டந்த அக்டோபர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் எனத் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி கேரளத்தில் காலூன்ற பார்க்கும் பா.ஜ.க., இந்துத்துவ ரவுடிகளை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறது.  மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் போர்வையில் ஆர்.எஸ். எஸ். குண்டர்கள் சபரிமலையில் தங்கி பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது திருவாங்கூர் தேவசம் போர்டு.  சபரிமலை கோயிலை நிர்வகித்துவரும் இந்த போர்டு, அடிப்படையான சில வசதிகளை செய்து தரவேண்டியதன் காரணமாக கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.  இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சச்சரவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் இப்படி தெரிவித்திருக்கிறது.

போராட்டக்காரர்கள் என்கிற பெயரில் சபரிமலையில் குவியும் ஆர்.எஸ். எஸ். குண்டர்களை கைது செய்துவருகிறது கேரள இடது முன்னணி அரசு. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் பக்தர்களின் வழிபடும் உரிமையில் கேரள அரசு தலையிடுவதாக தெரிவித்துள்ளன.  இதற்கு பதிலளித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “கைது செய்யப்பட்டவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல, சன்னிதானத்தில் ஆர்.எஸ். எஸ். காரர்கள் முகாமிட்டு, பிரச்சினையை உருவாக்கப் பார்க்கிறார்கள். சபரிமலையில் பிரச்சினை உருவாவதை அரசு பார்த்துக் கொண்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரட், மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தங்களுடைய மதவாத அஜெண்டாவை செயல்படுத்த முனைவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

“ஆர்.எஸ். எஸ்.  – பா.ஜ.க. கூட்டு சேர்ந்து வடக்கில் அயோத்தி பிரச்சினையையும் தெற்கில் சபரிமலை பிரச்சினையையும் ஊதிப் பெரிதாக்கி மதவாத பதற்றத்தை உருவாக்கப் பார்க்கின்றன. இதன் மூலம் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இதை முறியடிப்பதே நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி” எனத் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் பெயரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அட்டூழியங்கள் அதிகரித்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று சந்நிதானத்துக்கு அருகே பக்தர்கள் வேடமிட்ட கயவர்கள் சுமார் 50 பேரை போலீஸார் கைதுசெய்தனர். உடனே பக்திக்கு ஆபத்து என இந்துத்துவவாதிகள் கிளப்பிவிட்டனர். இது தொடர்பான வழக்கு நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராமசந்திர மேனன் மற்றும் அனில் குமார் அடங்கிய அமர்வின் முன்பு வந்தது.

அப்போது நீதிபதிகள், சபரிமலையில் போலீஸாரின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர். கோயில், பக்தர்களுக்கானது. அவர்களை அங்கு தங்கக் கூடாது என யார் உத்தரவு பிறப்பித்தார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை செய்தனர்.  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 144 தடை உத்தரவை மீறிச் செயல்பட்டவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். கேரளாவின் பொதுப்புத்தி என்பது நீதிமன்றம் முதல் ஓட்டுக் கட்சிகள் வரை பக்தி, சம்பரதாயம் என்றே இருக்கிறது. இல்லையேல் நீதிமன்றம் குண்டர்களை பக்தர்கள் என்று நம்பியிருக்குமா?

இந்நிலையில், 1000-க்கும் அதிகமான பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இத்தனை சச்சரவுகளுக்கு நடுவிலும் தங்களுடைய வழிபடும் உரிமைகளை பெற விரும்பும் இந்தப் பெண்களுடைய பக்தியை பழிக்கிறது இந்துத்துவ அடிப்படைவாத கும்பல். இந்து மதமே பெண்களுக்கு எதிரானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.