மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 38a

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
”ஏதாவது தின்னக் கொடுங்களேன் – எனக்கு இருக்கிற அகோரப் பசியை உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாது” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

”அம்மா. அதோ அரங்கிலே கொஞ்சம் ரொட்டி இருக்கிறது” என்றான் இகோர். “அப்புறம் வெளியே ஹாலுக்குப் போய், இடதுபுறம் இருக்கும் இரண்டாவது கதவைத் தட்டுங்கள். ஒரு பெண் வந்து திறப்பாள். அவளை இங்கே வரச் சொல்லுங்கள். வரும்போது தின்பதற்கு என்னென்ன இருக்கிறதோ, அதையெல்லாம் கொண்டுவரச் சொல்லுங்கள்.”

“எல்லாவற்றையும் ஏன் கொண்டுவரச் சொல்கிறாய்?” என்று கேட்டான் நிகலாய்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. அப்படி ஒன்றும் அதிகமிராது.”

தாய் வெளியே சென்றாள். கதவைத் தட்டினாள். பதிலில்லை. அந்த அமைதியில் அவள் இகோரைப் பற்றி நினைத்தாள்.

”அவன் செத்துக்கொண்டுதான் இருக்கிறான்…”

“யாரங்கே?” என்று அறைக்குள்ளிருந்து யாரோ கேட்டார்கள்.

”இகோர் இவானவிச்சிடமிருந்து வந்திருக்கிறேன்’’ என்று அமைதியாகப் பதில் சொன்னாள் தாய். “அவன் உங்களை அவனது அறைக்கு வரச் சொன்னான்.”

”இதோ வருகிறேன்” என்று கதவையே திறக்காமல் உள்ளிருந்தவாறே பதில் சொன்னாள் அந்தப் பெண். தாய் ஒரு கணம் நின்றாள். பிறகு மீண்டும் கதவைத் தட்டினாள். உடனே கதவு திறக்கப்பட்டது. ஒரு நெட்டையான மூக்குக் கண்ணாடியணிந்த ஸ்திரீ ஹாலுக்குள் வந்தாள். தனது உடுப்பிலுள்ள மடிப்புக்களை விரித்துத் தடவிவிட்டுவிட்டு வெடுக்கென்று தாயைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இகோர் இவானவிச் என்னை அனுப்பினான்.”

“சரி, புறப்படுங்கள். உங்களை நான் பார்த்திருக்கிறேனே” என்று அமைதியாகக் கூறினாள் அவள். “சௌக்கியமா? இங்கே ஒரே இருட்டாகயிருக்கிறது.”

தாய் அவளைப் பார்த்தாள். இதற்கு முன் அவளைச் சில தடவை நிகலாய் இவானவிச்சின் வீட்டில் பார்த்திருப்பதாக அவளுக்கு ஞாபகம் வந்தது.

“இவர்கள் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள்!” என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண் பெலகேயாவைத் தனக்கு முன்னால் போகச் சொன்னாள்.

“அவனுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம். அவன் படுத்திருக்கிறான். அவன் தின்பதற்கு ஏதாவது கொண்டு வரச் சொன்னான்.”

“அது ஒன்றும் அவசியமில்லை.”

அவர்கள் இகோரின் அறைக்குள் நுழைந்ததுமே அவனது கரகரத்த சுவாசம் அவர்கள் காதில் விழுந்தது;

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“நான் என் மூதாதையர்களிடம் போய்ச் சேரப்போகிறேன். தோழா…! லுத்மீலா வசீலியெவ்னா. இந்த ஆசாமி கொஞ்சங்கூட மரியாதையில்லாமல், அதிகாரிகளிடம் உத்தரவு வாங்காமல், சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான். முதலில் இவனுக்கு ஏதாவது தின்னக் கொடுங்கள். அப்புறம் இவனை எங்காவது கொண்டுபோய் மறைத்து வைக்க வேண்டும்.”

அந்தப் பெண் அவன் கூறியதை ஆமோதித்துத் தலையை அசைத்தாள், நோயாளியைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள்:

“இவர்கள் வந்தவுடனேயே எனக்குச் சொல்லியனுப்பியிருக்க வேண்டும். இகோர், அது சரி நீங்கள் இரண்டு பொழுது மருந்தைக்கூடச் சாப்பிடாமல் விட்டிருக்கிறீர்களா? வெட்கமாயில்லை? தோழரே, என்கூட வாருங்கள். இகோரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சீக்கிரமே ஆட்கள் வந்துவிடுவார்கள்.”

“அப்படியென்றால், நீங்கள் என்னை ஆஸ்பத்திரியில் கொண்டு போடுவது என்றே தீர்மானித்துவிட்டீர்களா?”

“ஆமாம். நான் அங்கு வந்து உங்களுக்குத் துணையிருப்பேன்”

“அங்கே கூடவா! அட கடவுளே!”

“உஷ்! போதும் அசட்டுத்தனம்.”

அவள் பேசிக்கொண்டே இகோரின் மார்பின் மீது கிடந்த போர்வையை இழுத்துச் சரி பண்ணினாள். நிகலாயைக் கூர்ந்து கவனித்தாள். மருந்து பாட்டில்களைத் தூக்கிப் பார்த்து எவ்வளவு மருந்து மிஞ்சியிருக்கிறது என்பதைப் பார்த்தாள். நிதானமாக அடக்கமான குரலில் பேசினாள். லாவகமாக நளினத்தோடு நடமாடினாள். அவளது முகம் வெளுத்திருந்தது. புருவங்கள் மூக்குக்கு மேலே கூடியிருந்தன. தாய்க்கு அவளது முகம் பிடிக்கவே இல்லை. அந்த முகத்தில் அகந்தை தொனிப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் கண்களில் களிப்போ பிரகாசமோ இல்லை. மேலும் அவள் அதிகார

தோரணையிலேயே பேசினாள்.

“சரி, நாங்கள் இப்போதைக்கு உங்களை விட்டுச் செல்கிறோம்” என்று தொடங்கினாள் அவள். ஆனால் நான் சீக்கிரமே திரும்பிவந்து விடுவேன். இகோருக்கு இந்த மருந்தில் ஒரு கரண்டி கொடுங்கள். அவனைப் பேசவிடாதீர்கள்.”

நிகலாயைக் கூட்டிக்கொண்டு அவள் வெளியே சென்றாள்.

”அதிசயிக்கத்தக்க பெண் அவள்!” என்று பெருமூச்சுடன் சொன்னான் இகோர். “அதிசாமர்த்தியமான பெண்: அம்மா. நான் உங்களையும் அவளோடு சேர்த்துவிட வேண்டும். அவள் அடிக்கடி களைத்துச் சோர்ந்து விடுகிறாள்.”

“பேசாதே. இந்த மருந்தைச் சாப்பிடு” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு கண்ணை மூடிக் கொண்டான்.

“எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். வாயை மூடிப் பேசாதிருந்தாலும் சாகத்தான் போகிறேன்” என்றான் அவன்.

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“எல்லாம் சரிதான் – இது இயற்கைதானே! வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது’ என்றாள் அவன்.

தாய் அவனது நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னாள்:

“உன்னால் கொஞ்ச நேரம்கூடச் சும்மா இருக்க முடியாதா?”

அவன் தன் கண்களை மூடி, தனது நெஞ்சுக்குள் கரகரக்கும் சுவாசத்தைக் கேட்பதுபோல் இருந்தான். பிறகு உறுதியோடு பேசத் தொடங்கினான்.

”சும்மா இருப்பதில் அர்த்தமே இல்லை, அம்மா. அதனால் எனக்கு என்ன லாபம்? என்னவோ இன்னும் கொஞ்ச விநாடி கால வாதனை. அப்புறம் உங்களைப் போன்ற அற்புதமான பெண்மணியோடு சில வார்த்தைகள் பேசும் ஆனந்தம்கூட எனக்கு அற்றுப்போய்விடும். அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

தாய் ஆர்வத்தோடு குறுக்கிட்டுப் பேசினாள்:

”அந்த சீமாட்டி திரும்பவும் வருவாள். வந்து நான் உன்னைப் பேச விட்டதற்காக, என்னைக் கண்டிப்பாள்.”

“அவள் ஒன்றும் சீமாட்டியில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி. நம் தோழி. ஒரு அதிசயமான பெண். அவள் கோபிக்கப் போவது என்னவோ நிச்சயம். அவள் எல்லோரையும்தான் கோபித்துப் பேசுகிறாள்.”

அவன் மிகுந்த சிரமத்தோடு உதடுகளை அசைத்துக் கொண்டு தனது அண்டை வீட்டுக்காரியின் வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவளது கண்கள் களிப்பெய்தி நகைத்தன. அவள் வேண்டுமென்றே அவளைக் கேலி செய்ததாகத் தாய் கருதினாள். அவனது நீலம் பாரித்த ஈரம் படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு, பயபீதியோடு தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.

”இவன் செத்துக் கொண்டிருக்கிறான்.”

லுத்மீவா திரும்ப வந்தாள். உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை ஜாக்கிரதையாகத் தாழிட்டுவிட்டுத் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்களுடைய தோழர் சீக்கிரமே உடை மாற்றிக்கொள்ள வேண்டும். என் அறையை விட்டுக் கூடிய சீக்கிரம் போக வேண்டும். எனவே நீங்கள் உடனே போய் அவனுக்கு மாற்று உடைகள் வாங்கி வாருங்கள். இந்தச் சமயத்திலே சோபியாவும் இல்லாது போய்விட்டாள். அது ஒரு பெரிய சங்கடம். ஆட்களை இனம் மாற்றி வேஷம் போடுவதில் அவள்தான் மிகவும் கைதேர்ந்தவள்.”

”அவள் நாளைக்கு வருகிறாள்” என்று கூறிக்கொண்டே சவுக்கத்தை எடுத்துத் தோளின் மீது போட்டுக்கொண்டாள் தாய்.

அவளுக்கு எப்போதெப்போதெல்லாம் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவளது இதயத்தில், அந்த வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பித் ததும்பும். அந்த வேலையைத் தவிர அந்தச் சமயத்தில் வேறு எதைப் பற்றியுமே அவள் சிந்திக்கமாட்டாள்.

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்…”

”அவனை எந்த மாதிரி உடை தரிக்கச் சொல்ல உத்தேசம்?” என்று காரியார்த்தமான குரலில் தனது புருவங்களைச் சுழித்துக்கொண்டே கேட்டாள் தாய்.

“அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தத் தோழர் இன்றிரவு போயாக வேண்டும்.”

“இராத்திரிவேளைதான் மோசமானது. தெருவிலே ஜனநடமாட்டமே இருக்காது. போலீசாரும் விழிப்பாயிருப்பார்கள். இவனும் அப்படியொன்றும் கெட்டிக்காரப் பேர்வழியில்லை – உங்களுக்குத் தெரியாதா?”

இகோர் கரகரத்துச் சிரித்துக் கொண்டான்.

“நான் உன்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் தாய்.

இருமிக்கொண்டே தலையை அசைத்து ஆமோதித்தான் அவன்.

“நீங்களும் நானும் இவனது படுக்கையருகே மாறி மாறித் துணைக்கு இருக்கலாமா?” என்று தனது கரிய கண்களால் தாயைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லுத்மீலா. ”உங்களுக்குச் சம்மதம்தானே? சரி, இப்போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வாருங்கள்.”

அவள் அதிகாரம் கலந்த அன்போடு தாயின் கரத்தைப் பற்றி அவளை வாசல் நடைக்குக் கூட்டிச் சென்றாள். வாசல் நடையைக் கடந்து வெளியே வந்ததும், லுத்மீலா நின்றுகொண்டே பேசினாள்:

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்…”

படிக்க:
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

அவள் தன் கரங்களை இறுகப் பற்றி அழுத்தினாள். அவள் பிடித்த பிடியில் எலும்புகளே நொறுங்கும் போலிருந்தது; கைகளைப் பிடித்தவாறே அவள் கண்களை மூடினாள். இந்தப் பேச்சு தாயைக் கலவரப்படுத்தியது.

”அட கடவுளே என்ன சொல்லுகிறீர்கள்?” என்று குழறினாள் தாய்.

”சரி போகிற போது எங்கேயாவது ஒற்றர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு போங்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் லுத்மீலா. அவள் தன் கரங்களைத் தன் முகத்துக்கு நேராக உயர்த்தி நெற்றிப் பொருத்துக்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அவளது உதடுகள் துடித்தன, முகம் காந்தமடைந்தது.

“எனக்குத் தெரியும்’’ என்று பெருமிதத்தோடு சொன்னாள் தாய்.

வெளிவாசலுக்குச் சென்றவுடன் அவள் ஒரு நிமிஷம் அங்கேயே நின்று தன்னுடைய துப்பட்டியைச் சரி செய்துகொண்டே சுற்றுமுற்றும் கூர்மையோடு, எனினும் வெளிக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டாள். கூட்டத்தில்கூட ஒற்றர்களை அடையாளம் கண்டு தீர்மானிப்பதில் அவள் அநேகமாக தவறுவதே இல்லை. அவர்களது எடுப்பாய்த் தெரியும் கவனமற்ற நடை, அவர்களது அசாதாரணமான பாவனைகள், சோர்வும் எரிச்சலும் நிறைந்த அவர்களது முகபாவம், இவற்றிற்கெல்லாம் பின்னால் மோசமாக ஒளிந்து கொண்டிருக்கும் அவர்களது கூரிய கண்களிலே மறைந்து கிடக்கும். குற்றம் நிறைந்த அச்சம் கொண்ட நோக்கு – யும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

ஆனால் இந்தத் தடவையோ அவள் அந்த மாதிரி முகங்கள் எதையும் காணவில்லை. எனவே தெரு வழியாக அவசர அவசரமாக நடந்து சென்றாள். அவள் ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, வண்டிக்காரனை மார்க்கெட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டாள். மார்க்கெட்டில் அவள் நிகலாய்க்காக வாங்க வேண்டிய துணிமணிகளைத் தேர்ந்தெடுப்பதில் விடாப்பிடியாய் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கேட்டாள். அத்துடன் தன்னுடைய குடிகாரக் கணவனால்தான் இந்த மாதிரியான நிலைக்குத் தான் வந்துவிட்டதாகவும், அவனுக்கு மாதாமாதம் ஒவ்வொரு புதுச்சட்டை துணிமணி எடுத்துக் கொடுக்க நேர்ந்துவிட்டதாகவும் ஒரு பொய்க்கதையையும் கடைக்காரனிடம் கூறினாள். அவளது கட்டுக்கதையைக் கேட்டு, கடைக்காரர்கள் கொஞ்சம்கூட மசியவில்லை. இருந்தாலும் அதுவே அவளுக்கு ஒரு பெரும் ஆனந்தத்தைத் தந்தது. வழியிலே அவளுக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. நிகலாய்க்குப் புதிய துணிமணிகள் வாங்க வேண்டிய அவசியத்தைப் போலீஸ்காரர்களும் உணரக் கூடுமென்றும், எனவே அவர்கள் தங்களது ஒற்றர்களை மார்க்கெட்டுக்கும் அனுப்பியிருக்கக் கூடுமென்றும் அவள் நினைத்தாள். எனவே புறப்பட்டுச் சென்றது போலவே மிகுந்த ஜாக்கிரதையோடும் கவனத்தோடும் அவள் இகோரின் அறைக்குத் திரும்பி வந்தாள். பிறகு அவள் நிகலாவுடன் நகரின் எல்லை வரை காவலாகச் சென்றாள்.

அவர்கள் தெருவில் ஆளுக்கொரு பக்கமாக நடந்து சென்றார்கள். நிகலாய் தலையைத் தாழ்த்திக்கொண்டு தத்தித் தத்தி நடந்து செல்வதையும், அவன் அணிந்திருந்த நீளமான பழுப்பு நிறக் கோட்டினால், அவனது கால்கள் அடிக்கடி முட்டிக்கால் தட்டிக் கொள்வதையும், மூக்கின் மீது வந்து விழுந்து மறைக்கும் தொப்பியை அவன் அடிக்கடி பின்னால் தள்ளிவைத்துக் கொள்வதையும் கண்டு தாய்க்குச் சிரிப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. ஆள் நடமாட்டமே அற்ற ஒரு சந்தில், அவர்கள் சாஷாவைச் சந்தித்தார்கள். நிகலாயைப் பார்த்துத் தலையை அசைத்து விடைபெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பினாள்.

“ஆனால் பாவெல் மட்டும் இன்னும் சிறையிலேயே இருக்கிறான் …. அந்திரேயும்…” என்று துக்கத்தோடு நினைத்துக்கொண்டாள் அவள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க