்க மாட்டோம்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவர்களும் திருப்பி அனுப்பியுள்ளனர். இறுதியாக பல போராட்டங்களுக்கு பிறகு ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் உள்பட நான்கு பேரையும் போலீசு கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டுமெனவும் பட்டுக்கோட்டை மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி ஆகஸ்டு 27-ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. போலீசு நிலையத்தில் வழக்கை பதிவு செய்யாத எஸ்.ஐ. சூரியாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்; சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளை தடுக்க நாடுதழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்; குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்; மருத்துவமனைகளில் உரிய பாதுகாப்பான சூழலை பெண் மருத்துவர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என நாடும் முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. இச்சூழலில் தமிழ்நாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு என்பது தமிழ்நாட்டிலும் பெண்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
படிக்க: தருமபுரி: பட்டியலினப்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த ஆதிக்கச் சாதி வெறியர்கள்
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்க்கு அருகே கந்திகுப்பத்தில் செயல்பட்டுவரும் தனியார்ப் பள்ளியின் என்.சி.சி. பயிற்சி முகாமில் 17 பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நிலையில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை அதே பள்ளியில் பணியாற்றும் என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் தற்போது சம்பவமும் அரங்கேறியுள்ளது. மேலும் 13 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது. இச்சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொன்னபோது, “இதனை வெளியே சொல்லி பெரிதாக்க வேண்டாம்” என பாலியல் பலாத்காரம் செய்தவனைக் காப்பாற்றவே பள்ளி நிர்வாகம் முயன்றது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்தே பெற்றோருக்கு விசயம் தெரியவந்துள்ளது.
பள்ளி, கல்லூரி, வீடு, பணியிடம் என ஒட்டுமொத்த சமூகச் சூழலுமே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கக் கூட முன்வராத மருத்துவர்களின் மனநிலையானது சமூகத்தில் பாலியல் பலாத்காரம் என்பது இயல்பாக மாறிவருவதை நமக்கு வெளிப்படையாகக் காட்டுகிறது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு மட்டும் இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளது. இது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் தீவிரமடைந்து வருவதையே காட்டுகிறது. குறிப்பாக பார்ப்பனியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா, அடிப்படையிலே பெண்களுக்கு எதிரான, ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் போதை, கஞ்சா கலாச்சாரம் மற்றும் பெண்களை நுகர்வுப்பொருளாக காட்டும் மறுகாலனியாக்க நுகர்வு வெறி இக்காட்டுமிராண்டித்தனத்தை மேலும் ஊக்குவித்து பெண்கள் மீதான வக்கிரங்களை அடுத்தநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
எனவே, சட்டத்தைக் கடுமையாக்குவதோ குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்வதோ மரண தண்டனை விதிப்பதோ தற்காலிக தீர்வாகவே அமையும். சமூகத்தில் பெண்கள் மீதான பார்வையை மாற்றியமைக்காமல், ஆணாதிக்கம், பெண்களை நுகர்பொருளாகக் காட்டும் முதலாளித்துவ-மறுகாலனியாக்கம் மற்றும் போதை கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டாமல் பெண்கள் மீதான வன்முறைகளை முழுமையாகத் தடுக்க முடியாது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube