மோடி அரசின்  பாராமுகத்தைக் கண்டித்து டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்திவருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிசா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை டெல்லி, ராம் லீலா மைதானத்தில் கூடிய இவர்கள், இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.

பேரணியில் கலந்துகொண்ட சில விவசாயிகளின் குமுறலை இங்கே தருகிறோம்…

ஹரியானா மாநிலம் ரிவேரி பகுதியிலிருந்து பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்த, சுரேஷ் சிங் (56),  கடுகு பயிர் செய்யும் விவசாயி. “நரேந்திர மோடி அரசு எங்களுடைய கோரிக்கைகளை ஏன் நிறைவேற்ற மறுக்கிறது என புரிந்துகொள்ள முடியவில்லை. திரும்ப திரும்ப நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். நான் கடுகு விவசாயம் செய்கிறேன். இரண்டு ஏக்கர் நிலத்தில் கடுகு விதைத்திருந்தேன். ஆரம்பத்தில் சரியாக மழை இல்லாமல் இருந்தது.  செப்டம்பர் மாதம் பெய்த அதிகப்படியான மழை, ஓரளவுக்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்தவற்றை அழித்துவிட்டது” தனது பயிர்களை அனைத்தும் நாசமாகிவிட்ட நிலையில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு கட்டியிருந்தபோதும், சுரேஷ் சிங்குக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்திலிருந்து வந்திருந்த சஞ்சய் லெண்டே, “நேற்றிரவு தங்கியிருந்த முகாமில் கொசுக்களின் தொல்லை அதிகமிருந்தது. ஆனால், அவை எங்கள் ரத்தத்தை உறிஞ்ச மறுத்துவிட்டன.  நாங்கள் விவசாயிகள், எங்களிடம் இருந்த ரத்தம் அனைத்தும் உறிஞ்சப்பட்டுவிட்டது என கொசுவுக்குக்கூட தெரிந்திருக்கிறது” என்கிறார் வேதனையோடு.

அவருடன் வந்திருந்த ராஜு ரோடே என்ற விவசாயி, மோடிக்கு ஓட்டுப் போட்டதை நினைத்து வருத்தப்படுகிறார். “நாங்கள் முட்டாள்கள், அவரை நம்பினோம். எங்கே இருக்கிறது அச்சே தின்? (நல்ல நாள்)” எனக் கேட்கிறார்.

(இடமிருந்து) பர்பு சிங் மற்றும் பல்ஜித் சிங்.

பஞ்சாபின் பாட்டியாலாவிலிருந்து வந்திருந்த பர்பு சிங் மற்றும் பல்ஜித் சிங் ஆகியோர் கடந்த 70 வருடங்களாக அனைத்து கட்சிகளும் தங்களை ஏமாற்றி வருவதாக சொன்னார்கள்.  “மோடி, சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமலாக்குவதாக கூறினார். ஆனால், அதை செய்யவில்லை. பஞ்சாபில் ஒவ்வொரு நாளும் நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இப்போது நிலங்கள் மட்டுமே உள்ளன; விவசாயிகள் இல்லை. மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசும் வாக்குறுதி கொடுத்தது, செய்யவில்லை.  ஆனால், இந்த பேரணியை நாங்கள் முக்கியமானதாகப் பார்க்கிறோம். அரசின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறோம். இப்போது அவர்கள் எங்களை புறக்கணிக்கவே முடியாது” என்கிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலம், பலியா பகுதியைச் சேர்ந்த பரசுராம், பிரதமரின் காப்பீட்டுத் திட்டம் மோசடியானது என்கிறார்.  “காப்பீடு நிறுவனங்கள்தான் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் வேதனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வானிலையால் ஏற்படுகிற பாதிப்புகளை நாங்களாகவே எதிர்கொள்கிறோம்.” என்கிறார்.

படிக்க:
இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்
பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !

பெரும்பாலான விவசாயிகள் பயிர் இழப்பை சந்தித்திருந்தபோது, எவருக்கும்  காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்பது பேரணியில் கலந்துகொண்டவர்கள் முக்கிய குற்றச்சாட்டாக வைத்தனர்.

பேரணியின்போது ‘அயோத்தி தேவையில்லை; கடன் தள்ளுபடி செய்யுங்கள்’ என்கிற முழக்கம் அதிகமாக ஒலித்தது. காவி பரிவார் கும்பல், ‘அயோத்திக்காக மக்கள் போராடுவார்கள்’ எனக்கூறி ஒரு வாரம்கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.  வேலை வாய்ப்பு இல்லை, விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சிறு தொழில்கள் துடைத்தெறியப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் விட்டுவிட்டு, காவிக்கொடியை தூக்கிக்கொண்டு மக்கள் தங்கள் பின்னால் ஓடிவந்துவிடுவார்கள் என்கிற காவிகளின் கனவை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் டெல்லியில் திரண்டிருக்கும் விவசாயிகள்.

செய்தி ஆதாரம்:
‘We’re Fools To Have Believed Modi’: Voices From The ‘Dilli Chalo’ March
For Farmers Protesting in Delhi, Climate-Related Crop Damage Has Become the Focus

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க