ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
பத்திரிக்கை செய்தி

நாள்:30.11.2018

ச்சு ஆலை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறோம். எங்களின் கோரிக்கை ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி தூத்துக்குடி சிப்காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்; மக்களுக்கு சுத்தமான காற்று, நீர், சுகாதாரமான வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்பதே. சுகாதாரமான வாழ்வு என்ற அடிப்படை உரிமைக்காக மே,22 – 2018 அன்று 14 போராளிகள் உயிர் துறந்திருக்கிறார்கள். அதன்பின் தமிழக மக்களின் கடும் எதிர்ப்பின் பேரில் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

படிக்க:
♦ தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
♦ ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மோசடியானது; நீதிமன்றத்தில் ரத்தாக வாய்ப்புள்ளது என்று மே 28, 2018 அன்றே மக்கள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்தோம். முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களும் அரசாணை செல்லாது என்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.சி.டி.செல்வம், திரு.பசீர் அகமது ஆகியோர் அரசாணையின் சட்டவலிமை குறித்துக் கேள்வி எழுப்பியபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ”கொள்கை முடிவெடுத்துத்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது –அரசாணை சட்டப்படி வலிமையானது” என  நீதிமன்றத்தில் தெரிவித்தார். முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் உச்சநீதிமன்றம் அல்ல, உலகநீதிமன்றம் சென்றாலும் ஸ்டெர்லைட்டைத் திறக்க முடியாது என்றனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

ஆனால் இன்று நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு, தமிழக அரசின் அரசாணை இயற்கை நீதிக்கு எதிரானது, சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட்டைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி அவர்களின் பதில் என்ன? தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கையை வெளியிட மறுப்பதேன்?

நீதிபதி தருண் அகர்வால் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த வரம்புகளை மீறி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள், புற்றுநோய் உயிரிழப்புகள், மக்களின் அச்சம் குறித்து எந்த ஆய்வும் நடத்தாத ஆய்வுக்குழு அரசாணை தவறு எனச் சொல்வது அப்பட்டமான ஒருசார்பு நிலையாகும். அரசாணை குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஆய்வு எனச் சொல்லி சென்னையில் வழக்கறிஞர்கள் வாதங்களைத்தான் கேட்டார் தருண் அகர்வால். எனவே நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயமும், தமிழக அரசும் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். எனினும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டை திறக்கச் சொல்லியே உத்தரவிடும் என எதிர்பார்க்கிறோம். பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிடுவது, உச்சநீதிமன்றம் செல்வது என தமிழக அரசு நாடகமாடுகிறது எனக் குற்றம் சாட்டுகிறோம்.

ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு – முழக்கமிடும் தூத்துக்குடி மக்கள்

கடந்த 3 மாத காலமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காண்ட்ராக்டர்கள் மூலம் சாதி, மத உணர்வுகள் தூண்டப்படுகிறது. கோடிக்கணக்கான பணம் மக்களைப் பிளக்க செலவழிக்கப்படுகிறது. போராட்டத்தில் முன்நின்றவர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. மிரட்டல்கள் விடப்படுகின்றன. மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதிவிடுவோர் காவல்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். ஸ்டெர்லைட் எப்படியாவது திறக்கப்பட்டுவிடும் என்ற கருத்து தமிழக அரசின் துணையுடன் உருவாக்கப்படுகிறது. இச்செயல்கள் தமிழக அரசின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை !
♦ ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !

எனவே, உண்மையில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதில் நேர்மையாக உள்ளதென்றால் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

1. சுற்றுச்சூழல் விதிமுறை மீறல், மக்களுக்கான நோய்பாதிப்பு என ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வலிமையான ஆதாரங்களைத்  திரட்டி, ஸ்டெர்லைட் போன்ற பெருவீத தாமிர காப்பர் உருக்கு ஆலைகளுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது என்று அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்ற தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் உடனே கூட்டப்பட வேண்டும்.

2. தமிழக அரசு வழங்கிய கட்டிடம், தீயணைப்பு, தொழிற்சாலை உரிமங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்தை தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து உடனே வெளியேற்ற வேண்டும்.

3. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த 14 பேர் உயிரிழப்பு, 273 வழக்குகள், 300-க்கும் மேலானோர் கைது, பல கோடி சொத்துக்கள் நாசம், இணைய சேவை முடக்கம், துறைமுகம் மூடல் உள்ளிட்டவை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பொது அமைதி, சட்டம்-  ஒழுங்கு சீர்குலைவை அடிப்படையாகக் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133-ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூட வேண்டும்.

4. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி, சிப்காட்டை விட்டு வெளியேற்றக் கோரி, மக்கள் கூட்டமைப்பின் சார்பில் துண்டறிக்கைப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் உள்ளிட்ட தொடர் இயக்கம் நடத்தப்படும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஸ்டெர்லைட் மீண்டும் இயங்குவதைத் தடுப்போம்.

  1. ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஜனநாயக முறையில் தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தப்படும். தமிழக மக்கள், மாணவர்கள், உலகத் தமிழர்கள், அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், தூத்துக்குடி மக்களோடு இணைந்து தமிழகம் முழுக்கப் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதென்பது, தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்; தமிழர்களை அவமதிப்பது. உயிர்துறந்த 14 போராளிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது. எனவே, மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட்டுக்கு மறைமுக ஆதரவு தராமல் உடனே கொள்கை முடிவெடுத்து சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் உங்களை அகற்றுவர்.

இவண்:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9865348163, 9443584049, 8608723357,
9791123059, 9629373089, 9444969704