பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாகவும் உடல்ரீதியாகும் துன்புறுத்திய சம்பவத்தில் ஒரு புதிய செய்தி. ‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா என்பவர் இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ‘மேலிடத்து’ அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் பேசுகையில், நடந்த சம்பவம் குறித்து அவர் விவரித்தார். வழக்கமாக பணியிலிருந்து வீட்டிற்குச் செல்கையில் அருகில் உள்ள வீதியில் தனது கூட்டாளி ஒருவனுடன் அனிருத்தா நின்று கொண்டிருந்ததாகவும், அவ்வழியே தாம் செல்கையில் கத்தியை தன் கழுத்தில் வைத்து மிரட்டி, பலவந்தப்படுத்தி அவரது வீட்டிற்கு தன்னை இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா

மேலும் இது குறித்துக் கூறுகையில், “வீட்டிற்குள் இழுத்துச் சென்றதும் எனது கைகளை நாற்காலியில் கட்டி வைத்து என்னை தாக்கத் தொடங்கினார் அனிருத்தா. அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததும், பாலியல் ரீதியாக என் மீது தாக்குதலைத் தொடுத்தார். அவரது தாயாரும் அந்த வீட்டில் அனிருத்தாவுக்கு உடந்தையாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரது பெயரையும் நான் புகாரில் சேர்த்திருக்கிறேன்.

சில நேரத்துக்கு பின் எனது கைகள் விடுவிக்கப்பட்டன. அச்சமயத்தில் நான் உடனடியாக எனது பையில் இருக்கும் அலைபேசியை எடுத்து என்னுடன் பணிபுரியும் நண்பர்களுக்கு தகவலை கூறினேன். அவர்கள் பிரதான வாயில் வழியாக வந்து ஒரு வழியாக என்னை மீட்டனர்” என்கிறார், அந்த பத்திரிகையாளர்.

அதன் பின்னர், அருகில் உள்ள திஸ்பூர் போலீசு நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். அசாம் உள்ளூர் ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி இந்திய தண்டனை சட்டம் 354, 341, 392, 323, 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவி பத்திரிகையாளரை விசாரிக்க, கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு. ஆனால் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி அவரை வெளியே விட்டது.

புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து, ‘தி வயர்’ இணையதளத்திடம் பேசுகையில், “போலீசு மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தாமல், விடுவித்திருக்கிறது.” என்றார்

படிக்க:
♦ அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
♦ பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தால் குற்றம் சாட்டப்பட்ட நபரை முறையாக நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக போலீசார் அவரை விடுத்திருக்கின்றனர். முறையாக பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

புகார் கொடுப்பதில் போலீசு தமக்கு தவறான வழிகாட்டுதல் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர். மேலும் அவர் கூறுகையில், “என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், அன்று இரவு என்னை அனிருத்தா வீட்டிலிருந்து மீட்ட பிறகு நாங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்தோம். நான் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்தேன். புகார் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் நான் இல்லை. ஆகவே எனக்கு பதிலாக என்னுடன் பணிபுரியும் நண்பரை புகார் எழுதுமாறு போலீஸ் நிலையத்தில் கேட்டுக் கொண்டனர்.

அனிருத்தா தனது கூட்டாளியுடன் சேர்ந்து என்னை கத்திமுனையில் கடத்தியதை அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. என் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம் இந்த வழக்கை பலவீனப்படுத்தி இருக்கிறது போலீசு.” என்றார்.

மேலும், அங்கிருந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு தவறான வழக்கு எண்ணை கூறியிருக்கின்றனர். 3637 என்ற எண்ணிற்கு பதிலாக 3636 என்ற எண்ணை கூறியிருக்கின்றனர்.

திஸ்பூர் போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி பிரேன் பருவா இது குறித்துக் கூறுகையில், “சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அனிருத்தாவை திங்கள் கிழமை அன்று விடுவித்துவிட்டோம். அவரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தவில்லை. அவர் எங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பார். நாங்கள் அவரை போலீஸ் நிலையத்திற்கு வரக் கூறியிருக்கிறோம்.” என்று அப்பெண் பத்திரிகையாளர் கூறிய தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். குறிப்பான ஏதேனும் தேதியில் அவர் போலீஸ் நிலையத்திற்கு வருவாரா என தி வயர் இணையதளம் கேட்டபோது, அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் விசாரணை அதிகாரி மட்டுமே அதை அறிவார் என்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

“விசாரணை அதிகாரி, இதுகுறித்து கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார். மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மேலதிக தகவல்கள் எதுவும் தர முடியாது என்றும் அவர் கூறினார்.” என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.

இதுவரையிலும், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் வாக்குமூலத்தை போலீசு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

மோடியின் ஆட்சியில், மதவெறிப் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஊடகங்களுக்குள் அனிருத்தாக்கள் நிறைந்திருப்பதிலும், அவர்களைக் காப்பதற்கு ‘மேலிடத்து’ அழுத்தங்கள் வருவதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

வினவு செய்திப் பிரிவு
 நந்தன்
செய்தி மூலம் : The wire

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க