ணவப் படுகொலைகளை சட்டம் இயற்றித் தடுத்து விடமுடியுமா?
சாதிமறுப்பு திருமணம் செய்வோர்க்கு அரசு, பாதுகாப்பு உணர்வை எந்தளவிற்கு தர முடியும்?

– மா.பேச்சிமுத்து.

ன்புள்ள பேச்சிமுத்து,

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது. ஏற்கனவே சிவில் சமூகத்தில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கும் சட்டம் இருக்கிறது. இருப்பினும் சமூக வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆத்திரம் அடைந்த நபர்கள் கொலை செய்கிறார்கள். இது ஆணவப் படுகொலைகள் விசயத்திற்கும் பொருந்தும்.

சிவில் சமூக வன்முறைகளுக்கும், சாதி மத கொலைகளுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. முன்னது கணநேரத்தில் அடையும் ஆத்திரம் காரணமாகவும், பின்னது காலம் காலமாய் ஊட்டி வைக்கப்பட்ட சாதி மத ஆதிக்க உணர்வு மற்றும் பிற்போக்கு நம்பிக்கை காரணமாகவும் நடக்கிறது. பின்னதில் தத்தமது சாதி – மத நலனை காப்பாற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள். பெற்ற மகளைக் கூட வெட்டிக் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த காலத்தில் சாதிவெறியின் சாதிப் பெருமையும் நாடு தழுவியதாக மாறி இருக்கிறது. உடுமலைப் பேட்டையில் மட்டுமல்ல ஹைதராபாத் நகரிலும் பட்டப்பகலில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் இவை ஆங்காங்கே நடக்கும் யதார்த்தமாக இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் வெளிப்படும் அதிர்ச்சிகள் கூட அங்கே இருப்பதில்லை.

அதேநேரம் இதே காலத்தில்தான் சாதி மறுப்பு திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தும் வருகின்றன. எதிரும் புதிருமாக உள்ள சாதிகள் கூட சமூக வாழ்வில் சந்தித்து பயணிக்கும் சூழலை இக்காலம் ஏற்படுத்தி தருகிறது. காதலிலும் திருமணத்திலும் சாதி பாராட்டுவதை தவிர்ப்பது என்ற நாகரிக வளர்ச்சியும் பரவி வருவதைப் பார்க்கிறோம்.  இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?

படிக்க:
♦ தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
♦மகிழ்ச்சியின் தருணங்கள் !!

காந்தி காமராஜ் காலத்தில் சமூகத்தில் பெரிய அளவுக்கு சாதி கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருந்தது என்பார்கள் (இவர்கள் காலத்தில் சங்கபரிவாரங்கள் பல கலவரங்களை நடத்திருக்கின்றன). இதில் பாதிதான் உண்மை. அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமைகளை அக்காலத்தில் எதிர்க்க முடியவில்லை. அந்த எதிர்ப்பை சாத்தியமாக்கும் பொருளாதார அடித்தளத்தை அப்போது அவர்கள் பெற்றிருக்கவில்லை.

கொடியங்குளம் கலவரத்திற்கு பிந்தைய காலத்தில் அப்படி எதிர்க்கும் நிலையினை அம்மக்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோன்று ஆதிக்கசாதி சமூகத்தை சேர்ந்த மக்களிடத்திலும் சாதி பாராட்டுவது தவறு என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. ஆகவே சாதிவெறிக்கு எதிராக இப்போது தட்டிக்கேட்பது அதிகரித்திருக்கிறது. அதற்கு இணையாக ஆணவப் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன.

இதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் மட்டுமல்ல சமூகத்திலும் பல பண்பாட்டு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு சாதி தீண்டாமை மறுப்பு மணங்கள் அதிகம் நடத்தப்படவேண்டும். இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள் அனைத்தும் இத்தகைய திருமணங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து நடத்த வேண்டும். அப்படி சில அமைப்புகள் நடத்தியும் வருகிறார்கள். தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அனைத்தும் இத்தகைய திருமணங்களை ஊரறிய அழைப்பிதழ் போட்டு பொதுக் கூட்டமாக நடத்துகின்றன.

தர்மபுரியில் இளவரசன் கொல்லப்பட்ட காலத்திலேயே இந்த அமைப்புகள் சாதி தீண்டாமை மறுப்பு மணம் ஒன்றை ஊரறிய ஊர்வலமாக அதே மண்ணில் நடத்தினர். இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் திரைப்படம் ஊடகம் போன்றவற்றிலும் இத்தகைய கருத்துக்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். சாதிவெறியை ஊக்குவிக்கும் கலைப்படைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.

மேலும் ஆணவப் படுகொலை நடக்கின்ற பொழுது தொடர்புடைய சாதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த சாதிவெறியர்களை கண்டிக்கும் நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சாதிவெறி கொண்ட ஒரு தனி மனிதரிடத்திலிருந்தும் சாதி வெறி பிடித்த சில கும்பலிடம் இருந்தும் மற்ற மக்களை பிரித்து தனிமைப்படுத்த முடியும். இவையெல்லாம் தொடர்ந்து நடக்க நடக்க இத்தகைய கொலைகள் நடக்காத வண்ணம்  சூழலை உருவாக்க முடியும்.

படிக்க:
♦ ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் ? ஃபேஸ்புக் தொகுப்பு
♦ தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !

இரண்டாவதாக சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு அரசு முழுமையாக ஒரு பாதுகாப்பு உணர்வை தந்துவிட முடியாது. இது ஒரு எதார்த்தம். சமூக ஆர்வலர்கள் கூறுவதுபோல சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம். அதேபோன்று அத்தகைய திருமணம் செய்வோருக்கு அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை அளிக்கலாம்.

தருமபுரி பென்னாகரத்தில் சாதி மறுப்பு மண விழா ஊர்வலம்

கூடுதலாக அப்படி திருமணம் செய்வோர் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு போலீஸ், நீதிமன்றம், இதர அதிகாரவர்க்க துறைகளை பயிற்றுவிப்பது தான் மிகப்பெரிய பிரச்சனை. ஏனெனில் ஆதிக்க சாதிவெறி என்பது பெரும்பான்மை பலத்தை வைத்து ஒரு சிறு கும்பல் நடத்துவது என்பதால் அத்தகைய சாதிக் கண்ணோட்டம் மேற்கண்ட அரசு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கின்றது. இதை சரி செய்து திருத்துவது அரசின் கையில் இல்லை. அதை மக்களாகிய நாம்தான் போராடி செய்ய வேண்டும். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆதிக்க சாதிகளின் விதிமுறைக்கேற்பவே அரசியல் களத்தில் செயல்படுகின்றன. இதையும் நாம் உடைக்க வேண்டும்.

வினவு கேள்வி பதில்காதல் மணம் செய்யும் தம்பதியினர் போலீஸ் நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கு முழுமுற்றான பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக ஆதிக்கசாதி தரப்பிலுள்ள குடும்பத்தை சமாதானப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். இது எல்லா துறைகளிலும் நடக்கிறது.

இதையும் நாம் பொது சமூகத்தின் போராட்டத்தினால் மட்டுமே மாற்ற முடியும். அத்தகைய குற்றங்கள் தவறுகள் செய்யும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுவெளியில் கண்டிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்குமாறு நாம் போராட வேண்டும். இதன்போக்கில் அரசு மட்டத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இறுதியில் முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் சமூகத்தில் இந்த பிரச்சனையை எப்படி பிரச்சாரம் செய்து கொண்டு செல்கிறார்கள், அதை மக்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் நாம் முன்னேற முடியும். மேலும் இந்தப் போராட்டம் என்பது தனித்து நடக்கும் ஒன்றல்ல. அரசியல் – பொருளாதாரப் போராட்டங்களின் வீச்சுக்கேற்பவே சமூகரீதியான மாற்றங்களும் போராட்டங்களும் இருக்கும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. சட்டம் போட்டு தடுக்க முடியாது, தாய் தந்தையை சமாதானம் செய்து வைத்து தடுக்கலாம்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க