அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி

மூன்று மாத கைக்குழந்தை., ஆபரேசன் பண்ண பொண்ணையும் வைத்துக்கொண்டு புயலடித்த அந்த இரவைக் கடந்ததையும்; புயலுக்குப்பின் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி பட்டத் துயரையும் விவரிக்கிறார் அதிராம்பட்டினம், கமலா.

பொழுதன்னிக்கும் வெயிலே அடிச்சதுனால பயமே தெரியல. ஒன்றரை மணிக்கு ஒரே சத்தம். விசிலடிக்கிறமாதிரி. மரம் எல்லாம் விழுந்திச்சு. கதவை தொறந்தா சாத்தவே முடியல. 3 மாத பிள்ளையத் தூக்கிட்டு பக்கத்து வீட்டுக்கு ஓடுனேன். ஒரு வூட்டுக்குள்ள 6 குடும்பம் ஒன்னா ஒக்காந்துருந்தோம். வெளிய வந்தாலும் ஆபத்து. உள்ள இருந்தாலும் காத்து தள்ளுது. புள்ளைங்க எல்லாம் அலறுதுங்க. உள்ளயும் இருக்க முடியல வெளியம் போக முடியல. காத்தும் அடிக்கிது. மழையும் பெய்யுது. மூனு மணிக்குத்தான் கொஞ்சம் ஓய்ஞ்சிச்சு.

பட்டுக்கோட்டையில் இடிந்து விழுந்த குடிசை.

3 மாசக் கைக்குழந்த… ஆபரேசன் பண்ண என் பொண்ண வச்சிகிட்டு வீடு வீடா போனேன். எல்லா எடத்துலயும் ஆளுங்க இருக்காங்க. எங்க போறதுனே தெரியல. சாப்பாட்டுக்கு வழியில்லை.

மறைக்காயருங்கதான் உதவி செஞ்சாங்க. பால், மெழுகுவர்த்தி, தீப்பட்டினு வந்து கொடுத்தாங்க.

தண்ணியே சுத்தமா இல்ல… பஸ்ஸ மறிச்சோம் அன்னிக்கி.. அப்போ சொல்றாங்க. நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க.. அவங்கள கூப்டுங்க. அவங்கள கூப்டு மறிங்க எங்களை மறிக்காதீங்கனு சொன்னாங்க. நாங்க போலீசுகாரங்க வண்டி எல்லாத்தையும் மறிச்சோம்.

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை! நேரடி ரிப்போர்ட்

அப்போ ஒரு ஆம்பள சட்டைய புடுச்சி… ஏன்டா இங்க வந்து மறிக்கிறீங்க?னு அடிக்க வந்தாரு போலீசு எஸ்.பி.ங்கிறவரு.

நாங்க ஓட்டுப் போட்டவங்க இங்க வரட்டும். நாங்க அவங்கள்ட்ட பேசிக்கிறோம். நீங்க அப்படியே நில்லுங்கன்னு சொன்னோம். அவங்க வரட்டும் உங்களுக்கு வழிவுடுறோம்னு சொன்னோம்.

ஓட்டு போடுறப்ப மட்டும் முடியாதவங்கள விட்றீங்களா? உடனே ஆட்டோ புடுச்சிட்டு வந்து ஓட்டுப் போட கூட்டிட்டு போறீங்கல்ல.. அப்ப அந்த ஓட்டு செல்லும்ன்றீங்க… இப்ப வந்து நாங்க செல்லாதவங்க..

பட்டுக்கோட்டை, கறம்பயம், ஜீவா காலனி மக்கள் சாலை மறியல்.

உங்ககிட்ட என்ன கேக்கிறோம்… குடிக்க தண்ணி மட்டும்தான் கேக்கிறோம். சாப்பாடு கேக்கல வேற எதுவும் கேக்கலை.

இப்ப வழியை விட்டாத்தான் உங்களுக்கு தண்ணி கிடைக்கும். இல்லனா தண்ணி கிடைக்காதுனு சொன்னாங்க. போலீசெல்லாம் எங்கள அடிக்க அடிக்க வர்றாங்க.

வெள்ளம் வந்து வீட்ட அரிச்சிட்டுப் போனப்பகூட கலங்கல. தண்ணிக்கு கூட நாங்க பயப்படல… இந்தப் புயலு எங்களுக்கு பயம் காட்டிருச்சி.

கெவருமெண்ட் எங்களத் திரும்பிக் கூட பாக்கல… இந்த தெருவே செத்திருந்தா கூட யாரும் என்னனு கேட்டிருக்க மாட்டாங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க