100 ஆண்டு காலமாக சுடுகாடு இல்லாத கிராமம் ! மக்கள் அதிகாரத்தை கையிலெடுத்ததால் அடிப்படை பிரச்சினை தீர்ந்தது !
தருமபுரி மாவட்டம் 7-வது மைல் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 100 ஆண்டு காலமாக இறந்தவர்களை புதைப்பதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அந்த கிராமத்துக்கு அருகாமையில் உள்ள வழித்தடத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர்.
அவ்வாறு அடக்கம் செய்யும் போது, அருகாமையில் உள்ள ஆதிக்கசாதியினர் பிரச்சினை செய்து உடலை புதைக்கவிடாமல் தடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியர் அப்பகுதி மக்களின் குடும்ப அட்டை நகலை எடுத்து வந்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.
அவ்வாறு குடும்ப அட்டை நகலை கொடுத்து ஒருவாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அக்கிராம மக்கள் மீண்டும் வட்டாட்சியரை சந்தித்து கேட்கும் போது, அந்த நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பாமல் அந்த மனு கிடப்பில் போடப்பட்டிருந்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அருகில் இருந்த அதிகாரியை அழைத்து இந்த மனுவை சம்பந்தப்பட்ட விஏஓ-விடம் அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு, எதற்கும் கலெக்டரை பாருங்கள் என்று கூறினார்.
அவருடைய பேச்சிலே அலட்சியம் மேலோங்கி இருந்ததை பார்த்த கிராம மக்கள் “நாம் ஏன் கலெக்டரை சந்திக்க வேண்டும். கலெக்டர் நமது கிராமத்தை நோக்கி வரவேண்டும்” என்று முடிவு செய்து, “இவருடைய வார்த்தையே பிரச்சினையை தீர்ப்பதாக இல்லை, இனியும் அதிகாரிகளை நம்பினால் பிரச்சினை தீராது; இதனால் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை அம்பலப்படுத்துவது..” என்று முடிவு செய்தனர். அதனடிப்படையில் மக்கள் சார்பில் 10.11.2018 அன்று அப்பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
அடுத்த நாளே பி.டி.ஒ, தாசில்தார், வி.ஏ.ஒ என அதிகாரிகள் அலறி அடித்து கிராமத்திற்கு படையெடுத்தனர். அப்போது அப்பகுதி மக்களிடத்தில், கிராம மக்கள் முடிவு செய்து இடத்தை காட்டினால் அந்த இடத்தை அளந்து பட்டா போட்டு தருவதாகக் கூறிவிட்டு சென்றனர். அன்று மாலையே அந்த கிராம மக்கள், மற்றும் மக்கள் அதிகாரத் தோழர்கள் என ஒன்று கூடி சுடுகாட்டிற்கு இடத்தை ஒதுக்குவதற்காக ஜனநாயகப் பூர்வமாக முடிவு எடுத்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். பிடிஒ-யும் உங்களுக்கான பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கிறோம் என்று கூறிய வகையில் அதற்கான பணி நடந்து வருகிறது.
பிறகு அக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல குழு உறுப்பினர், தோழர் சிவா பேசும்போது “மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிகாரத்தை கையிலெடுத்தால் அனைத்து அடிப்படை பிரச்சினைகளும் தீரும், அதிகாரிகளைத் தேடி நாம் செல்லத் தேவையில்லை; மக்களுக்காகதான் அதிகாரிகள். எனவே நம்மை தேடி அவர்கள் வரவேண்டும்” என்று பேசினார். நாம் ஒற்றுமையாக இருந்ததால்தான் சாதிக்க முடியும் என்பதை இந்த போராட்டத்தில் அப்பகுதி மக்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம். தொடர்புக்கு; 97901 38614