உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! -மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி விடும் அறைகூவல்.

டந்த 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் பிர்லா-அம்பானி தலைமையில் அமைக்கப்பட்ட குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி. நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்” என்று யூ.ஜி.சி.யைக் கலைக்கத் தூபம் போட்டது.

மோடி ஆட்சிக்கு வந்தபின் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி. தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சி.யைக் கலைத்துவிட வேண்டும் எனக்கூறி, வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதைத்தான் இப்போது மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்திய உயர்கல்வி ஆணையம் 2018 என்ற மசோதாவைப் பொதுமக்களின் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) என்ற எதேச்சதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதுதான் இம்மசோதாவின் நோக்கம்.

ஆராய்ச்சி மாணவர்கலுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைக்கும் முடிவைக் கைவிடக்கோரி மாணவர்கள் யூ.ஜி.சி வளாகத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

‘உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக’ இப்புதிய அமைப்பு தேவைப்படுவதாகக் கூறுகிறது மோடி அரசு. ஏற்கனவே, ‘தரமான மருத்துவக் கல்வி’ என்ற பெயரில் நீட் தேர்வைத் திணித்தார்களே’ என்னவானது? ஒருபுறம் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதும், மறுபுறம் கிராமப்புறங்களைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு அடியோடு பறிபோவதும்தான் நடந்து வருகிறது. இதுதான் இவர்கள் சொல்லும் தரத்தின் யோக்கியதை.

கல்வியின் தரத்தைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள்தான், கல்வித்துறையில் உள்ள “இன்ஸ்பெக்டர் ராஜ்” என ஏசப்பட்ட கண்காணிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். கல்வித்துறையின் மீதான அரசின் கட்டுப்பாடும், ஒழுங்குபடுத்தும் சட்டமுறைகளும் இருப்பதால்தான், குறைந்தபட்சமாவது கல்வித்தரம் உள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜ் முறையை ஒழிப்பதன் மூலம் அம்பானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கான சந்தையாகக் கல்வித்துறை மாற்றப்படுகிறது என்பதே உண்மை.

இந்திய உயர் கல்வி ஆணையத்தில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் மூன்று உறுப்பினர்கள் மத்திய அமைச்சகச் செயலாளர்கள்; (மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம்) கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவர் உறுப்பினராக இருக்கலாம். உயர்கல்வி ஆணையத்தின் தலைவராக வெளிநாட்டில் வாழுகின்ற இந்தியர்களும் (NRI) தேர்ந்தெடுக்கப்படலாம் என மசோதா கூறுகிறது. மேலும், மத்திய இணைச் செயலாளர் பொறுப்புக்கு இணையான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இவ்வாணையத்தில் இருப்பார். இரண்டு பேர் மட்டுமே பேராசிரியர்கள். மொத்தமாக அதிகாரிகளாலும் முதலாளிகளாலும் நிர்வகிக்கக் கூடிய அமைப்புதான் உயர்கல்வி ஆணையம்.

உயர் கல்வி பற்றிய அகில இந்தியக் கணக்கெடுப்பு 2018-இன் படி (All India Survey on higher education) மொத்தம் 40,000 ஆயிரம் கல்லூரிகளும் 856 பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் உள்ளன. இதில் 35% சதவிகிதக் கல்லூரிகள் அரசு கல்லூரிகள். இதில் மிகப் பெரும்பான்மையான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆனால், இம்மசோதாவின் மூலம் கல்வித்துறையின் மீதான மாநில அரசுகளின் உரிமை வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகிறது. இந்திய உயர் கல்வித்துறை நேரடியாக மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.

அடுத்து, மிக முக்கியமாக, உயர்கல்வித்துறைக்கு மானியம் வழங்கும் முறையை மோடி அரசு ஒழித்துக்கட்டுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) மிக முக்கியப் பணிகளில் ஒன்று மத்தியப் பல்கலைகழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் துறை மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதாகும். ஆனால், இப்போது அமைக்கப்படும் உயர்கல்வி ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது மட்டுமே இதன் வேலையாகும்.

மத்திய அரசு நடத்துகின்ற கல்வி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உயர் கல்வி நிதி முகமை (HEFA – Higher Education Financial Agency) என்ற நிதி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு தேவைகளுக்காக இதன் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் 2020-க்குள் 1 இலட்சம் கோடி வரை உயர் கல்வித் துறையில் Revitalizing Infrastructure System in Education (RISE) திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்போவதாக கூறுகிறார் மோடி. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தோடு மத்தியப் பல்கலைக் கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளுக்காக HEFA அல்லது RISE மூலம் கடன் வழங்கப்படும். இந்தக் கடனைத் திருப்பிக் கட்ட கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அச்சுற்றறிக்கை கூறுகிறது. இப்படி கல்வித்துறையை ஒட்டுமொத்தமாகத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன.

படிக்க :
♦ உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை
♦ பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!

தரவரிசைப் பட்டியலில் (Graded autonomy institutions) முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அனுமதிப்பது கட்டாயம். உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மேன்மைதகு நிறுவனங்கள் என்ற திட்டத்தின் நோக்கமே, இந்திய உயர்கல்வி சந்தையை வெளிநாட்டுச் சந்தையோடு இணைத்து, அதனைச் சர்வதேசமயமாக்குவதுதான்.

இதன் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ( 2020-இல் இந்தியக் கல்விச் சந்தையின் மொத்த மதிப்பு 9,36,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) இந்திய உயர்கல்வி சந்தையில் வெளிநாட்டு நிதி மூலதனம் மற்றும் அதன் பல்கலைக்கழகங்கள் நேரடியாக ஆதிக்கம் செலுத்த வழிவகை செய்யப்படுகிறது.
இதனை அமல்படுத்துவதற்குச் சாதகமான அமைப்பாகத்தான் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது. இந்த பின்னணியிலிருந்தே பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சிவ்நாடார், டாடா, அசிம் பிரேம்ஜி, ஆசிஸ் தவான், பிர்லா போன்ற தரகுமுதலாளிகள் பல்கலைக்கழகங்களை நடத்தி வருகின்றனர். மிட்டல், அதானி, வேதாந்தா போன்றோர் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளனர். இவர்களை ஊக்குவிப்பதற்காகவே அம்பானியின் தொடங்கப்படாத ‘ஜியோ கல்வி நிறுவனத்திற்கு’ மேன்மை தகு தகுதியை மோடி அரசு வழங்கியுள்ளது.

நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளது. உயர் கல்வி ஆணையம் அமைந்துவிட்டால், அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நிச்சயம் மூடு விழா நடத்தப்பட்டுவிடும்.

தமிழகத்தில் அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெரிகின்றன. தொழில்நுட்பக் கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகை (அரசாணை 92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைக்கப்படுகிறது. அதேசமயம், இன்னொருபுறத்தில் பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தை இரண்டுமடங்காக உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

நீட் தேர்வைத் திணித்து மருத்துவக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இனி இல்லை என்றாகிவிட்டது. கலை-அறிவியல் படிப்பிலாவது ஒரு பட்டத்தை வாங்கி விடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மை மாணவர்களின் எதிர்பார்ப்பையும் அடித்து நொறுக்குகிறார்கள்.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் கடந்த ஜூலை 25- ஆம் தேதி முதல் தொடர்ச்சியான இயக்கம் நடத்தி வருகிறது.

உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்துப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில் ஆகஸ்டு 21 அன்று நடைபெற்ற அரங்குக் கூட்டம்.

இவ்வியக்கத்தின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பல்வேறு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. உயர்கல்வியைக் காக்கும் போராட்டத்தில் கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

  • கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் ஒன்றுசேர்வோம்!
  • உயர் கல்வி பாதுகாப்புக் குழுக்களைக் கட்டுவோம்!
  • உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்ட மசோதாவைத் தகர்ப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க