“எங்க ஊர்ல சாவு ஏற்பட்டாலே பகீர்னு இருக்குங்க. துக்கம் ஒருபுறம் இருந்தாலும் ஆதிக்க சாதிக்காரங்க வசவுகளை கேட்டுக்கொண்டு அவர்கள் தெரு வழியாக சவத்தை எப்படி கொண்டு செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது பகீர்னு இருக்குங்க” என்கிறார் இருளர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண்.

இது நடப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தை அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதி. இந்த தீண்டாமைக் கொடுமை குறித்து மேலும் விவரிக்கிறார்கள் இப்பகுதி இருளர் இன மக்கள்.

“எங்களுக்கு மின்சாரம், அம்மா வீடு, கழிவறை என்று எல்லா வசதிகளும் கிடைத்திருக்கிறது. ஆனால், பொது வழியில் பிணத்தைக் கொண்டு போகக் கூடாது என்றும் அதனால் தங்களது ஐஸ்வர்யம் கெட்டுப் போகிறது என்றும் இங்கு இருக்கும் வன்னியர்கள் கூறுகிறார்கள்.

சொல்லப்போனால், நாங்கள் வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை. பிணத்தை அங்கேயே நடுரோட்டில் வைத்து விடலாமா என்று கூட தோன்றும் அளவுக்கு அவர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.

அவர்களது மயானத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி எங்களுக்கு என்று சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்தனர். ஆனால் இப்போது அங்கும் அவர்களின் தேவைகளுக்காக மண்ணைத் தோண்டி எடுக்கின்றனர். எங்களது தேவையெல்லாம் பிணத்தைக் (அமைதியாக, வசவின்றி) கொண்டு செல்ல ஒரு சாலை, அடக்கம் செய்து பாதுகாக்க சிறு பகுதி” எனக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆரம்ப காலங்களில் சுமார் 25 வருடங்களுக்கு முன் பூப்பறிக்கவும், தங்களது வயல்களில் வேலை செய்யவும் இருளர்கள் தேவைப்பட்டதால் தங்களது குடியிருப்பின் ஒரு ஓரத்தில் குடியேற இருளர்களை வன்னியர்கள் அனுமதித்துள்ளனர்.
தற்போது வயல் வேலைகள் குறைந்துள்ளதாலும், தொழிற்சாலைகளை நோக்கி இருளர்கள் வேலைக்கு சென்று விடுவதாலும் தம்மை மீறி இருளர்கள் வளர்ந்து விடுவதாக எண்ணி அஞ்சுகின்றனர் ஆதிக்க சாதியினர். “ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் ஆதிக்கச் சாதியினர் தரும் கூலி ரூ. 80-ஐத் தாண்டாது. அதுவும் வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும். நாங்கள் வெளியில் சென்று மூட்டை தூக்கினாலும், தொழிற்சாலைக்கு சென்றாலும் ரூ.600 வரை சம்பாதிப்போம்” என்கின்றனர் இருளர் இன மக்கள்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

ஒரே கிராமத்தில் வசித்தாலும், விழாக்காலங்களில் இருளர்கள் தீ மிதிக்கக்கூடாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தீமிதி திருவிழாவில் ஆதிக்க சாதியினர் தீ மிதித்து அவர்களுக்கு ஏற்பட்ட கால் கொப்புளங்களுக்கு இருளர்கள் தீ மிதித்து தீட்டு ஏற்படுத்தியதுதான் காரணம் எனக் கூறி தடை விதித்துள்ளனர். பொங்கல் விளையாட்டு போட்டிகளில் இருளர் குழந்தைகள் கலந்து கொள்ளவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ கூட அனுமதி இல்லை.

ஊரின் கடைசிப் பகுதி என்பதால் ஆதிக்கச் சாதியினர் தெருவைக் கடந்துதான் இருளர்கள் வேலைக்குச் சென்று வர வேண்டியுள்ளது. பைக்கில் சென்றால், “இருளப் பசங்க பைக்ல பொறுமையாத்தான் போகணும்”னு சட்டம் பேசுவது, அதிகாலை நான்கு மணிக்கு மேலே ரோட்டில் வழிவிடாமல் கட்டில் போட்டு படுத்துக்கொள்வது என பாதையை பயன்படுத்த முடியாத அளவுக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
32 குடியிருப்புகளைக் கொண்டுள்ள இருளர்கள் 100 குடும்பங்களைக் கொண்ட ஆதிக்க சாதியினருக்கு பயப்படுவது இயல்பே. பெரும்பாலானோர் அவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர்.

“நீங்க ஏன் பயப்படுறீங்க தைரியமா பிணத்தை பொது வழியில் கொண்டு போங்க. திட்டினா கேஸ் கொடுங்க” என்று கூறும் ஆதிக்க சாதியினரும் இருக்கின்றனர்.

வேறு சிலர் “நீங்க எதுக்கு இப்படி அவமானப்படணும்? கலெக்டரிடம் மனு கொடுத்து தனிச் சாலை போட்டுக் கொள்ளுங்கள். நாங்களும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம்” என்றும் சொல்கின்றனர்.

இருளர் கிராமத்தில் 20 இளைஞர்கள் வரை இருக்கின்றனர். இவர்களில் எவரும் பத்தாவது தாண்டியது கிடையாது. எழுதப்படிக்க ஓரிருவருக்குத்தான் தெரியும். அதில் ஆறுமுகம் எனும் ஆட்டோ ஓட்டும் வாலிபர் தனது ஊர் மக்களோடு சென்று அதிமுக – எம்.எல்.ஏ ஏழுமலையைச் சந்தித்து தங்களது கோரிக்கையை வாய்மொழியாக கூறியுள்ளனர். மேலும் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கிறார் ஆறுமுகம்.

இவர்களுக்கு மிக அருகிலேயே நயப்பாக்கம் எனும் இருளர் கிராமம் உள்ளது. அங்கு சுமார் 50 வீடுகள் உள்ளன. அவர்கள் தனிக் கிராமமாக இருப்பதால் இவ்விதம் சாதிய பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் ரங்காபுரத்தில் உள்ள இருளர்களது பிரச்சனையின் காரணமாக போராட்டம் ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவர்களும் அதில் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

“ஊர் மக்கள் போராடி தங்களது கோரிக்கையை பெறத் தயாராக உள்ளனர். ‘நீங்க சொல்லுங்க சார் நாங்க இப்ப கூட போராட்டம் பண்ண தயார்’ என்று சொல்றாங்க. ஆனா அவர்களை வழிநடத்தவும் அரசியல்படுத்தவும் வேண்டி உள்ளது” என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க