மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 34

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
வர்கள் தாங்கள் சேரவேண்டிய இடத்துக்கு மூன்றாவது நாளன்று வந்து சேர்ந்தார்கள். தார் எண்ணெய்த் தொழிற்சாலை எங்கே இருக்கிறது என்பதை, தாய் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு முஜீக்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாள். இதன்பின் அவர்கள் மரம் செறிந்த செங்குத்தான பாதையின் வழியே நடந்து சென்றார்கள். அந்தப் பாதையில் மரவேர்கள் படிக்கட்டுகளைப்போல் குறுக்கும் மறுக்குமாக ஓடி, நடப்பதற்கு வசதியளித்தன. நிலக்கரித் தூளும் மரத்துண்டுகளும் தார் எண்ணெயும் படிந்த ஒரு இடத்தில் வந்து அந்தப் பாதை முடிந்தது,

”ஒரு வழியாக நாம் வந்து சேர்ந்துவிட்டோம்” என்று சாவகாசமாகச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு கூறினாள் தாய்.

மரக்கிளைகளாலும், கம்புகளாலும் கட்டப்பட்ட ஒரு குடிசைக்கு முன்னால், ஒரு மேஜை கிடந்தது. மூன்று பலகை கொண்ட அந்த மேஜை தரையோடு அறையப்பட்ட ஒரு மரக்குதிரையின் மீது இருந்தது. உடம்பெல்லாம் தார் எண்ணெய் படிந்திருக்க, தனது சட்டையின் முன்பக்கம் முழுவதும் திறந்துவிட்டவாறு ரீபின் அந்த மேஜையருகே உட்கார்ந்து எபீமோடும் வேறு இரு இளைஞர்களோடும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தம்மை நோக்கி வந்த அந்தப் பெண்களை முதன் முதல் கண்டவன் பின்தான், அவன் தன் கையை நெற்றிக்கு நேராக உயர்த்திப் பிடித்துக் கூர்ந்து பார்த்துவிட்டு, மெளனமாக அவர்களது வரவை எதிர்நோக்கி இருந்தான்.

“தம்பி மிகயில்! சௌக்கியமா?” என்று தூரத்திலிருந்தவாறே கூறினாள் தாய்.

அவன் தன்னிடத்தை விட்டு எழுந்து அவர்களை நோக்கி நிதானமாக நடந்து வந்தான். தாயை அடையாளம் கண்டு கொண்டவுடன் அவன் சட்டென நின்று, புன்னகை புரிந்தவாறே தனது கரிய கரத்தால் தன் தாடியை வருடிவிட்டுக்கொண்டான்.

“நாங்கள் பிரார்த்தனைக்குப் போகிற போக்கில்” என்று கூறிக்கொண்டே முன்வந்தாள் தாய். “போகிற வழியில் என் சகோதரனைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று நினைத்தேன். இவள் என் தோழி ஆன்னா.”

தன்னுடைய குயுக்தியைக் கண்டு தானே பெருமைப்பட்டவளாய், தாய் ஓரக்கண்ணிட்டு சோபியாவின் கண்டிப்பும், ஆழ்ந்த உணர்வும் நிறைந்த முகத்தைப் பார்த்தாள்.

“வணக்கம்!” என்று ஒரு வறண்ட புன்னகையோடு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான் ரீபின், சோபியாவுக்கு வணக்கம் செலுத்தினான். “பொய் சொல்லாதே, நீ இப்போது ஒன்றும் நகர்ப்புறத்தில் இல்லை. இங்கு நீ எந்தப் பொய்யுமே சொல்லத் தேவையில்லை, எல்லோரும் நம்மவர்கள்.”

தானிருந்த இடத்திலிருந்தே எபீம் அந்த யாத்திரிகர்களைக் கூர்ந்து பார்த்தான். பிறகு தன் பக்கத்திலிருந்த தோழர்களிடம் இரகசியமாக ஏதோ சொன்னான். அந்தப் பெண்கள் இருவரும் அருகே நெருங்கி வந்தவுடன் அவன் தன்னிடத்தை விட்டு எழுந்து, அவர்களுக்கு மெளனமாக வணக்கம் செலுத்தினான். அவனது சகாக்கள் அந்த விருந்தாளிகள் வந்ததையே கவனிக்காதவர்கள் மாதிரி அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள்.

”நாங்கள் இங்கே பாதிரியார்கள் மாதிரி வாழ்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே பெலகேயாவின் தோளில் லேசாகத் தட்டினான் ரீபின். ”யாருமே எங்களைப் பார்க்க வருவதில்லை. முதலாளி அயலூருக்குப் போயிருக்கிறார், அவர் மனைவி ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாள். அதனாலே அநேகமாக இங்கே எல்லாம் என் மேற்பார்வைதான். சரி, உட்காருங்கள். ஏதாவது சாப்பிட விரும்புவீர்கள், இல்லையா? எபீம்! நீ போய் கொஞ்சம் பால் கொண்டுவா.”

எபீம் அந்தக் குடிசைக்குள்ளே நுழைந்தான். அந்த யாத்திரிகர்கள் தங்கள் முதுகில் தொங்கிய பைகளைக் கீழே இறக்கினார்கள். நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்து, மூட்டையை இறக்கி வைப்பதற்கு உதவி செய்தான். உருண்டு திரண்டு பறட்டைத் தலையுடன் அவனது தோழன் ஒருவன் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தான்; தனது தலையைச் சொறிந்து கொண்டும், ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டும் அவன் அவர்களைக் கூர்ந்து பார்த்தவாறே ஏதோ சிந்தித்தான்.

தார் எண்ணெயின் கார நெடியும், அழுகிப்போன இலைக் குவியல்களின் நாற்றமும் சேர்ந்து அந்தப் பெண்களின் புலன்களைக் கிறக்கின.

”அவன் பேர் யாகல்” என்று அந்த நெட்டை வாலிபனைச் சுட்டிக் கொண்டே சொன்னான் ரீபின். “அடுத்தவன் பெயர் இக்நாத். சரி, மகன் எப்படி இருக்கிறான்?’

”சிறையிலிருக்கிறான்’’ என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“மறுபடியுமா?” என்றான் ரீபின், ‘’அவனுக்குச் சிறைபிடித்துப் போயிற்று போலிருக்கிறது.”

இக்நாத் பாடுவதை நிறுத்தினான்; யாகவ் தாயின் கையிலிருந்து கைத்தடியை வாங்கிக்கொண்டே சொன்னான்:

“உட்காருங்கள், அம்மா”

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்கள்” என்று சோபியாவைப் பார்த்துச் சொன்னான் ரீபின். ஒன்றும் பேசாமல் அவள் ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து ரீபினையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அவனை அவர்கள் எப்போதும் கைது செய்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தாய் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிராக உட்கார்ந்து தலையை ஆட்டினான் ரீபின். ”நீலவ்னா, உனக்கு அதிருஷ்டமே கிடையாது!”

“ஆமாம், எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது.”

“பழகிப்போய்விட்டதா?”

“இல்லை. எனக்கு அது ஒன்றும் பழகிப் போய்விடவில்லை. ஆனால், அதை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை.”

“ஹூம்!” என்றான் ரீபின்; ”நல்லது அதைப்பற்றி எங்களுக்குச் சொல்லேன்.”

அவர்கள் தன்னைத் துப்பாக்கிச் சனியனால் தாக்கக்கூடும், அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தக்கூடும் என்று தெரிந்திருந்தும். அவன் தன் செய்கையை நிறுத்தவில்லை. அவனது பாதையில், தாயே குறுக்கே விழுந்து தடை செய்திருந்தாலும், அவன் இவளையும் மீறித் தாண்டிச் சென்றிருப்பான்.

எபீம் ஒரு ஜாடியில் பால் கொண்டு வந்தான். மேஜை மீதிருந்த கோப்பையை எடுத்து அதை அலம்பிவிட்டு அதில் பாலை ஊற்றினான். பிறகு தாய் கூறிக்கொண்டிருக்கும் கதையையும் அவன் காதில் வாங்கிக்கொண்டே அந்தப் பால் கோப்பையை சோபியாவிடம் நீட்டினான். சத்தமே செய்து விடாதபடி சாமான்களைப் புழங்குவதில் அவன் மிகுந்த ஜாக்கிரதையோடிருந்தான். தாய் அந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடித்த பின்னர் ஒரு மௌன அமைதி நிலவியது. அந்தச் சமயத்தில் யாரும் யாரையுமே பார்க்கவில்லை. இக்நாத் மேஜையின் முன்னிருந்தவாறே மேஜைப் பலகை மீது நகத்தால் கீறிக்கொண்டிருந்தான். எபீம் ரீபினுக்குப் பின்னால் வந்து அவனது தோளின் மீது தன் முழங்கையை ஊன்றியவாறு நின்றான். யாகல் ஒரு மரத்தின் மீது சாய்ந்து, தனது கைகளைக் கட்டிக்கொண்டு தலையைத் தொங்கவிட்டவாறிருந்தான். சோபியா அந்த முஜீக்குகளைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்…

“ஹூம்…ம்… ம்” என்று மெதுவாகவும் உவகையற்றும் முனகினான் ரீபின். ‘‘அப்படியா? அவர்கள் பகிரங்கமாகவே கிளம்பிவிட்டார்களா?”

“நாமும் அந்த மாதிரி ஒரு அணிவகுப்பை நடத்த முனைந்தால்” என்று ஒரு கசந்த புன்னகையோடு பேசினான் எபீம்: “அப்படிச் செய்தால் முஜீக்குகளே நம்மை அடித்துக்கொன்று தள்ளிவிடுவார்கள்.”

“ஆமாம். நிச்சயம் அவர்கள் கொன்று தள்ளிவிடுவார்கள்” என்று தலையை அசைத்து ஆமோதித்தான் இக்நாத். ”நானும் தொழிற்சாலை வேலைக்கே போகப்போகிறேன். இங்கே இருப்பதைவிட அங்கு நன்றாயிருக்கிறது.”

”பாவெல் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கும் என்றா சொல்கிறாய்?” என்று கேட்டான் ரீபின். “அப்படியானால் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அதைப்பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா?”

“கடுங்காவல், இல்லாவிட்டால் சைபீரியாவுக்கு நிரந்தரமாக நாடு கடத்தப்படுதல்” என்று அமைதியுடன் கூறினாள் அவள்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒரே சமயத்தில் அவள் பக்கம் திரும்பினார்கள். ரீபின் மட்டும் தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:

“அவன் அதைச் செய்தபோது, இந்த மாதிரி தனக்கு ஏதாவது நேரும் என்று தெரிந்துதான் செய்தானா?”

“ஆமாம். தெரிந்தே செய்தான்” என்று உரத்த குரலில் சொன்னாள் சோபியா.

எல்லோரும் ஒரே சிந்தனையால் உறைந்துவிட்ட மாதிரி அப்படி அசைவற்றுப் பேச்சற்று மூச்சற்று இருந்தார்கள்.

“ஹூம்!” என்று முனகிவிட்டு மெதுவாகவும் வருத்தத்தோடும் பேசினான் ரீபின். ”அவனுக்குத் தெரியும் என்றுதான் நானும் நினைத்தேன். முன் யோசனையுள்ள மனிதன் கண்ணை மூடிக்கொண்டு திடுதிப்பென்று இருட்டில் குதிக்கமாட்டான். பையன்களா! கேட்கிறீர்களா? அவர்கள் தன்னைத் துப்பாக்கிச் சனியனால் தாக்கக்கூடும், அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தக்கூடும் என்று தெரிந்திருந்தும். அவன் தன் செய்கையை நிறுத்தவில்லை. அவனது பாதையில், தாயே குறுக்கே விழுந்து தடை செய்திருந்தாலும், அவன் இவளையும் மீறித் தாண்டிச் சென்றிருப்பான். இல்லையா, நீலவ்னா?”

“ஆமாம், அவன் செய்வான்” என்று சொல்லிக்கொண்டு நடுங்கினாள் தாய். அவள் பெருமூச்செறிந்தவாறு சுற்றுமுற்றும் பார்த்தாள். சோபியா அவள் கையை அமைதியாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, நெற்றியைச் சுருக்கி விழித்து ரீபினையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

”இவன் ஒரு உண்மையான மனிதன்!” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தனது கரிய கண்களால் அங்குள்ளவர்களைப் பார்த்தான் ரீபின். மீண்டும் அந்த ஆறு பேரும் மோன அமைதியில் ஆழ்ந்துவிட்டார்கள். சூரிய கிரணங்கள் தங்கத் தோரணங்களைப்போல் காற்றில் தொங்கி ஊசலாடின. எங்கோ ஒரு அண்டங்காக்கை கத்தியது. தாயின் மனநிலை மே தினத்தின் நினைவாலும், பாவெல், அந்திரேய் இருவரையும் காணாத ஏக்கத்தாலும் குழம்பித் தடுமாறியது. அந்தக் காட்டின் நடுவிலே காலித் தார் எண்ணெய் பீப்பாய்கள் உருண்டு சிதறிக்கிடந்தன. தரையைக் கீறிக் கிளப்பின மரவேர்கள் எங்கு பார்த்தாலும் துருத்தி நின்றன. அந்தக் காட்டின் எல்லையில் ஓக் மரங்களும் பெர்ச் மரங்களும் மண்டிப் பெருகி, அசைவற்று கரிய நிழல்களைத் தரைமீது பரப்பிக்கொண்டிருந்தன.

திடீரென்று யாகவ் அந்த மரத்தடியிலிருந்து விலகி, வேறொரு பக்கமாகச் சென்றான்.

“அப்படியானால், பட்டாளத்தில் சேர்ந்தால் இந்த மாதிரி ஆட்களை எதிர்ப்பதற்காகத்தான் என்னையும் எபீமையும் அனுப்புவார்களோ?” என்று உரத்து, தன் தலையைப் பின்னுக்கு வாங்கி நிமிர்ந்தவாறே கேட்டான் யாகவ்.

“வேறு யார் மீது உங்களை ஏவி விடுவார்கள் என்று நினைத்தாய்?” என்றான் ரீபின். ”அவர்கள் நமது கைகளைக்கொண்டே நம்மை நெரித்துக்கொள்வார்கள் – அதுதான் அவர்களுடைய தந்திரம்!”

“எப்படியானாலும் நான் பட்டாளத்தில் சேரத்தான் போகிறேன்” என்று உறுதியோடு சொன்னான் எபீம்.

படிக்க:
நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !

“உன்னை யாராவது தடுக்கிறார்களா?” என்று சத்தமிட்டான் இக்நாத். ”நீ பாட்டுக்குப் போ. ஆனால், நீ ஒருவேளை என்னையே சுட நேர்ந்தால், தயை செய்து என் தலைக்குக் குறிபார்; வீணாக வேறிடத்தில் சுட்டு என்னை முடமாக்கிவிடாதே; சுட்டால் ஒரேயடியாய்க் கொன்று தீர்த்துவிடு” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இக்நாத்.

“நீ சொல்வது எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று வெடுக்கென்று பதில் சொன்னான், எபீம்.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், பையன்களா!” என்று தன் கையை உயர்த்திக்கொண்டே சொன்னான் ரீபின்.

”இதோ இந்த அம்மாளுடைய மகன்தான் இப்போது மடியப்போகிறான்!” என்று தாயைச் சுட்டிக்காட்டினான்.

”நீ அதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?” என்று வேதனையோடு கூறினாள் தாய்.

“சொல்லத்தான் வேண்டும்” என்று கரகரத்துக் கூறினான் ரீபின். “உன்னுடைய தலைமயிர் ஒன்றுமற்ற காரணத்துக்காக நரை தட்டக்கூடாது. உன்னுடைய மகனுக்கு இந்த மாதிரிக் கொடுமையை இழைப்பதன் மூலம் அவர்கள் அவனைக் கொன்று தீர்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? சரி, ஏதாவது புத்தகங்கள், பிரசுரங்கள் கொண்டு வந்தாயா, நீலவ்னா?”

தாய் அவனை லேசாகப் பார்த்தாள்.

”ஆம்…” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னாள்.

“பார்த்தாயா?” என்று மேஜை மீது தன் முஷ்டியைக் குத்திக்கொண்டே சொன்னான் ரீபின். “உன்னைப் பார்த்தவுடனேயே நான் தெரிந்துகொண்டேன். வேறு எதற்காக நீ இங்கு வரப்போகிறாய்? எப்படி? அவர்கள் பிள்ளையைத்தான் பறித்துக்கொண்டு சென்றார்கள் – ஆனால் இன்று அதே ஸ்தானத்தில் தாயே வந்து நின்றுவிட்டாள்!”

அவன் தன் முஷ்டியை ஆட்டியவாறே ஏகவசனத்தில் திட்டினான்.

”நீ பாட்டுக்குப் போ. ஆனால், நீ ஒருவேளை என்னையே சுட நேர்ந்தால், தயை செய்து என் தலைக்குக் குறிபார்; வீணாக வேறிடத்தில் சுட்டு என்னை முடமாக்கிவிடாதே; சுட்டால் ஒரேயடியாய்க் கொன்று தீர்த்துவிடு” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இக்நாத்.

அவனது கூச்சலினால் பயந்துபோன தாய் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகமே மாறிப்போய்விட்டதாக அவளுக்குத் தோன்றியது, அது மெலிந்து போயிருந்தது. தாடி ஒழுங்கற்றுக் குலைந்து போயிருந்தது. அந்த தாடிக்குக் கீழாக அவனது கன்ன எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்பதுகூடத் தெரிந்தன. அவனது வெளிறிய நீலக் கண்களில், அவன் ஏதோ ரொம்ப நேரமாய்த் தூங்காது விழித்திருந்தவன் மாதிரி, மெல்லிய ரத்த ரேகைகள் ஓடிப் பரந்திருந்தன. அவனது மூக்கு உள்ளடங்கிக் கொக்கி போல் வளைந்து ஒரு மாமிச பட்சிணிப் பறவையின் அலகைப்போல் இருந்தது. தனது பழைய சிவப்பு நிறத்தை இழந்து கரிபடிந்துபோன அவனது திறந்த சட்டைக்காலர், அவனது தோள்பட்டை எலும்புகளையும், மார்பில் மண்டி வளர்ந்திருந்த தடித்த கருமயிர்ச் சுருள்களையும் திறந்து காட்டிக்கொண்டிருந்தது. மொத்தத்தில் அவனது தோற்றத்தில் என்னவோ ஒரு சவக்களை படிந்து போயிருப்பதுபோல் தோன்றியது. கொதித்துச் சிவந்த கண்கள் அவனது கரிய முகத்தில் கோபாக்கினி ஒளி வீசக் கனன்று கொண்டிருந்தது. சோபியா முகம் வெளுத்துப்போய்ப் பேசாது உட்கார்ந்திருந்தாள். தன் கண்களை அந்த முஜீக்குகளிடமிருந்து அகற்ற முடியாமல் அப்படியே இருந்தாள். இக்நாத் தலையை அசைத்தான், கண்களை நெரித்துச் சுருக்கிப் பார்த்தான்; யாகவ் மீண்டும் அந்தக் குடிசை நிழலில் ஒதுங்கி, அங்கு நாட்டப்பட்டிருந்த குடிசைக் கால்களின் மரப்பட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்துக் கொண்டு நின்றான். எபீம் அந்த மேஜையருகே செல்வதும் வருவதுமாக, தாய்க்குப் பின்னால் மெதுவாக உலாவினான். ரீபின் மேலும் பேசத் தொடங்கினான்:

”கொஞ்ச நாட்களுக்கு முன்னால், இந்த ஜில்லா அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பி ‘டேய் அயோக்கியப் பயலே! மத குருவிடம் என்ன சொன்னாய்?’ என்ற கேட்டார். நீங்கள் என்னை எப்படி அயோக்கியப் பயலே என்று கூப்பிடலாம்? நான் என் நெற்றி வியர்வையைச் சிந்தி, உழைத்துப் பிழைக்கிறேன். நான் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்வதில்லை’ என்று சொன்னேன் நான். உடனே அவர் என்னை நோக்கிக் கர்ஜித்துப் பாய்ந்தார். என் தாடையில் அறைந்தார். என்னை மூன்று நாட்களுக்குச் சிறையில் போட்டு வைத்தார். ‘சரிதான், நீங்கள் ஜனங்களிடம் இப்படித்தான் பேசுவீர்கள் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன் நான். ‘நாங்கள் இதை மறந்துவிடுவோம் என்று எதிர்பாராதே, கிழட்டு ஜென்மமே நான் இல்லாவிட்டால், வேறொருவன், உன்னிடமில்லாவிட்டால் உன் குழந்தைகளிடம் இந்த அவமானத்திற்காக வஞ்சம் தீர்த்துக்கொள்வோம். அது மட்டும் ஞாபகமிருக்கட்டும்! நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள். அங்கு பகைமையை விதைத்தீர்கள், எனவே பகைமைக்குப் பகைமைதான் பயிராக விளையும். எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள், பிசாசுகளே!’ என்று நான் மனத்துக்குள் கூறிக்கொண்டேன். ஆமாம்!”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க