டந்த வியாழக்கிழமை (09-08-2018) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வேதாந்தா நிறுவனத்திற்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது. கூடவே கொசுறாக வேதந்தா நிறுவனத்தை உற்பத்திப் பகுதிக்குச் செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் நிகழ்த்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க ஒரு மொன்னையான அரசாணையை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது.

”சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாமிர உருக்கு ஆலை தமிழகத்திற்கு இனி தேவையில்லை” என கொள்கை முடிவெடுத்து, சட்டசபையில் ஒரு சட்டம் இயற்றினால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை என்னும் அரக்கனை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட முடியும் என்பதை பல்வேறு ஜனநாயக சக்திகளும் புரட்சிகர அமைப்புகளும் முன் வைத்த நிலையில் திட்டமிட்டே கண் துடைப்புக்காக அரசாணை நாடகத்தை அரங்கேற்றியது எடப்பாடி அரசாங்கம்.

எடப்பாடியின் சட்டரீதியிலல்லாத பலவீனமான அரசாணையில் உள்ள ஓட்டைகளையும் பயன்படுத்தி, தற்போது நடைமுறையிலிருக்கும் கதவடைப்பு உத்தரவையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமது உரிமத்தை புதுப்பிக்க மறுப்பதையும் ”சட்டவிரோதமானதாகவும், பல்வேறு குறைகளைக் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு கொடுத்தது. அதன் பின்னர் ஆலையில் சல்பியூரிக் அமிலம் ஒழுகியதைக் காரணம் காட்டி உள்ளே நுழைய அனுமதி கோரியது ஸ்டெர்லைட் நிர்வாகம். அதனைத் தொடரந்து மாவட்ட நிர்வாகம் உள்ளே சென்று அங்கு சேமிப்பிலிருந்த அமிலத்தையும் சேர்த்து வெளியேற்றியது.

இவ்வழக்கு தொடர்பாக, கடந்த ஜூலை 5 அன்று தமிழக அரசையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையும் பதிலளிக்குமாறும் நோட்டீசு அனுப்பியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

கடந்த ஜூலை 30 அன்று அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்தது. ஆனால் தற்போது வேதாந்தா நிறுவனத்திற்கு நிர்வாகக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி கொடுத்திருக்கிறது.

”சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாமிர உருக்கு ஆலை தமிழகத்திற்கு இனி தேவையில்லை” என கொள்கை முடிவெடுத்து, சட்டசபையில் ஒரு சட்டம் இயற்றினால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை என்னும் அரக்கனை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட முடியும் என்பதை பல்வேறு ஜனநாயக சக்திகளும் புரட்சிகர அமைப்புகளும் முன் வைத்த நிலையில் திட்டமிட்டே கண் துடைப்புக்காக அரசாணை நாடகத்தை அரங்கேற்றியது எடப்பாடி அரசாங்கம்.

மேலும் தமிழ்நாடு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை  10 நாட்களுக்குள் ஆலையைச் சுற்றி இருக்கும் மாசின் அளவை அளந்து 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான  அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 20, 2018 அன்று ஒத்தி வைத்துள்ளது.

இதற்கு முன்னர் 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜெயா ஆட்சியில் இருக்கும்போது வேதாந்தா நிறுவனத்தில் ஏற்பட்ட விசவாயுக் கசிவையொட்டி இதே போன்றதொரு அரசாணையை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார் ஜெயா. அதனை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்து முறியடித்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். கிட்டத்தட்ட அதே காட்சி இப்போது மீண்டும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்தால் மக்கள் போராட திரண்டுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் தெளிவாகத் திட்டமிட்டு செய்து வருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் முன்னணியாளர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக முடக்கும் வகையில் பல்வேறு பொய் வழக்குகள், தடுப்புக்காவல் கைதுகள், கருப்புச் சட்டங்கள் என தூத்துக்குடி மக்களை எப்போதுமே மிரட்சியில் வைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.  குறிப்பாக இதில் மாவட்டக் கலெக்டர் சந்தீப் நந்தூரி மிகவும் தீவிரமாக உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களான, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீது என்.எஸ்.ஏ. தடுப்புக்காவல் சட்டங்களை பிரயோகித்து அவர்களை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு நிரந்தரமாக முடக்கி எப்படியேனும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க புழக்கடை வழியாக அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தது, ஸ்டெர்லைட் நிர்வாகமும் அதன் அடியாள் படையான பா.ஜ.க., அ.தி.மு.க., போலீசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகக் கும்பல்.

தற்போது தலைமைச் செயலகத்தில் எடப்பாடி தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் கூட்டம் ஒன்று நடந்ததாம். அதில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விவாதித்தார்களாம். கலைஞருக்கு மெரினா கூடாது என்று அவரசரம் அவசரமாக தமிழக அரசு வழக்கறிஞரை வைத்து வாதித்தது அல்லவா? அந்த வைத்தியநாதன்தான் பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு சார்பாக வாதிடுகிறார். இந்த வழக்கு விசாரணைக்கான தயாரிப்புகளை விட்டு விட்டு மெரினா தடைக்காக அலைந்தார். இதிலிருந்தே தெரிகிறது ஸ்டெர்லைட் ஆலையை இவர்கள் நீதிமன்றம் மூலம் திறப்பதற்கு காத்திருக்கிறார்கள் என்பது!

ஆளும் வர்க்கத்திற்கான தனது சேவையை எவ்விதத் தடையுமின்றி செவ்வனே செய்து வருகிறது அரசு இயந்திரம். ஸ்டெர்லைட் ஆலையாலும், நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் படுகொலையாலும் பாதிக்கப்பட்ட நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க